வளராத மூங்கிலும் நானும்

cosmic1
அதுவொரு வெள்ளிக்கிழமை ஆனந்தமான மாலை நேரம். பகல் சாப்பாட்டை அருந்திய பின்னர், குடும்பத்தினர் எல்லோரும் குதூகலித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது எட்டு ஆகும். (ஆமா.. உதய தாரகை தொடங்கிட்டாரு பழைய புராணங்களைச் சொல்றதுக்கு..!!)அந்தத் தினத்தில் எனது உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

தனது பிள்ளை கதைக்கப்பழகிவிட்டால் அம்மழலை மொழியை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி ஆனந்தம் அடையாத பெற்றோர்கள் இந்த அவனியிலேயே (அதுதான் பூமி என்பதற்கு ஒத்த கருத்துச் சொல்.. இது எங்களுக்கும் தெரியுமில்ல…) இருக்கமாட்டார்கள். அப்படித்தான் நானும் அப்போது, சின்னச் சின்னச் பாடல்களை எல்லாம் படிப்பேன். (அட நீங்க வேற.. பாடல் என்றால், ‘நிலா நிலா ஓடி வா.. நில்லாமல் ஓடி வா.. மலை மேலே ஏறி வா.. மல்லிகைப் பூ கொண்டு வா… இது தாங்க…)

நான் உறவினர்கள் கூடியிருக்கும் சபையில் பல வேண்டுகோளுக்கு மத்தியில் அப்பாடலை பாடத் தொடங்கி, பாடி முடிப்பேன். அப்போது கிடைத்த பாராட்டுகள் சொல்லி மாளாது. இந்த அனுபவம் இல்லாத எவரும் இருக்கவே முடியாது. இப்போது உங்கள் ஞாபக அலைகள் உறவினர்கள் முன் ஆடிய நடனம், பாடிய பாடல் என்பன பற்றி திளைக்க முற்படுவதாய் நான் உணர்கிறேன். ஆனந்தப் பிரவாகம் தரும் தேன் சுவை நினைவுகளல்லவா அவை..

இப்படியான அழகிய நினைவுகளில் தோய்ந்துள்ள ஈரம், செறிந்துள்ள சுவை என்பவையே சோர்ந்து கிடக்கும் நேரங்களில் புத்துணர்ச்சியைத் தரும் ஊக்கிகளாக அமைந்து போவது அனுபவமான விடயம் எனக்கு.

தனது பிள்ளையின் சின்னச் சின்ன வெற்றிகள், சிந்தனைகள், குறும்புகள் என எல்லாவற்றிலும் பெற்றோர் அடையும் உவகை மட்டற்றது.  என் ஒவ்வொரு கணத்திலும் நான் கொண்ட உணர்வுகளை விட அதிகளவில் என் உணர்வுகளை தங்கள் வசம் கொண்ட நிலை என் பெற்றோரையே சாரும். (என்ன உதய தாரகை.. ஒரே பெற்றோர் பேச்சாக் கிடக்ககுது…)

me_1

நாம் என்னதான் பெரிய ஆளாகிவிட்டாலும், தன் பிள்ளையின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுடையதாக அமைய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு செயலாற்றும் பக்குவம் பெற்றோருக்குத்தான் உண்டு. நாம் நினைக்காத பல விடயங்களைக் கூட எம் சார்பில் அவர்கள் யோசித்து பண்ண முயற்சிக்கும் திறன், அன்பின் வடிவம் என்பதற்கு இலக்கணம் சொல்லுமாய்ப் போல் அமைந்திருக்கும்.

வளராத மூங்கில்

மூங்கில் மரத்தை அறியாதவர்கள் யாருமிருக்க முடியாது. மூங்கிலின் குழலிடை புகும் வளி, இசையாகி வெளிவரும் அதிசயம் புல்லாங்குழலென்று சொல்லப்படுவதையும் நீங்கள் அறிந்தவர்கள் தாம். ஆனால், சொல்லப் போகும் விடயமோ மூங்கிலின் வளர்ச்சி பற்றியது. நீங்கள் சிலவேளை அறிந்திருக்கக்கூடும். மூங்கில் விதையொன்றை பூமியில் நட்டு மரம் வளரத் தேவையான அனைத்து வித பசளைகள், நீர் என்பன எல்லாம் வழங்கினாலும், ஒரு வருடத்தில் ஒரு அரும்பு மட்டுமே முளைத்திருக்கும். தொடர்ச்சியாக பசளை, நீர் என்பன இட்டு பராமரித்து வந்த போதும், அந்த முளைத்த அரும்பு மட்டுமே அப்படியே நிலைத்திருக்கும். இரண்டாவது வருடத்திலும் அந்த அரும்பே முளைத்திருக்கும். அதுவே நிலைத்திருக்கும். தொடரும் மூன்றாம் நான்காம் வருடத்திலும் அதே அளவிலேயே மூங்கில் தாவரம் காணப்படும்.

நான்கு வருடங்கள் நீங்கள் அழகிய முறையில் பராமரித்து வந்த போதும், ஒரு சொட்டுக்கூடு வளராது. எத்துணை பொறுமையோடு இருக்க வேண்டும் நாம் நான்கு வருடங்கள். ஐந்தாவது வருடத்தில் காட்சி தரும் மூங்கிலும் அப்படியே தான் இருக்கும். ஆனால், ஐந்தாவது வருடத்தின் போக்கில், ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியங்கள் கொண்டு தரும். 4 தொடக்கம் 6 வாரங்களில் மூங்கில் தாவரத்தின் வளர்ச்சி நாளுக்கு மூன்று அடி வீதம் 90 அடி வரை வியாபித்து வளரும். இது ஏன் இப்படி நடக்கிறது?? நிறையப் படிப்பினைகள் உள்ளன.

நான்கு ஆண்டுகளில் மூங்கில் பூமிக்கு வெளியே வளராமல் பூமிக்கு உள்ளே வளர்ந்து தனது வேர்த் தொகுதியை ஐந்தாம் ஆண்டில் ஏற்படப் போகும் உயரிய வளர்ச்சிக்காய் உறுதியாக்கிக் கொண்டது. நம் வாழ்க்கையும் இப்படித்தான்.

ஒவ்வொரு நேரமும் சரியான விடயங்களையே செய்து கொண்டிருந்த போதும், அதனால் வெளிப்படையான பலன்கள் எதுவுமே உடனடியாக யாருக்கும் கிடைப்பதில்லை. இவை வெற்றிக்கான காத்திருப்புகள் என்று கூடச் சொல்லலாம். காத்திருப்பில் இருக்கும் சுவையையும், சுகத்தையும் அறிந்து கொள்ள காதலிக்கத் தேவையில்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் காத்திருப்புகளால் அலங்கரிக்கப்படும் தோரணங்களே, ஆக, வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுவை நிறைந்த அனுபவங்கள் தரும் தருணங்கள் என்றே நான் சொல்வேன். அது இன்பச்சுவையாகவோ துன்பச்சுவையாகவோ இருக்கலாம்.

எனது ஒவ்வொரு கணத்தின் உணர்வுகளுக்கு உயிரூட்டிய என் ஆறுயிர் தந்தையை இழந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றது. அவரின் ஒவ்வொரு செயலிலும் எனது எதிர்காலத்தின் தெளிவான பாதைக்கான ஊக்கி இருந்ததாகவே நான் சொல்வேன். (தந்தையை இழந்த வலியை நினைக்கும் போது, நிலையிழந்து போகிறேன். கண்களில் கண்ணீர் ஆறாகிறது. மன்னிக்க வேண்டுகிறேன். )

நான் எனது தந்தையோடு வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவுகளின் ஈரம் இன்னும் காயவில்லை. அந்தளவில் பசுமையானது, எனது சின்னச் சின்ன வெற்றிகளில் கூட அதிகளவில் மகிழ்ச்சியடையும் என் தந்தையின் இன்முகம் என் கண்களில் நீங்காத பதிவு. என் அண்மைய வளர்ச்சிகள், வெற்றிகள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ள என் ஆறுயிர் நண்பர் – என் தந்தை இல்லை என்பதை நினைக்கும் போது, நெஞ்சுக்குள் கவலை வலிக்கிறது.

எனக்கு என் தந்தையின் மூலம் சொல்லப்பட்ட பல விடயங்கள் தாரக மந்திரமாகவே இருந்து உதவிக் கொண்டிருக்கின்றன. தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள எத்தனையோ இருக்கிறது. அவை ஒவ்வொன்றாய் இன்னொரு பிரபஞ்சத்தில் தகுந்த தருணம் கண்டு பகிர்ந்து கொள்வேன்.

என் மகனே…

இந்த நேரத்தில் எனது தந்தை எனக்கு எழுதித் தந்த சில பொன்வரிகள் இன்னும் பசுமரத்தாணி போல், என் மனதில் பதிந்திருக்கிறது. அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஆறாம் தரத்தில் கற்க தலைநகரிலுள்ள பாடசாலைக்கு வந்த போது, எனது தந்தை எனக்கு எழுதியனுப்பிய மடல் தான் இது. இப்போது உங்கள் பார்வைக்காக…

என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்.

நகை முகமும் இனிய சொல்லும் நல்ல செல்வம்
பகை எவரும் ஆகாமற் பார்த்துக் கொள்க.
எச்செலவும் வருவாய்க்குள் பண்ண வேண்டும்.
எல்லைக்குள் ஏழைகட்கு உதவி செய்க.

ஆசானை தெய்வமென மதிக்க வேண்டும்.
அவர் சொல்லை கேட்டு நடக்க வேண்டும்.
ஓதலிலும் மிகச் சிறந்தது ஒழுக்கம் என்ற
உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும்.

பெற்றோர்கள் மிகப் பெரிய வறிஞரேனும்,
பற்றோடு அனுப்புகின்ற பணத்தையெல்லாம்
பட்டினத்துப் பகட்டுகளில் பாழாக்காமல்
சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும்.

இன்றும் எனக்கு உதவும் ஒரு தாரக மந்திரம் இது. எனது தந்தை அனுப்பிய இந்த மடல் பற்றி Success என்றால் என்ன? என்ற எனது முந்திய பதிவொன்றிலும் கதைத்துள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இன்னொரு பிரபஞ்சம் தொடரில் இடம்பெற வேண்டுமென்பதால் சேர்த்துக் கொண்டேன்.

தந்தையின் பிரிவினை தாங்காமல் எண்ணம் செதுக்கிய வார்த்தைக் கோர்வைகள். இது கவிதையல்ல என்பதையும்  முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

பூமியில் உங்கள் நாட்கள் ஒழிந்தன – நான்
தனிமையாக்கப் பட்டேன்.
கண்களில் மழையாய் கண்ணீர் – இதயம்
இரண்டாய் உடையக் கொண்டேன்.

”உங்களைப் பிரிந்த நிலை” எவ்வளவு – எனச்
சொல்ல வார்த்தைகள் வாயடைக்கின்றன.
உங்களின் அன்பு மழையில் நனையும் – நாட்களை
தொலைத்து விட்டுத் தவிக்கிறேன்.

என் மகிழ்ச்சிக்காக நீங்கள்  – உருகித்தந்த
வெளிச்சங்கள் இன்னும் ஜொலிக்கின்றன.
அன்புக் காய் இனித்த பருவம் – நீங்கள்
தந்த பசுமை நினைவுகள்.

நீங்கள் தான் என் நாயகன் – நிஜத்தில்
எம்மனத்தில் எழுச்சி தந்தீர்கள்.
மரணம் நாயகனுக்கு இல்லை – என்றே
நீங்கள் மரணிக்க முன்னர் நினைத்திருந்தேன்.

என் மனத்தில் என்றும் – நீங்காமல்
வீற்றிருக்கும் உரிமை உங்களுக்கே.
என்னோடு எப்போதும் இருக்கும் – உணர்வே
என் சிந்தைக்கு வலிமை சேர்க்கிறது.

I am greatly miss you Dad.

– உதய தாரகை

8 thoughts on “வளராத மூங்கிலும் நானும்

 1. தமிழ் எழுத, நரம்பு முதிரும் வரை எனது ஐந்தாண்டு கால காத்திருப்பும், உங்களால் என்மீது உருவாக்கப்பட்ட உங்கள் உயிர் நண்பர் பற்றிய அனாமத்துக்களின் தீர்வுக்கான எனது காத்திருப்பும், மூங்கிலின் காத்திருப்பும் என்னளவில் ஒன்றுதான்.

  நானும் எனது ஆசானை இழந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகப் போகிறது. :(((

  • நன்றி றம்ஸி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

   வாழ்வின் ஒவ்வொரு கணமும் எம் எண்ணத்தில் நிகழும் காத்திருப்புகளின் சுகம், காத்திருத்தலில் மட்டும் தான் கிடைக்கப்பெறும். காத்திருப்புகளின் வலியும் சரி, வலிமையும் சரி சுகமானது தான்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. எத்தனை பொறுமை உங்களுக்கு… சொல்லத்தேவயில்லை. வென்றுவிட்டீர்கள்.

  இன்று உங்களின் ஆக்கங்களும் கவிதைகளும் இருக்கும் இடம் போல், உங்கள் தந்தையின் ஆக்கங்களும் கவிதைகளும் இருக்கவேண்டும் என்பது உங்கள் தந்தைக்கு ஒரு ஆசையாக இருந்திருக்கும். (எல்லாக்கலைஞனுக்கும் உள்ள ஆசை தான்).

  இந்த blog அன்று இருந்திருந்தால், உங்களின் தந்தையின் கவிதைச் சுவாசம் இன்று உலகமெல்லாம் மணம் பரப்பும். அதில் தலைமுறைகள் பல கவிப்பாணம் அருந்த வழி கிடைத்திருக்கும்.

  கழக்குங்கள் கழக்குங்கள்
  உலகத்தில் கழக்குங்கள்
  உங்களின் வெற்றிக்கு பின்னால் யாரென்பது நம்மூரில் யாரைக் கேட்டாலும் அறியலாம்..

  எனக்கும் சிறியதொரு பொறாமை
  I know very well that You are doing everything, but
  I don’t know, how to manage your time..????

  Thanks உதய தாரகை.

 3. உதய தாரகை……….

  (கண‌த்த மனதுடன்‌) மூங்கில் வளருதோ இல்லயோ….. you’ve pushed me 7 years back….

  உனது இந்த பதிவை பார்த்துக்கொண்டிருக்கும் போதும் நீ உன் தந்தையைப்பற்றி சொல்லும் போதும் என் மனதில்
  ஒரு இனம் புரியாத துக்கம். ஏழு ஆண்டுகள் பின்னோக்கி என் மனது சென்றுவிட்டது.

  அந்த நாள் இன்னும் என் மனதில்… எங்கள் எல்லோரையும் வைத்து நீ அந்த வேளை நாம் அங்கு வந்ததற்கு நன்றி சொன்னதும் ஞாபகம் எனக்கு.

  “என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
  எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
  மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
  முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்”.

  உன் தந்தையின் ஞாபகங்களை வாசிக்கும் போது இந்த வரிகளை பதிய வேண்டும் என நான் நினைத்தேன் (நீ எனது Autograph இல் இந்த வரிகளை என் வேண்டுகோளுக்காய் பதிந்து தந்தாய்..). நானும் சுவாசித்த வரிகள் இவை. நான் நினைத்த உனது தந்தையின் வரிகள் இப்பதிவின் பார்த்ததில் சுவாசம் கொண்டேன்.

 4. @ பெளஸர் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல..

  எனது தந்தையினால் படைக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான கவிதைகள் பத்திரிகைககளில் 1960 களிலிருந்து வெளியாகின. அவை அனைத்தையும் ஆவணப்படுத்தி என் வசம் இன்னும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சேர்த்து ஒரு நூலாக வெளிக்கொணர எண்ணியுள்ளேன். உங்களின் வாழ்த்துக்கும், பரிந்துரைக்கும் மீண்டும் நன்றிகள் பல.

  “The only way to do great work is to love what you do” என Steve Jobs சொல்வார். நான் செய்யும் அத்தனை விடயங்களையும் அதிக விருப்பத்துடன் செய்கிறேன். இதன் காரணமாக நேரம் தானாகவே முகாமை செய்யப்படுகிறது என்றே நான் நம்புகிறேன்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 5. @ Mujahidh தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  நீங்கள் சொன்ன அத்தனை நிகழ்வுகளும் என் நெஞ்சத்துள் என்றும் மறக்கப்படாத நினைவுகளே..

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 6. // நாம் என்னதான் பெரிய ஆளாகிவிட்டாலும், தன் பிள்ளையின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுடையதாக அமைய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு செயலாற்றும் பக்குவம் பெற்றோருக்குத்தான் உண்டு. //

  absolutely true, parents are an unbuilt tajmahal for us, coz dats where we exchange our pure love without expecttions…

  thanks uthaya thaarahai..

 7. நன்றி இன்ஸாப் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.. வாழ்தலின் புரிதல்கள் தான் இவை யாவும்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s