முத்தங்களும் மூன்று வருடங்களும்

வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது.

ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன்.

நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று போல ஒரு நாளாகவே இருந்திருக்கிறது. அது மூன்று வருடங்களுக்கு முன்னாகவும் வந்திருக்கிறது. (என்ன உதய தாரகை.. நிறம் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் பூர்த்தியாகிறது என்று சொல்லலாமே! – அதை விட்டுட்டு சும்மா சுத்தி வளைச்சிகிட்டு…)

நான் கண்ட, காணும் மற்றும் காண விரும்பும் உலகம் என அனைத்தையும் பதிவு செய்யும் தளமாக நிறம் விளங்க வேண்டுமென ஆசை கொண்டேன். பல வேளைகளில் எனது அனுபவங்களை என்னால் மறக்க முடியாத சம்பவங்களோடு சொல்லிய விதம் பலரையும் பிடித்திருந்தது.

இன்னொரு பிரபஞ்சம் என எனது அனுபவங்களைச் சொல்லும் தொடரை ஆரம்பித்தேன். இந்தத் தொடரின் சொல்வாக்கை “யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்” என்பதாகவும் அமைத்திருந்தேன். தொடரில் பதிந்த பதிவுகளை பலரும் விரும்பிப் படித்தார்கள் என்பதை நான் பெற்றுக் கொண்ட சில மின்னஞ்சல்கள் சொல்லி நின்றன. (ப்…பா.. போதும்.. போதும்..)

ஒவ்வொரு ஆண்டின் நிறைவின் போதும் அதுபற்றிய பதிவு எழுதும் நான், இந்த மூன்றாம் ஆண்டின் நிறைவைக் குறிப்பதற்காக பதிவொன்றை எழுத எண்ணிய போது, எனது வலைப்பதிவின் புள்ளிவிபரங்கள் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி நின்றன.

சுவாரஸ்யமான அந்தச் சில விடயங்களை பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

இந்தப் பதிவு நிறத்தின் 101 பதிவாகும் (ஆமா.. இதற்கு முன்னுக்கு எழுதிய “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என்ற பதிவுதான் நூறாவது பதிவு).

வலைப்பதிவை நான் தொடங்கியதிலிருந்து மிகவும் அதிகமானோரால் வாசிக்கப்பட்ட பதிவாக “எனது முதலாவது காதலி” பற்றிய பதிவு அமைந்துள்ளது ( அட.. உதய தாரகை உங்களுக்கும் இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் இருக்குதா? சொல்லவேயில்லை..!!).

கடந்த ஆண்டில் (2008 செப்டம்பர் முதல் 2009 செப்டம்பர் வரை) நிறத்தில் நான் பதிந்த பதிவுகளில் அதிகமானோர் விரும்பிப் படித்த முதல் ஐந்து பதிவுகளாக பின்வருவன அமைந்துள்ளன.

 1. மொழிபெயர்க்க முடியாத மெளனம்
 2. ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்
 3. மலரே என்னை மறவாதே!
 4. ஒரு மணிநேரம் அவளருகில் நான்
 5. பசித்திரு, முட்டாளாயிரு

இப்படியாக, புள்ளிவிபரங்கள் இருக்க, உங்கள் கவனத்தை முத்தங்கள் பக்கம் கொஞ்சமாய் அழைக்கப் போகின்றேன்.

kiss_meaning

முத்தம் – எளிமையான ஒரு செயல் தான் ஆனால், அது கொண்டுள்ள தெரிவிக்கின்ற அர்த்தங்கள் ஆயிரம் என்றே முத்தம் பற்றி பலரும் சொல்கின்றார்கள்.

நான் Boston.com இல் வெளியாகும் The Big Picture என்ற பகுதியை வழமையாக ரசிப்பவன். அதில் உலகத்தின் உணர்வுகள் எல்லாவற்றையும் காலத்திற்கேற்ப சொல்லுமாய்ப் போல், பெரிய நிழற்படங்கள் மூலம் விபரிக்க முனைந்திருப்பார்கள். வெற்றியும் கண்டிருப்பார்கள்.

துல்லியமான நிழற்படங்கள், உயிர்ப்பான உணர்வுகள் என என் மனத்திரையின் உணர்வுக்கு அழுத்தம் கொடுப்பதாய் அவை யாவும் அமைந்து போவதை எண்ணி பல வேளைகளில் நான் வியந்ததுண்டு.

அண்மைக்காலமாக பரவிவரும் Swine Flu எனப் பொதுவாகச் சொல்லப்படும் H1N1 வைரஸ் தொற்றுகையின் காரணமாக, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம், தமது நாட்டு மக்களை பாரம்பரிய முத்தமுறையான கன்னத்திற்கு கன்னம் முத்தம் கொடுப்பதை பின்பற்றுமாறு பணித்துள்ளது.

பிரான்ஸ் முத்தம் என்பது நீங்கள் அறிந்ததே! (உதய தாரகை!! எங்களுக்கு புரியலையே!! ஆமா.. அதுதாங்க.. French Kiss..  அப்பாடா இப்போ புரிஞ்சுது.) இதனால், தொற்றுநோய்க்காவிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தாவிவிடலாம் என்ற பயமே இந்தப் பணிப்பை அரசாங்கம் அறிவிக்க காரணமாய் அமைந்தது.

விசயம் அதுவல்ல.

நேற்று Big Picture கொண்டு வந்த உணர்வு: முத்தம்.

முத்தமென்ற எளிய செயலொன்றை கமராக் கண்களுக்குள் கொண்டு வந்து அந்த பிரமாண்ட நிழற்படங்களால், உணர்வுகளுக்கே பிரமிப்பை தந்தது Big Picture. கட்டாயம் உங்கள் உணர்வுகளுக்கு உயிர்ப்பைக் கொடுங்கள்.

முத்தங்களின் தொகுப்பு இங்கே இருக்கிறது. இரசிக்கலாமே!!

– உதய தாரகை

8 thoughts on “முத்தங்களும் மூன்று வருடங்களும்

 1. உதய தாரகை எனக்கு எப்போதும் ஒரு விடுகதை…

  Boston.com பற்றி முதன் முறையாக கேள்விப்படுகிறேன். நானும் ரசித்தேன்…

  அந்த முத்தங்களின் ஒரு சிலவகைகளை (Home Kisses) எங்களால் கொடுக்கமுடியாது, இன்னும் சில வகைகளை நீங்கள் அனுபவித்திருக்கக் கூடும் (Funarel Kisses) அதை நான் இன்னும் அனுபவித்ததில்லை, இன்னும் சிலவைகளை (Loving Kisses) நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போது அனுபவிப்பது?

  உதய தாரகை எனக்கு எப்போதும் ஒரு விடுகதை…

  • @பெளஸர்,

   விடுகதை என்று எனக்கு விடுகதையாப் போடுறீங்களே சார். வாங்க பெளஸர்.

   சும்மா சொல்லக்கூடாது, முத்தங்களின் வகைகளை எல்லாம் சொல்லியிருந்தீர்கள். சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வகைகள் பற்றி நான் இப்போதுதான் அறிந்து கொண்டேன்.

   நன்றிகள் பெளஸர், நிறைய நாட்களுக்குப் பிறகாயினும் உங்கள் மறுமொழியை நிறத்தில் கண்டதில் மகிழ்ச்சி தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • @Ramzy

   எல்லா விபரங்களையும் வரைபுகளோடு பதிக்கலாமெனத்தான் எண்ணினேன். இருந்தாலும், சில விடயங்களை மறைப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் எங்கும் கிடைப்பதில்லை என எண்ணியதால் அதனை சொல்லவில்லை.

   எதுவானபோதிலும், எண்ணிக்கைகளை விட, வாசிப்பவர் பெற்றுக் கொள்ளும் அனுபவம், மகிழ்ச்சி என்பனவற்றைப் பற்றி எப்போதுமே சிந்திப்பதால் எண்ணிக்கைகள் எனக்கு அவ்வளவு பெரிதாகவும் முக்கியமாகப் படவுமில்லை (ஆஹா.. சும்மா எத்தனை பேர் என்று தான் கேட்டேன் அதற்கு இவ்வளவு பில்ட் அப் எதற்கு..!!??)

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள் றம்ஸி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • @நிமல்,

   வாங்க நிமல், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. நல்ல பதிவு உதய தாரகை.
  அது சரி…
  என்னாது காதலோட கத்தரிக்காயெல்லாம்????
  அதோடு முத்தம் என்பதும் ஒரு உணர்வுப் பகிர்வுதானே உதய தாரகை… அது கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான பாசம் அல்லது காதலின் நிலைதான்.

  • @தெருவிளக்கு,

   காதலையும் கத்தரிக்காயையும் சேர்த்து கதைப்பது ஒரு வழக்கம் தான். “கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்தாகனும்” என்று ஒரு பழமொழியுண்டு. அதுபோல, காதல் என்பது எப்படியும் மறைத்து வைக்க முடியாது, ஒரு சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்ற அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று எங்கேயோ வாசித்த ஞாபகமுண்டு எனக்கு (இப்படியொரு கதையா..?? சொல்லவேயில்லை!!). ஆனாலும், சனூன் நமக்கெதற்கு இந்த காதலும் கத்தரிக்காயும்!!! 🙂

   முத்தம் என்பது உணர்வுப் பகிர்வு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைதான். சில முத்தங்கள் கண்ணீரை வரவழைத்து விடுவதை நான் அனுபவித்திருக்கிறேன். வாழ்க்கை சுவாசிக்கப்பட வேண்டுமென்பதை விட அதிகளவில் வாசிக்கப்பட வேண்டும்.

   உங்கள் வருகைக்கு கருத்துக்கும் நன்றிகள் பல.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s