மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தை “சொறி” (Sorry) என்பதாகும். ஏன் தமிழிலும் மன்னிப்பு கோருவதற்கு இச்சொல்லே அதிகளவில் பயன்படுத்தப்படுவதனை உணரக் கூடியதாகவுள்ளது. சில வேளைகளில் நாளடைவில் இச்சொல் தமிழ் மொழியில் திசைச் சொல்லாக இடம்பிடித்துக் கொண்டாலூம் ஆச்சரியப்படுவதற்கில்லை. இச்சொல்லினை பயன்படுத்தி உரையாடுவதென்பது மிகவும் இலேசுபட்ட காரியமல்ல. இருந்தபோதிலும் இன்றளவில் மிக இலகுவாக உச்சரிக்கப்படும் சொல்லாக Sorry மாறியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனின் Esure Car Insurance Company எனும் கார் காப்புறுதி கம்பனி, 1100 மக்களிடையே மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அவை என்னவென்று அறிய ஆவலாக இருக்கிறதா? சராசரியாக பிரிட்டனில் வசிக்கும் ஒரு குடிமகன் தனது வாழ்நாளில் 1.9 மில்லியன் தரம் Sorry என்ற வார்த்தையை உச்சரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. என்ன தலைசுற்றுகிறதா Sorry என்ற சொல்லின் பாவனையைக் கண்டு.? நாம் வாழ்நாளில் எத்தனை தடவை Sorry என்ற சொல்லை உச்சரிப்போம்?? ஆராய்ச்சிக்கான கேள்வி…
பாரம்பரியமாக, ஏதாவது தவறினை செய்த பின்னர் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கும் பொருட்டே Sorry என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் சமகாலத்தில் நாளாந்த உரையாடல்களின் உறுப்பாக இச்சொல் மாறிவிட்டதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு நாளைக்கு பிரிட்டனில் மட்டும் 368 மில்லியன் தடவை Sorry என்ற சொல் உச்சரிக்கப்படுவதாக அதிசயமாகவொரு தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை மன்னிப்புகளா? மன்னிப்பு மலிந்து விட்டதோ என்ற நியாயமான சந்தேகத்தினை தோற்றுவிக்கின்றது.
இன்றைய நிலையில் Sorry என்ற சொல்லின் பாவனை ஆங்கிலத்தில் காணப்படும் Pardon, Excuse me போன்ற சொற்களுக்குப் பதிலாகவும் பாவிக்கப்படுவதாக கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னிப்பினைக் கோருவதற்கு மிகவும் சுலமானதும் உஷிதமானதுமான சொல்லாக Sorry என்ற வார்த்தையே விளங்குவதாக 86 சதவீதமான பிரிட்டன் வாசிகள் நம்புகின்றனர்.
பாரம்பரியமாக, தவறுக்காக வருத்தத்தினை தெரிவிக்கும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட இச்சொல் இன்று அக்காரணங்களையும் தாண்டி வௌவ;வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக ஆய்வின் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.
ஆய்வின் படி, Sorry என்ற சொல் பயன்படுத்தப்படுவதற்கான ஐந்து முக்கிய காரணங்கள் பின்வருமாறு அமைகின்றது.
- யாரிடமாவது கதைப்பதற்கு அல்லது யாருக்காகவாவது ஒரு வேலையினைச் செய்வதற்கு எமக்கு நேரமில்லாத போது (Sorry, இப்போது உங்களுடன் கதைக்க எனக்கு நேரமில்லை)
- இன்னொருவருக்காக மன்னிப்புக் கோருதல் எடுத்துக்காட்டாக, பிள்ளைகள், துணைவர் அல்லது தோழர்களுக்காக மன்னிப்பு கோரும் போது (Sorry, என் மகன் சதிஷ், எப்போதும் பொருள்களைத் தூக்கி எறிந்து விடுவான்)
- யாரும் கதைக்கும் போது, எமக்கு அது கேட்காத சந்தர்ப்பத்தில் (Sorry, அதனை திரும்பச் சொல்லுவீர்களா?)
- ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக உங்களுக்கு திரும்பவும் தெளிவு பெற வேண்டுமென்ற சந்தர்ப்பத்தில் (Sorry, நீங்கள் சொன்னதை எனக்கு சரியாக புரிய முடியாமல் உள்ளது?)
- கடைசியாகவே, செய்த தவறுக்காக வருத்தத்தினை தெரிவிக்கும் பொருட்டு இச்சொல் பயன்படுகிறது. (I’m Sorry)
இங்கே சொற்கள் இடம்மாறிப் பிரயோகிக்கப்படுகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. எமது துணைகளிடமே நாம் அதிகமாக Sorry என்ற சொல்லினை உச்சரிப்பதாகவும், அது குறித்த சொல்லினைப் பயன்படுத்தும் மொத்த சதவீதத்தில் 37 வீதமாகவும் அமைவதாகச் சொல்லப்படுகின்றது. இதேபோல், அறிமுகமில்லாதவர்களிடம் 19 சதவீதமும் எமது பிள்ளைகளிடமும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ளோர்களிடமும் தலா 14 வீதமும், நண்பர்களிடம் 8 வீதமும், பெற்றோர்களிடம் 5 வீதமும், எமது தொழில் அதிபர்களிடம் (Boss) மிகவும் குறைவாக ஒரு சதவீதமும் Sorry சொல்கின்றோம்.
கலாசார வித்தியாசங்களையும் தாண்டி மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதை தெரியப்படுத்த, Sorry என்ற சொல்லினை பயன்படுத்தும் நாடுகளினதும், மக்களினதும் எண்ணிக்கை மிக மிக அதிகமானதாகும்.
ஆனாலும், Sorry என்ற சொல்லினை ஒருவருக்கு சொல்லுவதன் மூலம் நாம் செய்த தவறுக்காக, குறித்த நபர் எந்நேரத்திலும் அத்தவறை மன்னித்து விடுவார் என எண்ணுவது நிச்சயம் எவ்விதத்திலும் பொருந்தாத சிந்தனையாகும். இவ்வாறு செய்வதன் வாயிலாக நாம் குறித்த சொல்லின் மீதே அதிக பற்றுதலை கொண்டிருத்தலையே சுட்டிக் காட்டும். இதனால் நாம் மனித உணர்வுகளை மதிக்க மறந்த நிலைக்கு தள்ளுப்பட்டுவிடக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிடக்கூடும்.
ஆக, மன்னித்துவிடுங்கள் என்பதனை பொருத்தமான நேரங்களில் பொருத்தமான முறையில் மனிதர்களிடையே கேட்டு நிற்பதையே இன்றைய காலகட்ட நாகரீகத்தை மீறிய மனிதம் நிறைந்த சித்தாந்தங்கள் வேண்டி நிற்கின்றன.
Sorry என்ற சொல்லிருக்கிறதே என எண்ணி நினைத்தவற்றையெல்லாம் செய்துவிட்ட பின்னர், வெறும் சொல்லொன்றினால் மனித உணர்வுகளின் நிலைகளை தேற்ற முடியுமென எண்ணுவது எந்தவிதத்திலும் பொருந்தாது. Sorry ஐ சரியான நேரத்தில் சொல்லி உறவுகளை வளர்த்தெடுக்கும் உணர்வுபூர்வமான வித்தையைக் கற்றுக் கொள்ளுதல் கட்டாயமான தேவையே.
ஆய்வு தரவுகள் மூலம்: BBC செய்திச் சேவை
Like this:
Like ஏற்றப்படுகின்றது...