கனவுகள் வாழ்தலின் நிமிடங்களை கொடுக்கும் இனிய அமைப்புகள். ஒவ்வொரு நிமிடமும் நான் சந்திக்கின்ற நிகழ்வுகள் நாம் கொண்ட கனவுகளின் மிச்சத்தை நனவாக்குவது போல், இடம்பெறுவது தவிர்க்க முடியாததொன்று.
நாம் காண்கின்ற உலகமும் வாழ்கின்ற உலகமும் சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம். வேறொன்றாக மலரலாம். இதில் புதுமை எதுவுமே கிடையாது, ஆனால், எண்ணங்களால், மனதில் நிலைக்கும் கனவு தான் உங்கள் நாளையை நிர்ணயிக்கும். இன்றைய நாளுக்கும் உயிர் கொடுக்கும்.
கனவுகள் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க எனக்கு ஆர்வமில்லை. ஏற்கனவே சில தடைவைகள் நான் கனவுகள் பற்றி நிறத்தில் கதைத்திருக்கிறேன்.
காதலையும் கவிதையும் பிரிக்க முடியுமா? என்றால் முடியாது என்று நீங்கள் பதில் சொல்வீர்கள். இது காதலாலோ கவிதையாலோ உண்டான நிலையல்ல. இது கனவுகளால் உண்டான நிலை. கற்பனைகள் செய்யும் வரத்தால் உணரப்பட்ட நிலை.
பூவுக்கே பூ வலியானது!
இரட்சகன் படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை நான் இதற்கு அழகிய உதாரணமாகச் சொல்வேன். “கனவா..? இல்லை காற்றா..?” என்று தொடங்கும் அந்த அழகிய பாடல் காதலியை வர்ணிக்கும் வரிகள். இங்கு காதல் கற்பனையைத் தூண்டுகிறது. கற்பனை கவிதைக்கு வரிகளை ஊட்டுகிறது.
தொடரும் வரிகளில் ஒரு கட்டத்தில் இப்படி வரும்,
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது.
இதுதான் கற்பனை. இதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து ஒரு தடைவை சொல்லியிருப்பார். “காதலித்துப் பார், கவிதை வரும்” கற்பனைக் குருவியின் அலாதியான பாய்ச்சல் தான் காதலைக் கவிதையாக்க வழி செய்கிறது. அற்புதமான அந்தப் பாடலில் வரும் அழகிய கற்பனையைப் பாருங்கள்.
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…
இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?…
காதலிக்கவே வேண்டாம். கற்பனை செய்தால் போதும். கவிதை வரும். (அதுக்காக நீங்கள் “கற்பனை செய்ய காதலிக்க வேண்டும் தானே! என்றெல்லாம் வில்லங்கத்தனமான கேள்வியைக் கேட்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்.)
பழைய பாடலொன்றுக்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் நினைத்தால் அது பொய். அப்படி எதையும் செய்ய நான் முயற்சிக்கவில்லை.
கற்பனை எப்போதும் பொய்யா?
அண்மையில் நண்பரொருவரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு கதைத்துக் கொண்டிருந்த போது, கவிதை மற்றும் கட்டுரை பற்றி அழகாக சொல்ல அவர் ஆரம்பித்தார். கட்டுரை என்ற பெயர் இருந்தாலும் அதில் கட்டுக் கதைகள் இருப்பதில்லை. ஆனால், கவிதைக்கு பொய் தான் அழகு என்று சொல்லி முடித்தார்.
அப்படியானால், பொய் என்பதற்கு ஒத்தகருத்துச் சொல் கற்பனை என அவர் சொல்கிறாரா? என்ற கேள்வி அந்நேரம் எனக்குள் எழுந்தது. ஆனால், அப்படியே அவரிடம் அதை கேட்டுவிடவில்லை. கற்பனைகள் தான் கவிதைக்கு பொய்கள் போன்ற அழகைச் சேர்க்கிறது. கற்பனைகள் தான் கனவுகள் என்ற எமது எதிர்பார்ப்பின் திரைக்கதையை எழுதுகிறது.
கற்பனைகள் எப்போதும் பொய்யாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், இன்றைய நிலையில் பொய்யாக இருக்கும் நிலைகள் கற்பனையால் உருவாகலாம். நாளை அது நனவாக உணரப்படும் உண்மைகளாக பரிவர்த்தனை செய்யப்படலாம். அஸ்தமனங்கள் எல்லாம் நிரந்தரமல்லவே!!
பொய்கள் என்பது எல்லாமே கற்பனையாக இருந்துவிடலாம். ஆனால், கற்பனைகள் எல்லாமே பொய்யாக இருக்க முடியாது (தெளிவாகக் குழப்புகின்றேன் என்று பார்க்கிறீங்களா? இல்லையே.. மறுபடியும் நன்றாக வாசித்துப் பாருங்கள்.. அதே தான்!). கற்பனைக்கு உயிர்கொடுத்த எத்தனையோ மனிதர்களை வரலாறுகள் கண்டிருக்கிறது. நாமும் எமது சுற்றுப்புறச் சூழலில் அன்றாடம் எளிய மனிதர்கள் பலர் கற்பனைகளை நிஜமாக்கும் நிலைகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கையின் அடுத்தபடி, கற்பனையின் அத்திவாரம் தான். கனவுகளின் திரைக்கதை கற்பனையால் மட்டும்தான் எழுதப்பட முடியும். அர்த்தமுள்ள அன்பை இன்னொருவருக்கும் அளிக்க காணப்படும் முறைகள் கூட ஒருவனின் கற்பனையில் தோன்றிய விடயங்கள் தாம்.
என் நண்பரிடம், இந்த விடயம் பற்றி ஒரு பதிவிடுவேன் என சொன்னேன். அதுவே இப்பதிவாய் உருவாயிற்று. அற்புதமான செயல்தான் கற்பனை. எண்ணங்களிற்கு அன்பு சேர்க்கும் அழகிய மந்திரம் கற்பனை.
கற்பனைக்கு கதை சொல்வோர்
கற்பனையாலேயே பல கெடுதியான நிலைகள் கூட தோன்றிவிடும் அபாயமும் இல்லாமலில்லை. அன்றாடம் ஒருவரை இன்னொருவர் புரிந்து கொள்ளாமல், ஏதோ தான் தோன்றித்தனமாக கற்பனை செய்து ஒருவர் பற்றி விமர்ச்சிக்கத் தொடங்குவது, காலப் போக்கில் வீண் பிரச்சினைகள் தோன்ற வழி சமைக்கும்.
“நீங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொண்டு, இப்படி நடந்தால் அதற்கு நான் என்ன செய்வது?” இந்த வசனம் நாம் அனைவரும் எமக்கு பிரியமானவர்களிடமிருந்து கேட்டு அலுத்துப் போன வசனம் தானே! கற்பனைகள் தான் எண்ணங்களின் அத்திவாரம். எண்ணங்களின் வலிமைதான் வாழ்க்கையின் நிகழ்வுகள்.
கற்பனைக்கு கதை சொல்பவராக நாம் மாறிவிட்டால், கதைகள் சொல்லும் படியாகவே எம்மனதில் கற்பனைகள் முளைக்கத் தொடங்கும். கற்பனைக் குருவிக்கு சுதந்திரம் கொடுங்கள். அது ஆகாயம் வரை எட்டட்டும். கூகிளாக விரியட்டும்.
கற்பனையின் வலிமைக்கு காகிதம் கொண்டு அடையாளம் தர வேண்டாம். பொருள்கள் கொண்டு பொன்னான கருவிகள் செய்ய வேண்டாம். மனிதர்கள் சிந்தித்து நடக்கும் படி, தமது இந்த நிமிடத்தை மகிழ்ச்சியாகக் களிக்கும் படி அமைத்துத் தரவே நாம் முயல வேண்டும்.
மகிழ்ச்சியான பொழுதுகள் மனிதனுக்கு கிடைத்துவிட்டால், கற்பனைக்கு உயிர் கொடுப்பான். இமயத்தை எட்டுவான். செவ்வாயில் பயிர் நடுவான். ஆகாயத்தில் புதையல் எடுப்பான். வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பான். மகிழ்ச்சியோ, அர்த்தமோ எம் ஆக்கபூர்வமான எண்ணங்களில் மட்டுமே பொதிந்துகிடக்கின்றன.
எண்ணங்கள் நலமாக வளமாக கற்பனை செய்வோம்! காரியம் வெல்வோம்!
– உதய தாரகை
நான் ஏலவே உங்களின் அதி திறமையை வர்ணித்தது ஏன் தெரியுமா? திறமையைக் கண்டால் சொல்லி மகிழ வேண்டும் இல்லையென்றால் பொறாமை வந்துவிடும். இப்படியிருக்க என் நேற்றய உரக்கம் கலையமுன் இப்பதிவைக் காணுகிறேன்…. என்னா வேகம்…!
நான் தெரியாமத்தான் கேட்கிறேன், உங்களிடம் Voice to Text Converter இருக்கிறதா என்ன?
ஒரு முறை நீங்கள் தான் எனக்கு Bamini to ASCII converter கொடுத்தது ஞாபகம் வருகிறதா?
கனவு பற்றி உங்களின் விபரம் காணும் போது, நீங்கள் அதிகமாக கதைக்காததன் காரணம் கனவுதான் கண்டு கொண்டு இருந்தீர்கள் என எண்ணத் தோணுகிறது.
எனது தமிழ் மட்டத்தில் இப்பதிவில் ஒரு எழுத்துப்பிழை கீழே உள்ள பந்தியில் இருக்கலாம் என சந்தகிக்கி றேன்.
”மகிழ்ச்சியான பொழுதுகள் மனிதனுக்கு கிடைத்துவிட்டால், கற்பனைக்கு உயிர் கொடுப்பான். இமயத்தை எட்டுவான். செய்வாயில் பயிர் நடுவான். ஆகாயத்தில் புதையல் எடுப்பான். வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பான். மகிழ்ச்சியோ, அர்த்தமோ எம் ஆக்கபூர்வமான எண்ணங்களில் மட்டுமே பொதிந்துகிடக்கின்றன்”
—-செய்வாயில் —- செவ்வாயில் – ஒரே குழப்பமாக இருக்கிறேன்… தீர்க்க.
நன்றி பெளஸர் உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.
பதிவில் செவ்வாயை செய்வாய் என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இப்போது திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல.
அப்படி எந்த பேச்சு – எழுத்து மாற்றியெல்லாம் நம்மகிட்ட கிடையாது சார். என்ன வச்சி காமடி கீமடி பண்ணலையே..
மீண்டும் நன்றிகள் பல. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை