தலைப்பில்லாமல் ஒரு பதிவு

நிறம் வலைப்பதிவின் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நான்காவது பதிவுயிது. யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம் என்ற சொல்வாக்குடன் தொடங்கிய இப்பதிவுத் தொடர் எனது வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் அர்த்தத்துடன் சொல்லிக் கொண்டு வருகின்றதாய் அமைந்துள்ளதென நம்புகிறேன்.

எனது எண்ணங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொள்ள நிறையத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றையும் பதிவாக்கி நிறத்தில் பதிப்பிக்க (ஏன் உதய தாரகை இப்படியெல்லாம் பில்ட் அப் எப்போதுமே ஏற்படுத்திக் கொள்றீங்க..?..)

பதிவைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு குட்டிக் கதையொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒரு பாடசாலையில் தரம் இரண்டில் (பாலர் வகுப்பிற்கு அடுத்த வகுப்பு.. ம்.. எங்களுக்கும் அது தெரியுமில்ல…) ஒரு பையன் படித்து வந்தான். எப்போதுமே அவன் வகுப்பில் எல்லா விடயங்களையும் நேர்த்தியாக செய்வானாம். ஆனாலும், அவனிடம் அவனைவிட்டகலாத ஒரு பழக்கம் காணப்பட்டதாம்.

அது என்ன? என்றுதானே வாயில் விரல் வைக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்க.. இந்தப் பையன் பாடசாலைக்குள் இடைவேளை நேரத்திற்கு வெளியே செல்லும் போது, கையில் எப்போதும் ஒரு பென்சிலும் ஒரு கடதாசியும் வைத்துக் கொண்டே வலம் வருவானாம். இதென்ன பழக்கமிது…? அப்படி என்னதான் அந்தச் சிறுவனுக்கு அவ்வளவு வேலை என நீங்கள் எண்ணலாம்.

ஆனால், கதையதுவல்ல… இவ்வாறு கடதாசியையும் பென்சிலையும் கையில் வைத்துக் கொண்டு பாடசாலைக்குள் இடைவேளையில் பார்க்கும் நேரமெல்லாம் வலம் வருவதற்காக, அச்சிறுவன் ஒரு ஆசிரியரால் தண்டிக்கப்பட்டிருக்கிறான். என்ன கொடுமையிது…? நீங்களே சொல்லுங்களேன்..? பாடசாலையில் பென்சிலும் கடதாசியையும் வைத்திருப்பது குற்றமா…? (என்ன உதய தாரகை இவ்வளவு Feel பண்ணுறீங்க… யாரும் உங்களின் சொந்தக்கார பையனோ தண்டிக்கப்பட்டது…,?)

இல்லங்க.. மேற்சொன்ன கதையில் வரும் பையன் வேறு யாருமல்ல…!!நான் தான். (அப்படிப் போடு….) நான் இரண்டாம் தரத்தில் படிக்கின்ற போது எனக்கேற்பட்ட அன்றைய நிலையில் ஒரு துன்பகரமான அனுபவம், ஆனால், இன்றோ சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்யும் இன்னொரு வாழ்க்கையின் சம்பவம். ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா…? நான் பென்சிலையும் பேப்பரையும் வைத்திருப்பதை இனிமேல் கண்டால் அடி இன்னும் பலமாக விழும் என்ற எச்சரிக்கை வேறு அந்த ஆசிரியர் எனக்கு வழங்கினார். நினைத்தாலே இனிக்கிறது. ஆனால், நான் அன்று அடைந்த கவலை, அழுததன் மூலம் தோன்றிய கண்ணீர்ச் சூடு என்பன எல்லாம் இன்னும் என் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது.

இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு. நான் ஐன்ஸ்டைன், எடிசன் என எல்லோரையும் ஆசிரியர்கள் அவர்களின் ஆரம்ப பள்ளிக் காலத்தில் இப்படித்தான்  தண்டித்தார்கள் என்றெல்லாம் நிச்சயம் சொல்ல மாட்டேன். (அப்பாடா… புரிஞ்சா சரிதான்… அப்படின்னா.. என்னத்த சொல்ல வாறீங்க.. உதய தாரகை…!!) – என்றாலும் இதுவும் ரொம்ப ஓவர்.

அனுபவங்கள் சொல்லித்தரும் பாடங்கள் இருக்கிறதே… அளப்பறியன அவை. நீங்கள் யோசித்திருக்க முடியாத கோணங்களில் உங்களின் வாழ்க்கையின் நிலைகளை மாற்றியமைத்துப் போடக்கூடியதுதான் அனுபவம். அனுபவம் தான் ஆசான். அனுபவம் வாய்ந்த ஆசான் ஆசானுக்கே ஆசான். அன்றைய நிலையில் என்னை தண்டித்த ஆசிரியர், ஆசிரியர் மட்டுந்தான். அனுபவம் இருக்கவில்லை.

இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ ஒரு நூலில் வாசித்த விடயமொன்று ஞாபகத்திற்கு வருகிறது. (ஒரு விடயம் என்று சொல்லிவிட்டு விசயத்தை சொல்லாமல், புத்தகம் படிச்சன், அதில வாசிச்ச விசயம், என்றெல்லாம் ஏன் உதய தாரகை ஓவரா பில்ட் அப் கொடுக்கிறீங்க…)

வண்ணத்துப்பூச்சி பற்றி நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள். மயிர்க்கொட்டி ஒரு சிறு மெல்லிய உறையொன்றில் இருந்து வெளிப்பட்டு வண்ணத்துப்பூச்சியாக மாறும் சந்தர்ப்பத்தை நீங்கள் நிஜத்தில் இல்லாவிட்டாலும் நிழற்படத்திலாவது கண்டு வியந்திருப்பீர்கள். இயற்கையின் அதிசயத்தக்க படைப்பல்லவா? இருக்கோட்டும்.. இருக்கோட்டும்..

உயிரியல் பாட ஆசிரியர் தமது வகுப்பு மாணவர்களைக் கூட்டிக் கொண்டு மயிர்க்கொட்டி மெல்லிய உறை விட்டகன்று வண்ணத்துப் பூச்சியாகும் சந்தர்ப்பத்தை காட்ட ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே, “இதோ பாருங்கள்.. மாணவர்களே.. எத்துணை சிரமப்பட்டு அந்த மயிர்க்கொட்டி அந்த மெல்லிய உறையிற்கு வெளியே வர முயற்சிக்கின்றது. அவதானமாக கவனித்துக் கொள்ளுங்கள். யாரும் அந்த மெல்லிய உறையை உடைத்து விட வேண்டாம்” என்று சொல்லியவாறு அவ்விடம் விட்டு அகன்றார்.

எதைச் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையே செய்யும் மிக அருமையான எண்ணம் அப்பருவ மாணவருக்கு இருக்காமலா இருந்திருக்கும்? மயிர்க்கொட்டி அந்த உறையிலிருந்து வெளியேறக் கஷ்டப்படுவதைப் பொறுக்க முடியாத ஒரு மாணவன், ஆசிரியரின் அறிவுரையையும் மீறி, அந்த மெல்லிய உறையை உடைத்து விடுகிறான். அதனால், மயிர்க்கொட்டிக்கு கஷ்டம் அகன்று செல்கிறது. ஆனால், வண்ணத்துப்பூச்சி கொஞ்ச நேரத்தில் இறந்து விடுகிறது.

ஆசிரியர் வந்தவுடன், அந்த மாணவன் நடந்ததை எடுத்துச் சொல்கிறான். ஆசிரியர் மாணவர்களை நோக்கி “மாணவர்களே.. இவன் இந்த மெல்லிய உறையை உடைப்பதால் வண்ணத்துப்பூச்சிக்கு உதவி செய்வதாக எண்ணியிருக்கிறான். ஆனால், உண்மையிலேயே வண்ணத்துப்பூச்சியை கொன்றிருக்கிறான். ஏனெனில், மயிர்க்கொட்டி கஷ்டப்பட்டு அந்த மெல்லிய உறையிலிருந்து வெளியே வரவேண்டுமென்பது. இயற்கையின் விதி. அதன் போதே, வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் வலிமைபெற்றனவாக மாறும். இவன் உறையை உடைத்ததால், சிறகுகளை வலிமையாக்கிக் கொள்ள வாய்ப்புகள் வண்ணத்துப்பூச்சிக்கு இருக்கவில்லை. அதனால் இறந்து போனது.” என “அன்பாக” சொல்லி முடித்தார்.

வாழ்க்கையிலும், நாம் கஷ்டங்களை கட்டாயம் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் பிறக்கும். (ஆமா… இதற்கும், உங்களுக்கு தரம் இரண்டில் தண்டித்ததற்கும் என்ன சம்பந்தம் உதய தாரகை!!)

சம்பந்தம் அல்லது தொடர்பு என்னவானாலும் பரவாயில்லை. தரம் இரண்டில் பழகிய அந்தப் “பென்சிலும் பேப்பரும்” கொண்டு திரியும் பழக்கம், இதுவரைக்கும் எனக்கு மாறவும் இல்லை. மறக்கவும் இல்லை. என்ன இப்போது, பென்சிலுக்குப் பதிலாக பேனையை வைத்துக் கொண்டிருக்கிறேன். அண்மையில் கூட, எனது நண்பியொருத்தி ஏன் பேனாவை கையில் வைத்துக் கொண்டு எந்நேரமும் இருக்கிறீங்க..? என்று கேட்டாள். அதற்காக எனது இரண்டாம் தரத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அவளிடம் சொல்லிவிட்டு Feel பண்ணவா முடியும்..? ஏதோ வைத்திருக்கிறேன் என்றேன். எனது சட்டைப் பையுக்குள் பேனாவை வைக்கும்படி அவள் சைகை செய்தாள்.

இந்த எனது நண்பியைப் பற்றி இன்னொரு பிரபஞ்சத்தில் இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களைச் சொல்வேன். அவளும் எனக்கு இன்னொரு பிரபஞ்சம் தான். அதுவரை பொறுமனமே.. (உதய தாரகை! முதலாவது காதலி என்று தலைப்புப் போட்டு ஒரு பதிவு எழுதி எங்கள ஒரு வழி பண்ணிட்டீங்க.. இப்ப என்ன இது புதுசா நண்பி என்று ஒரு பாத்திரம்.. எங்கள வச்சி காமடி கீமடி பண்ணலையே…!!?)

இயற்கையின் படைப்புகளின் அற்புதத்தைப் பற்றி வியந்து போகும் நமக்கு, மனிதனின் அற்புதங்களைக் கண்டு வியந்து போக எத்தனையோ நிலைகள் உள்ளன. அண்மையில் சஞ்சிகையொன்றில் வாசித்து வியந்த சில தகவல்களை உங்களுடன் இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்களும் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.

7600 புத்தகங்களையும், எண்ணிலடங்காத அளவில் நாடுகளின் தபால் குறியீட்டெண் மற்றும் தொலைபேசி குறியீட்டெண் என எல்லாவற்றையும் மனனமாக்கிய மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிம் பீக் (Kim Peek) என்பவர்தான் இவ்வாறான அசாதாரண சக்தியைப் படைத்தவர். இவரின் வாழ்க்கையின் அனுபவங்களை வைத்துத் தான் The Rain Man என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது போனஸ் தகவல்.

என்ன உதய தாரகை.. கடைசியா என்ன சொல்ல வாறீங்க..? ஆமாங்க.. நானும் அதைத்தான் எல்லாவற்றையும் எழுதியவுடன் யோசித்தேன். தலைப்பிடுவதற்கு எத்தனித்த போது, எந்த விடயத்தை குறிப்பாகச் சொல்ல வேண்டுமென முடிவெடுப்பதிலேயே தோற்றுப் போனேன். (ம்.. சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.. ஓ.கே…?) கடைசியில் தலைப்பில்லாமல் ஒரு பதிவு என்பதை தலைப்பாக வைத்துவிட்டேன். (உதய தாரகை.. இது… ரொம்ப… ரொம்ப… ரொம்ப… ஓவர் புரிஞ்சுதா????)

இந்தப்பதிவு பற்றியும் இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடர் பற்றியும் உங்களின் மேலான கருத்துகளை அறிய ஆவலாயுள்ளேன்.

– உதய தாரகை

6 thoughts on “தலைப்பில்லாமல் ஒரு பதிவு

 1. வாழ்க்கையிலும் நாம் கஷ்டங்களை கட்டாயம் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் பிறக்கும்.

  It’s realy superb…!!!

 2. நன்றி நிமல்..

  அடுத்தமுறை நிச்சயம் ஒரு தலைப்புடன் பதிவை எழுதலாம்.. 🙂

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s