மனிதன்: பலவீனங்களின் மொத்த வடிவம்

மனிதனின் ஆளுமைகளை நோக்கும் போது, பலவீனங்களின் மொத்த வடிவமாக அவனை எப்படிச் சொல்ல முடியுமென்று நீங்கள் கேட்கலாம்?

மனிதனின் பலவீனங்களின் மொத்த வடிவமாகவே உலகில் பிறக்கின்றான். உலகிலுள்ள உயிர்களின் பலவீனத்தின் வடிவம் தான் மனிதன் என சொல்ல வேண்டியுள்ளது. ஏன் இப்படி மனிதனை பலவீனங்களின் மொத்த வடிவமாக இனங்காண வேண்டும்.

மனிதனால் பறவைகளைப் போல் பறக்கவும் முடியாது, பறக்கும் கழுகினது கண்ணும் அவனிடம் இல்லை. அவனுக்கு குரங்குகளைப் போன்று மரங்களில் தாவித் திரியவும் முடியாது, பாய்ந்து ஓடிச் செல்லும் சிறுத்தையை முந்திச் செல்லுவதற்கான ஆற்றலும் அவனிடம் இல்லை. காட்டுப்பூனையிடம் காணப்படும் கூர்மையான நகமும் அவனிடம் இல்லை. இதனால், மனிதன் பௌதீக ரீதியில் பாதுகாப்பு, உதவி அற்றவனென்பது பொருந்தும் தானே!

யார் சொன்னது? மனிதன் பலவீனத்தின் மொத்த வடிவம் என்று!

உலகில் உயிர்களை உருவாக்கிய இயற்கைக்கு சமநிலை பற்றி நன்கு தெரியும். மனிதனுக்கு மட்டுமேயுரிய பண்பாக இயற்கை அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறது. அவனுக்குத் தேவையான சூழலை, அவனுக்குத் தேவையானது போன்று அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்கள் சூழலுக்கேற்ப தம்மை இயைபாக்கும் – மனிதனோ சூழலை தனக்கேற்ப இயைபாக்கிக் கொள்வான்.

ஆனாலும், மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அருங்கொடையான சிந்தனா சக்தியைக் கொண்டு பயனடைவோர் தொகையோ மிகவும் அரிதென்பது கவலையான விடயமே. தோல்விகளை அடைவோரை இருவகையாகப் பிரிக்கலாம். சிந்திக்காமல் செயலாற்றுவோர் ஒருவகை: மற்றையவர்கள், சிந்திப்பார்கள் ஆனால் செயலாற்றமாட்டார்கள். சிந்திக்கும் ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழ்க்கையில் நாம் செல்லும் பாதை முறையற்றதே.

வாழ்க்கையென்பது விட்டுக்கொடுப்புக்களையும் தெரிவுகளையும் கொண்ட கட்டமைப்பாகும். வாழ்க்கை தெரிவுகளைக் கொண்டதென்பது உண்மைதான். ஆனால், எப்படி விட்டுக்கொடுப்புக்களைக் கொண்டிருக்க முடியும்? இது முரணான கருத்தல்லவா? என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? விட்டுக் கொடுப்பு என்பதே ஒருவகைத் தெரிவுதான் என்பதை உணர்வோம்.

அதிகமான உணவுண்டால் நாம் கொழுத்துவிடுவதற்கான தெரிவை மேற்கொள்கிறோம். மற்றவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் மற்றவர்கள் நமக்கு உதவி செய்வதற்கான தெரிவை மேற்கொள்கிறோம். நாம் மற்றவருக்கு உதவாமல் இருப்பதால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யத் தேவையில்லை என்ற தெரிவை தேர்வு செய்கிறோம்.

இவ்வாறான தெரிவுகள் யாவும் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. தெரிவுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் எமக்கிருந்த போதும், தெரிவை மேற்கொண்ட பின்னர், தெரிவே நம்மைக் கட்டுப்படுத்தும் பலமாக உருவெடுக்கும். சமனற்ற தன்மை கொண்ட நிலையை அனுபவிப்பதற்கான சமனான வாய்ப்புகள் எமக்குண்டு. தெரிவு எம்முடையதே!

குயவனுடன் எமது வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தனக்குத் தேவையான வடிவத்தில் களியைச் சமைத்து பாத்திரம் செய்யும் ஆற்றல் குயவனுக்குண்டு. அதுபோலத்தான், நாமும் எமது வாழ்க்கையும் எமக்குத் தேவையானது போல் அமைத்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை மகிழ்ச்சியின் உறைவிடம் போலவே, துன்பத்தினதும் பாசறையாகும். நினைத்துப் பார்க்காத விடயங்கள் எல்லாம் நடந்தேறும். சிலவேளை எல்லாமே எமக்கு தலைகீழாக நடந்தேறக்கூடும். நல்லவர்களுக்கு தீய சம்பவங்கள் நடந்தேறக்கூடும். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான். (எங்கோ கேட்ட டயலொக் மாதிரி இருக்கே!! 😉 ) கட்டுப்பாடுகளை மீறிய நிலையிலும் பல விடயங்கள் எமக்கு இடம்பெறக்கூடும்.

எமது பெற்றோர்களை எப்படி எம்மால் தேர்ந்தெடுக்க முடியாதோ, அவ்வாறே நாம் பிறக்க வேண்டிய தருணங்களையும் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனாலும், உலகில் பிறக்கும் நாம் இவற்றை தெரிவாகவே கருத வேண்டியுள்ளது.

என்ன உதய தாரகை!! ஒரே தத்துவமாகவே இருக்குது? என நீங்கள் கேட்கத் துடிக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. வாழ்க்கையின் அமைவுகளை ஆராய்தல் சுகமான அனுபவம், தெளிவான பாதைக்கு இட்டுச் செல்லும் ஒளி விளக்கு. அதனால்தான் இப்படியொரு பதிவு…

நீ்ர்நிலையொன்றில் ஒரு அமைதியான காலை நேரத்தில் நூற்றுக் கணக்கான வள்ளங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி தமது பயணத்தைத் தொடர்கின்றன. காற்று ஒரு பக்கமாக வீசிய போதும், வள்ளங்கள் வெவ்வேறு திசைகளிலேயே செல்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? இது புதுமையல்லவா? வள்ளத்தை செலுத்துபவனின் மூலம் தீர்மானிக்கப்படும் வள்ளத்தின் நிலையே இவ்வாறு வள்ளங்கள் வெவ்வேறு திசையில் பயணிக்க உதவி புரிகின்றது. இதுபோன்றுதான் எமது வாழ்க்கையும். எமக்கு காற்று வீச வேண்டிய திசையை தெரிவு செய்ய முடியாது. ஆனால், வள்ளம் செல்ல வேண்டிய திசையை தெளிவாகத் தெரிவு செய்யலாம் தானே!!

சந்தர்ப்பங்களை எம்மால் எல்லா நேரங்களிலும் தெரிவு செய்ய முடியாவிட்டாலும், எமது மனப்பாங்கை நிச்சயமாக நாம் தெரிவு செய்யலாம். நாம் தேர்வு செய்யும் தெரிவு வெற்றிக்கோ தோல்விக்கோ இட்டுச் செல்லும். இது எமது நிலையல்ல. நாம் கொண்டுள்ள மனப்பாங்கின் தன்மை. இதுதான் எமது தலைவிதியையே தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டது.

வானவில் வர்ண ஜாலம் காட்ட சூழலில் மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் காணப்பட வேண்டும். எமது வாழ்வும் இதனைப் போன்றதே. இங்கு துன்பமும் இன்பமும் மாறி மாறி வருகிறது: நல்லதும் கெட்டதும் நடக்கிறது. இருளும் வருகிறது பின்னர் அதனை ஒளியும் வந்து மறைக்கிறது. எமக்கேற்படும் கஸ்டங்களை நாம் சரியான வகையில் கையாளும் போதே எமக்கு பலமான வாழ்வு கிட்டும். நாம் எம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தி ஆள முடியாது, ஆனால் அச்சம்பவங்கiளை கையாளும் முறையை எம்மால் கட்டுப்படுத்தி ஆள முடியும். இங்குதான் பலவீனமான மனிதனின் பலமான நிலையை அடைகின்ற தருணம் தோற்றுவிக்கப்படுகிறது.

iced_tea

1904 ஆம் ஆண்டு சென்ட் லூயிஸில் இடம்பெற்ற உலக வர்த்தகச் சந்தையில் இந்தியாவின் தேயிலையை பிரசித்தமடையச் செய்ய வேண்டிய கட்டாயம் Richard Blechnyden என்பவருக்கு இருந்தது. கண்காட்சி இடம்பெற்ற இடத்தில் வெப்பம் அதிகமாகவே காணப்பட்டது இதனால், அவரின் தேயிலையைக் கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீரை ருசிபார்க்க யாரும் முன்வரவில்லை. அதேவேளை, குளிர்பான விற்பனை தீவிரமாக நடைபெறுவதையும் Blechnyden அவதானித்தார். இதை அவதானித்த அவர் என்ன செய்தார் தெரியுமா?

அவரின் தேயிலையை சீனியையும், குளிர் நீரையும் கொண்ட கலவைக்குள் இட்டு தேநீர் உருவாக்கி விற்கத் தொடங்கினார். என்ன பிரமாதம்!! அங்கே மக்கள் அதனை விரும்பி அருந்தினார்கள். உலகிற்கே குளிரான தேநீரின் (Iced Tea) அறிமுகம் அன்றுதான் இடம்பெற்றது. பார்த்தீர்களா சம்பவத்தை கையாண்ட விதம் வெற்றியைக் கொடுத்திருந்ததை?

எமக்கு கஸ்டங்கள் வரும் போது, அதனை வெற்றியின் படிக்கல்லாக பார்த்து சம்பவங்களையும் சந்தர்ப்பங்களையும் எமக்கு ஏற்ற விதத்தில் கையாண்டு வெற்றி பெற வேண்டிய ஆயத்தங்களை செய்தல் வேண்டும்.

மனிதர்கள், தெரிவுகளே இல்லாத செயற்பாடுகளைப் போன்றவர்களல்லர். செயற்பாடு ஒரு போதும் தீர்மானிக்கும் ஆற்றலையும் பெறாது, தீர்மானிக்கும் வாய்ப்பையும் பெறாது. ஆனால், மனிதன் தெரிவுகளின் மொத்த வடிவம். இந்தத் தெரிவுகள் தாம் அவனை பலவீனங்களிலிருந்து விடுபட்டு பலமானவனாக மாற்ற துணை செய்கின்றன.

இயற்கையாக மாமரத்தில் காய்க்கும் மாம்பழத்தை சாப்பிடமுடியும் அல்லது பழப்பாகு செய்து பாதுகாக்க முடியும். இந்த முடிவு எமது தெரிவில் மட்டும்தான் தங்கியுள்ளது. தெரிவுகளை தெளிவாக மேற்கொள்ளும் கலையைக் கற்போம். எம்மிடமுள்ள பலவீனங்களைத் துறப்போம்.

– உதய தாரகை

2 thoughts on “மனிதன்: பலவீனங்களின் மொத்த வடிவம்

  1. நான் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை ஞாபகப்படுத்திச் செல்கிறீர்கள். இது ஒரு ஊக்க மாத்திரை. நன்றி, வாழ்த்துக்கள்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s