உலகத்திலே விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால் அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன. காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின் அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை. காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேது!
காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலை உதறித் தள்ளுபவர்கள் கூட தம் மனதில் காதல் கோட்டைகள் பலவற்றை கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பின் அர்த்தம் காதலோடு சேர்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் மலர்வனங்களின் வழியே நடந்த சுகம் கொள்கிறது. உணர்வுகளைப் புரிந்து கொள்வதாலே நாம் மன நிம்மதி கொள்ள முடியும் என நான் சொல்வேன்.
இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை, நினைவலைகள் சுந்தரமான பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கத் தொடங்கியிருக்கும். கல்லூரிக் காலத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும். I’ve Fallen in love என்று ஆங்கிலத்தில் கூட, காதலில் விழுந்து விட்டேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால், காதல் என்பது விழுந்து தோற்றுப் போகும் ஓரிடமா? என்ற கேள்வி எழுகிறது. (உதய தாரகை.. உங்கட ஆராய்ச்சி இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. இதெல்லாம் ஓவரா தோனலையா???)
ரோசாவைக் கிள்ளாதே!
அது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ஓரிரவு. எனது விடுதி பொறுப்பாளரின் அறிவித்தல் சத்தம் தவிர்ந்த ஏனைய எந்தச் சத்தமுமில்லாத மயான அமைதி நிலவிய பொழுது. இடம் விடுதிக் காரியாலயத்தின் முற்றம். அழகிய பூமரங்களின் இன்னொரு வனாந்தரம் அது (இதெல்லாம் ரொம்ப ஓவரா தோனலையா உதய தாரகை!??).
பொறுப்பாளரின் அறிவிப்புகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த வேளை, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் நண்பணொருவன் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரோசா செடியின் மலரை கொய்ய முற்பட்டான்.
அந்நேரம் பொறுப்பாசிரியர் அவனை நோக்கி, “ரோசாவைக் கிள்ளாதே!” என்ற கம்பீரக் குரலில் ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டோம் (இந்தச் சிரிப்பு தோன்ற அந்நிகழ்வு இடம்பெற்ற தருணம் அப்படியாகவிருந்தது.. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. ஏதோ ஒன்ற சொல்ல வர்ரது பின்னர் இப்படி Explanation வேற கொடுக்கிறது. தாங்க முடியல உதய தாரகை..!). விசயத்திற்கு வருகிறேன்.
ஒருவர் ரோசா செடியொன்றை நட்டு, அதற்கு அன்பாய் நீருற்றி பராமரித்து வந்தார். அந்த ரோசா செடி பூப்பதற்கு முன்பாக அதனை ஒரு தரம் நோட்டமிட்டார்.
அங்கே மிக சீக்கிரமாகவே பூக்கும் நிலையிலிருந்த மொட்டையும், தண்டு வழியே பரந்து கிடந்த முட்களையும் கண்டார். “என்ன கொடுமை இது, கூரிய முட்கள் நிறைந்த ஒரு தாவரம் எங்கே, எப்படி அழகிய பூவைத் தரப்போகிறது?” என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டார்.
தனது எண்ணத்தால் கவலை கொண்ட அவர், பூச்செடிக்கு நீருற்றாமல் விட்டுவிட்டார். பூக்கவிருந்த மொட்டு இறந்து சருகானது.
நாமும் இப்படித்தான். ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் அழகிய ரோசாவொன்று உள்ளது. அன்பான அழகிய பண்புகள் நாம் பிறக்கும் போது, எம்மோடு கூடவே சேர்ந்தே வருகின்றது. வளரும் போது, எமது பிழைகள் முட்களாக எம்மோடு தோற்றம் கொள்கிறது. அதிகமானோர் முட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரோசா மலருக்குத் தர மறந்து விடுகிறோம்.
எம்மிடமிருந்து எப்படி நல்ல விடயங்கள் வெளிப்படலாம்? என்ற சந்தேகம் கொண்டவர்களின் நிலை பரிதாபமானதே. தம்மிடமுள்ள நல்ல விடயங்களை போசிக்காமல் விட்டுவிடுவதால், அந்த நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்து பிரிந்து விடுகிறது. தமது உள்ளார்த்தமான ஆளுமையை அறிய முடியாமலே வாழ்க்கையில் தலைவிதியை தொலைத்து விடுகின்றனர்.
எமக்குள்ளே இருக்கும் அழகிய ரோசாப் பூவை இன்னொருவர் இனங்காட்டும் நிலையும் உள்ளது. ஒரு மனிதனின் முட்களான விடயங்களைக் கடந்து அவனில் ரோசாவைக் காணும் ஆற்றல் தான் நாம் ‘அவனியில்’ பெறும் உயர்ந்த அருட்கொடை என நான் சொல்வேன்.
காதலின் அத்தியாவசிய கூறும் இது தான். அன்பின் ஊற்றும் இது தான். ஒருவரைக் கண்டு, அவரின் மெய்யான தவறுகளைக் கூடக் கண்டு, அவரை மனதார ஏற்றுக் கொள்ளும் பண்பு உன்னதமானது. அவர்களின் எண்ணங்களுக்குள் அவர்களின் ரோசா போன்ற தன்மையைக் காட்டிக் கொடுக்கும் வழி தான் அது.
மற்றவர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் ரோசாவைக் போன்ற குணங்களை அவர்களுக்கு நாம் இனங் காட்டிக் கொடுத்தால் அவர்கள் முட்களை பார்ப்பதற்கு விரும்பவே மாட்டார்கள். கனியிருக்க யார்தான் காய் கவருவார்? ரோசாவாய் யாவரும் மலர்கவே!
என்னை மறந்துவிடாதே!
ரோசா மலரைப் பற்றிக் கதைக்கும் போது, எனக்கு மலர்கள் பற்றிய ஞாபகமொன்று அலை பாய்கிறது. மலர்களின் பெயர்களில் அற்புதங்கள் பலவுண்டு. ”என்னை மறந்துவிடாதே!” என்ற பெயரில் ஒரு மலருள்ளது உங்களுக்குத் தெரியுமா?
Forget-me-not என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பூவிற்கு எப்படி பெயர்வந்தது என்பதில் பல கதைகள் உண்டு. அனைத்தும் சுவாரஸ்யமானவை. அறிந்து கொள்ள நீங்கள் தயாரா? (நாங்க ரெடி இல்ல என்டு சொன்னா மட்டும் நீங்க என்ன சொல்லாமலா போய்விடுவீங்க..? உதய தாரகை..)
சுந்தரமான பூக்களின் சோலையை விட்டு அகன்று விட்டுச் சென்ற ஆதாமையும் ஏவாளையும் நோக்கி அங்கு செடியில் பூத்துக் குலுங்கிய பூ சொன்னதாம் ”என்னை மறந்துவிடாதே!” என்று. அதுவே பெயராயிற்றாம்.
இறைவன் பூச்செடிகள் யாவற்றையும் பெயரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஓரமாய் இருந்த சிறிய பூச்செடியொன்று, “இறைவா! என்னை மறந்து விடாதே!” என்று கேட்டுக் கொண்டதாம். அதற்கு இறைவன், “அதுவே உன் பெயராகட்டும்” என பதில் சொன்னானாம். அதுவே பெயராயிற்றாம்.
தலைவனும் தலைவியும் ஆற்றின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நடக்கும் வழியில் பூக்கள் சிலவற்றைக் கொய்து தன் கையில் வைத்துக் கொண்டான் தலைவன். தலைவனின் அணிகலன்களின் பாரத்தினால், ஆற்றினுள்ளே அவன் தவறி விழுந்து விட்டானாம். தான் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் தன் கையிலிருந்த பூக்களை தலைவியை நோக்கி வீசி, “Forget Me Not” என சத்தமிட்டு கத்தியிருக்கிறான். அதுவே அப்பூவின் பெயரானது.
காதலின் உணர்விற்கும் சோகமான விதியான காதலின் கதைக்கும் இப்பூவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அதனாலென்னவோ தெரியவில்லை, இந்த மலர் பல பெண்களினால், இன்னமும் நம்பிக்கையை மற்றும் நீடித்த காதல் என்பவற்றை வெளிக்காட்டும் அடையாளமாகக் கூட அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில் பல பேர், இப்பூவை காதலின் சின்னமாக பயன்படுத்துவதும் காணக்கிடைக்கிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில், இந்தப்பூவை அணிந்து கொள்பவர்கள் அவர்களின் காதலர்களால் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள் என் ஐதீகம் வேறு இருந்ததாம். பூ அழகு.
மலர்களின் வாசமும் மலர்களின் நிறமும் மலர்களின் மெளனமும் பொதிந்த எந்தப் பொருளையும் உலகில் சமைத்துவிட முடியாது. மலர்களே மலருக்கு நிகர்.
காதலை அறிவிக்கும் சின்னமாகக் கூட இன்று ரோசா மலர் இன்றும் பாவிக்கப்படுவது அறிந்ததே! மலர்கள் மொழிகடந்து உணர்வுகளுக்குள் ஒரு நிலையானது அதிசயமே!
– உதய தாரகை
சின்னதாய் ஒரு கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட மறக்காதீர்கள்.
உதய தாரகையே…..vote பாருங்க…..ரொம்ப நல்லா சொல்லி இருக்காங்களே நம்ம ஆட்கள்
எது எப்படி இருந்தாலும் உங்க கருத்துக்கள் நன்னாத்தான் இருக்கு….
கதைகளும் நல்லாத்தான் இருக்கு…தோழா….தொடர்….
நீங்கள் காதலில் விழுந்துவிட்டதாகவே நான் எண்ணுகிறேன். அதனால்தான் பல விடயங்களை காதல் பற்றி சொல்லி மனவலிமை சேர்க்க முற்படுகிறீர்கள்.
காதலின் அருமையான உணர்வை இசையில் சொன்ன அழகிய பாடலிது.. ரசிக்கலாம்..
நன்றி சனூன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
@லதா அக்கா, காதலில் விழுந்தால் மட்டுமா காதல் பற்றிச் சொல்ல முடியும்..?? புரியவில்லையே..
உணர்வுகள் வாசிக்கப்பட வேண்டும். சுவாசிப்பதற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும்.
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை