அழியும் உலகமும் அழியாத ஆசைகளும்

அற்புதமாக வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் ‘வர்த்தகர்களை’ நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்க்கை அந்தளவுக்கு சொல்லிக் கொடுத்துப் புரியக்கூடிய விடயமா? அப்படியானால், வாழும் முறைகளைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அனைவருக்கும் அற்புதமான வாழ்க்கைதான் கிடைத்து விடுமா? கேள்விகள் பல எனக்குள் நேற்று எழுந்தது.

வாழ்க்கையை அற்புதமாக பலரும் காண்பது அவர்களின் சமூக கலாசாரச் சூழலுக்கமைய வேறுபடும். வெறும் கோதுமைக் களியை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, உலகின் மொத்த சந்தோசத்தையும் தன் மனம், மனை என எல்லாவற்றிலும் கொண்டிருக்கும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன்.

அவர்களின் முகங்கள் கூட, சந்தோசத்தை மற்றவருக்கு தொற்றச் செய்யும் காவிகளாக நான் பார்த்திருக்கிறேன்.

அற்புதமான வாழ்க்கை என்பதற்கு யாரும் தேசங்கடந்த வரைபிலக்கணம் சொல்லிவிட முடியாது. ஒருவர் குறிப்பிடும் ‘அற்புதமான வாழ்க்கை’ பற்றிய குறிப்புகள் இன்னொருவருக்கு ‘கொடுமையான வாழ்க்கைக்கான’ குறிப்புகளாக இருந்துவிடக்கூடும்.

வாழ்க்கை பற்றிய அறிவு நிலையில் பன்மைத்துவம் காணப்படும். ஆனாலும், பல நிலைகளில் அனைவர் தொடர்பிலும் ஒருமித்த புரிந்துணர்வு காணப்படுகின்றதென்னவோ உண்மைதான்.

நான் ஏற்கனவே, வாழ்க்கை தொடர்பில் சில விடயங்களை நூல்கள், விபரணப்படங்கள், வரலாறுகள் போன்றவற்றின் மூலம் அறிந்திருந்தாலும், வாழ்க்கை பற்றி சீரியஸாகவே எண்ண வேண்டிய கட்டாயம் சிலவேளைகளில் நிர்ப்பந்தமாகவே ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

கட்டாயம் ஏற்படும் போது, தேவையானது எது என்பதைக் கண்டறிவதில் இருக்கும் ஆர்வத்தின் அளவு, கொஞ்சம் அசாதாரணமானதுதான். “பசித்திரு. முட்டாளாயிரு” என்று சொல்லியதும் அதற்குத்தான்.

“Call எடுத்துக் கதைக்கக்கூட டைம் இல்ல.. அவ்வளவுக்கு பிஸியாக இருக்கேன்.. பிறகு உங்களுக்கு Call பண்றன்..” என்று தொலைபேசி அழைப்பை துண்டிக்கிறான் அவன்.

“என்னடா இது!? என்னதான் நடக்குது என்டே புரியுதில்ல.. வேலை.. வேலை..” என்று அலுத்துக் கொள்கிறான் இன்னொருவன்.

அழகிய வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயமிருந்தும், கட்டாயத்தை உதாஷீனம் செய்யுமளவில் மனிதனை அவன் சார்ந்த சமூகம் நடத்திக் கொண்டிருக்கிறது கொடுமையானதே!

இந்தக் கொடுமை பற்றி எண்ணிய போதெல்லாம், எனக்குள் அலையாய் எழுந்த கருத்துகளில் முதன்மையானது நேரம் பற்றியது தான். கிடைத்த வாழ்க்கையில் பெறப்பட்டுள்ள மதிப்பு, நேரங்கள் மாத்திரம் தான்.

நேரப்பாவனை தான், நேரத்திற்கே பெறுமதி சேர்ப்பது. “நேரம் யாருக்காகவும் காத்திருக்காது. அது பறந்து சென்று விடும்” என்று முன்னோர்கள் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிச் சொல்லாவிட்டாலும், கூட நேரம் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்பதும் உண்மைதான்.

தோமஸ் கார்லில், “உலகத்தைப் பற்றி எண்ணுபவர்களுக்கு, அது அறிவியல்களின் அறிவியல். இன்னுமொரு அதிசயம். மாயா ஜாலம்” என்கிறார் அமைதியாகவே. வாழ்க்கையும் உலகின் பாலுள்ள இன்னொரு அதிசயம் தான்.

அதிசயங்களைக் கொண்ட மனிதனுக்கு, அதிசயம் சேர்க்கும் வாழ்க்கை வாய்த்திருக்கிறது.

வாழ்க்கையில் அதிசயங்கள் தோன்ற என்ன செய்யலாம் என்று தலைப்பிட்டு, அதற்காக செய்யக்கூடிய, செய்ய வேண்டிய விடயங்களை பட்டியலிட எனக்கு ஆர்வமில்லை. பட்டியல்களை வாசிப்பதற்கு எல்லோரும் ஆர்வம் காட்டினாலும், வாசிக்கும் போது, மட்டுந்தான் அவை உயிர்ப்பு பெறுகிறது.

பின்னர் பட்டியலிட்டவனுக்கும் அது பயனளிப்பதில்லை. வாசித்தவனுக்கும் பெறுமதி சேர்ப்பதில்லை. அது அப்படியாக இருக்கவே கூடாது.

“வாழ்க்கையில் தேவையானவை யாவும் இலவசமாகவே கிடைக்கும்” என்பார்கள் [என்ன கதையிது?]. நீங்கள் இந்தக்கூற்று பொய்யென நினைத்தால் அது தவறானது. இலவசமாகக் கிடைக்கும் விடயங்களை உதாஷீனம் செய்வதை பொழுது போக்காகக் கொண்டுவிட்டதால் எமக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது.

அமைதியான நதியோரக் சூரியோதயக் காட்சியைக் காண யாருக்கும் யாரும் காசு கொடுக்கத் தேவையில்லை. மழைநாளில் போர்வையைப் போத்திக் கொண்டு தூங்குவதற்கு நீங்கள் பிரதேச சபைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

இப்படி மனதை இதமாக்கும் பல விடயங்கள் பல இலவசமாகக் கிடைத்தும் அதனைக் கண்டு கொண்டு அனுபவிக்காமல் வாழ்க்கையில் ஒருபிடிப்பில்லை என்று முறைப்படுவது நியாயமில்லை தான். “If you don’t light any candles, don’t complain about the dark” என்று சொல்வார்கள். முறைப்பாடு என்பது இருப்பதை பாவிக்காதவன் செய்வதல்ல. இல்லாதவொன்றை கேட்பவன் செய்வது.

உலகம் அழிகிறதாமே!!?

“இன்றைக்கு 2012 பார்க்க போகலாமா?” – தொலைபேசியில் நண்பன் என்னை அழைத்தான். 2012 திரைப்படம் பற்றிய அறிவிப்புகள், செய்திகள் என்பன அதனைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்பதாய் எனக்குள் சொல்லியது.

“போகலாமே!” என்று அவனுக்கு பதில் சொன்னேன்.

மாயன் நாட்காட்டியின் படி, 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை உலகம் அழியப்போவதாகச் சொல்லப்படுகிறதாம். ஆனால், 13ஆவது பாக்டன் மட்டுமே அத்திகதியில் முடிவதாகவும் தொடர்ந்து இருபது பாக்டன் வரையான காலம் தொடரும் எனவும் விக்கிபீடியா தகவல் சொல்கிறது.

இந்த நாட்காட்டியின் வழியான தகவலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், பூமியின் சீதோஷண நிலை மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகள் என எல்லாவற்றையும் மையப்படுத்தி 2012 திரைப்படம் படைக்கப்பட்டிருக்கிறது.

“ஏழு இருபதுக்கு ஹவுஸ் புல்லாம்.. எட்டு மணிக்குத்தான் டிக்கட் இருக்கிறதாம்” – டிக்கட் வாங்கச் சென்ற நண்பன் தகவல் சொன்னான்.

“ம்.. ” என்று சம்மதத்தை தலையாட்டலில் அவனுக்குச் சொன்னேன்.

உலகில் பல இடங்களிலும், 2012 திரைப்படம் இரவு நேரங்களில் எட்டு மணி 12 நிமிடத்திற்கே திரையிடப்படுகிறதாம். நாங்கள் சென்ற காட்சியும் அந்த நேரத்திற்குத்தான் தொடங்கியது. எட்டு மணியிலிருந்து 12 நிமிடங்கள் அதிரடியான விளம்பரங்கள் சுவாரஸ்யம் தந்தது.

பிற்பகல் 8 மணி 12 நிமிடத்தை இருபத்து நான்கு மணிநேரமாக மாற்றினால், 2012 என்று வரும் அதனாலேயே இந்த நேரத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறதாம்! [ஆச்சரியமாயிருக்கில்ல..?]

உலகின் மனிதர்களில் காணப்படும் பல பண்புகளையும் குணங்களையும் 2012 படம்பிடித்துக் காட்ட மறக்கவில்லை.

“உலகம் அழியப் போகிறது, நானும் குடும்பத்தோடு பாதுகாப்பான இடம் நோக்கிப் போகிறேன். தங்கள் வாகனத்தை தந்தருளுங்கள்” என்று தலய்லாமாவின் சீடனொருவன் கேட்கிறான்.

“ஆட்கள் சொல்வதையெல்லாம் நம்பாதே!” என்று தலய்லாமாவாக வரும் பாத்திரம் திரையில் கூற, சீடன் அதனை மறுத்து பேசுகிறான்.

ஒரு கோப்பையில், தேநீரை வழிய வழிய ஊற்றுகிறார் தலய்லாமா. சீடன் தேநீர் வழிவதாகச் சொல்கிறான்.

“நீ பல எண்ணங்கள், யோசனைகள் போன்றவற்றால் நிரம்பியிருக்கிறாய். நான் சொல்வது ஏதும் விளங்காது. நீ வெற்றுக் கோப்பை போன்று உன் மனத்தை வைத்திருந்தாலே புதிய எண்ணங்களை உள்வாங்க முடியும்” என்று சீடனுக்கு விளக்கம் சொல்கிறார் தலய்லாமா.

வாழ்க்கை பற்றிச் சொன்ன இந்த இடம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. வெற்று கோப்பை போன்று மனத்தை வைத்திருக்கும் போது, உலக ஆசைகள் பற்றிய எண்ணங்கள் எதுவுமே எம்மிடமிருக்காது. நடப்பவைகள் எல்லாம் நன்மைக்காகவே என்று ஏற்கும் பக்குவம் வரும்.

மனிதாபிமானமுள்ள அரசியல் வாதி, மகனை வெறுத்த அப்பா, மனிதம் பற்றிச் சிந்திக்கும் விஞ்ஞானி, பதவி ஆசை கொண்ட அதிகாரி, மக்கள் பைத்தியகாரனாகப் பார்க்கும் உண்மையான அறிவாளி, பணம்தான் எல்லாம் என்ற நிலையிலுள்ள செல்வந்தன், சோபிக்க முடியாமல் தோற்றுப் போன எழுத்தாளர் என பாத்திரங்கள் 2012 இல் விரிந்து செல்கிறது.

உலகம் அழிவைச் சொல்லும் படம், என்பதுதான் 2012 பற்றி கதைப்பவர்கள் கூறும் ஒருவரி விமர்சனம். உலகம் எப்படி அழியுமென எண்ணியுள்ள கற்பனைக்கு சபாஷ்! கணினி மெய்நிகராக்கம் (Computer Virtualization) பிரமாண்டமான திரையில் வினாசம் தோன்றுவதை செதுக்கியிருக்கிறது.

2012 இன் சின்னதொரு காட்சியமைப்பானது எவ்வாறு கணினி மூலம் உருவாக்கப்படுகிறது என்பதை இங்கே விபரமாக விளக்கியிருக்கிறார்கள்.

2012 இன் கதையோ, அதுபற்றிய எல்லோரும் சொல்வது போன்ற விமர்சனத்தையோ எழுதிவிட எனக்கு ஆர்வமில்லை. ஆனால், திரையில் விரிந்த வாழ்க்கை பற்றிய பாடங்கள் பற்றி பதிய வேண்டுமென்ற ஆர்வமே இப்பதிவின் மூலமாகக்கூட இருக்கலாம்.

மலர்வனத்தில் காட்டுத் தீ

சினிமாத்தனங்கள் இல்லாத ஒரு திரைப்படமாக 2012 ஐ பார்க்க முடியாது. ஆனால், திரையில் விரிந்த அத்துணை சினிமாத்தனங்களும் சொல்லிய மனிதம் பற்றிய பாடங்கள், நம்பிக்கைகள் என்பவை என்னை வியப்பில் ஆழ்த்தின.

அழிவு வரப்போகிறதென தெரிந்தவுடன் மட்டுமே தாம் பகைத்துள்ள உறவுகளுடன் உறவு பாராட்ட முனையும் எத்தனையோ மனிதர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த நிலை சரியானது தானா என 2012 கேள்வி எழுப்புகிறது?

வெறும் பணத்திற்காகவே வாழ்க்கை வாழப்பட வேண்டுமா? என்று 2012 அதட்டிக் கேட்கிறது.

ஒருவனின் தோற்றம், ஒருபோதும் அவன் பற்றிய மொத்த உண்மையையும் சொல்லிவிடுமா? என்ற சந்தேகத்திற்கு விடை தர 2012 முயன்றிருக்கிறது.

தந்தை மகன் மீதும் மகன் தந்தை மீது கொண்டுள்ள மரியாதை, பாசம், அன்பு என்பனவற்றை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட பாத்திரங்கள் மூலமாக உணர்ச்சி ததும்ப வெளிக்காட்டி இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

தந்தை – மகன் பாசப் பிணைப்பு பற்றி நான், ஏற்கனவே அது என்ன குறும்படம்? என்ற பதிவில் அதிகமாகவே சொல்லியிருக்கிறேன். உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கும் கட்டங்கள் அவை.

திரையில் தோன்றிய வினாசங்கள் எல்லாமே வியப்பைத் தந்து கொண்டேயிருந்தது. திரையரங்கெங்கும் கிலி கொண்ட மயான அமைதி நிலவியதை என்னால் புரிய முடிந்தது.

சாதாரணமாக ஆங்கில திரைப்படங்கள் ஒன்றரை மணித்தியாலங்கள் வரையே நீளும் என்ற எண்ணத்தை 2012 தகர்த்தெறிந்தது. திரையரங்குக்கு வெளியே வந்து கையடக்கத் தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது பதினொரு மணியாகியிருந்தது.

“மூன்று மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியாது. ஒன்றரை மணித்தியாலம் போலத்தான் இருந்தது” என நண்பன் சொல்லி வியந்து கொண்டான்.

விறுவிறுப்பாகச் செல்லும் வினாசகாரமான திரைப்படங்களை இயக்கும் ரோலன்ட் எமரிச், “2012 ஏ அழிவு பற்றி எடுக்கும் எனது இறுதித் திரைப்படம்” என்று அண்மையில் USA Today இற்கு பேட்டியளித்திருக்கிறார்.

உலகம் என்னதான் அழிந்தாலும், எனது ஆசைகளை யாரும் அழிக்க முடியாது. எங்கு சென்றேனும் நான் எனது சேர்த்து வைத்த சொத்துகளோடு வாழ்க்கை நடத்துவேன் என்று கத்திக் கொண்டு காரியம் செய்யும் யூரி என்ற பாத்திரம் சொல்லும் பாடம் கொஞ்ச நஞ்சமல்ல.

நாம் பல யூரிகளை நாளாந்தம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சிலவேளைகளில் நாமே யூரியின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

அதிசயமான வாழ்க்கைக்கு ஆசைத்தீயை மூட்டிவிடுவதால், பூக்கள் பூக்கவேண்டிய மலர்ச்சோலைகளில் இப்போதெல்லாம், காட்டுத்தீ பரவுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.

அற்புதமான வாழ்க்கை என்பதெல்லாம் யாரும் சொல்லித்தருவதால் வாய்த்துவிடாது. நாமே நமக்காக திட்டமிடுவதால் வாய்க்கப்பட வேண்டியது.

“வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி என்று நீ கண்டறிந்தால், எனக்கு சொல்லியனுப்பு, நான் அதை நிச்சயம் நம்பமாட்டேன்.” என்று அண்மையில் நூலொன்றில் வாசித்தேன். “முன்மாதிரி, படிப்பினை என எல்லாமே கடந்த காலத்தை செதுக்குவதற்கல்ல, ஒதுக்குவதற்காகத்தான்.” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

4 thoughts on “அழியும் உலகமும் அழியாத ஆசைகளும்

  1. நேற்றிரவுதான் பார்க்கக் கிடைத்தது.

    “மனிதாபிமானமுள்ள அரசியல் வாதி, மகனை வெறுத்த அப்பா, மனிதம் பற்றிச் சிந்திக்கும் விஞ்ஞானி, பதவி ஆசை கொண்ட அதிகாரி, மக்கள் பைத்தியகாரனாகப் பார்க்கும் உண்மையான அறிவாளி, பணம்தான் எல்லாம் என்ற நிலையிலுள்ள செல்வந்தன், சோபிக்க முடியாமல் தோற்றுப் போன எழுத்தாளர், etc…”

    இவ்வாறுதான் என்னாலும் படத்தை உணர முடிந்தது. அன்பு, மனிதநேயம் என்பவற்றை உணர்த்தும் படமொன்றாகவே இதனைப் பார்க்க முடியும். மாயன் கலண்டரின் பின்னனியை காட்சிப்படுத்துகிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில காட்சிகளும் வசனங்களும் மனதை நெருடுகின்றன.

    உங்களின் இக்கட்டுரையை வாசித்த பின்னரே படத்தை பார்த்தேன். மிகவும் உதவியாக இருந்தது. நன்றி.
    காஞ்சிவரம் படம் பாத்தீங்களா???

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s