கால் நூற்றாண்டும் நானும்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் நாட்கள் நகர்வதைக் காட்டும் ஒரு ஆதாரமாகவே பிறந்த நாட்கள் அமைந்து விடுகின்றன. பலரும் வயது போனபோதும், அவ்வாறு தமக்கு வயது ஆகவில்லை என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு சோடணைகள் செய்வதிலே பல வயதுகளை தொலைக்கும் கொடுமையும் உண்டு.

வருடத்திற்கொரு வயது ஒவ்வொருவருக்கும் கூடிச் செல்வது தான் இயற்கை. அதுதான் பூமி தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திலுள்ள ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதனாலே பல கலைகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை இரசிக்கும் வகையில் பார்ப்பதும், ரசிப்பதும் அழகு.

silver_jubilee

அண்மையில் எனது வயது கால் நூற்றாண்டு (ஆமா.. இருபத்தைந்து என்று சொன்னால் என்ன..?  குறைந்தா போயிருவீங்க உதய தாரகை?? சும்மா.. கால் நூற்றாண்டு.. கை நூற்றாண்டு என்று என்டுகிட்டு!!..??) ஆகியது. பிறந்ததிலிருந்து இன்றுவரை பலபேரை பல விடயங்களில் நான் சந்தித்திருக்கிறேன். பல சம்பவங்கள், பல மனிதர்கள், பல பாடங்கள் என அத்துணையும் என் மனவானில் இன்னமும் நிழலாடுகிறது.

இன்பம், துன்பம், வலி, நோய், அழுகை, ஆனந்தம், சிரிப்பு என விரியும் மனிதனின் அத்தணை குண இயல்புகளுக்குள்ளும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் என்னை நான் இழந்திருக்கிறேன். அவைகள் பல நேரங்களில் வாழ்வைப் புடம் போடும் ஆதாரமாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது.

இந்த இருபத்தைந்து வருட காலத்தில் வாழ்க்கை எனக்குச் சொல்லித் தந்த பாடங்கள் என்ன? நான் வாழ்க்கையில் இருந்து எவற்றைக் கற்றுக் கொண்டேன் என கொஞ்சம் யோசிக்கலானேன். பல விடயங்கள் என் மனதில் விரியத் தொடங்கியது. அவற்றில் சிலவற்றை பட்டியற்படுத்துவதால் உங்களுக்கும் உங்கள் வாழ்வின் நிலைகளின் அனுபவங்கள், நினைவிற்கு வந்து அதனூடாக நம்பிக்கைகள் பிறக்கலாம் என எண்ணுகிறேன்.

ஆனந்தம், அழுகை, சிரிப்பு மற்றும் கோபம் என எல்லாமே வாழ்வில் இருக்க வேண்டும். வாழ்க்கையின் அழகிய நிலைகளுக்கு சுவை சேர்க்கும் ஊடகங்களாக உணர்வுகளே எப்போதும் இருப்பதுண்டு. உணர்வுகளின் வலிகள் தரும் சுமைகளை விட, அவ்வலிகள் அகன்ற பின் அது தரும் நினைவுகள் மற்றும் பாடங்கள் வாசிக்கப்பட வேண்டியவையே. மனிதர்கள் என்ற நிலையை உண்மையாக்கும் நிலையாகவே இந்த உணர்வுகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். எம்மோடு அன்பினால் பிணைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு, சில நேரங்களில் சங்கடங்கள், கஷ்டங்கள் ஏற்படலாம். இவை நடந்தேறும் நிலைகள் மட்டும் தான். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு நாமும் அந்தச் சம்பவத்தில் இருந்து வாழ்க்கை கவிதை வாசிக்கலாம். பாட்ஷா திரைப்படத்தில், ரஜினி பேசும் வரி ஒன்று உள்ளது உங்களுக்கு ஞாபகமிருக்கும். “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்” என்பது அது.

இப்போது நீங்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், இத்தருணம் நீங்கள் உங்கள் மனம் விரும்பி ஒரு விடயத்தை செய்கின்றீர்கள். பல நேரங்களில் பலரும் தமது நிலைகள் பற்றி முறையிடுவதை நான் கண்டிருக்கிறேன். நானும் சிலவேளைகளில் என் நிலைகள் பற்றி முறைப்பாடு செய்வதிலேயே நிமிடங்களை தொலைத்திருக்கிறேன். விரும்பி எந்த வேலையையும் செய்யும் போது, மகிழ்ச்சி கூடி வரும். அது எந்நாளும் எம்மோடு நிலைத்திருக்கும். என் ஞாபகத்திற்கு ஒரு மேற்கோள் வருகிறது: அது இந்த இடத்திற்குப் பொருந்தும் என எண்ணுகிறேன். “If you’re not lighting any candles, don’t complain about the dark”.

ஏற்கனவே “இன்னொரு பிரபஞ்சம்” தொடரிலும் எனது அனுபவங்கள் பலவற்றை சொல்லியிருக்கிறேன். அவற்றை நீங்கள் வாசிக்கத் தவறியிருந்தால் உங்களுக்காக இதோ அந்தப் பதிவுகளின் இணைப்புகள்.

இன்னும் பல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் இப்பதிவின் நிறைவைக் குறிக்கிறேன்.

– உதய தாரகை

2 thoughts on “கால் நூற்றாண்டும் நானும்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s