ஐந்து பேரும் ஒளவையாரும்

திட்டமிட்டுச் செய்யும் செயற்பாடுகள் யாவும் திட்டமிடப்பட்டது போலவே நடந்தேறுவது அரிதான விடயம் தான். திட்டமிடப்படாமலே வாழ்க்கைக்குச் சேரும் சம்பவங்கள், அனுபவங்கள் எல்லாம் விட்டுச் செல்லும் தடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை யாவும் ரசிக்கப்பட வேண்டியவை. பலவேளைகளில் அவையே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன.

“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்ற பாடல் வரி கூட, திட்டமிடலில் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத நிலையைச் சொல்லி நிற்கிறது.

நான்கு பருவகாலங்கள் மாறி மாறி வருவதை சில நாடுகளில் மட்டும் தான் உன்னதமாக அவதானிக்க முடியும். என்னதான் “வானிலை அவதான நிலையங்கள்” அனுமானித்து காலநிலை எதிர்வுகூறப்பட்டாலும், கூறப்பட்ட எல்லாமே பொய்யான பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அது வானிலை அவதான நிலையத்தின் பிழையல்ல. அது சுற்றாடலின் நிலை.

“இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் வீடு சென்றடையலாம்” என்று தொடங்கிய ஒரு வாகனப் பயணம் ஈற்றில் அந்த நேரத்திற்குள் வீட்டைச் சென்றடைந்ததா? என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவு (படம்). இதில் “சரோஜா” திரைப்படத்தில் வருவது போன்ற திகில் காட்சிகள் எல்லாம் வரக்கூடும். உஷார்.

வாகனத்தில் பயணம் செய்வதென்றாலே ஒரே ஆனந்தம் தான். அதுவும் குளிர்காலத்தில் வாகனத்திற்குள் வெப்பமேற்றி பயணம் செய்யும் நிலை ஆனந்தமயமானது தான்.

அவர்கள் ஐந்து பேர் – நண்பர்கள், குளிர்காலத்தின் குளிர்ச்சுவாலைகளின் தகிப்பை தாங்க முடியாத நிலையை தங்கள் அங்க அசைவுகளால் மட்டுமே ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிய படி, பயணத்தை தொடங்குகின்றனர். ரொம்பவும் ‘நீளமான’ தூரப்பயணம் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், அவர்களுக்கு கூதல் கொடுத்த தகிப்பு எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்திருந்தது.

வாகனம் என்றவுடன், அது என்ன வாகனம் என்று கூட சொல்லியே ஆக வேண்டும். கார் – சீருந்து என்று தமிழில் அழகாகச் சொல்வார்கள்.

பயணம் செய்கையில், பாடல்களைக் கேட்டுக் கொண்டு போவது எல்லோருக்கும் பிடித்த விடயமென்பதால், அனைவரும் விரும்புவார்கள் என எண்ணி முன் ஆசனத்திலிருந்தவன் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தான். “75 வருட கால தமிழ் சினிமா வரலாற்றில் எனக்கு வெறும் நான்கு பாடல்கள் மட்டுந்தான் பிடிக்கும்” என்றான் மற்றவன்.

“அட… ♥♠இன்னொரு பாட்டை நீங்கள் விரும்ப இன்னும் 25 வருடம் போகனும் போல..” என்று சீரியஸாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தான் இன்னொருவன்.

ஒலிபரப்பாகும் பாடல்களை பெருஞ்சத்தத்துடன் கேட்க வேண்டுமென இன்னொருவன் வேண்டி நின்றான். அதனை மற்றொருவன் செய்தும் விடுகிறான். “தாரை தப்பட்டை எல்லாம் கிளம்பட்டும்.. ஆடி வா.. பாடி வா..” என்று ஒருவன் வடிவேலு புலிகேசி டயலொக் வேறு சொல்லி பெருஞ்சத்தத்திற்கு சுதி சேர்த்தான் மற்றவன்.

பயணம் தொடர்கிறது. வாகனத்தை ஓட்டியவன் வாகனத்தில் பிழை போல் இருக்கிறது என்று அந்தச் சத்தத்திற்குள்ளேயே சொன்னான்.

“எந்த வாகனத்தில்?” என்று வீதியை பார்த்தவாறே முழித்தான் மற்றவன்.

“நம்ம கார் தான்” என்றான் காரை ஓட்டியவன் வியப்பாக.

கார் என்ற சீருந்து பாதையோரமாக நிறுத்தப்படுகிறது. சீருந்தை சீர் செய்வதற்காக சீர் செய்யக்கூடிய அமைப்பிற்கு அழைப்பெடுக்கப்படுகிறது. இடைவேளை.

இது என்ன படம்? என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொருத்தருள வேண்டும்.

“17:20 இற்கு நாங்கள் உங்கள் வாகனத்தை திருத்தியமைக்க உங்கள் இடத்திற்கு வருகிறோம்” என்ற குறுஞ்செய்தி அழைப்புடன் மீண்டும் காட்சி தொடங்குகிறது.

வைத்த கண் வாங்காமல், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குறித்த நேரமும் வந்துவிட்டது. வாகனம் திருத்த வருகிறோம் என்றவர்களை காணவேயில்லை. அதோ வருகிறது.. இதோ வருகிறது.. என பாதையால் செல்லும் வாகனங்களை காட்டிக் காட்டி மாறி மாறி அலப்பறை செய்து கொண்டிருந்தார்கள் ஐவரும்.

நாழிகைகள் நகர்ந்து கொண்டேயிருந்தன. நிமிடங்கள் மணித்தியாலங்களாக மாற ஓடிக் கொண்டிருந்தன.

ஒருவனின் நினைவு, “அட.. என்ன கொடுமையிது..? பேசாம காரைப் போட்டுப் போட்டு நடந்து போயிடலாம்” என்றவாறு இருக்கிறது. பின்னர் பயணிக்க வேண்டிய தூரத்தை எண்ணி, அவன் நினைவிலேயே தடுக்கி விழுந்து விடுகிறான்.

“கனவா.. இல்லை காற்றா…” என்று பாடலொன்றை பிளாஷ் பெக்கில் எடுத்துக் கொண்டு நிலை குழைகின்றான் மற்றவன்.

அடுத்தவன், “சுட்டும் விழிச்சுடரே.. சுட்டும் விழிச்சுடரே..” என்ற டூயட் பாடலுக்கு, ஒரு துணையை எண்ணி கனவில் மிதக்கிறான்.

ஐவரும் ஒருவராய், வாழ்நாள் முழுக்க தாங்கள் தெரிந்து கொண்ட நகைச்சுவையெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள். குளிர்ச்சுவாலையின் கோரமான நிலைகள் கூட, நகைச்சுவைக்கான சிரிப்புகளுக்குள் காணாமல் போய்விடுகிறது.

ஒரு மணிநேரம், நகைச்சுவைக் கதம்பம்.

இந்த இடத்தில், இதுவரை காலமும் தமிழில் காமடி பண்ணிக் கொண்டிருக்கிற அனைவரும் கெளரவ பாத்திரத்தில் தோன்றி தங்களின் சில பிட்டுகளை செய்து விட்டுக் கிளம்புகிறார்கள்.

ஆனாலும், ஒவ்வொரு கணமும் வெறும் குளிர்காலத்தில் வெளியே நிற்பது பொருத்தமானதல்ல என்ற நிலையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று ஒருவன் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

சீரியஸாகவே சிரித்துக் கொண்டிருந்த அந்தக்குழுவை நோக்கி, அடுத்த நிமிடம் அதிர்ச்சி காத்திருக்குமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாரும் எண்ணியிருக்கவும் மாட்டார்கள்.

பயணம் தொடங்கி நான்கு மணித்தியாலங்கள் கழிந்துவிட்டிருந்தன.

வாழ்க்கையில் அதிர்ச்சியான விடயங்கள் தான் சில வேளைகளில் மருந்துகளாக வந்துவிடுவதுண்டு. கசப்பாக இருந்தாலும், மருந்து அருந்தப்படும் போதே வருத்தங்கள் குணமடையும் என்பது வெளிப்படையான உண்மையே.

அவர்கள் நின்று கொண்டிருந்த பாதை மூடப்படுகிறது. உண்மையாகவே மூடப்படுகிறது. ஐந்து பேருக்கும் பாதையின் ஓரமாய் நின்று கொண்டிருப்பதன் அபாயம் சொல்லி விளங்கப்படுத்தப்படுகிறது. அவர்கள் யாவரும் பாதுகாப்பான இடம்நோக்கி கொண்டு செல்லப்படுகின்றனர். மூடப்பட்ட பாதை மீ்ண்டும் திறக்கப்படுகிறது. இத்தனை விடயமும் மாயாஜாலமாய் நடந்து முடிகிறது.

பாதையோரமாக நிற்பதன் அபாயம் என்ன? எவர் இவர்களை காப்பாற்றுகிறார்கள்? காப்பாற்றப்படும் அதிர்ச்சி வைத்தியத்தில் ஒருவன் கிலி கொள்கிறானா? காரைத் திருத்தி தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் வந்தார்களா? இவர்கள் ஐவரும் வீடு போய்ச் சேர்ந்தார்களா? என்பதெல்லாம் சஷ்பென்ஸ். கிளைமெக்ஸ்.

THE END என்ற தலைப்புடன் படம் முடிகிறது என கதையைச் சொல்லி முடித்தான் கோபாலு. இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபல இயக்குனர், “கொஞ்சம் அதிகமாகவே செலவாகும்.. பரவாயில்லையா?” என தயாரிப்பாளரை நோக்கிக் கேட்டான்.

தயாரிப்பாளரும் இயக்குனரை முழுமையாகவே நம்பி, “பரவாயில்லை” என்று சம்மதம் சொன்னான். இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அவ்வீட்டு வேலைக்காரன், “இவங்க மொக்கை போடுற எல்லாத்தையுமா படமா எடுக்கிறாய்ங்க…” என்று தனக்குள்ளேயே எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

அப்போது தான் அந்த இயக்குனர் ஒரு விடயத்தை தெரியாமலேயே பிழை என்று சொன்ன விடயம் அவன் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

ஒரு நாள், ஒளவையாரின் ஆத்திசூடியில் வரும் ‘ங’ போல் வளை என்ற நச்சென்ற வசனத்தை அவன் அந்த இயக்குனரிடம் சொல்லியிருக்கிறான். அதற்குப் பொருள் நாக்கைப் போல் வளைந்து கொடுக்க வேண்டும் என்பதாம் என்று இயக்குனர் அதிகபிரசங்கித் தனமாய் பதில் கொடுத்திருக்கிறான். அப்படியில்லை. அதன் அர்த்தம் வேறு என்று வேலைக்காரன் கூறியிருக்கிறான்.

“ங்” மற்றும் “ங” என்ற எழுத்துக்களைத் தவிர வேறு எந்த எழுத்தும் அந்த வரிசையில் பயன்பாட்டில் இல்லை. ஆனாலும், அந்த வரிசையிலுள்ள எழுத்துக்களை அது அணைத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் “ங” போல் வளை என்று சொல்வார்கள் என தன்பக்க நியாயத்தை வேலைக்காரன் சொல்லியிருக்கிறான்.

அதனை இயக்குனர் பிழை என்று சொல்லியிருக்கிறான். “சரியையே பிழையென்ற நீயா படம் எடுக்கப்போகிறாய்?” என்று வேலைக்காரன் நினைத்துக் கொள்கிறான். சிரித்தும் கொள்கிறான்.

குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் தனியொருவனாக தாங்கிப் பிடிப்பதை குறிப்பதாய் ஒளவையாரின் அந்த பன்ஞ் டயலொக் அமைந்துள்ளது. ஆங்கிலக்காரன், தனித்தொருவனாய் குடும்பத்தை காப்பவனுக்கு, Breadwinner என்று சொல்வான். அர்த்தம் சேர்க்கும் சொல்தான் அது!!

“எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்யோனும்” என்று வடிவேலு ஒரு தடைவை திரைப்படத்தில் கூறியதை நாம் சீரியஸாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது. திட்டமிடல்களில் வழுக்கள் ஏற்பட்டாலும், அவை தரும் அனுபவங்கள் ரசிக்கப்பட வேண்டியவையே என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

(இவை யாவும் கற்பனையல்ல)

– உதய தாரகை

4 thoughts on “ஐந்து பேரும் ஒளவையாரும்

  • @தெருவிளக்கு,

   முக்கால் வாசி விளங்கவில்லைதானே!? ஆமா, சும்மா சொல்லக்கூடாது.. பதிவில் வரும் வேலைக்காரனின் விவேகம் உங்களுக்கு!!

   மொக்கையான மேட்டர்களையே வைத்துக் கொண்டு, நிறைய விடயங்கள் சீரியஸாகவே நடைபெறுவதைச் சொல்ல முனைந்த இன்னொரு மொக்கை முயற்சி என இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், இப்பதிவு சொல்ல வந்த விடயங்கள் பலதுள்ளன. வாழ்க்கையை ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனச் சொல்வது அதிலொன்று மட்டுந்தான்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • @நிமல் – NiMaL

   வாங்க நிமல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s