Success என்றால் என்ன?

Success என்றாலே எமக்குள் ஒருவகை உவகை குடிகொண்டு விடும். வெற்றிதான் Success ஆகும் என்றால், இந்த Success பற்றி நாம் நிறையவே அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதே!

வெற்றி – இது ஒருபோதும் விபத்தாக ஏற்படுவதில்லை. ஏற்படவும் முடியாது. வெற்றியென்பது, எமது மனப்பாங்கின் விளைவு என்றுதான் சொல்ல வேண்டும். மனப்பாங்கு என்பது எமது விருப்பங்கள் தாம். இதனால், வெற்றியென்பது, விருப்பம் தொடர்பான விடயமேயன்றி, அதி்ர்ஷ்டங்களால் உருவாகாது என பொருள் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் நாம் வெற்றி பெற எண்ணம் கொண்டவர்கள் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். வெற்றிக்கு மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டு ஒரு நபர் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சிலரோ வெற்றிகளை அடைந்து கொள்ளத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏன் நடக்கிறது? ஆராயப்பட வேண்டிய கேள்விதானே!!??

இந்தக் கேள்விக்கு விடையைத் தெரிய முதலில், இக்கேள்விகள் நாம் கற்கும் கல்வி முறைகளைப் பற்றிக் கேள்வியெழுப்புகிறது என்பது மட்டும் உண்மையே!

பொதுமைப்பாடுகளுக்கு கட்டுப்படாத மனிதன் வாய்ப்புக்களை தேடுகின்ற நிலையும், பொதுவான மனிதர்கள் பாதுகாப்பை தேடுகின்ற நிலையும் இதனால் தான் தோன்றியது எனலாம். இதனால் தான், நாம் எமக்கு தேவையானவற்றை விரும்புவது மிகப் பொருத்தமான முன்னெடுப்பாகும். தேவையல்லாதவைகளை தேவை என நினைப்பதோ அல்லது விரும்புவதோ Success என்பதை எம்மிடமிருந்து தூரமாக்கும்.

ஆக, Success என்றால் உண்மையில் என்ன? என்ற கேள்விக்கு நாம் விடை கண்டேயாக வேண்டும்.

வெற்றி மற்றும் தோல்வி பற்றிய பல ஆய்வுகளும் கற்கைகளும் உலகளவில் நடந்துள்ளன. நடக்கின்றன. வரலாறுகளிலிருந்தே நாம் அதிகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் வரலாறுகளை படிக்கின்ற போது சந்திக்கும் திறமையான ஆளுமைகள் யாவரும் பல பொதுமைப்பாடான சிறப்புக்களை தம்வசம் கொண்டிருப்பதை அறிய முடியும். இந்த ஆளுமைகளின் வாழ்ந்த காலம் என்பது எந்த நிலையிலும் அவர்கள் கொண்டிருந்த சிறப்புகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்காது.

வெற்றியாளர்கள், எமக்காக விட்டுச் செல்லும் தடயங்கள் ஒன்றா இரண்டா…?? ஆயிரமாயிரம்.. இந்தத் தடயங்கள் எனும் சிறப்புகளை நாம் எம் வாழ்வில் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக நாமும் வெற்றியாளர்கள் ஆகலாம். இதேபோன்றுதான், தோல்வியடைந்த தனிநபர்களின் வாழ்விலும் பொதுமைப்பாடான சில பண்புகள் குடி கொண்டிருக்கும். இவ்வாறாகக் காணப்படும் பண்புகளை நாமும் எமது வாழ்வில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்போமாயின், எம்மையும் தோல்வி என்பது நெருங்காது என்பது வெளிப்படையான உண்மையே!

வெற்றி என்பது ஒருபோதும் மந்திரமாக இருக்க முடியாது, எமது வாழ்வில் நல்ல பல பண்புகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வரும்போது, எம்மோடு வெற்றி வந்து கைகுலுக்கும். இதேபோலத்தான், ஒரே தவறுகளை தொடர்ச்சியாகச் செய்து வருகையில், எம்மோடு தோல்விகள் தோழமை கொள்கின்றன.

ஆக வெற்றி அடைவதென்பது மிகவும் எளிமையான காரியம் தான். ஏனெனில், உண்மைகள் எப்போதும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். ஆனாலும் வெற்றி பெறுவது இலகுவான காரியமாக இல்லாவிட்டாலும், எளிமையான காரியமே!

ஆக, Success என்பது பற்றி அறிந்தோம். இந்த வெற்றியை எவ்வாறு வரையறுப்பது? என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகின்றது தானே!

சிலபேருக்கு வெற்றியென்றால் செல்வம் என்று பொருள். இன்னும் சிலருக்கோ அது மதிப்பு, தேக ஆரோக்கியம், நல்ல குடும்பம், மகிழ்ச்சி, திருப்தி மற்றும் மன நிம்மதி என்று பொருள். இந்தக் கருத்துக்களை அவதானிக்கையில் வெற்றியென்பது ஒரு விடயம் சார்பானதொன்று என வரையறை செய்யலாம். வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விடயங்கள் வெற்றியாகத் தோன்றக்கூடும்.

Earl Nightingale என்ற எழுத்தாளர் வெற்றியை “பெறுமதியான இலக்கை நோக்கிய முன்னேற்றப் பாதையின் அடைவுகள்” என வரையறை செய்கின்றார். இந்த வரைபிலக்கணத்தைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம்.

இங்குள்ள “முன்னேற்றப் பாதை” என்பது வெற்றியை ஒரு பயணமாக சொல்கிறதே தவிர ஒரு தரிப்பிடமாகச் சொல்லவில்லை. நாம் ஒருபோதும் உரிய இடத்தை அடையப் போவதில்லை. நாம் எமது இலக்கை அடைந்தாலும், இன்னொரு புதிய இலக்கொன்றை அமைத்து அதனை அடைய முயற்சிகள் செய்வோம். இந்த நிலை தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்.

“அடைவுகள்” எனப்படுவது அனுபவத்தைக் குறிக்கும். நிச்சயமாக வெளிச்சக்திகள் எதுவும் எமக்கு வெற்றிகளைத் தந்துவிட முடியாது. வெற்றியை எமக்குள் நாமே உணர்ந்து கொள்ள வேண்டும். இது உள்ளார்ந்தமானது.

“இலக்குகள்” – இவை கட்டாயம் எமக்கு தேவையானது. இவையே எமக்கு நாம் செல்ல வேண்டிய பாதைகளை உணர்த்திச் செல்லும் வழிகாட்டிகள்.

வெற்றியென்பது தொடர்ச்சியாகப் பரிமாறப்படும் மகி்ழ்ச்சி எனப் பொருள் கொள்ளலாம். நீங்கள் விரும்பியதைத் தருவது வெற்றியாகும். மகிழ்ச்சி நீங்கள் விரும்பியதைப் பெற்றதால் உருவாவது ஆகும்.

John H. Rhodes என்ற அறிஞர், சுவாசிக்காதே வாழ், தொடாதே உணர், பார்க்காதே அவதானி, வாசிக்காதே கிரகி, கேட்காதே புரி எனக் கூறுவார். எத்துணை ஆழமான வரிகள் இவை. வாழ்க்கையை சொல்லித் தரும் உணர்வுபூர்மான மொழிகள்.

ஆக, வெற்றி பெறுவது நிச்சயம் என்று முடிவெடுத்து விட்டோம். இனி நாம் வெல்வோம். இருந்தும் வெற்றி பெறுவதற்கு தடையாகும் சில விடயங்களும் உண்டென்றே சொல்ல வேண்டும். கொஞ்சமாய் அவற்றை பட்டியற்படுத்துகிறேன். வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

1. தன்னம்பிக்கையின்மை
2. தோற்றுவிடுவோம் என்ற பயம்
3. திட்டமிடாமை
4. தெளிவான இலக்கு இல்லாமை
5. தாமதிக்கச் செய்தல்
6. குடும்பச் சுமை
7. பொருளாதாரக் கஷ்டங்கள்
8. இலக்குகளை வேறு விடயங்களுக்காக விட்டுக் கொடுத்தல்
9. அதிகமானவற்றை தனிமையாகச் செய்தல்
10. அதீத ஆர்வம்
11. குறைவான ஆர்வம்
12. பூரணமற்ற பயிற்சி
13. முன்னுரிமை வழங்காமை

ஆக, மேலேயுள்ள விடயங்களை எமக்குள் வராமல் தடுப்பது மிகவும் கடினமான காரியமே அல்ல. “மனமுண்டானால் இடமுண்டு” என சும்மாவா சொன்னார்கள்?

வெற்றிகளைக் குவிக்கும் ஆளுமைகளாக நாம் மாறிவிட இன்றே முடிவெடுப்போம். அதை நன்றே செயற்படுத்துவோம். வெற்றி இனி எம் பக்கம் தான்.

பென்ஞமின் பிராங்ளின் என்ற தத்துவமேதை, “Never leave till tomorrow which you can do today” எனச் சொன்னார். இன்றே செய்வோம். நன்றே வெல்வோம்.

இந்த நேரத்தில் எனது தந்தை எனக்கு எழுதித் தந்த சில பொன்வரிகள் இன்னும் பசுமரத்தாணி போல், என் மனதில் பதிந்திருக்கிறது. அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் தரம் ஆறில் கற்க தலைநகரிலுள்ள பாடசாலைக்கு வந்த போது, எனது தந்தை எனக்கு எழுதியனுப்பிய மடல் தான் இது. இப்போது உங்கள் பார்வைக்காக…

“என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்.

நகை முகமும் இனிய சொல்லும் நல்ல செல்வம்
பகை எவரும் ஆகாமற் பார்த்துக் கொள்க.
எச்செலவும் வருவாய்க்குள் பண்ண வேண்டும்.
எல்லைக்குள் ஏழைகட்கு உதவி செய்க.

ஆசானை தெய்வமென மதிக்க வேண்டும்.
அவர் சொல்லை கேட்டு நடக்க வேண்டும்.
ஓதலிலும் மிகச் சிறந்தது ஒழுக்கம் என்ற
உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும்.

பெற்றோர்கள் மிகப் பெரிய வறிஞரேனும்,
பற்றோடு அனுப்புகின்ற பணத்தையெல்லாம்
பட்டினத்துப் பகட்டுகளில் பாழாக்காமல்
சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும்.”

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்னை அடைய வழி செய்யலாமே!

வெல்வோம்!

-உதய தாரகை

7 thoughts on “Success என்றால் என்ன?

 1. ஆஹா! உங்கள் தந்தையின் பொன்னான அறிவுரைகள் யாவரும் எந்நிலையிலும் பின்பற்றக்கூடியதே. Earl Nightingaleஇன் கருத்துகளும் சிந்திக்கத்தக்கவை.

  இங்குள்ள “முன்னேற்றப் பாதை” என்பது வெற்றியை ஒரு பயணமாக சொல்கிறதே தவிர ஒரு தரிப்பிடமாகச் சொல்லவில்லை….
  நிச்சயமாக வெளிச்சக்திகள் எதுவும் எமக்கு வெற்றிகளைத் தந்துவிட முடியாது. வெற்றியை எமக்குள் நாமே உணர்ந்து கொள்ள வேண்டும். இது உள்ளார்ந்தமானது.

  இந்த கருத்துக்களை நான் நூறு சதவீதம் ஒப்புக்கொள்கிறேன். வெற்றி என்பது நாம் அடைய வேண்டிய இலக்கல்ல, வாழ்க்கை எனும் முடிவில்லா பயணத்தில் வெற்றி என்பதை ஒரு மைல்கல்லாக சொல்லலாம். மேலும் வெற்றி என்பது ஒரு மனநிலை… நமக்குள் நாமே உணர்வது.

  என்னுடைய ஆசான் ஒருவர் “There is no such thing as failure. If at all, it’s nothing but procrastination of success” என்று சொல்வார்.

  பல நல்ல சிந்தனைகளை பதிந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

 2. ஆஹா! நல்லதொரு கருத்து. இதை நான் ஒப்புக்கொள்கிறேன்….

  உங்கள் வலைப்பதிவு வடிவமைப்பு மிகவும் நன்றாக உள்ளது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s