கலை: தொடர்பாடலின் ஆதாரம்

மனிதனின் விசாலமாக்கப்பட்ட வாழ்வியல் எல்லைக்குள் அடங்கும் நடவடிக்கைகள், பழக்கங்கள் என்பவற்றின் தோற்றத்தால் உருவாகும் வெளிப்பாடுகள் தான் கலை என்ற வரையறைக்குள் வர முடியும். அதாவது, ஒரு தனிமனிதனைச் சூழ்ந்து காணப்படும் சமூகமொன்றினது கலாசார வெளிப்பாடு தான் கலையாகும் என நான் கருதுகிறேன்.

கலை என்றவுடன் அதனை வெறும் சிற்பம், ஓவியம் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திவிட முடியாது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பதை அறிந்தவர்களல்லவா? நாங்கள்!

இசை, இலக்கியம் என விரியும் கலையின் கிளைகள் ஆயிரம். நேற்று எனது நண்பரொருவருடன் பிற்பகல் வேளையில் கண்காட்சியொன்றை கண்டு களிப்பதற்காக BMICH சென்றிருந்தேன்.

13.jpg

கண்காட்சியின் பெயர் – “ஷில்ப 2007” என்பதாகும் (பெயரில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை 😆 ). இது சிங்கள மொழியில் அமைந்த பெயர்.

சிறு கைத்தொழில் மற்றும் சிற்பக் கைத்தொழில் என கலையை மதித்து தமது திறமைகளால் வித்தைகள் செய்தவர்களின் வித்தைகள் காட்சிப் படுத்தப்பட்ட கண்காட்சிதான் அது. நிறைய மக்கள் வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால்தான் இவ்வளவு சனம் என எனது நண்பன் காரணமும் கூறினார்.

12.jpg

விருதுகள் பெற்ற படைப்புகள் எல்லாம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. நுணுக்கமாக தமது கைகளால் உருவாக்கிய படைப்புகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்தன ஒரு கணம். அதிசய ஆபூர்வ நிலையையே தோற்றுவித்தது எனக்கு. சிறிய பொருளிலும் அத்துணை நுணுக்கமாக தமது கைவண்ணத்தைக் காட்டியிருந்ததான் ஆச்சரியத்திற்கு காரணமாயிருக்கலாம்.

ரஸ்யா நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் லியோ டோல்ஸ்ட்டோய், கலையை “ஒருவர் இன்னொருவருடன் தொடர்பாடுவதை சாத்தியமாக்கும் மறைமுக ஊடகம்” எனச் சொல்வார். இந்தக் கண்காட்சியும் இந்த எழுத்தாளரின் கூற்றை மிகத் தெளிவாகவே உணர்த்தியது. இங்கு கலைஞர்களின் செய்தியை கலைப்படைப்புகள் பார்வையாளனுக்கு வழங்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தன.

கலைகள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருப்பதோடு நின்று விடுவதில்லை. அக்காலத்தின் கலைஞனின் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் அமைந்து விடுகிறது. இதனால் தான் கலைஞனால் தன் படைப்புகள் மூலம் இரசிகனோடு பேசமுடிகிறது. கலைஞன் உலகில் நின்று மறைந்த போதும், அவன் எண்ணங்கள் படைப்புகளின் வாயிலாக பரம்பரையாகக் கடத்தப்படுகின்றன.

லியனார்டோ டாவின்ஸி என்ற ஓவியரை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை. அது போலவே, அவர் ஓவியர் மட்டுமல்ல பெரிய விஞ்ஞானி என்றே நிரூபிக்கும் சான்றுகள் கூட உங்களிடம் இருக்கக் கூடும். மொனாலிஸா என்றால் டாவின்ஸி என்று சட்டன சொல்லுவீர்கள். இந்தப் பெரிய கலைஞனின் எண்ணங்கள் பரம்பரையாகக் கடத்தப்பட்டதால் தான் இன்று நவீன பல சாதனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. புழக்கத்தில் வந்து மனித வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இவை அவர் கலையை தொடர்பாடலின் ஆதாரம் எனக் கண்டு கொண்ட நிலையைக் காட்டுகின்றதல்லவா?

இன்றைய நிலையில் மனிதனை விஞ்சி தொழிற்பாடுகளை ஆற்றக்கூடிய மனிதப்போலிகள் என்ற பதத்தால் இனங்காணப்படும் Humanoids ரோபோக்களின் ஆரம்ப வடிவமைப்பு டாவின்ஸி எனும் அற்புதக் கலைஞனின் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதை அறிவீர்களா? யுகங்கள் பலவற்றை கடந்தும் கலையி்ன் பலம் கலைஞனின் எண்ணத்தை காலத்தோடு கடத்தி வந்திருக்கின்ற நிகழ்வு அற்புதமல்லவா?

“எமது முன்னோர்கள் விட்டுச் சென்ற முடிவுறாத ஆய்வுகளின் மிச்சத்தையே நான் தொடர்கின்றேன். அதனால் புதியவை என பலவற்றை என்னால் கண்டுபிடிக்க முடிகிறது” என தோமஸ் அல்வா எடிசன் கூறியதாக ஒரு கட்டுரையில் வாசித்திருக்கிறேன். இது தான் உண்மை.

கலை – அது எண்ணங்களின் தொகுப்பு… மனம் – அதுவும் எண்ணங்களின் தொகுப்பு… இந்த வசனங்களில் நிறைய அர்த்தம் உள்ளதாக நான் எண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…??

கண்காட்சியில் எனது கண்களுக்கு பட்ட சில காத்திரமான படைப்புகளை எனது கையடக்கத் தொலைபேசி கமராவிற்குள் அடக்கிக் கொண்டேன். இந்தப் பதிவில் இடம் பெறும் நிழற்படங்கள் யாவும் நேற்று பிடிக்கப்பட்டவைதான்.

1.jpg

இது பிரம்பை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்ட முதலையாகும். பயமேயில்லாமல் இரண்டு சின்னக் குழந்தைகள் அதனைத் தொட்டுக் கொண்டிருக்கிறாங்க பாருங்க..

8.jpg

இயற்கை மரமொன்றின பாகத்தை அசல் நிலையில் தக்கவைத்து Cushion Set ஒன்று செய்து வைத்திருந்தார்கள். பார்க்க நல்லாத்தான் இருந்தது.

4.jpg

யானை – பிரம்பால் செய்யப்பட்ட யானை. எப்படியிருக்கு.. குட்டி யானை என்றுதான் சொல்ல வேண்டும். முதலையில் இருந்த பிரமாண்டம் இங்கு தெரியவில்லையே என்றல்லவா? நீங்கள் நினைக்கிறீர்கள்…??

11.jpg

பூக்களில் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சி கண்டீர்களா? துணிகளில் கைவண்ணம் காட்டிய கோலங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

6.jpg

சிம்மாசனம் என இதைத்தான் சொல்வார்களோ…??

இப்படியாக பல ஆக்கங்கள் தொடர்ச்சியாக காணப்பட்ட போதிலும், அவை எல்லாவற்றையும் இந்தப் பதிவில் காட்டி பதிவை நீட்டி உங்கள் எரிச்சலை சம்பாதிக்க நான் விரும்பவில்லை. இது போதும் எனக்கு…!! (எங்கோ கேட்ட வரி மாதிரி இருக்கா… 😆 )

பிரமாண்டமான கண்காட்சியை கண்ட களிப்பில் கண்காட்சி இடத்தை விட்டு அகன்றேன். வாழ்வியலில் வெற்றிகளைக் குவித்த மற்றும் குவிக்கத் துடிக்கும் கலைஞர்களின் சுவாசமாகிய படைப்புகளின் வெளிச்சம் கண்காட்சி பூமியெங்கும் பரவிக் காணப்பட்டது குறிப்பிடப்பட வேண்டியதே! அவை கலைஞனின் எண்ணங்களை காலத்தோடு கடத்தும் ஆதாரமாய் அமையுமென்பதில் ஐயமில்லை.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s