தலைகீழாக Google தளம்

சுவாரஸ்யம் மிகுந்த செய்தியொன்று Google தளத்தினை தலைகீழாக காட்சிப்படுத்தும் தளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குறித்த தளத்தில் Google தளத்தில் காணப்படும் சகல அம்சங்களையும் கண்ணாடி விம்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நீங்கள் இந்த Google தளத்தில் தேடுவதற்கு உட்செலுத்தும் சொல் கூட தலைகீழாக அமைந்திருக்க வேண்டுமாம். சென்றுதான் பாருங்களேன்.

மூன்று வயதுடைய சிறுவன் வாங்கிய கார்

மூன்று வயதுடைய சிறுவன், 9000 ஸ்டெலிங் பவுண் பெறுமதியான Nissan Figaro என்ற காரை ஏல விற்பனைக்கு பெயர் போன இணையத்தளமான eBay இல் வாங்கியுள்ளான். ஜேக் என்ற இச்சிறுவன் காலையில் விழித்தெழுந்தவுடன் தானொரு காரை வாங்கியுள்ளதாக கூறியுள்ளான்.

இச்சிறுவனால் வாங்கப்பட்ட குறித்த கார் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு ஏல விற்பனையில் அதன் ஆரம்பப் பெறுமானமாக 7999 ஸ்டெலிங் பவுண் காணப்பட்டுள்ளது.

இச்சுவையான கொள்வனவு பற்றிய முழுச் செய்தியையும் அறிய இங்கே செல்லவும்.

Online நூலகமொன்றை Google தொடங்கியுள்ளது

வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். அதனாலோவென்னமோ, வாசிப்பு மனிதனை பரிபூரணமாக்கும் என்று கூடச் சொல்லுவார்கள். ஆக நிறைய வாசிக்கும் பழக்கமுள்ள ஆர்வலர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! Google நிறுவனம் தொடரறா நூலகமொன்றை (Online Library) ஏற்படுத்தியுள்ளது. இந்த Library இலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கூட PDF (Portable Document Format) நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இருந்த போதும், பதிப்புரிமை செய்யப்பட்ட (Copyrighted Editions) நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது.

Google Book Search இல் எந்த விடயம் தொடர்பான புத்தகங்களையும் தேடி அவற்றை Download செய்து கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆயினும், பதிப்புரிமை செய்யப்பட்ட நூல்களின் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை இலவசமாக வாசிக்க முடியும்படி நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகிலுள்ள சகல புத்தகங்களையும் Index செய்து மக்களுக்கு அவை பயன்தரக் கூடிய வகையில் நிரல்ப்படுத்துவதே தமது தலையாய நோக்கமென Google நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google 8th Birthday

பயனர்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் முன்னிற்கும் Google நிறுவனம் இம்மமாதம் தனது எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. மேலும் பல சேவைகளை வழங்க Google இனை வாழ்த்துவோம். பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Torpark எனவொரு விஷேடமான இணைய உலாவி

கணினி சம்பந்தமான நிறைய விடயங்களைச் செய்யக்கூடிய அறிவுடைய Hackers எனப்படும் குழுவினரும், மனித உரிமை சார்பாக கடமை புரியும் ஊழியர்களும் இணைந்து, புதிதாக இணையத்தளங்களை பார்வையிடுவதற்கான இணைய உலாவியொன்றினை (Internet Browser) தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

Torpark என பெயரிடப்பட்டுள்ள இந்த இணைய உலாவியானது பல சிறப்பியல்புகளைக் கொண்டது. இதனைக் கணினியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. USB Drive இல் இருந்தவாறே பயன்படுத்த முடியும். இந்த இணைய உலாவியின் மூலம் இணையத்தினை வலம் (Surf) செய்யும் போது, இணையப் பயனரின் IP முகவரியை மறைப்பதோடு, தரவுகளைக் கூட Encrypt செய்த நிலையில் பரிமாறக்கூடிய தன்மையுடையது. இதனால் தனிமனித அடையாளப்படுத்தல் (Privacy) தொடர்பில் மிகவும் பெறுமதியான முன்னெடுப்பை இவ்விணைய உலாவி செய்துள்ளதாக கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விணைய உலாவியின் அடிப்படை, Mozilla Firefox 1.5.0.7 எனும் இணைய உலாவி பதிப்பிலிருந்து பெறப்பட்டதாகும். Torpark எனும் இணைய உலாவியினை எவ்வித கட்டணமுமின்றி இதன் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Wikipedia க்கு போட்டியாக Citizendium

Wikipedia வின் உருவாக்கத்தில் இணைந்து பணிசெய்த Larry Sanger என்பவர் அண்மையில் Citizendium எனும் செயற்றிட்டத்தினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். இச் செயற்றிட்டத்தின் நோக்கம் இதுவரையில் Wikipedia வில் காணப்படும் உள்ளடக்கங்களை (Contents) பெற்று, அவற்றை துறை சார் நிபுணர்களின் உதவியுடன் தொகுத்து இணையம் மூலம் வெளியிடுவதாகும்.

இந்தச் செயற்றிட்டத்திற்கு எவரும் தமக்குத் தேவையானவாறு தகவல்களை வழங்க அல்லது தொகுக்க முடியும். ஆனாலும், அவை வெளிவிடப்படுவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கப்போவதென்னவோ, குறித்த விடயம் சார்பாக பாண்டித்தியம் பெற்ற வல்லுனர்களே ஆவர். இவ்வாறு Citizendium இணைய வழிக் கலைக்களஞ்சியம் வெளிவரும்போது, Wikipedia வினை விட இது மிகவும் நம்பகத்தன்மையுடையதாகும் சாத்தியங்கள் நிறையவேயுண்டு.

ஆனாலும், Citizendium இனை முழு வெற்றிகரமான செயற்றிட்டமாக மாற்றுவது மிகவும் சிரமமான விடயமாகும். இருந்தும், இச்செயற்றிட்டம் வெற்றி இலக்கை நிச்சயம் அடையுமென கருத்து தெரிவிக்கப்படுகின்றது. குறித்த Citizendium தொடர்பான விடயங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். Wikipedia உடனும் போட்டி போட Citizendium வந்துள்ளமை இது தகவல்களின் தெளிவினை (Clarity) அதிகரிக்கச் செய்யுமென எதிர்பார்க்கலாம்.

மகிழ்ச்சியான எண்ணவோட்டத்திற்கு பதினெட்டு வழிகள்

 1. இலட்சியமும் இலக்குகளும் உடையவராய் இருத்தல்.
 2. என்றும் புன்னகையுடன் இருத்தல்.
 3. சந்தோஷமான சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்தல்.
 4. மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய மனப்பான்மை கொண்டிருத்தல்.
 5. மனத்தை குழந்தை மனம் போல் வைத்திருத்தல்.
 6. பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்புடன் இருத்தல்.
 7. ஆச்சரியங்கள் வரும் போது, அமைதி காத்தல்.
 8. நகைச்சுவை உணர்வைக் கொண்டிருத்தல்.
 9. மற்றவர்களை மன்னித்தல்.
 10. உண்மையான நண்பர்கள் சிலரை கொண்டிருத்தல்.
 11. குழுவாக எப்போதும் பணிகளை ஆற்ற வேண்டும்.
 12. குடும்ப ஒன்று கூடலின் போது களிப்புடன் இருத்தல்.
 13. தன்னம்பிக்கை உடையதாகவிருப்பதோடு, உங்களைப் பற்றி திருப்தியடையுங்கள்.
 14. பலவீனங்களைக் கூட மதியுங்கள்.
 15. சிலவேளைகளில் உங்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.
 16. நேரத்திற்கு நேரம் வேலை செய்யுங்கள்.
 17. ஈடுபாடும் வீரமும் உடையவராய் திகழ்தல்.
 18. ஒரு போதும் பணத்தை கூட்டிச் சேர்க்கும் குணம் குடிகொள்ளாது பார்த்துக் கொள்ள வேண்டும்