ஒரு வருடத்திற்கு முன்னர் நிறம் வலைப்பதிவில் “இன்னொரு ஆண்டு பிறக்கிறது” என்ற தலைப்பில் ஒரு பதிவை பிரசுரித்த ஞாபகம் எனக்கு இன்னும் பசுமையாகவே இருக்கிறது.
நாம் வாழும் உலக நிலையில் நாட்கள் அதிக வேகமாகப் பயணிக்கிறதோ என்ற சந்தேகத்தைக் கூட இவ்வாறு ஆண்டுகளின் வேகமான வருகை சிலவேளை தோற்றுவிப்பதுமுண்டு.
நாளை இன்னொரு ஆண்டும் உதயமாகப்போகிறது. கடந்த செல்லவுள்ள இந்த 2007 ஆம் ஆண்டு எமக்கு விட்டுச் செல்லும் நினைவுகள் எண்ணிடலங்காதவை. அவை அனைத்தும் கொண்டுள்ள உணர்வுகள், உண்மைகள் என்பன விலைமதிப்பற்றவை தாம்.
2007 ஆம் ஆண்டு கண்ட முக்கிய சம்பவங்களை தொகுத்து இந்த வேளையில் பதிவாக இடுவது பொருத்தமாக இருக்குமென எண்ணினேன். அது இப்பதிவாயிற்று. இப்பதிவிற்கு நான் வழங்கியுள்ள தலைப்பு “ஞாபகமிருக்கிறதா கண்ணே!!?” என்பதாக அமைந்தாலும், முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பிற்கு “அகவையின் சுவடுகள்” என அர்த்தம் சேர்க்கிறேன்.
வழமை போலவே, “2007 விட்டுச் செல்லும் உணர்வுகள்” என்று தொகுப்பிற்கு துணைத்தலைப்பிட்டிருக்கிறேன். (தலைப்பை வைத்தால் சரிதானே!! அதுக்கென்ன இவ்வளவு Explanation வேண்டிக்கிடக்கிறது..? 😆 )
இந்தத் தொகுப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்யலாமென விளைகின்றேன். இந்தத் தொகுப்பி்ல் இடம்பெறும் நிகழ்வுகளின் பதிவுகள் எனது பார்வையில் 2007 இன் முக்கிய நினைவுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஏதும் முக்கியமான விடயங்கள் விடுபட்டிருந்தால் மறுமொழி மூலமாக தெரியப்படுத்துங்கள். சேர்த்துக் கொள்வோம். உணர்வுகளால் வளம் பெறுவோம்.
நினைவுகளில் நிற்கும் நிகழ்வுகள்
அங்கத்துவம்
பல்கேரியா மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டன. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 27 ஆக அமைகிறது.
நஷ்டஈடு
மெர்க் அன்ட் கோ நிறுவனத்தின் தயாரிப்பான Vioxx எனும் வலி நிவாரணி மூலம் இதய நோய மற்றும் பக்கவாதம் என்பன ஏற்படுவதாக முறைப்பாடுகள் எழுந்ததன் காரணமாக இதற்கு நஷ்டஈடாக சுமார் 4.85 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிறுவனம் வழங்க ஒப்புக் கொண்டது.
அறிமுகம்
Apple நிறுவனமானது, “கையடக்கத் தொலைபேசிகளில் புரட்சி” செய்யுமாய்ப் போல், iPhone எனும் புதிய தொடுதிரை கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.
இழப்பு
2007 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸதிரேலியா அணி வெற்றி கொண்டது. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் உயிர் நீத்ததும் உலகக் கிண்ண போட்டியில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
மாயாஜாலம்
ஏழாவதும் இறுதியுமான ஹரி பொட்டர் தொடர் நூலின் பாகம் Harry Potter and the Deathly Hallows என்ற நூல் விற்பனைக்கு வந்தது. வெளிவந்து ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அறுபது
பிரிட்டனின் ராணி எலிசெபத் II மற்றும் அவர் துணைவர் இளவரசர் பிலிப் ஆகியோர் திருமணம் செய்து 60 ஆண்டுகள் பூர்த்தியானதை விமர்சையயாகக் கொண்டாடினார்கள்.
சாதனை
709 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றிய பெருமையை முத்தையா முரளிதன் தனதாக்கின் கொண்டார்.
என்னைக் உசுப்பிய ஒவ்வொன்று
அதிர்ச்சி
2007 ஏப்ரல் மாதம் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் 32 மாணவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்ட துப்பாக்கி தாங்கிய இன்னொரு மாணவனின் செயல் அதிர்ச்சியையே தந்தது. இறங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களையே படத்தில் காண்கிறீர்கள்.
கண்டுபிடிப்பு
உலகத்தில் எத்தனை உயிரினங்கள் உள்ளன என்ற கேள்விக்கு எப்படி விடை கண்டு கொள்வது? இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 700 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை ஆயிரம் உயிரினங்கள் புவியில் கண்டறியப்படாமலே காணப்படுகின்றது என்பது விடையில்லாத வினாவாக இருக்க முடியும் என நம்புகிறேன்.
இதயம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் படி, அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் சுமார் ஆறு இலட்சம் மக்களுக்கு இதய வால்வு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது. இந்த இதய வால்வுகளை தண்டுக்கலங்களின் துணை கொண்டு செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு விரியும் ஆயிரமாயிரம் சம்பவங்கள் அவை தன்னகம் கொண்டுள்ள இந்த 2007 ஆம் ஆண்டு, நிறம் வலைப்பதிவிற்கும் பல உயிர்ப்பான முன்னேற்றங்களை வழங்கியதை நீங்கள் அறிவீர்கள். நிறத்தி்ன் பதிவுகள் நாளேடுகளில் பிரசரமானது, நிறத்தின் முதலாவது ஆண்டு நிறைவானது என அவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இம்மாதம் நிறத்தில் அதிகளவில் பதிவுகள் இடம்பெறவில்லை என்பதுது பற்றி நீங்கள் அறிவீர்கள். நான் சிரியா சென்றிருந்ததே இதற்கு காரணம் ஆகும். அந்த பயண அனுபவங்களுடன் புதிய ஆண்டில் உங்களைச் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.
“இன்னொரு பிரபஞ்சம்” எனும் தொடரும் தொடர்ந்து வெளிவரும் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நிறத்தில் புதிய ஆண்டுக்காய் ஒரு தெளிவான மாற்றம்.
நிறத்திற்கு தனிப்பட்ட வகையில் ஒரு புதிய இலட்சனை ஒன்றை தயாரித்துள்ளேன். அதனையே வலைப்பதிவின் மேல்ப் பகுதியில் காண்கிறீர்கள்.
இதோ உங்கள் பார்வைக்காக அந்த இலட்சனை (இதைத்தான் logo என்று சொல்வார்களாக்கும்… 🙂 )
இது பற்றிய உங்கள் கருத்துக்களை மறுமொழியாகச் சொல்லியனுப்புங்கள்.
நாளை உதயமாகும் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் சகல செளபாக்கியங்களையும் பெற்றுத்தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
புதிய ஆண்டில் புதிதான எண்ணங்களுடன் நிறத்தில் நிறைவோம்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
நிறத்தின் பார்வை பிரபஞ்ச எல்லை வரை நீண்டு, அதையும் தாணடிச் செல்வதை இலச்சினை உணர்த்துகிறது.