அவ’லை’ எனக்கு ரொம்பப் பிடிக்கும்

கடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் பதிவையும் புதிதாக பதிப்பிக்க முடியாமல் போனதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மிடமிருந்து ஒருவர் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் அதனை வழங்காமல் அவர் காட்டும் அத்தனை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கும் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்காது என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் நிறத்தில் புதிய வர்ணங்கள் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக உங்களுக்கு ஏமாற்றத்தே தந்திருக்கும். அதனை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. சரி.. சரி.. மேட்டருக்கு வாரேன்…

நாம் ஏதாவதொன்றை தவறாகவோ அல்லது பொருத்தமில்லாதவாறோ செய்துவிட்டால் அதற்கு “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” (நல்ல தமிழில் இல்லப்பா ஆங்கிலத்தில் சொல்வதானால் I am sorry என்று சொல்வார்கள்.. ) இருக்கட்டும்.. இருக்கட்டும்.. மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பில் ஒருபதிவை ஏற்கனவே நிறத்தில் பதிவிட்டிருந்தது நீங்கள் அறிந்ததே! ஆனால் நாம் செய்த தவறுக்காக அல்லது பொருத்தமி்ல்லாத நடவடிக்கைக்காக வெறும் Sorry கேட்டுவிடுதல் போதுமானதா? – எனக்குள் இன்று காலை எழுந்த கேள்வியிது.

நாம் பிழைகளைச் செய்துவிட்டு பின்னர் குறிப்பிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சமாளிக்கப்பட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. மற்றவர்களிடம் ஏதாவது சொல்லி நாம் செய்த தவறுகளை சமாளிபிக்கேஷன் செய்துவிடலாம் என்ற நினைப்பு பொருத்தமற்றதென்றே சொல்லலாம். மன்னிப்பு என்று கேட்டுவிட்டால் மன்னிப்பு வழங்குபவர்களே மனிதர்களில் புனிதர்கள். மன்னிப்பது மகத்துவமானது. மனிதர்களுள் புனிதர்களாகி விளங்குபவர்களே மன்னிப்பதை மகத்துவமாகக் கொண்டிருப்பர்.

நீங்கள் மன்னிக்கக் கோரும் விண்ணப்பங்களை ஏற்காதவர்கள், உங்களை நற்குணத்திலிருந்து பிறழ்ந்தவர்களாகக் கணிக்கக்கூடும். அதற்கான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் உங்கள் முன்னால் நிறுத்தக்கூடும். இதேவேளை, நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, It’s ok என்று உங்களை தேற்றி மன்னிப்பு வழங்குபவர்கள், நீங்கள் செய்த விடயத்தால் உண்டான விளைவுகளின் அதிர்ச்சியை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அல்லது சந்தித்திருக்கலாம். ஆனாலும், வெறும் Sorry என்ற வார்த்தைகளால் மட்டும் மன்னிப்பின் மகத்துவத்தை வரையறுக்காமல், நாம் செய்யும் செயல்களால் மற்றவர்கள் அடையக்கூடிய அசெளகரியங்களைப் பற்றியும் சிந்தித்தல் சாலப் பொருத்தமானது. இது மன்னிப்புக் கேட்கும் எமது தொனியில் அன்பையும் ஆழத்தையும் கொண்டு தரும்.

தவறாகப் புரிந்து கொண்ட நிலைகளைத் தெளிவாகப் பின்னர் புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளச் செய்வதும் இலகுவான காரியங்கள் தான். ஆனால், சுய கெளரவம் மற்றும் அகம்பாவம் என்பவற்றின் விளைவால் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தவறுக்கு நான் எப்படியும் காரணமாக இருக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக வாதிடுவதோ அல்லது கூறி நிற்பதோ மற்றவர்களின் எரிச்சலையையே அதிகளவில் சம்பாதித்துத் தரும்.

இதனை இப்படி எளிய முறையில் சொல்லிவிடலாம். அதாவது, “நீங்கள் என்னைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, உங்களை நான் நான் புரிந்து கொள்வதுதான்” என்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் என்பதோடு, இனிய பொழுதுகளை எமக்குச் சொந்தமாக்கிச் செல்லும். வாழ்க்கையில் நாம் புரிதலின் ஆதாரங்களாகவே இருக்கின்றோம்.

ஆமா,. தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழைகள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டே இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன். ஆனால் தலைப்பில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை. நேற்று எனது நண்பனின் வீட்டிலிருந்து அவலை அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவல் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரசித்து ருசித்துச் சாப்பிடுவேன் அவலை. ஆமா அதுதாங்க.. அரிசியை குத்தி எடுத்தால் வரும் தகட்டு அரிசி.. அதுதான் அவல்.. உங்களுக்குத் தெரியாதா என்ன?? அவலில் சீனிப்பாகு இட்டு செய்து அனுப்பியிருந்தார்கள். அவலிடம் கொண்ட பிரியத்தால் சீக்கிரமாகவே நண்பனுக்கு அனுப்பப்பட்ட அவலை பதம் பார்த்து விட்டேன். கடைசியில் Sorry என்று சொல்லிவிடலாம் என்ற நிலை தோன்றியது. நண்பனாச்சே.. நான் அவலுக்கு ரொம்பப் பிரியம் என்பதை அவனறிவான். புரிந்து கொள்வதென்பதில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றாது என்பதற்கு அவல் தொடர்பான நிகழ்ச்சியும் ஒரு ஆதாரம் தான்.

என்னது.. நீங்க இப்படி இருப்பீங்க என்று நாங்க நெனக்கவேயில்ல என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குப் புரியாமல் இல்லை. மேலே நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட அவல் பற்றிய சந்தர்ப்பம் எனது நண்பன் ஒருவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதுதான். இங்கு பொருத்தமாகவிருக்கும் என எண்ணினேன் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். உங்கள் எண்ணங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s