ஆமாங்க.. மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம்!!

திரைப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு, சிலவேளைகளில் மிக வலிமையானதாக இருந்து விடுவதுண்டு. வலிமை என அவை உருவாவதற்கு அது சொல்லும் வலிகள் தான் காரணமாக அமைந்து விடுவது அழகு.

ஆனாலும், திரைப்படங்களின் உணர்வுபூர்வமான கட்டங்கள், நடிப்பு என்பனவற்றைப் பற்றி கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. அவை ரசிக்கப்பட வேண்டியவை என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

மொழிகள் தான் நமக்கு பல வேளைகளில் உணர்வுகளை புரிந்து கொள்ள அச்சாணியாக அமைந்து கொள்கிறது. மெளனமும் ஒரு மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வெவ்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளும் போது, நாம் அந்த மொழியை மட்டும் கற்றுக் கொள்வதில்லை மாறாக, அது சார்ந்த கலாசாரப் பின்னணிகளையும் ஆய்ந்தறிகிறோம். அது அவ்வாறே நடந்தும் விடுகிறது.

language_translation

மொழிகளில் ஆங்கிலத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சிலவேளைகளில் தமிழுக்கே தர மறந்து விடுகிறோம். பிரசினங்களைத் தீர்க்கும் மொழியாக உலகளவில் ஆங்கிலம் உருவெடுத்து விட்டதாக ஜே வோகர் தெளிவாகச் சொல்கிறார்.

அவரின் ஐந்து நிமிட அழகிய சொற்பொழிவு, ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை விட, வாழ்க்கையில் மொழிகளின் ஆதிக்கத்தை மிகத் துல்லியமாகச் சொல்லிச் சென்றது. இந்தப் பதிவின் ஈற்றிலே அந்தச் வீடியோவை தருகிறேன். உங்கள் ஐந்து நிமிடங்களுக்கு அழகிய அர்த்தம் கொடுக்க ஆயத்தமாகுங்கள்.

இது இப்படியிருக்க, மொழிகளை கணினி கொண்டு, மொழிபெயர்க்கும் நிலை அண்மைக்காலமாக மிகப் பிரபல்யமாகிவருகிறது. கணினிகளுக்கு, நாம் எதனைக் குறிப்பிடுகிறோம் எனத் தெரியாமலேயே சொற்களை மொழிபெயர்த்து, கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மொழிபெயர்த்துத் தருகிறது.

பலவேளைகளில், இந்த கணினியின் மொழிபெயர்ப்புகள், மிகச் சரியானதாக இருந்து விடுவதில்லை. கணினி வழி மொழிபெயர்ப்பில் மிகப் பிரபல்யமாக இருப்பது, கூகிளின் Google Translate தான். அதனால் 40இற்கும் அதிகமான மொழிகளை மொழிபெயர்க்க முடிகிறது.

கணினி வழி மொழிபெயர்ப்பில் காணப்படும் பொருத்தமில்லாத மொழிபெயர்ப்புச் சாத்தியங்களைக் கருத்தில் கொண்ட சிலர், மொழிபெயர்ப்புச் சமநிலையைக் கண்டு கொள்ள முயற்சித்திருக்கிறார்கள்.

ஆங்கில வசனமொன்றை, ஜப்பான் மொழியிற்கு மொழிபெயர்த்து, அதனை மீண்டும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பின்னர் அதனை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்து என இரண்டு மொழிபெயர்ப்புகளும் சமனாகும் வரை மொழிபெயர்த்தல் தன்னியக்கமாக நடந்தேற வழி சமைத்துள்ளார்கள்.

அதுதான் மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம் – Translation Party!

இரண்டு மொழிகளினதும் மொழிபெயர்ப்பு சமநிலை எய்தும் நிலையில் வரும் வாக்கியம், பலவேளைகளில் நாம் கொடுத்த மூல வாக்கியத்தை எந்த வகையிலும் பொருந்தாத நிலையில் இருப்பது பெருங்கொடுமை. பலவேளைகளில் நகைச்சுவையான மொழிபெயர்ப்பில் அர்த்தமுள்ள வசனங்கள் கனமிழப்பது கோரம்!!!கணினியின் மொழிபெயர்ப்பின் ‘கக்கிசம்’ அதுதான்.

நானும், “In life there is neither good nor bad” என்ற ஆங்கில வசனத்தை வழங்கிப் பார்த்தேன். அதற்கு “Life is not enough” என மொழிபெயர்ப்புச் சமநிலை எய்தப்பட்டது. ஒருவேளை ஈற்றில் கிடைத்த வசனம் அழகிய மேற்கோளாகக் கூடப் பாவிக்கப்படலாம். அப்படித்தானே!??

“வாழ்க்கையில் நல்லது கெட்டது என எதுவுமே இல்லை” என்ற வாக்கியத்திற்கு “வாழ்க்கை போதாது” என அர்த்தம் சொல்கிறது கணினி – மொழிபெயர்ப்பு வித்துவான்கள் கூட தோற்றுப்போகும் தருணம் இதுவோ??!!

நீங்களும் முயற்சி செய்துதான் பாருங்களேன். நீங்கள் பெற்றுக் கொண்ட மொழிபெயர்ப்புச் சமநிலையை நிறத்துடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். மொழிகளோடு விளையாடும் போது, கொண்டாட்டம் தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். மொழி சுவாசிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நான் சொன்ன அந்த வீடியோ:

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s