சத்தங்கள் எல்லாம் இனிமையானதா?

ஒலிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவே திகழ்கின்றன.

உலகிலுள்ள எல்லா விடயங்களுக்குமே அவை ஒவ்வொன்றுடனும் இணைந்த வகையில் தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒலியும் அவ்வாறுதான். மொட்டுக்கள் விரிந்து பூவாகும் போது கேட்கும் ஓசை தனித்துவமானது. உயிர்களின் உணர்வுகள் கொண்ட இன்னொரு வடிவம் தான் ஓசை – ஒலி.

ஒலி என்பது எதேச்சையாக தோன்றிவிடுவதில்லை. அதிர்வுகளின் ஒன்றுகூடலால் உதயமாவதே ஒலியாகும். அதிர்வுகள் எல்லாம் ஒலியை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. மௌனத்திலும் ஒலியிருக்கிறது என நான் தீவிரமாக நம்புகிறேன். மௌனங்கள் மொழியாக உணரப்படும் நிலையில், மௌனத்திற்கு ஒலி உண்டு என நம்புவதில் என்ன பிழை என்பது எனது கருத்து. நீங்கள் எப்படியோ?

சத்தம் இல்லாத பொழுதை அல்லது நிலையை உலகில் எங்குமே பெற்றுக் கொள்ள முடியாது. உயிர்கள் எங்குள்ளதோ அங்கெல்லாம் சத்தம் என்பது உடன்பிறந்த பண்பாகவேயிருக்கும். வெற்றிடம் என்ற நிலையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இங்கு வளி இருக்காது. அதனால், வெற்றிடத்தில் உயிர் வாழ்தல் சாத்தியமில்லை. ஆதலால், வெற்றிடத்தில் மட்டும் சத்தம் இல்லாத நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். ஒலி பயணிக்க ஊடகம் தேவை. வெற்றிடம் — ஊடகமேயில்லாத ஒரு பகுதி.

மனிதனின் மனநிலையைப் பொறுத்து அவனால், தோற்றுவிக்கப்படும் சத்தங்களும் வித்தியாசப்படும். கவலை, சந்தோசம், வெறுப்பு, விருப்பு, ஆர்வம், ஈடுபாடு என விரியும் மனிதப் பண்புகளின் எழுச்சியின் கட்டங்களில் உருவாக்கப்படும் சத்தங்களின் அதிர்வுகளும் வித்தியாசப்படும். மழலைகளினால் எழுப்பப்படும் ஒலிகள் யாவும் அனைவராலும் விரும்பப்படும் அதிர்வுகள் தாம்.

leaf.jpgஇயற்கையின் ஒவ்வொரு விடயமும் அதிர்வுகளை தன்னகம் கொண்டுள்ளதால், உலக உருண்டை சத்தங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் படைப்பாகிறது. மரத்திலிருந்து இலையொன்று உதிர்ந்து விழும் ஓசையிருக்கிறதே — இந்த ஓசையைக் கேட்கக் காதுகள் தவம் செய்திருக்க வேண்டும். காலையில் சூரியன் உதிக்க ஆயத்தமாகும் வேளையில் காகம் கரையும் ஓசை உலகிலேயே தனித்துவமான ஓசைதான். ஆனாலும், இந்த ஓசைகள் யாவும் இப்போது எழுப்பப்படுகின்றனவா? அல்லது எழுப்பப்படும் ஓசைகளை யாரும் கேட்பதில்லையா?

ஓசைகள் யாவும் இயற்கையினால் உரிய தருணங்களில் எழுப்பப்பட்டாலும் அதனை அறிந்து கொள்வதில் நாம் காட்டும் ஆர்வக்குறைபாடுதான் குறித்த ஒலிகளின் குளிர்ச்சியை செவிகளால் கிரகித்துக் கொள்ள முடியாமல் போவதற்குக் காரணமாகிறது. இருந்தபோதிலும் எமக்கு அந்த ஓசைகளைக் கேட்டு இரசிக்க ஆர்வம் ஏற்பட்டாலும், கட்டுப்பாட்டை மீறிய செயற்கை ஒலி மூலங்கள் அதனைச் சாத்தியமாக்கத் தடையாகவே இருக்கின்றன என்பது துன்பமான செய்தியே.

காகம் கரைகிறதோ இல்லையோ, காலையில் கார்களின் இரைச்சலும், அவற்றின் ஊதிகளின் (Horns) சத்தமும் நகர வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வுகள். காகம் கரைவது கேட்காது, கார் ஓடும் சத்தம் கேட்கும் யுகமிது. சிலவேளைகளில், காகங்கள் தனது ஒலிக்கு மதிப்பில்லை என கோபித்துக் கொண்டு வேற்றுக்கிரகத்திற்கு ஏகிவிட்டதோ எனக்கூட எண்ண வேண்டியிருக்கிறது. செயற்கை ஒலி முதல்கள் இன்றைய நிலையில் இயற்கையின் இனிய ஓசைகளின் மென்மையைக் குழப்பும் முக்கிய மூலமாக இருக்கின்றன என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

இயற்கையின் ஒலிகளுக்கு அதற்கேயுரிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அழகுகள் இருக்கின்றன. எளிமையான நிலைகள் இருக்கின்றன. அவை அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதில்லை. ஆனால், செயற்கை மூலங்கள் கட்டுப்பாடுகள் என்ற வரையறைக்குள் வருவதில்லை. அதனாலென்னவோ, “செயற்கை” எனச் சொல்லவேண்டியுள்ளது. குயில் கூவும் ஓசையை தொழில்நுட்ப சாதனங்களின் உதவி கொண்டும் உருவாக்கிவிடலாம் ஆனால், அது உண்மையாகவே குயில் கூவும் ஒலிபோல் எமது காதுகளை அடைந்தாலும் அதன் மீடிறன், கேள்தகவு வீச்சு என்பன அசல் ஒலியிலிருந்தும் வித்தியாசமானதாகவே இருக்கும். இயற்கையை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதற்கு இதுவொன்றே போதும் சான்றாக.

செயற்கை ஒலிகளின் கட்டுப்பாடடற்ற வியாபிப்பின் விளைவால், தற்போது ஒலியும் சுற்றாடலை மாசுபடுத்தும் கூறாகக் கருதப்படுகிறது. ஒலிகளின் கேள்தகவு நிலை 60 டெசிபெல்களைத் தாண்டக்கூடாதென சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கேள்தகவு மீடிறன் எல்லையை எழுப்பப்படும் ஒலி தாண்டுமிடத்து, கேட்டல் மற்றும் மனது தொடர்பான பிரச்சினைகள் அச்சூழலில் வாழும் நபர்களுக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.

அண்மையில் சட்டவாக்கமொன்றின் மூலம் வாகனங்களின் ஊதிகளின் (Horns) ஒலியெழுப்புதல் தடைசெய்யப்பட்ட நிகழ்வொன்று சீனாவின் சங்காய் நகரில் இடம்பெற்றது. இது தொடர்பில் anti-honking law என்ற தடைச்சட்டம் அமுலில் உள்ளது. தடை செய்யுமளவிற்கு சத்தங்கள் அந்த நகரில் என்ன செய்தன என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.

noise.jpg2002 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை குறித்த நகரத்தில் வாழும் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், நகரச் சூழலில் கேட்கும் ஒலிகள் தமக்கு கேடுவிளைவிப்பதாக நகரத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். சங்காய் என்பது அதிக சனத்தொகையைக் கொண்ட போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு நகரமாகும். இங்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களால் அவற்றின் ஊதிகளை (Horns) செயற்படுத்துவதன் மூலம் ஏற்படுத்தப்படும் ஒலியினளவு மிக மிக அதிகமாகும். இங்குள்ள அதிகளவு மக்கள் இரவு நேரத் தூக்கத்தைத் தொலைத்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்நகரின் மக்களுக்கு சத்தம் என்பது வேண்டப்படாத விருந்தாளிதான்.

சங்காய் நகரில் கிட்டத்தட்ட 18 மாடிகளைக் கொண்ட 4,000 கட்டடங்கள் இருக்கின்றன. சாதாரண வீடுகளில் வசிக்கும் நபர்கள் கூட தமது வீடுகளை உச்ச ஒலியிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் தமது வீடுகளை இயைபாக்கம் செய்யவில்லை.

இந்த வகையில், ஒலி மாசாக்கலை சங்காய் நகரில் இருந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாகனங்களின் ஊதிகளை (Horns) ஒலிக்கச் செய்து சத்தம் செய்தலை தடைசெய்வததைத் தவிர வேறு வழி அங்குள்ள அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. இனி நகர மத்தியிலுள்ள வீதியில், ஊதியால் (Horn) ஒலியெழுப்பும் நபர்கள் 200 ஜுவான்களை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியேற்படும்.

இந்தச் சட்டம் பொருத்தமற்றது. ஏனெனில், பாதசாரிகள் பாதையை குறுக்கருக்கும் பொது அவர்களை எச்சரிக்கை செய்வதன் பொருட்டே நாம் ஊதியை ஊத வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவது அநியாயமானது என சங்காய் நகரின் பல சாரதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாதசாரிகள் எமது வாகனத்தில் மோதிவிடக்கூடாதென்ற நல்லெண்ணம் எமக்கு இருக்கக்கூடாதா? நியாயமான கேள்விதான் – சங்காய் நகர அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனாலும், போட்ட சட்டத்தை மீறும் சாரதிகளை இனங்காண்பதென்பது போக்குவரத்துப் பொலிஸாருக்கு அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல என்பது மட்டும் உண்மையே. ஊதியைச் (Horn) செயற்படுத்தி சத்தத்தை ஏற்படுத்தும் சாரதிகளை அதிகளவில் வாகன நெரிசல் மிக்க இடங்களில் இனங்கண்டு கொண்டு அதனை சாரதிக்கு ஊர்ஜிதப்படுத்தித் தண்டப்பணம் அறவிடுவது மிகப்பெரிய வேலையாகிப் போச்சுதாம் என போக்குவரத்துப் பொலிஸார் வேறு அங்கலாய்க்கின்றனர்.

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும் (இது பாடல் வரியாக்கும்!!). ஆனால், தடை செய்யப்பட்ட நிலைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பதில் ஆர்வங் காட்டுவர் அதிகம் வசிக்கும் இடம்தான் உலகம். சங்காயும் ஆசியாக் கண்டத்தின் ஒரு நாட்டிலுள்ள நகரம் தான். இங்குள்ள மக்களுக்கும் விதிவிலக்கு இருக்க வாய்ப்பில்லை.

இப்போது சங்காய் நகரத்தில் பல வாகனங்களில் ஊதிகளின் (Horns) சத்தத்திற்குப் பதிலாக மனிதக் குரல்களும், இசைகளும் வாகனங்களிலிருந்து நெரிசல் மிக்க நேரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஊதிகளுக்குப் (Horns) பதிலாக இவ்வாறு ஒலிகளை எழுப்பும் வகையில் வாகனத்தை இயைபாக்கம் செய்ய பல நூறு ஜுவான்கள் ஒவ்வொரு வாகனக்காரருக்கும் செலவாகியுள்ளதாம். ஆனால், போக்குவரத்துப் பொலிஸார் விட்டபாடில்லை. ஊதி என்பது ஊதிதான் அது என்ன சத்தத்தை ஒலிக்கின்றதென்பது தேவையில்லாதது என கண்டிப்பாகவே தெரிவித்துள்ளனர்.

சங்காய் நாளேடு ஒன்றின் நிருபர் சந்தித்த கார்ச்சாரதியொருவர், தான் ஊதியைச் செயற்படுத்தாமல் இருக்க, ஊதியுள்ள பகுதியில் “இந்த பொத்தானை அழுத்த வேண்டாம்” (Don’t press this button) என்ற பெரிய அறிவிப்புக் குறிப்பொன்றை ஒட்டி வைத்துள்ளதைக் காட்டியுள்ளார். இது இவ்வாறிருக்க ஊதிகளை (Horns) வாகனங்களின் உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ற ஒலிநயத்தில் வாகனத்தில் பொருத்தி சம்பாதிக்கும் தொழிலில் ஆண்டாண்டு காலம் ஈடுபட்டு வந்த விற்பனையாளர்கள் இந்தப் புதிய சட்டவாக்கம் தமது உழைப்பில் மண்ணையள்ளி போட்டு விட்டதாகவே கருதுகின்றனர்.

ஒலிகளைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு ஆனந்தத்தைத் தருவது, இன்னொருவருக்கு எரிச்சலைக் கொடுக்கலாம். மொத்த சனத்தொகைக்கே எரிச்சலைக் கொடுக்கும் வகையில் அமைந்த ஒலியை சங்காயில் தடைசெய்ததில் தவறில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. இனி சங்காய் மக்கள் நிம்மதியாகத் தூங்கலாம் என்று உறுதிபடச் சொல்லலாமா?? – பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டும்.

இயற்கையின் ஒலிகளை விஞ்சி நிற்க எந்த செயற்கை ஒலிக்கும் முடியாமல் போனது உண்மையென்றால், இயற்கையின் ஒலிகளின் சேர்க்கையில் நாம் எமது வாழ்க்கையில் கட்டாயம் கேட்க வேண்டிய இனிய ஒலிகள் நிறையவே உண்டென்ற முடிவுக்கு வரலாம். இந்த ஒலிகள் எமது வாழ்வின் நிமிடங்களை அர்த்தமுள்ளதாக்கும் ஆயுதங்களாகக் கூட அமைந்து விட முடியும் எனவும் நம்ப முடியும். ஆக, இயற்கையின் இனிய ஒலிகளை கேட்டு இரசிக்க காதுகளைக் கூர்மையாக்குவோம்.

ஒலிகள் உங்கள் பார்வையில் எப்படியிருக்கிறது? இசையும் ஒலிதான்.. வசையும் ஒலிதான்.. இங்கு பொருள்தான் வேறுபடும். உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாகச் சொல்லலாமே!

-உதய தாரகை

One thought on “சத்தங்கள் எல்லாம் இனிமையானதா?

  1. இயற்கையின் அழகை அழிக்காமல் இயற்கையுடன் ஒன்றி வாழத் தெரிந்தவர்க்கே இவ்வுலகில் எதிர்காலம் உண்டு என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அவ்வகையில் இயற்கையை மிகவும் விரும்புபவர் தாங்கள் என்று தெரிந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி!

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s