அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம் என்ற தலைப்பில் ஏற்கனவே நிறத்தில் ஒரு பதிவை எழுதியதை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். அன்பு என்பது அழகு. எப்போதும் அழகுதான். அழகால் அன்பு வராது. அழகை மறக்கடித்து அன்பு தளைக்கும். அங்கே அன்பு வெற்றி காணும். (என்னது.. அன்பு என்று ஓவரா பில்ட்அப் கொடுக்கிறீங்க.. உதய தாரகை!)
ஒரு பாடலின் வரிகள் கூட என் ஞாபகத்திற்கு இந்நேரம் வருகின்றது. இதோ அந்தப் பாடல் வரிகள். “பவித்ரா” திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் “அழகு நிலவே” என்று தொடரும் பாடலில் இப்படியொரு கட்டமும் உண்டு.
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே
நான் பாடலில் சொல்ல வந்த கருத்தையோ அல்லது திரைப்படத்தின் கதையோ இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இறுதி வரியை திரும்ப ஒருதரம் வாசியுங்கள். “கடலை விடவும் ஆழம் எந்தன் கண்ணீர் துளிகளே” – அழுதவனுக்கு தெரியும் கண்ணீரின் ஆழம். ஆனால், ஆண்கள் அழக்கூடாது என்று எமது பெரியோர்கள் எம்மிடம் திரும்பத் திரும்ப எழுதப்படாத விதியாகச் சொல்லியே வந்திருக்கிறார்கள்.
ஆண்கள் உண்மையில் அழக்கூடாதா? அழுகை என்பது அவ்வளவு குறைத்து மதிப்பிடப்பட வேண்டிய குணமா? எனக்குள் எழும் கேள்விகள் நிறையவே உண்டு. (என்னது அன்பு என்று பில்ட்அப் கொடுத்துட்டு இப்ப அழுகை என்று பில்ட்அப் வேற எதுக்கு உதய தாரகை…?)
உண்மையான ஆண்மகன் ஒருபோதும் அழவே மாட்டான் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுகை என்பதும் கண்ணீர் என்பதும் நகமும் சதையும் போன்ற பிரிக்க முடியாத நண்பர்கள்.
விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில், தொன்று தொட்டு வந்த நாகரிகங்களின் பதிவுகளின் அடிப்படையிலும் அழுகை என்பது எமது சுகாதாரத்திற்கு நன்மை செய்யும் செயற்பாடாகும் என உணரப்பட்டுள்ளது. அழுகை என்பது மனிதனின் பிரபஞ்ச அனுபவம் என்றே சொல்லிவிடலாம். வரலாறுகளில் நாம் எத்தணை கதைகளைக் கேட்டிருக்கிறோம். அனர்த்தம், மன அதிர்ச்சி, இழப்பு, வலி, ஏன் சின்னச் சின்ன மனக்கவலைகள் என எல்லாமே அழுகையை வரவழைக்கும். அதுமட்டுமா சந்தோசம், களிப்பு என விரியும் மகிழ்ச்சியான தருணங்களில் கூட அழுகை எம்மை ஆட்கொள்ளலாம்.
உயிரியலாளர்கள், அழுகை என்பது நான்கு உயிரியல் பொறிமுறைகளுக்கு ஊக்கியாகத் தொழிற்படுவதாக ஆய்ந்தறிந்துள்ளார்கள். அது என்ன நான்கு விடயங்கள் என இக்கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன். இப்ப மேட்டருக்கு வர்ரன். (என்ன.. அப்போ இன்னும் மேட்டருக்கு வரலியா? என்ன கொடுமை உதய தாரகை இது?)
கனவுகள் என்பது எல்லைகளற்றது. நேரம் காலம் புரியாதது. மிகச் சுதந்திரமானது. (ஆமா.. அன்பு, அழுகை என்று தொடங்கி இப்ப கனவு என்று வேறு பில்ட்அப் வேற. தாங்க முடியல உதய தாரகை). கனவுகளின் நனவில் மகிழ்ச்சி ஏற்படுவது போல், கனவுகள் நிறைவேறாத போதும் கவலை வரும். நிறைவேறிய கனவுகளில் கலக்கம் ஏற்படுகையில் கூட, கவலை வரும். இதுதான் வாழ்க்கை.
ஆண்கள் வெளிப்படையாக அழக்கூடாது, கண்ணீர் விடக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடே இல்லை. அண்மையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் Michael Vaughan தனது தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விடயம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் விரும்பிச் செய்யும் ஒரு விடயத்தினை இழப்பதென்பது மிகவும் உறுக்கமான விடயம்தான். ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய Michael Vaughan நன்றிகளைத் தெரிவித்ததன் பின்னர், அவரை அறியாமலேயே அவர் கண்கள் கண்ணீர் சொட்டத் தொடங்கின. உணர்வு பூர்வமான கட்டங்கள் அவை.
நானும் பல தருணங்களில் அழுதிருக்கிறேன். சிலவேளைகளில் நான் அழுகை வந்ததை அடக்கியிருக்கிறேன். ஆண்கள் அழக்கூடாது என்று யாரும் அட்வைஸ் பண்ண வருவார்கள் என்ற ஐதீகத்தில் தான் அப்படி நான் செய்திருக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் யாருமே அறியாமல் அழுவது வேறு, பொது இடங்களில் மக்களிடையே அழுகை உணர்வால் கண்ணீர் சொட்டுவது வேறு.
பொது இடங்களில் கூட ஆண்களைக் கண்ணீர் வடிக்கச் செய்யும் சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. அண்மையில் BBC இணையத்தளத்தில் இதுபற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதனை நான் உங்களுக்காக சுருக்கமாகத் தமிழில் தருகிறேன்.அத்தோடு எனது அனுபவங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.
- தம் பெற்றோருக்கு பெருமை சேர்த்தல் : நமது பெற்றோர்களுக்கு நாம் பெருமை சேர்க்கும் போது, பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அத்தருணத்தில் தமது கண்களை காய்ந்த நிலையில் வைக்க யாரால்தான் முடியும். உணர்ச்சி பூர்வமான உணர்வுகள் பகிரும் நிலைகள். நான் பல வேளைகளில் இந்த நிலையை அனுபவித்திருக்கிறேன்.
- முதலாவது பிள்ளையை அல்லது பேரனை பெற்ற தருணம்: ஒரு ஆணினதும் பெண்ணினதும் மிகவும் மறக்க முடியாத தருணம். ஆமா.. இந்தத் தருணத்தையும் உதய தாரகை அனுபவிச்சி இருப்பீங்களே? என்றல்லவா? கேட்க நினைக்கிறீங்க.. அவசரப்படப்படாது. ஓ.கே.?
- நெருங்கியவர்களின் சங்கடங்கள்: உங்களுக்கு நெருங்கியவர்கள் கஷ்டப்படும் போது, கவலையே உருவாய்க் காணப்படும் போது, உங்களால் அவர்களைத் தேற்ற முடியும். ஆனாலும், உணர்வுகளின் பகிர்வுகள் இடம்பெறுகையில் அழுகையென்பது உங்களை அறியாமலேயே உங்கள் கண்களை நனைக்கும். நேற்றிரவு கூட, என்னால் என்னைக் அழுகையில் இருந்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் எமக்கு இருக்கவே வேண்டும். நான் நிறையத் தரம் அழுதிருக்கிறேன். அத்தருணங்களில் கதைக்க வேண்டிய வார்த்தைகளைக் கூடத் தொலைத்திருக்கிறேன். மறந்திருக்கிறேன். நான் எனது அன்புக்குரியவர்களின் உணர்வுகளை உணருகையில் அவர்களாகவே மாறிவிடுகிறேன்.
- அன்புக்குரியவர்களுக்கு தீயது செய்தல்: அன்குரியவர்களுக்கு தீங்குகள் செய்தால் அது எம்மை எப்போதுமே, உறுத்திக் கொண்டேயிருக்கும். அது மனதில் ரணமாகி எம்மை வருத்தும். இதனை யாரிடமாவது அல்லது அன்புக்குரியவரிடமே சொல்லி அழ வேண்டும் போலிருக்கும். இன்னும் இதுபோன்ற அனுபவம் இல்லை. இருக்கவும் தேவையில்லை என்று தோன்றுகிறது எனக்கு.. உங்களுக்கு எப்படியோ?
- மன்னிப்பு கேட்டல்: “மன்னிப்பு என்பது பாவிகளை உருவாக்கும் என்பதால் நான் மன்னிப்பதே இல்லை” என்று ஒரு நூலில் வாசித்த ஞாபகம் எனக்குண்டு. எந்த நூல் என்று என்னால் நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், மன்னிப்பு என்பது வாழ்க்கையின் ஜதார்த்தத்தை மன்னிப்பு கேட்பவருக்கு உணர்த்தலாம். ஆதலால் மன்னிக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பிலான பதிவையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள். நீங்கள் செய்த தவறுக்காக அதனை உணர்ந்து நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்களால் கண்கள் கொள்ளும் ஈரத்தை தடுத்துவிட முடியாது. அனுபவம் உண்டு எனக்கு..
- நீங்களே தோற்றும் போகும் தருணம்: நீங்கள் வெற்றி நிச்சயம் என நம்பியிருந்த தருணம், தோற்றுப் போனதாய் பெறுபேறு கிடைத்தால் என்ன செய்வீர்கள். உங்களை அறியாமலேயே கண்கள் நனையத் தொடங்கும். இதில் நிறைய அனுபவங்கள் இருக்கிறது எனக்கு. (அனுபவம் இருக்கு.. இருக்கு என்று சொன்னா போதுமா?? என்ன அனுபவம் என்று சொல்ல வேண்டாமா? உதய தாரகை??..) நிச்சயமாக நான் எல்லாவற்றையும் எனது அனுபவத் தொடராக எழுதும் இன்னொரு பிரபஞ்சம் தொடரில் சுவைபடச் சொல்வேன். அதுவரை பொறுமனமே..!
- முயற்சியில் வெற்றியடையாமை: நாம் செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றியையே தரும் என எதிர்பார்க்க முடியாது. தோல்விகளும் வரத்தான் செய்யும். எமது முயற்சியின் பலன் தோல்வியில் முடிந்தால் கவலை வரும். அது அழுகை தரும். என் ஞாபகத்திற்கு நான் மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போன தருணம் வருகிறது. நாம் எத்தனை முறை விழுகிறோம் என்பதல்ல முக்கியம். நாம் விழுந்த தடவையெல்லாம் எழுந்து நிற்பதுதான் முக்கியம். (எங்கேயோ கேட்ட டயலொக் மாதிரி இருக்கே… உதய தாரகை)
- முயற்சியில் வெற்றியடைதல்: அயராத முயற்சி தரும் வெற்றி, மகிழ்ச்சியின் பிறப்பிடம் என்று சொல்லிவிடலாம். நான் வென்ற நிலையிலும் அழுதிருக்கிறேன். மனதிற்குள் கண்ணாடி முன் சிலவேளை என் அம்மாவிடம். எல்லாமே இன்னொரு பிரபஞ்சத்தில் விரிவாகச் சொல்வேன்.
- தூசுகள் தரும் கண்ணீர்: இது உணர்வுகளோடு சம்மந்தப்படாவிட்டாலும் எமது கண்ணீருடன் சம்மந்தப்பட்ட விடயம் தான். நாம் எதிர்பார்க்காத நிலையில் எமது கண்களுக்குச் செல்லும் தூசுகள் கண்ணீர்ச் சுரப்பியை தூண்டி விடுகின்றன. நிறைய அனுபவம் உண்டு எனக்கு. (அதுக்குத்தான் “கூலிங் கிளாஸ்” போட்டுட்டு ஊர் சுத்தணும் என்று சொல்றது… புரிஞ்சுதா உதய தாரகை!?!)
இப்படி ஆண்களை கண்ணீர் வர வைக்கும் சம்பவங்கள் விரிகின்றது. அழுகையால் ஏற்படும் நான்கு நன்மைகளைச் சொல்ல வேண்டாமா..? அது தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே, இறுதியில் சொல்வதாய்..? பிறப்புரிமைக் காரணிகளில் செல்வாக்குச் செலுத்தல், சமிபாட்டுத் தன்மையில் நன்மை கொடுத்தல், ஹோமோன்களின் அளவில் பயனுள்ள மாறுதல்களைத் தோற்றுவித்தல் மற்றும் அன்றாட கடமைகளில் புத்துணர்ச்சியைத் தருதல் என்பதே அந்த நான்கு நன்மைகளுமாகும்.
நீங்கள் ஆண்கள் அழுவது தொடர்பில் என்ன நினைக்கறீர்கள்? நீங்கள் அழுத தருணங்கள் என்னவென்ன என்பது பற்றி மறுமொழியிடுங்கள். உங்கள் மறுமொழிகளோடு இன்னும் கதைப்போம் எண்ணத்துடன் நிறைவு செய்கிறேன்.
– உதய தாரகை
வெகு சிறப்பாக எழுதுகிறீர்கள். உணர்வுகளில் முதன்மையானது அழுகை.ஆம்.பிறப்பின் போது நாம் அழுதால் தான் உயிர்ப்பு. இறக்கும் போது மற்றவர் அழுதால் தான் நம் வாழ்வின் மதிப்பு. நான் நிஜ வாழ்வை விட , நாவல் / திரைப்பட பாத்திரங்களுக்காக அவர்கள் வேதனையில் கைக்குட்டை நனையும் வரை அழுதிருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி உதய தேவன்.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
அன்புடன் உதய தாரகைக்கு உங்கள் வலைப்பக்கம் நன்றாக உள்ளது.இடைக்கிடையே நீங்களே குறுக்கிடுவது அலுப்பை ஏற்படுத்துகின்றது
நன்றி பசிராமைந்தன் உங்களுக்கும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும்..
Reader interaction ஐ அதிகரிக்கச் செய்வதற்காகவே எல்லா பதிவுகளிலுமே நான் எனது மறுமொழிகளைச் சேர்க்கிறேன். நல்ல வரவேற்புக் கூட இதற்கு இருக்கிறது.. ஆனாலும், உங்கள் மறுமொழிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை