நீரினால் இயங்கும் பற்றரி

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த TSC (Total System Conductor) என்ற நிறுவனத்தின் தலைவர் Susumu Suzuki என்பவர் நீரினால் இயங்கக்கூடிய பற்றரியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பினை “அடுத்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய இயற்கைத் தோழமையுள்ள புதிய பற்றரி” என்று குறிப்பிடுகின்றார். இந்த பற்றரியானது, நீரினால் இயங்கினாலும், இதன் மின்னுற்பத்தி திறன் சாதாரண மகனீசீரொட்சைட்டு எனப்படும் மூலகத்தை கொண்ட பற்றரிகளை மிகவும் ஒத்ததாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பற்றரியை உருவாக்குவதற்கு குறைவாக செலவே ஆவதோடு, இதனை பல தடவைகள் மீள்சுழற்சி செய்தும் பயன்படுத்த முடியுமென இக்கண்டுபிடிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

நீரினால் கார்கள் ஓடினால் எப்படியிருக்கும்? சும்மா சொல்லிப்பார்த்தேன். சிலவேளைகளில் சாத்தியமாகுமோ? எண்ணவே முடியவேயில்லை…

வெப் 3.0 வரப்போகிறது!

அண்மையில்தான் வெப் 2.0 என்ற எண்ணக்கரு பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற இந்நேரத்தில், வெப் 3.0 என்ற எண்ணக்கரு வலுப்பெறப் போவதாக எதிர்வு கூறப்படுகின்றது. போகிற வேகத்தைப் பார்த்தால் ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடைவுகள் ஒரு நாளைக்கு மட்டுந்தான் பொருந்தும் போலல்லவா இருக்கிறது.

வெப் 2.0 ஆனது பல்வேறு புதிய பரிமாணங்களை இணையத்தில் ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். Flicker என்பதை Flickr என்றதும் வெப் 2.0 எண்ணக்கருதான். Wiki என்ற அனைவராலும் தொகுக்கக்கூடிய வகையில் அமைந்த திறந்த ஆணைமூல (Open Source) அடிப்படையான மென்பொருளினைக் கொண்டு இணையத்தினை அலங்கரித்ததும் வெப் 2.0 சிந்தனைதான். ஏன்! இணையத்தளத்தின் மேலே காணப்படும் சின்னத்திற்கு (Logo) நிழல் கொடுத்து அழகு பார்த்ததும் வெப் 2.0 இன் கோணம்தான்.

ஆக, இத்தனை புதுமைகள் செய்த இந்த வெப் 2.0 ஐக் காட்டிலும் புதிதாக வரவுள்ள வெப் 3.0 என்னதான் மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கொண்டிருக்கப் போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இந்தத் தளத்திற்கு சென்று புதிய எண்ணக்கருவின் எழில்மிகு கோணங்களை கண்டு மகிழுங்கள்..

100 டொலருக்கு மடிக்கணினி

ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு மடிக்கணினி [The One Laptop Per Child project (OLPC)]என்ற இலாப நோக்கற்ற நிறுவனம், அதன் தயாரிப்பான 100 டொலர் பெறுமதிமிக்க மடிக்கணினிகளின் ஒரு தொகுதியை தாய்வானுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன்படி, வளர்முக நாடுகளிலுள்ள ஏழைச்சிறுவர்களுக்கு மடிக்கணினியை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் நிஜமாக்கப்பட்டுள்ளது.

செய்தித் தளமொன்றின் அறிக்கையின் படி, இக்குறித்த மடிக்கணினி பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளதாக உணரப்படுகிறது.

  • 128 Memory (RAM)
  • 512 MB Storage (HDD)
  • WiFi- and cell phone-enabled
  • Can be powered using a hand-crank

இந்த மடிக்கணினியானது, Nicholas Negropont என்பவரின் சிந்தனையில் உருவான சாதனமாகும்.

விக்கிபீடியாவினை இலக்கு வைத்துள்ள வைரஸ் உருவாக்குபவர்கள்

விக்கிபீடியாவானது, இணைய வழிக் கலைக்களஞ்சியம் என்பதனை யாவரும் அறிவர். இந்த இணையவழிக் கலைக்களஞ்சியம் பல மொழிகளிலும் இணையத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும். ஆக, ஜேர்மன் மொழியில் அமைந்த விக்கிபீடியாவில், பழைய வைரஸ் ஒன்றினை புதிதாக்கும் ஒரு வகை செய்நிரலுக்கு (புதிய வைரஸ்) இணைப்புக் கொடுத்துள்ளனர். இந்த இணைப்பை கிளிக் செய்ய கணினியில் குறித்த வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டு விடும். பின்னர் கணினியின் நிலை கதி கலங்கிவிடும். ஆனாலும் இக்குறித்த இணைப்பு உடனடியாக இனங்காணப்பட்டு விக்கிபீடியாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், வைரஸ் பரவும் வழிகள் இனங்காணப்பட முடியாமலே போய்விடும் போலிருக்கிறது.

இணையத்தின் எதிரிகள்

இணையத்தின் பாவனை தொடர்பில் நாடுகள் காட்டும் நிலைகளை கருத்தில் கொண்டு Reporters Without Borders (RSF) எனும் இணையத்தின் சுதந்திரம் தொடர்பில் இயங்கும் சுயாதின நிறுவனம் அண்மையில் பெலரூஸ், பர்மா, சீனா, கியூபா, எகிப்து, ஈரான், வட கொரியா, சவூதி அரேபியா, சிரியா, டியூனிசியா, டர்க்மெனிஸ்தான், உஸ்பகிஸ்தான், வியட்னாம் ஆகிய பதின்மூன்று நாடுகளை இணையத்தின் எதிரிகளாக பிரகடணப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. இந்த நாடுகளை பட்டியற்படுத்தும் போது Bloggers இனை நாடுகள் அணுகும் விதமும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வின்டோஸ் விஸ்டாவின் (Windows Vista) ஆரம்ப இசை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வீட்டுக் கணினிகளில் (Personal Computers)நிறுவப்படவுள்ள Windows Vistaவின் ஆரம்ப இசையானது (Startup Music), Microsoft நிறுவனத்தின் அனுசரணையுடன் 18 மாதங்களாக பல இசையமைப்பாளர்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த இசை, இன்னும் கொஞ்ச நாட்களில் மில்லியன் கணக்கான கணினிகளில் ஒலிக்கப் போகின்றது. ஆக இத்தனை இசையமைப்பாளர்கள், மாதங்கள் முயற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப இசையின் அளவு (Duration) எத்தனை என்று தெரியுமா? வெறும் நான்கு செக்கன்கள்தானாம்.

புதியதோர் ஆரம்பம்…

நிறம் என்ற மகுடம் தாங்கி ஒரு சில தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுவாரஸ்யமான செய்திகளை வழங்கிய இந்த வலைப்பதிவு, மீண்டும் அதே நிறம் எனும் பெயரிலே நிறைவான புதுமைகள் அடங்கிய விடயங்களை அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ரீதியாக அள்ளி வழங்க திடசங்கல்பம் பூண்டுள்ளது. தொழில்நுட்பம் சார்பான வி;டயங்களை மிகவும் நேர்த்தியாக அழகு தமிழில் உடனுக்குடன் (உரிய நேரத்தில்) அள்ளி வழங்குவதே நிறம் வலைப்பதிவின் அவா. இத்தனை காலமும் நிறத்தின் இடுகைகளை வாசித்து பயன்பெற்ற அனைவருக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, புதிய தோற்றத்துடன் புதுமைகளை உள்வாங்கி வளரவுள்ள நிறத்தின் இன்னொரு புதிய அத்தியாய பயணத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்ந்தும் இணைந்திருங்கள். வலைப்பதிவின் உள்ளடக்கங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் நிறத்தின் இருப்பை நிரந்தரமாக்கும்.