பெட்டிக்குள்ளே ஒரு பெண்

எளிமையான விடயங்களைக் கூட மிகத் துரிதமாகச் செய்யப் போய் அதில் தோல்வி காண்பவர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சின்னச் சின்ன விடயங்களிலும் மகிழ்ச்சியை தேடி அனுபவிப்பவர்களையும், மகிழ்ச்சியிருந்த போதும் அதனை வெறுத்து, எமக்கு மகிழ்ச்சி வேண்டாமே என கோசமிடும் புதுமையானவர்களையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

வாழ்க்கையின் மகிழ்ச்சி பற்றி நிறத்தில் நிறையக் கதைத்திருக்கிறேன். மகிழ்ச்சிதான் வாழ்க்கை. மகிழ்ச்சியை தொலைத்து நாம் நிற்பதனால், வாழ்க்கையே எம்மை விட்டு தொலை தூரமாகிவிட்டது என எண்ணத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றியே மகிழ்ச்சி பொதிந்து கிடக்கின்றது என்ற பழமொழி போன்ற கருத்தை வலியுறுத்த எனக்கு ஆர்வமில்லை.

சின்னச் சின்ன விடயங்கள் எம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சி சொல்லி மாளாது. எமக்குக் கிடைத்துள்ள வாழ்க்கையின் நேரங்களை மதிப்பதே வாழ்க்கையை நன்மையாக மாற்றிக் கொள்ள சிறந்த வழியாகும். வாழ்க்கையின் நேரமென்பதை நீங்கள் ஓய்வு நேரமெனக் கருதிவிடக்கூடாது. நான் சில வேளைகளில் செய்யும் சில சின்னச் சின்ன விடயங்கள் நிறைவான மகிழ்ச்சியை எனக்கு தந்திருங்கிறது. (என்ன உதய தாரகை.. ஓவரா பில்ட் அப் என்று பார்த்தால், தத்துவம்ஸ் மாதிரி கிடக்குது.. என்ன விசயம்..??)

அர்த்தமுள்ள நிமிடங்களை, மகிழ்ச்சியின் நொடிகளைத் தரவல்ல சில சின்னச் சின்ன விடயங்களை பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

Paper boat memories

கடதாசிப் படகும் மழையும்

மழை பெய்யும் ஓரிரவில் நீங்கள் நன்றாக படுக்கைவிரிப்பால் போர்த்திக் கொண்டு தூங்கியிருப்பீர்களே! நீங்கள் உங்களை அறியாமலேயே மகிழ்ச்சியடைந்த நொடிகளல்லவா அவை. அந்தி மாலையில் கடற்கரையின் ஓரமாக நின்று சூரிய அஸ்தமனத்தை கண்ட நினைவுகளை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். மகிழ்ச்சியின் புதையல் அல்லவா அந்த நினைவுகள். நாம் உணர்வுகளை விழிப்புணர்வாகப் பெற்றுவிட்டால் எல்லாமே ஆனந்தம் தான்.

நீங்கள் விரும்பிய நபருடன் நேரிலோ, தொலைபேசியிலோ மணித்தியாலக் கணக்கில், நேரத்தையே கவனிக்காது கதைத்த ஞாபகமுண்டா? மகிழ்ச்சியான வாழ்க்கையை இரசிக்கச் செய்த நிமிடங்களல்லவா அவை. குடும்பத்தின் அங்கத்தவராகட்டும், நண்பராகட்டும் நீங்கள் விரும்பிக் கதைப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை வேறு எங்கும் பெற்றுக் கொள்ள முடியாது. அது ஆனந்தமான நிலை. அனுபவிக்க வேண்டும்.

சிறு வயதில், கடதாசி கொண்டு படகு செய்த நினைவுகளை மீட்டிப் பாருங்கள். வீட்டில் கேட்ட புதிர்க் கணக்கை பாடசாலைக்கு சென்று நண்பர்களிடையே சொல்லி அதற்கு அவர்கள் விடை தெரியாமல், முளிக்க, நீங்கள் அதற்கு வித்துவான் போல் விடை சொல்லி அசத்திய தருணங்களை எண்ணிப் பாருங்கள். மகிழ்ச்சியின் பிரவாகம் அங்கல்லவா இருக்கிறது. புதிதாக ஏதாவதொன்றை நாம் கற்றுக் கொள்ளும் போது, மகிழ்ச்சிக்கான மாற்று வழிகளையும் நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.

நீங்கள் புதிதாக அறிமுகமில்லதாவருடன், பல வருடங்கள் அவருடன் பழகிய உணர்வோடு கதைத்து நின்ற நிமிடங்களை மனத்தில் எண்ணமாக்கிக் கொள்ளுங்கள். எத்துணை வலிமையானவை. வாழ்க்கையிற்கு அவை அர்த்தம் சேர்ப்பவை. இப்படி நினைவுகளில் இத்துணை மகிழ்ச்சி பொதிந்திருக்கிறது. இந்த நினைவுகள் யாவும் நிகழ்வுகளாக இந்த நிமிடமும் தொடரலாம். அதுவே மகிழ்ச்சியை கொண்டு தரும் ஊடகம்.

புதிய விடயங்களை கற்றல், அறிதல். அதனை மற்றவர்களுடன் பகிர்தல் மகிழ்ச்சிளை மட்டுமல்ல திருப்தியையும் உங்களுக்கு கொண்டு தரும். நிகழ்காலத்தையும் நினைவுகள் கொடுக்கும் மகிழ்ச்சியின் நொடிகளால் அலங்கரிக்க ஆர்வம் கொள்வதே சாலச் சிறந்தது என்பேன்.

பெட்டியிற்குள் அவள் ஏன் போனாள்?

அது நான் உயர் தரம் கற்றுக் கொண்டிருந்த வேளை, எங்கள் ஆங்கிலப் பாட ஆசிரியரை கேள்விகளைக் கேட்டே அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தை மறக்கடிக்க செய்யுமளவில் ஒரு சுட்டியான மாணவன் ஒருவன் எங்கள் வகுப்பில் இருந்தான். ஆங்கிலப் பாடவேளை, ஆசிரியரும் வகுப்பறைக்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அது மனிதர்களின் தோற்றம் பற்றிய பாடம். உயரமானவர், குட்டையானவர், கருப்பானவர், அவரது முடி நீளமானது என ஆங்கிலத்தில் அவர் விளக்கம் சொல்லிக் கொண்டு போனார்.

பெண்ணொருத்தியின் தோற்றம் பற்றி பாடநூலில் குறிப்பிடப்பட்டிருந்ததால், ஆசிரியரும் அதைப் போலவே பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆங்கிலத்திலேயே அவர் பாடங்களைச் சொல்லி விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவன் வகுப்பறையின் நான்காவது வரியிலிருந்து எழும்பினான். ஆசிரியரை நோக்கி “ஏன் சார், பெட்டியிற்குள்ளே Girl (கேர்ள்) ஐ வைக்க வேண்டும்?” எனக் கேட்டு நின்றான். வகுப்பறை முழுக்க சிரிப்பொலி எதிரொலித்தது.

ஏன் அப்படி அவன் கேட்க வேண்டும்? உங்கள் எண்ணங்களுக்குள் குடி கொண்டுள்ள கேள்வி இதுதானே! ஆங்கிலத்தில் குறிப்பிட்ட பொருள் என்பதை Particular thing என்று சொல்வார்கள். அன்றைய நாளில் ஆங்கிலத்தில் பாடமெடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், அந்த குறித்த பெண்ணின் தோற்றத்தை பற்றி விபரிக்கும் நேரமெல்லாம் Particular girl என அடிக்கடி சொல்லி நின்றார். அதைக் கேட்டவன் தான், இப்படியொரு குண்டக்க மண்டக்க கேள்வியைக் அவரிடம் கேட்டான். ஆசிரியர் முளித்த அந்தத் தருணம் இன்னும் என் மனக்கண் முன் தோன்றுகிறது. (இதெல்லாம் ஒரு ஜோக் என்று உதய தாரகை நீங்க சொல்றீங்களே! என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என திடமாக நம்புகிறேன்.)

பள்ளிக் காலம் மிக உன்னதமானது. அழகிய நினைவுகளை எமக்கு அள்ளித் தருவது. வாழ்க்கையின் இளமைக் காலங்களில் நாம் செய்யும் குறும்புகளுக்கும் செய்கைகளுக்கும் எல்லையில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், எந்த வயதாக இருந்த போதும் குறும்பு செய்யக் காணும் போதும், குறும்புகளைச் செய்யும் போதும் அது ஆனந்தம் தரும் அனுபவத்தை வழங்கி நிற்கும். வாழ்க்கை ரசிக்கப்பட வேண்டியது.

– உதய தாரகை

2 thoughts on “பெட்டிக்குள்ளே ஒரு பெண்

  • சத்தியமாக அது நானில்லை. அது நானாகவிருந்தால் நான் பெருமைப்பட்டிருப்பேன். 😆

   அக்கா தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல..

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s