பசித்திரு, முட்டாளாயிரு

எனது ஆங்கில வலைப்பதிவில் நான் கடந்த ஜுலை மாதம் பதிப்பித்த ஒரு பதிவை நிறத்திலும் கட்டாயம் பதிப்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்பதிவு உருவாகியதெனலாம். வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமானது, எல்லோரும் அதில் வெற்றியைக் கண்டு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருக்க வேண்டுமென்றே விரும்புவர். (என்ன உதய தாரகை.. வாழ்க்கை, சந்தோஷம் என்று பில்ட்-அப் எல்லாம் ஓவரா போகுது.. என்ன விஷயம்….?)

உலகத்தின் வரலாற்றில் எத்துணை ஆளுமைகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் பெளதீகமாக உலகில் இல்லாவிட்டாலும் அவர்களின் சாதனைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் மூலமாக இன்றும் மனித குலத்தின் மனங்களில் திளைத்திருக்கிறார்கள். உலகம் உள்ளளவும் அவர்களின் புகழ் பூமியெங்கும் பரவி வசந்தம் வீசிக் கொண்டேயிருக்கும்.

நாம் வாழும் இக்காலத்திலும் எத்துணை ஆளுமைகள் தமது திறமையால், எண்ணங்களால் சாதனை படைத்து உலகத்தின் மனித குலத்திற்கு பல நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பில் கேட்ஸ் என்றாலே நீங்கள் முந்திக் கொண்டு மைக்ரோசொப்ட் தலைவர். உலகத்தின் முன்னணி கோடீஸ்வரர் என்றெல்லாம் விளக்கம் கூறுவீர்கள். இவ்வாறு ஒரு தனிநபரைப் பற்றிய விழிப்புணர்வு உங்களிடம் ஏற்பட அந்நபரின் ஆளுமைத் திறமைகள், திறன்களே காரணமாக அமைந்தன என்றே நான் சொல்வேன்.

ஸ்டீவ் ஜொப்ஸ் – நுணுக்கமான இலத்திரனியல் கருவிகள் தோன்றும் மூளையைக் கொண்ட தலையை உடைய ஒரு மனிதர். (வேற யாருமில்லங்க.. நம்ம அப்பிள் கம்யூட்டர் நிறுவனத்தின் ஸ்தாபகர்). இவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…? (என்ன உதய தாரகை இப்படி கேட்டுப்புட்டீங்க… எங்களுக்கு என்ன தெரியுமாவா…..? நெறயத்தெரியும்..). ஆனாலும் இங்கு அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல வரவில்லை. அவர் பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சொற்பொழிவைப் பற்றியே சொல்லப் போகின்றேன். ஆனால் அது வெறும் சொற்பொழிவல்ல…

கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டென்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தான் இந்த உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் வீடியோ பதிவை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் மெய்சிலிர்த்துப் போவேன். புத்துணர்ச்சியும் பெற்றுக் கொள்வேன். அந்த உரையை நீங்களும் கேட்க வேண்டும். அதற்கு முன்னர் அவர் அவ்வுரையில் சொன்ன கருத்துக்களில் என்னைக் கவர்ந்த முக்கிய பகுதிகளை தமிழாக்கம் செய்கின்றேன்.

அவரின் வாழ்க்கையில் இடம்பெற்ற மூன்றே மூன்று சந்தர்ப்பங்களைச் சொல்லி அதனை வாழ்க்கையை வெல்வதற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதை அந்தவுரையில் அழகாகச் சொல்கிறார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

அவரின் உரையில் மரணத்தைப் பற்றிச் சொல்லும் சில வரிகள் மிக மிக அர்த்தமுள்ளவை.

மரணிப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. சுவர்க்கத்திற்கு போக ஆசைப்பட்டவர்கள் கூட அங்கு செல்வதற்காக மரணிக்க விரும்புவதில்லை. ஆனாலும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நிச்சயமான நிலைதான் மரணம் என்பதாகும். ஆம். அப்படி அது இருக்கவே வேண்டும். ஏனெனில், வாழ்க்கையின் உன்னதமான கண்டுபிடிப்பு மரணம் ஆகும். அது வாழ்க்கையை மாற்றும் காரணி. பழைமையைக் அகற்றி புதியன உருவாக்க பாதை ஏற்படுத்தித் தருவதுதான் மரணம். தற்போது இந்த நிமிடம் நீங்கள் புதிது.. உங்கள் எண்ணங்கள் புதிது.. புதியதுதான் நீங்கள், ஆனால் கொஞ்சம் நாட்களில் நீங்கள் பழையவராகலாம் இருந்த போதிலும் நீங்கள் படிப்படியான பழைமையில் இருந்து விடுபட்டு புதியதை அடையக்கூடும். நான் அதிகமாக விபரிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால், இதுதான் உண்மை.

உங்கள் நேரம் வரையறுக்கப்பட்டது. இன்னொருவரின் வாழ்க்கையை வாழ்வதில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். மற்றவர்களின் எண்ணங்களின் நிமித்தம் வாழவேண்டுமென்ற மாயைக்குள் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம். மற்றவர்களின் எண்ணங்கள், உங்கள் ஆழ்மனதின் தூய நோக்கங்களுடன் கலந்துவிட வழிசமைக்க வேண்டாம். முக்கியமாக உங்கள் மனம், சுயபுத்தியின் தூண்டல் வழியே நடந்து கொள்ளப் பாருங்கள். அவையே நீங்கள் எதுவாக வரவேண்டுமென்பதை ஓரளவுக்கேனும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள கூறுகள். ஏனையவை துணையானவைகளே.

எத்துணை ஆழமான வரிகள் இவை. நாம் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தேவையான நிறைய விடயங்களை, சாதனைகளைப் படைத்த மனிதர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் விரும்புவதை அடைவதுதான் மகிழ்ச்சிக்கான வழி. அது அடையும் வரை முயற்சி செய்யவேண்டும். முயற்சி செய்தவன் தோற்றுப் போனதாய் சரித்திரம் இருந்தால், முயற்சி செய்தவன் என்பவன் அச்சந்தர்ப்பத்தில் ஒரு சோம்பேறியாகவிருந்திருப்பான் என்று எங்கோ வாசித்த ஞாபகம் எனக்கு இப்போது வருகிறது. "முயற்சி திருவினையாக்கும்" என்ற பழமொழியைச் முதன் முதலில் சொன்னவனின் வாய்க்கு சர்க்கரை கொஞ்சம் வாங்கிக் கொடுக்க வேண்டும். (அவருக்கு சக்கரை வியாதி இல்லாமல் இருக்கும் என்று எப்படி உதய தாரகை அவ்வளவு உறுதியாகச் சொல்றீங்க…? போங்க.. நீங்களும் உங்க அடைப்புக்குறி மறுமொழியும்… ரொம்பச் சின்னப்புள்ளத்தனமா இருக்கு..)

ஸ்டீவ் ஜொப்ஸின் உரையில் அவர் முயற்சி பற்றியும் சொல்கிறார்.

நான் அப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் இந்த எதுவுமே நடந்திருக்காது. அது கசப்பான மருந்தாக இருந்தாலும், நோயாளிக்கு கட்டாயம் தேவையானதே. சிலவேளைகளில் வாழ்க்கை செங்கல் கொண்டு தலையில் அடிக்கும். ஆனாலும், நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். நான் எதைச் செய்தாலும் அதனை விருப்பத்துடனேயே செய்தேன், அதுவே எந்த இடர்கள் வந்து என்னை தாக்கிய போதும், அதற்குப் பயப்படாமல் சீராக என்னால் செல்ல முடிந்தது.

நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ அதையே நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவே உங்கள் தொழிலுக்கும் காதலர்களுக்கும் உண்மையாக அமையும். உங்கள் தொழிலே உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியை பிடித்துக் கொள்ளப் போகிறது, அதனால் உங்களைத் திருப்திப்படுத்த நீங்கள் எதை உயர்ந்த தொழிலாக அல்லது வேலையாக நம்புகிறீர்களோ அதையே செய்யுங்கள். உயர்ந்த தொழிலை செய்தற்கு ஒரேயொரு வழி, நீங்கள் செய்வதை விருப்பத்துடன் நேசிப்பதாகும். நீங்கள் இதுவரையும் அப்படியான தொழிலைக் கண்டிறாவிட்டால் தொடர்ந்தும் தேடிக் கொண்டேயிருங்கள். ஒரு போதும் களைத்துவிடாதீர்கள். உங்கள் மனத்தின் பலத்தால், உங்கள் விருப்பத்திற்குரிய விடயம் உங்களுக்கு கிடைத்துவிட்டதை சுலபமாக அறிந்து கொள்வீர்கள்.

இப்படி தனது உரையில் பல விடயங்களை அழகாக எடுத்துச் சொல்கிறார் அப்பிள் கம்யூட்டர் ஸ்தாபகர். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற தாகம் தனக்கு இருந்ததால் இன்றுவரை தன்னால் பல புதிய இலத்திரனியல் சாதனங்களை அனைவரையும் கவரும் வகையில் அறிமுகம் செய்ய முடிந்தது என்பதை தனது அண்மைக் கால சாதனைகள் மூலம் தெளிவாகவே எமக்கு சொல்லிப் போகிறார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

அவர் நிகழ்த்திய உரையின் கடைசி இரண்டு வசனங்களும் எல்லா பிரபஞ்ச விதிகளையும் ஆழமாகச் சொல்லுவதாய் அமைந்துள்ளது. Stay Hungry, Stay Foolish என்பதுதான் அந்த வரிகள். பசித்திரு. முட்டாளாயிரு. பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைச் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும். ஜெகத்தையே வெல்லலாம். ஸ்டீவ் ஜொப்ஸின் உரையை இங்கு நீங்கள் பார்த்தும் கேட்டும் புத்துணர்ச்சி பெறலாம்.

நிறைவாக, இந்தப் பதிவிற்கு ஒரு தொடர்பும் இல்லாவிட்டாலும், நான் அண்மையில் வாசித்த நகைச்சுவைத் துணுக்கொன்று என் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. அதையும் இங்கேயே சொல்லிவிடுகிறேன். கணவனும் மனைவியும் இராப்போசனத்தை ஆடம்பர ஹோட்டலொன்றில் சாப்பிட்டு விட்டு, வெளியேறும் தறுவாயில் கணவன், மனைவியைப் பார்த்து, "அன்பே, இந்த ஒளி விளக்குகளின் மத்தியிலே நீ ரொம்பவும் அழகாயிருக்கிறாய்" என்று சொன்னான்.

மனைவியோ கணவனை அன்பே உருவாய் பார்த்து வெட்கத்தில் இருக்க, "நாம் போகும் போது, இந்த மின் விளக்குகளில் கொஞ்சத்தை வாங்கிச் செல்ல வேண்டும்" என கணவன் தொடர்ந்து பேசி முடித்தானாம். பிறகு என்ன நடந்தது எனத் தெரியாது. (இதிலென்ன நகைச்சுவையிருக்குது என்று நீங்க கேட்டால் அதற்கு என்னால பதில் கூற முடியுதோ இல்லையோ… அப்படியெல்லாம் நீங்க கேள்வி கேட்கமாட்டீங்க என்று தெளிவா நம்புறேன்…)

பதிவைப் பற்றிய கருத்துக்களுடன் உங்கள் மறுமொழிகளை காணும் எதிர்பார்ப்புடன் இப்பதிவின் நிறைவைக் குறிக்கிறேன்.

– உதய தாரகை

9 thoughts on “பசித்திரு, முட்டாளாயிரு

 1. முன்னேறுவதில் நலிவு கண்டவர்களை கரையொதுக்கிய ஒரு குழாம் அல்லது கூட்டம் பின்னாளில் அவர்களை வாரியெடுத்து அணைத்துக்கொள்ளுமெனில் அதற்குள் ஆயிரம் விடயங்கள் அரங்கேறி முடிந்திருக்கும்: ஒரு கோடிப் பேருக்கு உதவும்படியாக!

 2. நன்றி லதா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

  முயற்சி இல்லாத போதுதான் முன்னேற்றத்தில் நலிவு ஏற்பட வாய்ப்புண்டு. முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, யாரும் ஒருவரையும் கரையொதுக்க முடியாது.

  “எப்போதும் செய்வதற்கொரு வேலை வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்” இது நான் ஒரு தினசரிப் பத்திரிகையொன்றில் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்த வாசகம். நிச்சயமான உண்மையும் இதுதான்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 3. நான் சோர்வுற்றிருக்கும் நேரங்களில் பார்க்கும் video இந்த பேச்சு.

  வெற்றிபெறுதல், தோல்வியில் இருந்து மீண்டெழுதல் என்பவற்றிற்கு ஸ்டீவ் ஜொப்ஸ் ஒரு சிறந்த உதாரணம்.

 4. நன்றி நிமல் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

  உலகத்தின் மிகச் சிறந்த இணையத்தளங்களுள் ஒன்றான Lifehacker.com இணையச் சஞ்சிகையின் ஆசிரியையிடம் “உங்களுக்கு யாருடைய மூளை அமையப் பெற்றிருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்?” என அண்மையில் நேர்காணலொன்றின் போது கேட்கப்பட்ட போது, “ஸ்டீவ் ஜொப்ஸின் மூளை” என்றே பதிலளித்தார். ஸ்டீவ் ஜொப்ஸ் – வாசிக்கப்பட வேண்டிய ஆளுமை.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s