தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்

விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.

வாழ்க்கையின் அனைத்து விதமான வீழ்ச்சிகளையும் சமாளிக்கும் சக்தி, ஆக்கபூர்வமான சிந்தனைக்குள்ளதென்பது நாமனைவரும் அறிந்த உண்மைதான். அவ்வாறான சிந்தனை மிகப்பெரிய விலை மதிக்க முடியாத சொத்து என்றே நான் கூறுவேன். ஆனாலும், சிலவேளைகளில், ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கும் அவகாசம் இருக்காது. அல்லது அவ்வாறு சிந்தனை செய்வது மிகவும் கஷ்டமாகவிருக்கும் சந்தர்ப்பங்களும் வாழ்க்கையில் ஏற்படும். அப்படியானால், வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஆக்கபூர்வமான நிலையை எம்மிடத்தில் கொண்டு வர என்ன செய்யலாம் என்ற நியாயமான கேள்வி உங்களிடம் தோன்றலாம்.

ஒலிவர் வென்டெல் ஹோம்ஸ் என்ற அறிஞரின் ஆலோசனையைக் கடைப்பிடிப்பது மிகவும் இலகுவான வழியென்றே நான் சொல்வேன். மகிழ்ச்சியான முகத்தோற்றத்தை எந்நேரமும் வைத்துக் கொண்டிருக்கும் இனிமையான மந்திரத்தை நாமனைவரும் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி அடைய வேண்டும். தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக முகத்தை பேணிக் கொள்வது பற்றி பயிற்சி பெறுதல் பொருத்தமான செயற்பாடாகும்.

எமது முகங்களை மகிழச்சியே உருவாய்க் கொண்டதாக வைத்துக் கொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் வாழ்வில் நிறைய ஏற்படும். உண்மையாகவே, எம்மால் மகிழ்ச்சியே உருவான முகத்தை எந்நேரமும் கொண்டிருக்க முடியாதுதான். எனக்குப் புரிகிறது…. ஆனாலும், எம்மால் புன்முறுவல் பூக்க முடியாவிட்டாலும், முகத்தையாவது அமைதியே உருவாய் காணப்படும் மங்கலகரமான தோற்றமாக வைத்துக் கொள்ளலாம் தானே! – இதைத்தான் ஹோம்ஸ் வலியுறுத்துகிறார்.

சிரிக்கும் போது, எமது கவலைகளையும் உள்ளார்ந்தமாக வைத்துக் கொள்வது உடலியல் ரீதியில் அசாத்தியமானதொன்று என பலரும் கருதுகின்றார்கள். எம்மில் எவருக்குமே எந்நேரமும் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது கிடைக்கப்பெறாது. எந்நேரமும் எம்மால் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் கோலமும் கூட.

நாம் தைரியமாக இருக்கும் நிலையில், கவலைகளை ஏற்றுக் கொள்வது இயற்கையானதுதான். ஏனைய நேரங்களில் நாம் கவலைகளை எப்படிக் கையாள வேண்டும்? சிறியதொரு கவலையான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், தைரியம் என்பது இல்லாததல் நாம் எமது நிலையை இழந்து விடுவதுதான் வழியா?? இவ்வாறான நிலையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து எமது கவலைகளை மறந்துவிடுவது சாத்தியமான நிகழ்வுதானா? தொடரும் கேள்விகள் விந்தையானதே!!

எமது மகிழ்ச்சியான முகத்தைத் தரிசிக்கும் மக்கள் எம்மிடமிருந்து எதனை எடுத்துக் கொள்கிறார்கள்? எம்மால் அவர்கள் என்ன நன்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள்? வாழ்வில் ஈடுபாடு, மகிழ்ச்சி, சாந்தம், அமைதி எல்லாமே தொற்றிக் கொள்ளும் ஒருவகையான உணர்வுகள். இதனால், எமது சாந்தமான புன்முறுவல் பூக்கும் முகத்தைக் கண்டு கொள்கின்ற ஏனையோருக்கு, அவர்களை அறியாமலேயே எமது புன்முறுவல், சாந்தம் கொண்ட முகம் தொற்றிக் கொள்கிறது. என்ன அதிசயம் என்று பார்த்தீர்களா?

அதுதான் அதிசயமான தொற்று நோய். ஆக்கபூர்வமான தொற்று நோய். உங்கள் சிரிக்கும் முகத்தைப் பார்த்து உடனடியாக சிரிப்பால் பதிலளிக்கும் பாங்குள்ள மனிதர்களை நீங்கள் நாளாந்தம் தொடர்ச்சியாக் கண்டு கொண்டுதான் இருப்பீர்கள். உங்கள் புன்முறுவல் அவர்களைத் தொற்றிக் கொள்ளும் அற்புதம் தான் அங்கே நிகழ்கிறது…!!!

தொற்றிக் கொள்கின்ற உணர்வுகளை கொண்டவர்களாய் பரிணமிக்க நாம் முனைந்தால், நாமும் மகிழ்வடைவோம். மற்றவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யலாம். ஆனால், தொற்றிக் கொள்ளும் உணர்வுகள் ஆனந்தத்தைத் தரும் அழகிய உணர்வுகளாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமான விதியென்பது மட்டும் எழுதப்படாத விதி.

– உதய தாரகை

One thought on “தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s