இருள் விலகட்டும் என்று பாடிய நாள்

அண்மையில் எனது புத்தக அலுமாரியில் (Book Shelf) நூலொன்றை தேடிய போது, எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ளக்கூடிய வகையில் பல விடயங்கள் கண்களில் பட்டன. அவை நெஞ்சத்தைத் தொட்டன.

அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவை இப்பதிவாயிற்று. சிறு பராயம், கடந்த காலம் என்பன சுவையான நினைவுகளைக் கொண்டது என்பதில் இரு வேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புத்தக அலுமாரியில் இருந்த கோப்பொன்றில் (File ஐத்தான் இப்படி தமிழில் சொல்வார்கள்) எனது பாடசாலை நாட்களில் எனது நண்பர்கள் எனக்கு என்னைப் பற்றி “வியந்து” (ஓவரா பில்ட் அப் பண்ணாதீங்க உதய தாரகை!!! 😆 ) எழுதித் தந்த “ஆட்டோகிராஃப்” (Autograph), மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற கட்டுரைப் போட்டியில் நான் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதைப் பாராட்டி எமது பாடசாலை அதிபரினால் காலை ஆராதனைக் கூட்டத்தில் வாசித்தளிக்கப்பட்ட ஒரு பாவோலை (போதும்! பாவோலை என்றால் எங்களுக்கு விளங்காதா என்ன? இதற்கு இவ்வளவு டிஸ்கிரிப்ஷன் வேற தேவைதானா?) , நான் ஆரம்ப நாட்களில் கிறுக்கித் தள்ளிய சில காகிதங்கள் (கிறுக்கின பேப்பரைக் கூட குப்பையில போடமாட்டீங்களா? 🙂 ) என பலவும் கண்ணெதிரே தோன்றின.

அவற்றை கையிலெடுக்கும் போதே அது தொடர்பான நினைவுகள் எல்லாம் என் மனவானில் சிறகடிக்கத் தொடங்கின.

எங்கள் ஊரி்ல் 1999 ஆம் ஆண்டு பிரமாண்டமான ஒரு சாஹித்திய விழா இடம்பெற்றது. அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்கின்றேன். அந்தச் சாஹித்திய விழாவிற்காய் இடம்பெற்ற கட்டுரைப் போட்டியில் நானும் பங்குபற்றினேன். அதில் பரிசும் வென்றேன்.

என்னது ஒரே சுயபுராணமாய் இருக்கிறது என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது.

அந்தச் சாஹித்திய விழாவில் கவியரங்கில் நானும் கவிபாட வேண்டுமென எங்கள் வகுப்பின் தமிழ் ஆசிரியர் பணித்தார். “இருள் விலகட்டும்” என்பதுதான் தலைப்பு என்றும் குறித்தார்.

சொன்ன மாத்திரத்திலேயே எனக்கு சந்தோசம். ஆனாலும், திறந்த வெளியரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கவிதை பாடுவதா? பாடினாலும் எனது கவிதை எடுபடுமா? என்றெல்லாம் தவிப்புகள் இருந்ததுதான். என்றாலும் முடியாதது என்று எதுவுமில்லை என்பதை எண்ணினேன். துணிந்தேன்.

அப்போதேயிருந்தே எனக்கு கணினியின் மீது ரொம்பப் பிரியம். கணினியை வைத்து அதில் விஞ்ஞானத்தை நனைத்து இருள் விலகுமாறு கவிதையாக்க வேண்டும். இதுதான் எனக்கிருந்த சவால்.

எழுதத் தொடங்கினேன். எழுதி நிறைவு செய்தேன். எனது தந்தையிடம் அதனைத் தந்து புடம் போடச் சொன்னேன். அவரும் என் கவியை குணமாக்கித் தந்தார். கவிதை வளர்ந்தது.

சாஹித்திய விழாவில் நான் இக்கவிதையை வாசிக்கும் போது நேரம் இரவு பதினொன்றையும் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் நிறையப் பேர் எனது கவி கேட்டு கரவொலி எழுப்பிய ஞாபகங்கள் எனக்கின்னுமிருக்கிறது.

அன்று அக்கவிதை எழுதிய தாளை எனது புத்தக அலுமாரியில் கண்டெடுத்தேன். இத்தனை ஞாபகங்களும் என்னுள் அலை பாய்ந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன்.

அந்தக் கவியை உங்களுடன் இப்படியாக பகிர்ந்து கொள்கின்றேன்.

1999.09.24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பொத்துவில் “மைலேன்” தியேட்டருக்கு அருகாமையில் அமைந்த திறந்த வெளியில் கோலாகலாமாக நடைபெற்ற “ஸாகித்திய விழாவில்” இடம்பெற்ற கவியரங்கு நிகழ்வில் என்னால் பாடப் பெற்ற கவிதை.

இருள் விலகட்டும்

அல்லாவை எண்ணுகிறேன்
அரங்கின் தலைவரையும்
வல்ல கவிஞரையும்
வாழ்த்தித் தொடங்குகிறேன்

பொத்துவில் தாயாள்
புதுப் பொலிவு பெற்றுள்ளாள்.

சாஹித்திய விழாவில்
சாதனைகள் கண்ட அவள்
கவிஞர்களின் நினைவுக்குள்
கடும் இருட்டைக் கண்டாளோ?
இருள் விலகட்டும் என்று ஒரு
பொருள் தந்தார்

கவிஞர்களை கவிமாரி பொழிகவென்று
காலம் குறித்து விட்டார்.

இருள் விலக ஒளி வேண்டும்.
எங்கும் இருட்டாய்
இருக்கும் இவ்வேளை
மின்னொளியை ஊட்டி
மேடை இலங்க வைத்தார்
மேடை துலங்க வைத்தார்

அறியாமை என்ற இருள்
அகிலத்தின் பெருஞ்சாபம்
பொல்லா இருள் இந்த உலகில்
புரிந்த கருமம் பெரிது

அந்த ஆமை இருளாளே,
அறியாமை இருளாளே,
நொந்தோர், நழிந்தோர்
நொடிந்தோர் தொகை ஏராளம்

அரபு உலகில் சூழ்ந்திருந்த
அறியாமை கொடும் இருளை
புறம் போகச் செய்துவிட்ட
புத்தொளியைக் கண்டோமா?
“ஐயாமுல் ஜாஹிலியா”
அழிந்து ஒழிந்து ஒளிபரப்ப
மெய்யாக நின்றது அந்த
மாநபியா, மாமறையா?

இருள் நீங்க வேண்டுமென்றால்
ஒளி பிறக்க வேண்டுமென்பர்
அந்த ஒளிதான்
அண்ணலென்ற ஒளியாக
கறை இருளை விலக்கி
காட்டியதை – வரலாறு
காட்டியதை நாமறிவோம்

இன்று அந்த ஒளிப்பிளம்பின்
அரிய கருத்துக்களை
கண்டுணர்ந்து செயலாற்றாத
காரணத்தால் இன்று
எமையெல்லாம் இருள்
வந்து கௌவிற்று

இந்த அறியாமை இருள்
எங்கள் அகத்தை நன்கு
கப்பியதால், நெறி
நின்று தப்பிய நாம்
நிலையிழந்து நிற்கின்றோம்

ஆழ்கடல் இருளுக்குள்
அமிழ்ந்து போய்விட்ட
அந்த Titanic கப்பல்
அதன் இரகசியங்கள்

அந்த கடல் இருளை
அகற்றி இரகசியம் கண்டார்

இருள் நீங்கிவிட்டதுவா?

Discovery வெளியாக்கும்
இரகசியங்கள் ஒன்றிரண்டா?
இருளைக் கிழித்தெறிந்தார்
இதயத்தைக் கண்டாரா?
இதயத்தைக் கிழித்துவிட்டார்.

2000 ஆம் ஆண்டு…
கம்பியூட்டர் எல்லாம்
கதிகலங்கப் போகிறதாம்
CPUஎல்லாம்
செயலற்றுப் போய்விடுமாம்.
Modem கள் போடுகின்ற
வேடங்கள் ஒழிகிறதாம்
Mouse க்கு இருந்த
மௌஸே மறைந்திடுமாம்.

Modem, Monitor, Mouse
Keyboard, CPU எல்லாம்
விஞ்ஞான உலகில்
வெளிச்சத்தைக் கண்டறிய
கம்பியூட்டர் கொண்ட
கருவூலப் பெட்டகங்கள்

அதற்குள்ளே வைரஸ்கள்
வழியைக் கெடுக்கிறது
இப்போ, கம்பியூட்டர் உலகமே
கதிகலங்கி நிற்கிறது.

இந்த இருள் நீங்கிடுமா?
என்று நான் கேட்கவில்லை
எங்கள் அகத்தில் – இதயத்தில்
சூழ்ந்திருக்கும் அந்த இருள்
அந்த அறியாமை என்ற இருள்
நீங்கட்டும்

புணராமை, புரியாமை
பூதலத்தில் வாழ்வதற்குத் தெரியாமை
சமூகத்தை மதியாமை
சான்றுகளைப் பதியாமை
என்றெல்லாம் ஆமைகளை
நாமெல்லாம் அணியணியாய்
வைத்திடலாம்.

இந்த ஆமைகள் வைரஸ{க்களாய்
மாறி வாழ்வைக் கெடுக்கிறது
சேர்னோபில் வைரஸ்
கிறிஸ்மஸ் என்றொரு வைரஸ்
இவையெல்லாம் இந்த ஆமைகளின்
மறுபிறப்பா? இல்லை
இந்த ஆமைகள்
வைரசுக்களின் ஒரு பிறப்பா?
யாரறிவார்…??

இந்த அறியாமை
இருள் நீங்கில், அகிலமெலாம்
ஒளிபரப்பும். அந்த ஒளியில்
யுத்தமும் இருக்காது
யோக்கியங்கள் மெருகு பெரும்
பித்தம் இருக்காது
மனிதம் பெருமை கொடி பிடிக்கும்
சித்தம் கலங்காது
சீர்மை புடம் போடும்
சிறுமை இருக்காது
சீரழிவு தோன்றாது
மிடிமை இருக்காது
மேன்மை குறையாது
எனக்கூறி என்
கவியை முடிக்கிறேன்.

எல்லோருக்கும் இனிய ஸலாம்.

இந்த இனிய அனுபவத்தை எண்ணிய போது மகிழ்ச்சி பொங்கியது.

அது சரி.. நம்ம கவிதை எப்படியிருக்கு என்னு மறக்காம சொல்லிட்டு போங்க.. ரைட்டா.. 🙂

வரட்டா??

-உதய தாரகை

2 thoughts on “இருள் விலகட்டும் என்று பாடிய நாள்

  1. கவிதையில் பொதிந்துள்ள அனுபவம் போலவே, கவிதை பற்றிய அனுபவமும் அலாதியானது.. பரவசம் உண்டாக்கும் இவ்வலைப்பதிவைப் போலவே…

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s