நிறைவான நினைவுகளுடன்…

14cup.jpgகடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் தொடங்கிய “கிரிக்கட் காய்ச்சல்” கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் குணமாகியது என்றே சொல்ல வேண்டும். இம்முறை உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பல முக்கிய அணிகள் “சூப்பர் எயிட்” (Super Eight) குழுவுக்குள்ளேயே வரமுடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதியாட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக் கொண்டன. போட்டியானது மைதானம் அமைந்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. 38 ஓவர்களுக்கு உச்சளவில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி, பார்படோஸ் உள்ளுர் நேரப்படி மதியம் 12.15 இற்கு ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணியினர் மிக வேகமாக ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் 38 ஓவர்களுக்கு 300 ஓட்டங்களைக் கூட பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பலரும் பேசிக் கொள்ளுமளவில் ஆஸி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அடம் கில்கிரிஸ்டின் (Adam Gilchrist) ஆட்டம் அமைந்தது.

ஆஸி அணி 38 ஓவர்களிலே மொத்தமாக 281 ஓட்டங்களைப் நான்கு விக்கட்டுக்களை இழந்து பெற்றது. இதில் அதிரடியாட்டமாக 149 ஓட்டங்களை Adam Gilchrist மட்டும் பெற்றது சிறப்பம்சமாகும்.

பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடிய போதும், காலநிலை கைகொடுக்காததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட 36 ஓவர்களில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களையே பெற முடிந்தது.

நிறைவாக ஆஸி அணியினர் தொடர்ந்து மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றினார்கள்.

1975 இல் தொடங்கிய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்ட அணிகளையும் அவற்றின் விபரங்களையும் உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் நிறைவான நினைவாக….

  • 1975இல் “லோட்ஸ்” மைதானத்தில், ஆஸி அணியை மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  • 1979இல் “லோட்ஸ்” மைதானத்தில், இங்கிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி 92 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  • 1983இல் “லோட்ஸ்” மைதானத்தில், இந்தியா அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் தோல்வியடையச் செய்தது.
  • 1987இல், “கொல்கத்தா” மைதானத்தில், இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா அணி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  • 1992இல், “மெல்போர்ன்” மைதானத்தில், இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 22 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  • 1996இல், “லாகூர்” மைதானத்தில், இலங்கை அணி, ஆஸி அணியை 07 விக்கட்டுகளால் தோற்கடித்தது.
  • 1999இல், “லோட்ஸ்” மைதானத்தில், ஆஸி அணி, பாகிஸ்தான் அணியை 08 விக்கட்டுகளால் தோற்கடித்தது.
  • 2003இல் “ஜோஹன்னஸ்பேர்க்” மைதானத்தில், ஆஸி அணி, இந்திய அணியை 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  • 2007இல் “பிரிட்ஜ் டவுன்” மைதானத்தில், ஆஸி அணி, இலங்கை அணியை 53 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

-உதய தாரகை