ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

cosmic
நேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா? என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…)

அண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி என்னை அழ வைத்தது. என்னை அழ வைக்க வேண்டுமென்ற எண்ணமோ, நோக்கமோ எனது ஆசிரியையிடம் இருக்கவில்லை. ஆனால் நான் அழுதேன். மழை உண்டு, மேகம் இல்லை: கண்ணீர் உண்டு, சோகம் இல்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. எங்க என்று கண்டுபுடிங்க பாக்கலாம்…)

நான் நேற்று வாசித்த அந்தக் கூற்று இதுதான்..

“Perhaps our eyes need to be washed by our tears once in a while, so that we can see Life with a clearer view again.” ~ Alex Tan

எவ்வளவு யதார்த்தமானது. வாழ்வின் நிலைகளை தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் பார்க்க அடிக்கடி கண்ணீரைக் கொண்டு நம் கண்களைக் கழுவ வேண்டியுள்ளது. ஆஹா.. எத்துணை ஆழமான வரிகள். எனது ஆசிரியையின் வாய் இந்தக் கூற்றை மொழியக் கேட்ட பரவசம் எனக்குள் தோன்றியது.

எனக்கு இவ்விடத்தில் ஆசிரியர் பற்றி Ralph Waldo Emerson என்ற அறிஞர் சொன்ன வைர வரிகள் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

“The great teacher is not the man who supplies the most facts, but the one in whose presence we become different people.”

எனக்குளிருந்த திறமைகளை புடம் போடச் செய்ததில் முக்கிய பங்கு என் ஆசிரியையையே சாரும் என்பேன். எனக்கு அவர் Great teacher ஆகவே இருந்தார். வெறும் பாடசாலையில் பாடங்களை சொல்லித் தருவதில் மட்டும் ஆசிரியர்கள் நின்றுவிடக்கூடாது என்பதற்கு எனது ஆசிரியை சிறந்த உதாரணம். உண்மையாக உயர்நிலை ஆசிரியர்கள் எமக்கு புத்தகங்களினால் மட்டும் கல்வியை புகட்டுவதில்லை. உயர் எண்ணங்களினால் எம்மை போசிப்பார்கள். எனது ஆசிரியையும் அவ்வாறு தான்.

ஆங்கிலக் கவிதை

எனக்கு ஆங்கிலத்தில் இருந்த ஆர்வத்தை ஊக்கியாகவிருந்து விரிவுபடுத்திய உயர்நிலை குணம் என் ஆசிரியையிடமே உள்ளது. அவர் ஒரு பிரபஞ்சம் என்பேன். எனக்கு அவர் இன்னொரு பிரபஞ்சம் தான். தரம் ஒன்பதில் நான் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது, ஆங்கில தினப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டி மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகி திருகோணமலையில் இடம்பெற்ற போட்டிக்கு சென்று அங்கு கலந்து கொண்டு திரும்பினேன். (மாகாண போட்டியில் நீங்க வெல்லயில்ல தானே.. அதத் சொல்லுங்க உதய தாரகை!). அந்தப் பயண அனுபவத்தை வைத்து ஆங்கிலத்திலே ஒரு “கவிதை” எழுதி என் ஆசிரியையிடம் காட்டினேன்.

“நாளைக்கு வரும் போது, கவிதையொன்று எழுதி வர வேண்டும்” என்று தமிழ்ப் பாட ஆசிரியர் சொன்னதால் அவரிடம் பாரதியாரின் கவிதை ஒன்றை அப்படியே பிரதி செய்தி ஒரு மாணவன் காட்டியிருக்கிறான். ஆசிரியரோ அந்தப் பாரதியாரின் கவிதையிலும் பிழை திருத்தங்கள் செய்து சந்தங்கள், சொற்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொடுத்தாராம் என்று கதையொன்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியான ஆசிரியர்கள் இருக்கும் காலத்தில் எனது ஆசிரியை நான் எழுதிய கவிதையை சொல்லுக்குச் சொல் உச்சரித்து, ரசித்துப் பாராட்டுத் தெரிவித்த நினைவுகள் இன்னும் என் மனதில் பசுமையாகவே இருக்கின்றன.

அக்கவிதையை நான் ஆங்கில தேசிய பத்திரிகைக்கு பிரசுரிப்பதற்கு அனுப்பினேன். அனுப்பி அடுத்த கிழமையே அது பத்திரிகையில் பிரசுரமான நிகழ்வு இன்னும் எனக்கு இன்ப அதிர்ச்சி தான். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனால், என் ஆசிரியை அடைந்த மகிழ்ச்சி மட்டற்றது என்றே நான் சொல்வேன். இன்னும் அடிக்கடி எனது ஆசிரியை நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் இதுவுமொன்று. தொடர்ந்தும் கவிதைகள் பல எழுதினேன். அவற்றில் பலதும் பத்திரிகையில் வெளியானதும் குறிப்பிடத்தக்கதே. (அப்படியா விசயம்… உதய தாரகை என்ன மேட்டர் என்று சொல்லாம சும்மா வல… வலா என்று பேசிக்கிட்டு இருக்கீங்க..)

எனது ஆசிரியையின் மகிமைகளைச் சொல்ல ஒரு பதிவு போதாது. புத்தகமே எழுதி விடலாம். எனது ஆங்கில கவிதையோ கட்டுரையோ முதல் வாசகி, ரசிகை, விமரிசகர் எல்லாமே எனது ஆசிரியைதான். தரம் ஒன்பது முதல் இன்று வரை ஆங்கிலப் பத்திரிகையில் நான் எழுதி வரும் பத்திகள், கட்டுரைகள் (சொல்லவேயில்ல… ஆங்கிலத்தில எல்லாம் எழுதுவீங்களா.. அதச் சொல்ல ஒரு பதிவு வேற நீங்க போடுவீங்களாக்கும்….??) என அனைத்தையும் தவறாமல் வாங்கிப் படித்து தொலைபேசியில் அழைப்பெடுத்து அது பற்றி விமர்சனம் செய்து பாராட்டும் உண்மையான உணர்வு இருக்கிறதே அது என் ஆசிரியையின் தனித்துவமான பண்பு.

இவ்வளவு காலமும் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கங்களை தன்னோடு பத்திரமாக வைத்திருக்கிறார் என் ஆசிரியை. ஆனால், என்ன வியப்பு தெரியுமா? நான் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாறுதல் பெற்று அவர் வெளியூர் ஒன்றிற்கு பணியாற்ற சென்றார். இருந்தாலும், இன்றும் நல்ல பல ஆலோசனைகளைப் பெற நான் நாடுவது என் ஆசிரியைத்தான். ஆக்கபூர்வமான கருத்துகளால் என்றுமே என்னைப் போசிக்க அவர் மறப்பதேயில்லை.

பதினொரு ஆண்டுகாலப் பழக்கம்

எனது ஆசிரியை நான் கடைசியாக பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே கண்ணெதிரே கண்டேன். அதுவரை இன்றளவிலும் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நான் அறியேன். அவர் குரலையும், எழுத்தையும் மட்டுமே பதினொரு ஆண்டுகளில் என்னால் காண முடிந்தது. (குரலை யாராவது காண்பாங்களா..?? கேட்பாங்க.. விளங்கியதா உதய தாரகை…??)

பல தடவைகள் ஆசிரியையைக் காண வேண்டுமென பயணங்களை திட்டமிடுவேன். ஆனால் ஏதாவது வேறு வேலைகள் வந்து தொலைத்துவிடும். இன்று வரைக்கும் அம்மணியைச் சென்று காணக் கிடைக்கவில்லை. இவ்வேளை, எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து அண்மையில் வந்த குறுஞ்செய்தி (குறுஞ்செய்தி என்றால் SMS தானே!!?) என்னை அழ வைத்தது.

பதினொரு ஆண்டுகளாக என்னைக் காணாத நிலையையும், எனது பதின்மூன்று வயது தோற்றம் மட்டுமே அவரின் கண்முன் இருப்பதாகவும் குறிப்பிட்டு எழுதி அனுப்பியிருந்தார். அச்செய்தியை வாசித்தவுடன் என் கண்கள் நனையக் கண்டேன். அது அன்பின் அளவிட முடியாப் பிரவாகம் என்பேன். கண்ணீர் இருந்தது. சோகம் இருக்கவில்லை. அன்பின் அளவை “அன்பே சிவம்” திரைப்படத்தில் கமல் பாடும் பாடலில் அழகாகச் சொல்வார்.

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..

அன்பு என்னை அழ வைத்தது. ஒவ்வொரு நாளும் காலையில் அலாரம் அடிப்பதற்குப் பதிலாக இப்போதெல்லாம் எனது ஆசிரியையின் அழகிய எண்ணங்கள் பொதிந்த SMS தான் என்னை எழ வைக்கிறது. புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க வழி செய்கிறது. அன்பின் அரிச்சுவடி அவர். வாழ்க்கையின் அரிச்சுவடியை மனனம் செய்தவர் அவர். பிரபஞ்ச பாசை அன்பின் ஆசான் அவர். சர்வதேச பாசை ஆங்கிலத்தினதும் ஆசான் அவர்.

இன்னும் எனது ஆசிரியையின் அழகிய நினைவுகளை இன்னொரு பிரபஞ்சம் மூலம் பகிர்ந்து கொள்வேன். அதுவரை பொறுமனமே!

பதிவிற்கு சம்மந்தம் இல்லாமல் ஒரு விடயத்தை குறிப்பாகத் சொல்ல வேண்டுமென நினைத்தேன். அதனை இவ்வாறு சொன்னால் பொருத்தமாகவிருக்குமென நம்புகிறேன்.

பழமொழிகள் என்பதை நாம் எப்படி விளங்கியிருக்கிறோமோ தெரியாது. ஆனால் நம்மைப் பற்றி நன்றாகவே பழமொழிகள் விளங்கி வைத்திருக்கின்றன. ஏனென்று கட்டாயம் நீங்கள் கேட்க வேண்டும். (நாங்க ஏனென்று கேட்காம போனாலும், நீங்க சொல்லாமலா இருக்கப் போறீங்க உதய தாரகை?) உனக்கு நல்ல காலம் வந்தால், எனக்கும் ஒரு நாளில் நல்ல காலம் வரும் என்பதை சொல்லுமாப் போல், “ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்” என்ற பழமொழியை சொல்வது வழக்கம்.. இந்தப் பழமொழியின் உண்மையான கருத்து அதுதானா…??

அந்தப் பழமொழி, “ஆ நெய்க்கு காலம் வந்தால் பூ நெய்க்கும் காலம் வரும்” என்பதாகவே அமைய வேண்டுமென நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆ நெய் என்றால் பசுவின் பால், பூ நெய் என்றால் பூவின் தேன். அதாவது, ஒரு மனிதனின் இளமைக்காலத்தில் அவனுக்கு சக்தியைத் தந்து ஆரோக்கியமாக வைத்திருப்பது பசுப்பால், அதுபோல முதுமைக் காலத்தில் மனிதனுக்கு சக்தியை வழங்கி ஆரோக்கியத்தைப் பேணுவது தேன். ஆக, ஒருவனுக்கு இளமை வந்தால், முதுமையும் வரும் என்பதைச் சொல்வதற்காகவே இந்தப் பழமொழி சொல்லப்பட்டதாம். அதனையே “ஆனைக்கு காலம் வந்தால் ♥பூனைக்கும் காலம் வரும்” என்று மருவி மாற்றிவிட்டார்களாம். இப்படி நிறைய பழமொழிகள் உண்டு. ஆனால் இன்றைக்கு இது போதும்!!

– உதய தாரகை

6 thoughts on “ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

 1. என்ன சுத்தி நெறயப் பேரு உங்களப் போலவே அழ ஆரம்பிச்சிட்டாங்க.
  என்னாலயும் தாங்க முடியல.
  எங்க வயிரெல்லாம் பத்தி எரியுது.
  இத சொல்லாமலே விட்டிருக்கலாம்.

 2. இந்த பதிவை வாசித்து முடித்ததும்… மனதில் இனம்புரியாத ஒரு வேதனை கலந்த சோகம். ஆனாலும்.. மகிழ்ச்சி…. இப்படி ஒரு ஆசிரியை எனது நண்பனுக்கு கிடைத்தது மட்டுமன்றி…. அவரது அன்பை… இன்னும் பக்குவமாக பேணிக்காத்து வரும் ஒரு உன்னதமான நண்பன் எனக்கு கிடைத்ததை எண்ணி…..அகம் மகிழ்ந்தேன்

  நம் ஒவ்வொருவரினது வாழ்விலும் ஆசான் என்பவர் எந்தளவு போற்றத்தக்கவர் என்பதற்கு…. உங்களது ஆசான் ஒரு எடுத்துக்காட்டு

  கூடிய விரைவில் உங்களது ஆசிரியை சந்திக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்… நிறப்பிரியை

 3. பாரினில் நான்
  நேரினில் கண்ட மகாத்மாக்களில்
  நீயும் ஒருவன்……….

  என்ற வரிகளுடன் என் கருத்துக்கள் தொடரட்டும்…ஒவ்வொருவருக்கும் பாடசாலை என்பது பாடம் சொல்லும் சாலை மட்டுமல்ல.பாதம் செல்லும் சோலை என்பேன் நான். சோலையூடாக நடந்து செல்லும் போது கிடைக்கும் குளிர்ச்சி பாடசாலை பருவத்தில் கிடைக்கிறது. அன்புக்கு அடைக்கலம் கொடுக்கும் நண்பர்கள், அறிவுடன் அறிவுரை ஊட்டும் ஆசான்கள் இப்படி பற்பல.. யாருக்குத்தான் இல்லை கலையாத அந்த கனாக்காலம்.

  எனக்கே தெரியாமல் என் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அந்த காலத்தை நொடிப்பொழுதில் மீட்டிப் பார்க்க வைத்து, வரண்டு கிடந்த என் கண்களை நிரம்ப வைத்தது உன் பதிவு. ஆசிரியர்களின் வழிகாட்டல்தான் இன்று நாம் ஏதோ ஒரு துறையில் நிலைக்க வழிகாட்டுகிறது. பாடசாலையில் விளங்காத அந்த உணர்வு பாடசாலையை விட்டு வெளியேறிய பிறகு நமக்கு உதவும்போதுதான் இப்படி எம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. வருடங்கள் கழிந்தபின்னும் ஒரு ஆசான் ‘இவர் என் மாணவர்” என்று சொல்லக்கேட்டு நாம் பரவசப்படுவதும் எமது ஆசான் பற்றி நாம் பலரிடம் ‘இவர்தான் என் ஆசான்” என்று பெருமையாகச் சொன்னாலே போதும் நம் பந்தம் நிலைக்கும் என்றும்..

  (இத்தனை காலம் கடந்து பலருக்கும் அந்த உணர்வை விதைத்த உன் பதிவுக்கும் அதில் அள்ளித் தந்த போனஸ் தகவல்களுக்கும் நன்றி.பாரினில் நான் நேரினில் …..என்ற வரிகள் உனக்கு சமர்ப்பணம்)

  • நன்றி இளவரசி… உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்..

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s