விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.
வாழ்க்கையின் அனைத்து விதமான வீழ்ச்சிகளையும் சமாளிக்கும் சக்தி, ஆக்கபூர்வமான சிந்தனைக்குள்ளதென்பது நாமனைவரும் அறிந்த உண்மைதான். அவ்வாறான சிந்தனை மிகப்பெரிய விலை மதிக்க முடியாத சொத்து என்றே நான் கூறுவேன். ஆனாலும், சிலவேளைகளில், ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கும் அவகாசம் இருக்காது. அல்லது அவ்வாறு சிந்தனை செய்வது மிகவும் கஷ்டமாகவிருக்கும் சந்தர்ப்பங்களும் வாழ்க்கையில் ஏற்படும். அப்படியானால், வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஆக்கபூர்வமான நிலையை எம்மிடத்தில் கொண்டு வர என்ன செய்யலாம் என்ற நியாயமான கேள்வி உங்களிடம் தோன்றலாம்.