இணையம் (Internet)என்றாலே, அதுவொரு பழைய விஷயம் என்றாகிவிட்டது. இணையத்தோடிணைந்த புதிய தொழில்நுட்பங்களின் வருகையே இணையத்தின் ஏகப்பட்ட கோணங்களை அடிக்கடி நினைவுபடுத்திச் செல்லும். இந்த இணையம் எமக்கு என்ன செய்துள்ளது? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு அதிகம் அதிகம் என்றே பதில் கூறவேண்டும். அப்படியென்ன அதிகம் செய்துள்ளது?
இணையம் எமக்கு செல்வத்தைத் தந்ததா? வக்கிர உணர்வுகளை தூண்டும் காட்சிகளையல்லவா எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் காட்டிக் கொண்டிருக்கிறது!! என்று நீங்கள் கேட்பது புரிகின்றது! என்ன செய்ய சுதந்திரம் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் வேறு வேறு கருத்துக்களை கொண்டிருப்பதனால், எல்லாமே சாத்தியமாகிவிட்டது. ஆனால் இணையத்தினால் நம்மையறிமலேயே, நமக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளதை யாரால்தான் மறுக்க முடியும்.
கூகிள் (Google) மூலம் எத்தனை விடயங்களை நாம் தேடித் தெரிந்திருக்கிறோம். இணையம் வாழ்வின் பல கட்டங்களிலும் மறுமலர்ச்சி அல்லது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கும் இலவசமாக தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதற்கு உதவிய ஸ்கைப் (Skype) என்ற சேவை இணையம் மூலம் கிடைக்கப்பெற்றதுதானே! ஏன் எண்ணக்குவியல்களை கொட்டிவிட நிம்மதியான வலைப்பதிவு எனும் இடம் தந்ததும் இணையந்தானே! ஆகையாலே, இணையம் புரட்சியினை (Internet Revolution or Web Revolution)ஏற்படுத்தியுள்ளது என்பது வெள்ளிடை மலை.
இணையப் புரட்சியா? இப்போதெல்லாம் புரட்சி என்பது எல்லா நிலைகளிலும் உண்டாக்கப்படுகின்றதோ என்றல்லவா? நினைக்கிறீர்கள். தவறில்லை. ஆக, ஒரு குறித்த நிலையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளின் விளைவுகளை “புரட்சி” என்றுதானே சொல்லமுடியும் என்று இதனை நியாயப்படுத்தி, விஷயத்திற்கு செல்வோமா??
இணையத்தில் மனிதர்களின் ஊடாடு நிலை (Interactive) நிறையவே உணரப்பட்டதால், ஒவ்வொரு தனிநபரினையும் பற்றிய அத்தனை விடயங்களையும், வெளிச்சம் போட்டுக் காட்டும் தகவுள்ள ஊடகமாக இணையத்தோடு ஒன்றித்த நிலைகள் உருவாகி வருவதனை உணரக்கூடியதாகவுள்ளது.
ஒரு பொருளினை வாங்குவதற்கு முன்னதாகவே, அவை பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள இணையமே இன்று பல பேருக்கு கைகொடுக்கிறது. ஏன் சிலருக்கு (விரைவில் பலருக்கு மாறிவிடும்) பொருட்களை வாங்கும் ஊடகமாக இணையமே இலத்திரனியல் வணிகம் (e-Commerce) மூலமாக, உதவிகின்றது.
வணிகம், தகவல் என்ற தன்மைகளையெல்லாம் தாண்டி, அரசியலுக்குள்ளும் ஆட்சி செய்யும் கருவியாக இணையம் உருவெடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. விக்கி (Wiki) எனப்படும் அனைவரினாலும் தொகுக்கக் கூடிய வகையில் அமைந்த, திறந்த ஆணைமூல மென்பொருளினை (Open Source Software) பயன்படுத்தி இணையமூடாக, தன்சானியா (Tanzania) நாட்டின் புதிய அரசியல் யாப்பு, பல செயற்பாட்டாளர்களின் உதவியுடன் தொகுக்கப்படுகிறது. என்ன முன்னேற்றம்!! பலே.. பலே….
அமெரிக்காவில், பத்து வருடங்களுக்கு முன் பத்து வீதமானவர்கள் மட்டுமே இணையத்துடன் இணைந்திருந்தார்கள், ஆனால் இந்த வீதம் இன்று வரையில் 77 சதவீதமாக கூடியுள்ளது. இது இணையத்தின் புரட்சியைத் தானே உணர்த்துகிறது. மக்கள் இணையத்தின் மீது கொண்டுள்ள பற்றுதலைத்தானே காட்டுகிறது.
எங்கோவிருக்கும் இனந்தெரியாதவர்களைக் கூட நண்பர்களாக்கும் சக்தியைக் கொண்டது இணையம்தானே! மை ஸ்பேஸ் (MySpace) , ஹாய் பை (Hi 5), பேஸ் புக் (Face Book) , ஆர்குட் (Orkut) என விரியும் சமூக வலைப்பின்னல் (Social Networking) முறைமைகள்தானே இவற்றினை இனிதாக சாத்தியமாக்கியது. இணையம் தான் எல்லாமே செய்கிறது.
இப்படியாக புரட்சி செய்தது இணையம் என்றுதான் வைத்துக் கொண்டாலும் எமது பங்களிப்போ, பங்களிப்பின் விளைவால் ஏதாவது உருப்படியான விடயங்களை இணையம் தன்னகம் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி இதனை மொத்தமாக வாசித்த உங்களின் மனதிற்குள் தோன்றியிருக்கும்!!! உண்மையில் இணையத்தினை உருப்படியாக்க நாம் அல்லது எமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இணையம் என்ன செய்தது? ஆராயப்பட வேண்டிய மென்மையான கேள்வியாகும்.
விடை இன்னொரு பதிவாக வரவிருக்கிறது. அதற்கிடையில் நீங்கள் நினைப்பவற்றைக் கூட மறுமொழியாக இடலாம்.. உங்கள் வரவு நல்வரவாகட்டும்!!