பட்டம் பறக்கும் இரகசியம்

cosmic1.jpg

இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.

ஒழுக்கம் என்பது என்ன? என்று கேட்டால், நீங்கள் “ஒழுக்கம் விழுப்பம் தரும்” எனத் தொடங்கி அதன் நன்மைகளை விலாவாரியாக சொல்லிக் விளக்க எத்தனிப்பீர்கள். உண்மையிலேயே சிறப்புகள் கொண்டது தான் ஒழுக்கம். ஒழுக்கம் மூலம் சிறப்புகளும் எய்தப்படலாம். ஆனாலும், இந்த ஒழுக்கம் என்பதை எவ்வாறு வரைபிலக்கணப்படுத்தலாம் என்ற கேள்வி எனக்கு எப்போதும் ஞாபகத்திற்கு வருவதுண்டு.

அன்றொரு நாள் ஒரு புத்தகமொன்றை வாசிக்கும் போது, ஒழுக்கம் பற்றி நிறைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அவை நான் சிந்தித்த கேள்விகளுக்கு தெளிவான விடைகளைத் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தன. அந்தப் புத்தகத்திலும் ஒழுக்கம் என்றால் இதுவா? என பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

ஒருவன் நாடுவதையெல்லாம் செய்யக்கூடுமளவுக்கு அவனுக்குள்ள உண்மைச் சுதந்திரமா? விளைவுகளைப் பற்றிக் கவனிக்காத சுதந்திரமா? ஒரு பிழை அல்லது தவறு நடந்தவுடன் அதனை சரிசெய்கின்ற செயற்பாடா? அது திணிப்பா? அது வன்முறையா? இதில் எதுவுமே ஒழுக்கம் என்றால் என்ன? என்பதற்கு விடையாக அமையாது. அமையவும் முடியாது. என்று சொல்கிறது அந்தப் புத்தகம்.

“ஒழுக்கமென்பது தகப்பன் பிரம்பொன்றை எடுத்து தனது பிள்ளைக்கு அடிப்பதாகவும் முடியாது. இது முட்டாள்தனம். ஒழுக்கம் என்பது நெகிழ்வுத்தன்மையை வேண்டி நிற்கிறது. அதுவொரு திசை. அது பிரச்சினைகள் தோன்றாமலிருக்க வழிசெய்யும் முற்காப்புச் செயல். அது உயரிய திறன்களை நிகழ்த்துவதற்கு சக்தியை ஒன்றுசேர்த்து திசைப்படுத்தும் கருவி. ஒழுக்கமென்பது நீங்கள் செய்யும் ஒரு செயலாக இருக்க முடியாது. அது நீங்கள் நேசிப்பவர்களுக்காக உங்களால் ஆற்றப்படும் செயலாகவே இருக்க முடியும்.” என்கிறது அந்த நூல்.

இது பற்றி நான் கதைப்பது, நான் தரம் ஒன்றில் படிக்கும் போது எனது வகுப்பாசிரியராக இருந்த திரு. சரீப் சேர் அவர்களை நினைவுபடுத்தத் தான். “நா இனிக்க சீனி வேணும். கல்வி இனிக்க ஒழுக்கம் வேணும்” என்று சொல்லித்தந்தவர் அவர். சரீப் சேர் என்றே நாம் அழைக்கும் எங்கள் ஆசானின் நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமானவை தான். ஆனால், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற வாக்கிற்கு இணங்க முதலாம் தரத்தில் படிக்கும் போதே மாணவனை அவனது எதிர்கால வாழ்விற்கு தயார்படுத்த வேண்டும் என்பதில் கண்ணாயிருந்தவர்.

வகுப்பில் அவரிடம் நீளமான மினுங்கும் கட்டையான பிரம்பொன்றிருக்கும். பிரம்பின் நுனியில் வெண்கட்டியை நூலொன்றைத் துணையாகக் கொண்டு கட்டிக் கொள்வார். வகுப்பறைத் திண்ணையிலே (அப்போதெல்லாம், பாலர் வகுப்பில் படிக்கும் போது, கதிரை மேசை பாலர் வகுப்பில் படிப்பவர்களுக்கு இல்லை. எல்லாம் தரையான திண்ணைதான். 🙂 ) அந்த வெண்கட்டி இணைக்கப்பட்ட பிரம்பின் மூலம் அழகான வட்டங்களைக் கீறுவார்.

ஒரு வட்டத்திற்கு எட்டு பேர் படி வட்டத்தின் பரிதி வழியே ஒழுங்காக இருக்கும் படி மாணவர்களிடம் கூறி முழு வகுப்பறையையும் ஒழுங்காக்கிய பின்னரே பாடங்கள் தொடரும். “குழுவாகக் கற்றல்” என்ற முறையை நான் முதலாம் தரத்திலேயே படித்துக் கொண்டேன். வட்டமாக இருப்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல இருந்த போதும், வட்டத்தை என்றும் கண்காணித்து வட்டமாக ஒழுங்காக இருக்கும்படி ஆணையிடுவார்.

எனக்கு இந்த முறை நிறையவே பிடித்திருந்தது. ஆனாலும், வட்டமாக இருக்காமல் வட்டம் குழைந்து போனால், அதனைத் திருத்த முதுகில் பிரம்பு பதம் பார்க்கும் போது, அழுத மாணவர்களில் நானும் ஒருத்தனாக இரு நாட்கள் இருந்திருக்கிறேன்.

ஆனாலும், சரீப் சேர் என்றாலே எங்கள் பாடசாலைக்கே அப்படி ஒரு பயம் என்று நான் தரம் நான்கில் பயிலும் போதே நன்குணர்ந்து கொண்டேன். சரீப் சேர் வருகிறார் என்றால் அந்த நிமிடமே நிஸப்தம் நிலவும். அச்சமயம் காகங்கள் கரைந்தால் அது மட்டுமே கேட்கும். ஒழுக்கம் பற்றி இயல்பாகச் சொன்னவர் அவர்.

ஒழுக்கமென்பது அன்பின் வெளிப்பாடு தான். சிலவேளைகளில் பாசமாக இருப்பதற்கும் நாம் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டிவரும். எல்லா மருந்துகளும் இனிப்பதில்லை. ஏன் எல்லா சத்திரசிகிச்சைகளும் வலியைத் தராமல் இருப்பதில்லை. ஆனால், ஈற்றில் நோயைக் குணப்படுத்திவிடும். இயற்கையிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனது பாலர் வகுப்பு ஆசிரியரின் கண்டிப்புகளை என்னால் அப்படித்தான் காணமுடிகிறது.

giraffe-mother-and-baby.jpg

ஒட்டகச் சிவிங்கி இருக்கிறதே அதன் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு அவத்தையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியை நின்ற நிலையிலேயே ஈனும். தாயின் மெத்தை போன்ற கருவறையிலிருந்து கரடு முரடான தரைக்கு குட்டி ஒட்டகச் சிவிங்கி விழுந்துவிடும். இந்த நிலையில் தாய் ஒட்டகச் சிவிங்கி என்ன செய்யும் தெரியுமா?

அப்போதே பிறந்த குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று தனது காலால், குட்டியை பலமாக ஓங்கி உதைக்கும். இதனால், குட்டியோ எழுந்து நிற்க முயற்சிக்கும். ஆனாலும் அதன் கால்கள் பலமில்லாத நிலையிலல்லவா இருக்கிறது, அதனால் அது விழுந்து விடும். விழுந்து விட்டதே என்று அனுதாபம் கொள்ளுமா தாய் ஒட்டகச் சிவிங்கி? இல்லையே. மீண்டும் குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று பலமாக அதனை தனது காலால் உதைக்கும். ஆனாலும், குட்டி எழுந்து நிற்கும் பின்னர் இருந்து விடும். இதனைக் கண்டு கொண்டு தாய் நிற்காது.

குட்டி ஒட்டகச் சிவிங்கி தனது சொந்தக் காலில் நின்று நடமாட ஆரம்பிக்கும் மட்டும் தாய் ஒட்டகச் சிவிங்கி உதைப்பதை தொடர்ந்து கொண்டிருக்கும். ஏன் இப்படி நடக்கிறது? காட்டில் தனது குட்டி பிழைத்து வாழ வேண்டுமாயின், சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தாய்க்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இவ்வாறு அது செய்கிறது.

ஆக ஒழுக்கமென்பது நாம் இன்னொருவருக்கு அவர் மீது கொண்ட அன்பால் செய்யும் செயலாக இருக்கவே முடியும். எமது ஆசிரியரும் எங்கள் மீது கொண்ட அன்பால்தான் எம்மை ஒரு விடயத்தில் முழுமையான வெற்றியைப் பெறும் பொருட்டு, கண்டித்தார் தண்டித்தார் என்றே நான் சொல்வேன்.

அவர் எம்மீது கொண்ட அன்பும், நான் அவர் மீது கொண்ட அன்பும் அளப்பரியதே! அதுவே, அவரைப் பற்றி நான் இப்படிக் கதைக்க வேண்டிய ஆர்வத்தை தோற்றுவித்த தோற்றுவாயாகக் கூட இருக்கலாம்.

சிறுவர்களே நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்த ஆர்வம் கொண்ட ஆசிரியர் எனக்களித்த அறிவுப் பொக்கிசங்கள் ஆயிரமாயிரம். ஒழுக்கம் சுதந்திரத்தை வழங்குகின்றதென்பது உண்மையே.

ஒரு பெரிய மிட்டாய் பெட்டியிலுள்ள அனைத்து மிட்டாய்களையும் ஒரு குழந்தை ஒரு நாளிலேயே சாப்பிட்டால் அக்குழந்தைக்கு நோயேற்படக்கூடும். ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஒழுக்கம் குழந்தைக்கு மகிழ்ச்சியை நீண்ட நேரத்திற்கு வழங்கும் தன்மையை உடையதை நீங்கள் அறிவீர்கள் தானே!! எமது இயல்புகளை எமக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலங்களை அவதானிக்காமலேயே காரியங்களைச் செய்து கொள்ள வழிசமைக்கின்றன.

நாம் நினைப்பதையே செய்யக்கூடிய வாய்ப்புதான் சுதந்திரம் என்ற தப்பபிப்பிராயம் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது. நாம் நினைப்பதெல்லாவற்றையும் எப்போதும் எம்மால் அடைந்து விட முடியாது. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை” என்ற திரையிசைப் பாடல் வரிகளும் அதைத்தான் சொல்கிறது.

ஒழுக்கம் மற்றும் நற்செயல்கள் ஆகியவை நன்மை, மகிழ்ச்சி, இலாபம், சௌகரியம் என்பவற்றை வெளிப்படையாக தராத பட்சத்தில், அவற்றின் மூலம் நாம் அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகளை எம்மால் பல வேளைகளில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒழுக்கமின்மையால், வெற்றியைத் தொட முடியாமல் போன மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்தால் ஒழுக்கம் மூலம் எய்தப்படக்கூடிய பலன்கள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.

ஒரு கதையொன்று சொல்கிறேன். கேட்கிறீர்களா?

ஒரு மாலை நேரம் ஒரு பையன் தனது தந்தையுடன் கடற்கரையோரமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். தந்தையை நோக்கி பையன் இந்தப் பட்டம் மேலே பறக்க எது உதவி புரிகிறது எனக் கேட்டான்.

அதற்கு தந்தை “நூல்” என்று பதில் சொன்னார். அதனைக் கேட்ட பையனோ, “அப்பா, இந்த நூல் பட்டத்தை கீழ் நோக்கியல்லவா இழுக்கிறது?” என்று சொன்னான்.

இதனைக் கேட்ட தந்தையோ, தனது மகனை அவதானிக்கும் படி சொல்லி பட்டத்தோடு தொடுத்திருந்த நூலை துண்டித்து விட்டார். என்ன நடந்திருக்கும். அதேதான். பட்டம் கீழே விழுந்தது.

இப்படித்தானே வாழ்க்கையிலும் சம்பவங்கள் உண்டு! எம்மைக் கீழ் நோக்கி கட்டி வைத்திருப்பதாக எண்ணியிருக்கும் விடயங்கள் கூட, நாம் பறந்து செல்ல ஆதாரமாக இருந்து உதவி செய்யக்கூடியன. அதுதான் ஒழுக்கமென்பதும்.

எனது ஆசிரியர் தண்டிப்பெல்லாம் முறையற்றதென எண்ணினால் இன்றளவில் நான் ஒழுக்கம் பற்றிக் கதைத்திருக்க முடியாமல் போயிருக்கும். அதுதான் வாழ்வின் ஆதாரம். ஒழுக்கம் உன்னதமானது, உயிரோடு கலக்க வேண்டியது.

ஒழுக்கம் தொடர்பில் எனது ஆசிரியரின் எழுச்சியான நிலைகள் இப்படியிருக்க, கையெழுத்து அழகாக இருக்க பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவர்களில் சரீப் சேர் முதன்மையானவர் எனக்கு. சரீப் சேரின் கையெழுத்தின் அழகில் நான் பல வேளை இலயித்துப் போயிருக்கிறேன். அந்தக் காலங்களில் அச்சுத் தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறவில்லை. ஆனாலும், பாடசாலையின் அதிபர் காரியாலத்தினுள் தொங்கும் நேர அட்டவணையிலிருந்து மாணவர் தேர்ச்சி புள்ளி விபரங்கள் என அனைத்துமே எமது சேரின் அழகிய கையெழுத்தால், அச்சடிக்கப்பட்டது போல் தோன்றும். அந்தக் கையெழுத்து அவ்வளவு கவர்ச்சியானது. பார்க்கத் தூண்டுவது. நாமும் இப்படி எழுத முயற்சிக்க வேண்டுமே என்ற ஆசைளை ஏற்படுத்துவது.

எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. 2000 ஜுலை மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு உயிர்துறந்தார் எனது அன்பு ஆசிரியர் சரீப் சேர். அவர் இவ்வுலகை விட்டு போனாலும், “கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை” என்ற பொன்மொழிக்கேற்ப இன்றும் உலகில் பலரினதும் மனதில் நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒழுக்கமென்பது அன்பால் உருவாவது. அது அன்பை உருவாக்குவது.

“இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன். உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்.

சேர்ந்து நிறைவோம் நிறத்தினூடாக..

– உதய தாரகை

9 thoughts on “பட்டம் பறக்கும் இரகசியம்

 1. அன்புள்ள உதய தாரகை,

  உங்கள் செரீப் சேர் என்ற ஆசிரியரைப் பற்றியும், பட்டம் விட்ட தந்தை, மகன் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். உங்களைப்போல் எனக்கும் சின்னவயதில் சில ஆசிரியர்கள் மிகவும் நினைவு கூறத் தக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். உங்கள் எழுத்து என்னையும் அவர்களை நினைக்க வைத்தது.

  இன்று காலை நடைப்பயிற்சி செய்யும்போது எதேச்சையாக இது பற்றித்தான் யோசித்துக்கொன்டு வந்தேன். இந்த இழுப்பு விசை என் வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு நான் நானாக இல்லையோ என்று யோசித்துக்கொன்டு நடந்து வந்து கணினியில் உங்கள் சிந்தனையைக் கண்டேன்.

  தவறு செய்தால் ஒட்டகச் சிவிங்கிபோல உதைக்க வேண்டியதுதான். ஆனால் சிந்தனைகளைக் கட்டுபடுத்துவது என்ற ஒரு பெரிய விஷயம் என்னை வளர விடாமல் தடுத்திருப்பதாக நான் உணருகிறேன். எப்போதும் யாராவது என் தலை மேல் உட்கார்ந்து அழுத்துவதுபோல் நான் உணர்கிறேன். வளர்ச்சியை இது பாதிக்கிறது.மனித ஒட்டகச்சிவிங்கிகள் உதைக்காவிட்டால் குட்டி படுத்தேயாயிருக்கும்? இல்லையே.. இரை தேடவாவது புறப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

  கருத்துக்களை பகிர்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

  கமலா

 2. நன்றி கமலா அம்மா…

  உண்மையில் நினைவுகள் எல்லாம் ஒரு வகையில் எதிர்நோக்கும் சம்பவங்களை, சந்தர்ப்பங்களை எளிய முறையில் கையாள உதவி செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

  இப்படி ஆயிரமாயிரம் சம்பவங்களை நான் சந்தித்திருக்கிறேன். அவற்றின் மூலம் நிறைவான பல உண்மைகளை கற்றுமிருக்கிறேன்.

  அவை யாவற்றையும் பகிர்ந்து கொள்ளவே “இன்னொரு பிரபஞ்சம்” என்ற இத்தொடரை ஆரம்பித்துள்ளேன்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 3. பழக்கங்களாலும் ஈர்ப்புகளாலும் உந்தப்பட்டு செயல்படாமல் புத்தியின் சொல் கேட்டு எப்போதும் செயல்படும் தன்மையே ஒழுக்கம். சரியா?

  குழந்தை மிட்டாய் சாப்பிடுவது பற்றி கூறி அதன் மூலம் ஒழுக்கத்தை விளக்கியிருக்கிறீர்கள். உண்மையான சுதந்திரம் என்ன என்பது பற்றி நீங்கள் புரிந்துகொண்டதும் புரியவைப்பதும் மிகவும் நன்று.

  அப்புறம் தொடர் தலைப்பு, tagline எல்லாம் அட்டகாசம் தான்! தொடர்ந்து கலக்குங்க 😀

 4. தங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல ஸ்ரீநிவாசன்,

  பழக்கங்கள் என்பதும் அதன் தொடர்பில் ஏற்படும் ஈர்ப்பு என்பதுவும் ஒரு மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

  ஆக, எண்ணங்களின் நிறைவான தன்மைதான் நல்லொழுக்கத்தின் ஆதாரமாக இருக்க முடியும். புத்தி என்பதுவும் எண்ணங்களின் உயிர்ப்பால் வளம் பெறும் கூறாகவே என்னால் காணமுடிகிறது.

  ஆகையால், புத்தியின் சொல்கேட்டு எப்போதும் செயல்படும் தன்மையை ஒழுக்கம் என்று கூறலாம். கூடவே, இவ்வாறு புத்தியின் சொல்லைக் கேட்பதன் மூலம் நாம் பெற்றுக் கொள்கின்ற அறிவு, அதனால் ஏற்படும் அனுபவம், பழக்கம் என்பனவெல்லாம் பிரிதொரு நிலையில் எம்மை ஈர்ப்புகளுக்குள்ளாகி அதன்படி நடக்க ஏவும் சக்தியும் வாய்ந்தது.

  அதிகமாகப் பேசி விட்டேனோ?? 😉

  நான் மேலே சொன்ன விடயம் புரிகிறதா? புரியாவிட்டால் கீழே உள்ள விடயம் புரிகிறதா எனப் பாருங்கள்.. 🙂

  நாளைய நேற்று இன்று, நேற்றைய நாளை இன்று.

  ஆனால்,

  இன்றைய நேற்று நேற்றைய இன்று, நாளைய இன்று இன்றைய நாளை!!!

  🙄 புரிந்ததா??

  நான் சொன்ன இருவிடயங்களையும் கூர்ந்து அவதானித்தால் எல்லாமே புரிந்துவிடும். 🙂

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 5. குழம்பினாலும் தெளிவைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்…

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 6. ஓய்வு பெற்ற பின்னரும் அறிவூட்டல் பணியை விடாது தொடருமாறு பெற்றோர்களால் வேண்டப்பட்ட ஒருவர் நான் அறிந்த வரையில் அவர் (சரீப் சேர்) மட்டுந்தான்.

  அது வேண்டுகோளாலில்லை. அந்த நேரம் ஒரு வற்புறுத்தல் போலவே எனக்குத் தெரிந்தது. அவ்வளவிற்கு சரீப் சேரின் கற்பித்தலின் தனித்துவம் உணரப்பட்டிருந்தது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s