Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்

கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன.

காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய தொடர்பாடல் கருவி (Communication Tool) தனது பயணத்தை உலக மக்களோடு சேர்ந்து தொடங்கிய நாள்.

Google Wave இற்கான அழைப்பைப் பெற்ற ஒருவரினாலேயே இந்தப் புதிய கருவியின் அதீத அதிசயங்களை தங்கள் கண்முன் நடந்தேற கண்டு களிக்க முடியுமென்பது கூகிளின் தகவல். எல்லோரும் போலவே, நானும் Google Wave இற்கான அழைப்பைப் பெறும் சுட்டியில் Google Wave இன் அறிமுகம் இடம் பெற்ற நாளே என்னையும் சேர்த்துக் கொண்டேன்.

google_wave

குறித்த செப்டம்பர் 30 ஆம் திகதியே எனக்கு அழைப்பு கிடைத்துவிடும் என மிகவும் நம்பிக்கையுடனேயே இருந்தேன். இதில் கொடுமை என்னவென்றால், சிலவேளை எனக்குக் கிடைத்த அழைப்பு எரிதங்கள் (Spams) பகுதிக்குள் சேர்ந்திருக்கலாமென எண்ணி அப்பகுதியையும் திரும்பத் திரும்ப அந்தக் கிழமை முழுவதுமாக அவதானித்த நிலையை என்னால் மறக்க முடியாது.

எனது டிவிட்டர் நண்பனொருவன் தனக்கு Google Wave இற்கான அழைப்பு கிடைத்துவிட்டதாம் என செய்தி சொன்ன போது, அவனிடம் எனக்கொரு அழைப்பை கொடுத்துவிடு என்று செய்தி சொன்னேன். அவனோ என்னையும் அலையடிக்க அழைத்துவிட்டதாக உடனடியாக பதில் சொன்னான். ஆனாலும், அழைப்பு என்னை அந்தநேரமே கிட்டவில்லை என்பது கவலை.

கூகிளிடமிருந்து நேரடியாக அழைப்பைப் பெறும் ஒருவராலேயே இன்னும் எட்டுப் பேரை Google Wave இல் அலையடிக்க அழைக்க முடியும். எனது நண்பனும் அவ்வாறு அழைப்பைப் பெற்றவன் தான். ஆனாலும், அவன் அலையடிக்க என்னை அழைத்து பத்து நாட்கள் கழிந்த பின்னரே எனக்கு அலையடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆமா.. நேற்றுக் காலை காத்திருப்பின் சந்தோசம் கனிந்துவிட்ட நாள்.

கூகிளிடமிருந்து நேரடியாக அழைப்பைப் பெற்ற ஒருவர், இன்னொருவரை அலையடிக்க அழைக்கும் இடைமுகத்தில், கூகிள் சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. எனக்கு அழைப்புக் கிடைக்க பத்து நாட்கள் எடுத்ததற்கு அர்த்தமுள்ள காரணத்தை அது சொல்லி நின்றது.

“Invitations will not be sent immediately. We have a lot more stamps to lick.” என்பதுதான் அந்தச் செய்தி.

முத்திரையை எச்சிலில் படுத்தி கடிதவுறையில் ஒட்டியனுப்பும் பாரம்பரிய தபால் முறையை ஞாபகப்படுத்துவதாய் அந்தச் செய்தி அமைந்துள்ளது. Lifehacker இணையத்தளத்தின் ஒரு பதிவின் படி, Google Wave அழைப்புக்கள், தன்னியக்கமாக இல்லாமல், கைம்முறையாகவே (manual) அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பப்படுவதாக தகவலுள்ளது. அவுஸ்திரேலியாவிலேயே Google Wave இன் உருவாக்க பொறியியலாளர்கள் இருக்கிறார்கள் என்பது நீங்களறிந்தே!!

நேற்று காலை, நான் எனது மின்னஞ்சல்களைச் பார்க்கும் போது, Google Wave இற்கான அழைப்பு வந்திருந்தது. மகிழ்ச்சியைத் தந்தது. எனது நண்பனுக்கு அழைப்பெடுத்து அனுப்பிய அழைப்பு பத்து நாட்களுக்குப் பிறகாயினும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.

நான் எனது நண்பரிடமிருந்து Google Wave இற்கான அழைப்பைப் பெற்றுக் கொண்டதால், என்னால் எனது ஏனைய நண்பர்களை அலையடிக்க அழைக்க முடியாதுள்ளது கவலை.

எனது அலையடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென இந்தப் பதிவு.

Google Account மூலமே Google Wave இற்கான இணைப்பு கிடைக்கப் பெறுகிறது. அதேபோல, Google Wave இல் இணைந்ததும், @gmail.com என்பதற்குப் பதிலாக, எமது Wave இற்கான முகவரி, @googlewave.com என மாறிவிடுவது அழகு.

google_wave_cool

Google Wave இற்குள் நுழைந்ததும் wave ஒன்றை என் நண்பருக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு wave ஐத் தொடங்கி தமிழில் தட்டச்சு செய்து அதனை Google Wave இன் கணக்கைக் கொண்டிருக்கும் எல்லோரும் காணும் வகையில் Public நிலைக்கு ஆக்கிவிட்டேன்.

“இது என்ன மொழி?” என ஆங்கிலத்தில் அயர்லாந்திலிருந்து ஒருவர் என்னிடம் அலையடிக்கத் தொடங்கினார். ஆஹா.. Google Wave இன் அலையடிப்புப் பற்றி சொல்லவா வேண்டும்?

tamil_wave

நீங்கள் அறிந்திருப்பீர்களே!! அவர் தட்டச்சு செய்கிறார் என்றெல்லாம் பில்ட்அப் கொடுத்து திரையில் செய்தி வராது. மறுமுனையில் நண்பர் எதை தட்டச்சு பண்ணுகிறாரோ அது உடனடியாக (அதுதாங்க real time) தெரியும். எத்தனை பேர் வேண்டுமானாலும், அலையடிக்க முடியும் என்பதுவும் அது real time இல் தெரியத் தொடங்குவதும் சுவாரஸ்யம்.

இது Google Wave இல் செய்யக்கூடிய வெறும் சின்ன விடயமொன்றுதான். ஆனால், Google Wave இன் மூலம் சாத்தியமாக்கக் கூடிய பல விடயங்கள் உண்டு. Google Wave ஆனது, Open Source ஆக கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது, எதிர்காலத்தில் இந்தப் புதிய தொடர்பாடல் நிலைக்கான சாத்தியங்களை அப்படியே எதிர்வு கூறுகின்றது.

Google Wave இன் அடிப்படை விடயங்களையும் அதன் சாத்தியங்களையும் இப்பதிவில் சொல்வது அவ்வளவு பொருத்தமாகாது என்பதால், எனது அலையடித்த அனுபவங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். Google Wave தொடர்பான விடயங்கள் அடங்கிய இணைப்புகளை பதிவின் இறுதியில் தருகிறேன்.

Public என்ற நிலையில் காணப்படும் wave பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த நிலையில் ஏதாவது “தமிழ்” என்ற சொல்லைக் கொண்ட தமிழ் மொழியாலான wave கள் காணப்படுமா? என அறிய ஆர்வம் கொண்டேன். அதனையும் தேடினேன். இரண்டு பொருத்தமான தேடற்பெறுபேறுகள் கிடைத்தன. அதிலொன்று என்னுடையது.

tamil_wave1

ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யும் போதே, அதனைத் திருத்தித் தரும் Spelly, இணைய முகவரிகளை தட்டச்சு செய்ய அதற்கு இணைப்பை தன்னியக்கமாகவே வழங்கு Linky என பல துணைசெய் நிரல்கள் Google Wave இன் வலிமைக்கு வலிமை சேர்க்கின்றன.

Google Wave இன் முன்னோட்டமே இப்போது இடம்பெறுவதால், அதன் கூறுகள் பல செயலிழந்த நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது. Google Wave இன் Settings பற்றிய பக்கம் சொல்லும் தகவல் சுவாரஸ்யமானது.

tamil_wave2

கூகிளின் இந்தப் புதிய தொடர்பாடல் சேவை, அதன் Gmail போல், பாரியளவில் பிரசித்தம் கண்டு, பிரபல்யமாக யாவரும் விரும்பும் சேவையாக மலரப்போவதென்னமோ உண்மைதான். Gmail ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் Drafts என்ற நிலையில் மின்னஞ்சல்களை சேமிக்க முடியாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்போது, Gmail தான் எல்லாமே என்றாகிவிட்டது.

முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். (அதுக்குள்ள ஒரு தத்துவமா?)

அழைப்புக் கிடைத்து வெறும் ஒரு நாளுக்குள்ளே இவ்வளவு அனுபவங்கள் நினைவுகளுக்கு சுவை சேர்க்கின்றன. இன்னும் பல அனுபவங்கள் இனிவரும் நாட்களை வசந்தமாக்கும் என நம்பலாம்.

Google Wave பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அழைப்புக் கிடைத்துவிட்டதா? என்பதை சொல்லி அனுப்புங்கள். என்னோடு அலையடிக்க zeezat[at]googlewave.com என்ற முகவரிக்கு இணைப்பை ஏற்படுத்துங்கள். அலையடிக்கும் ஆவலோடு நான்.

– உதய தாரகை

Google Wave தொடர்பான விபரங்கள் அடங்கிய இணைப்புகள்

 1. அறிமுக நிகழ்வின் முன்னோட்ட காணொளி. ரொம்ப நீ…ளமானது.
 2. Lifehacker தளத்தின் Google Wave பற்றிய விபரமான பதிவுகள்
  1. முன்னோட்டப் பதிவு
  2. துப்புகள் சொல்லித் தரும் பதிவு

12 thoughts on “Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்

 1. உங்கள் பதிவிற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன் என் பதிவிலும். உங்களுக்கு அழைப்பு அழைத்த நாளில் இருந்து எத்தனை நாட்களில் வந்து சேர்ந்தது??

  • வாங்க மயூரேசன். எனது பதிவின் தொடுப்பினை தங்கள் பதிவில் இணைத்தற்கு நன்றிகள்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. தயவு செய்து யாராவது எனக்கு ஒரு அலை அழைப்பிதல் ஒன்றை அனுப்ப முடியுமா..

  ரொம்ப நாட்களாக் காத்து இருக்கிரேன் ஒரு பலனும் இல்லை 😦

 3. ஆர்வம் தூண்டும் தகவல்கள் பதித்தமைக்கு நன்றி.

  நாம் ஆக்கும் public அலை ஏதாவது நமக்கே ஒரு சுனாமி ஆக மாறக்கூடுமோ ? தாங்கள் காட்டியதில் எங்கோ இருந்த ஐரிஷ்காரர் தங்களது public அலைக்கு தொடர்பு கொண்டது போல பல்லாயிரக் கணக்கானோர் உடனடியாக பதிலடித்தால் அலை சுனாமி போல ஆகிவிடுமல்லவா.

  ~சேது

 4. நானும் Register பண்ணிவிட்டு காத்துக்கிடக்கிறேன். இன்னும் அழைப்பு வருவதாக இல்லை. அவசரமாக ஒரு அழைப்பைப் பெறுவதற்கு என்ன வழி?

 5. இன்று காலை ஆனந்தமாக விடிந்த்து. எனக்கு அழைப்பிதள் வந்து கிடைத்துவிட்டது. அடியேனும் இப்போது கூகிள் வேவில் பேய்த்தனமாக உலாவுகின்றேன்.

 6. @கோகுல்,

  காத்திருத்தலின் வலியை, காத்திருந்தது கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மறக்கச் செய்துவிடும் என்பது அனுபவமான உண்மை.

  நானும் பத்து நாட்கள் காத்திருந்ததன் பின்னர் தான் அழைப்பைப் பெற்றுக் கொண்டேன்.

  நிறத்திற்கு வருகை தந்ததற்கு நன்றிகள். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 7. @கா. சேது,

  உண்மையிலேயே, அலை என்பதற்குப் பதிலாக Google Wave இல் Public நிலையில் காணப்படும் wave ஒன்றுக்கு சுனாமியென்று பெயர் சூட்டியிருந்ததை என்னால் நேற்று அவதானிக்க முடிந்தது.

  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா..

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 8. @Ramzy.

  காத்திருப்பின் சுகத்தை அனுபவிக்க கூகிள் அழகிய களமொன்றை அமைத்துத் தந்துள்ளது என எண்ணி ஆனந்தம் கொள்ளலாம்.

  காத்திருத்தல் அழகானது.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s