மழைபெய்யும் நள்ளிரவில் நான்

இப்போதெல்லாம் மாறி மாறி பருவ காலங்கள் வருவதெல்லாம் என்னால் அதிகமாகவே உணரக்கூடியதாக இருக்கிறது. ஒரு வருடத்தில் பருவங்கள் நான்கு முறை மாறும் அழகு அனுபவிக்கப்பட வேண்டியது. இப்போது நள்ளிரவாகிறது, மெல்லிய தூறலாய் மழை பொழிகிறது.

கடந்த வருடம், மாலை நேரமொன்றில் திடீரென யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பனி பொழிந்த சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டபோதிலும், இயற்கையின் மனதை அப்படியே வாசித்துவிட முடிவதில்லை. பெண்களின் மனதை புரிந்து கொள்ளவே முடியாது என்று சொல்வார்கள். அதனாலோ என்னவோ, பூமியையும் பூமாதேவி என்கிறார்கள்.

கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் மற்றும் வசந்த காலம் என்பன மாறி மாறி தொடர்ச்சியாக வந்து போகும் அழகைக் கண்டு வியந்தேன். ஒவ்வொரு வருடமும் இந்த மாற்றம் நிகழ்ந்த போதும், அவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறாக அமைந்திருப்பது இன்னொரு வியப்பே!

இப்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. எனது ஆத்மாவிற்குள் மழையையும் பனியையும் கொண்டுவரச் செய்வதுதான் குளிர் காலம், ஆனாலும், எனது கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் வெளிச்சம் தர வரும் அவகாசம் சூரியனுக்கும் இருக்கிறது.

மழையையும் பனியையும் என்னால் இப்போது காதலிக்க முடிகிறது. பனியையே எனது போர்வையாக்கிக் கொண்ட ஞாபகங்கள் எனக்கிருக்கிறது. பனியில் எதுவுமே அறியாத பிள்ளை போல, ஆனந்தமாய் நடந்திருக்கிறேன். பனியில் நடந்து கொண்டு என்னை நானே படமெடுத்திருக்கிறேன். பனி விழும் அதிசயம் வர்ணிக்க முடியாது.

ஆனால், நள்ளிரவில் விழும் பனிக்கு, முகவரி கொடுப்பதென்னவோ, காலை நேரத்து யன்னல் கண்ணாடிகள் தான். கண்ணாடிகளின் வழியாக என் கமராவின் கண்களுக்கு குளிர்ச்சியும் கொடுத்திருக்கிறேன். அது ரசிக்கப்பட வேண்டியது தான்.

கடந்த காலம் கடந்த காலம் தான். நாம் செய்த விடயங்கள், செய்யப்பட்டதாகவே இருக்கும். இந்தக்கிழமை நிறத்தில் எழுத பல விடயங்கள் என்னிடமிருந்தாலும், நினைப்பதெல்லாம் சொல்லி நிம்மதியிழக்க நான் தயாராக இருக்கவில்லை. தனிமை, வெறுமை, இழப்பு, துக்கம், பிரிவு போன்ற சொற்களுக்குக் கூட தமிழில் அதிக பாரமிருக்கிறது எனக்குப் புரிகிறது.

மழை பெய்யும் என்று நம்பியிருப்பது ஒரு வகை. இன்று மழை பெய்ய முடியாது என்று நம்புவது இன்னொரு வகை. இரண்டாம் வகையில் என்னை இருத்திக் கொள்ள ஆர்வமில்லை. மழை பெய்யுமென நம்புவதால், என்னால் என்னுடல் முழுக்க மழையில் நனைவதாய் உணர முடிகிறது. உணர்ச்சிகளுக்குக் கூட, இப்போது வரி விதிக்கிறார்கள் போலும்.

இந்த இரவில் மழை பெய்தாலும், பனிவிழும் இரவுகள் கொண்டு தரும் அனுபவங்கள் உணரப்பட வேண்டியவை. பனியின் வெளிச்சம், நம்பிக்கைகளையும் நிறங்களையும் எனக்குக் கொண்டு தந்திருக்கிறது. என்னை புதிய உதய தாரகையாக காண வழி செய்திருக்கிறது. அதை என்னால், இப்போதும் சுவைத்துக் கொள்ள முடிகிறது.

“குளிர்காலமென்பதால் என்னால தாங்க முடியல.. நடுங்கிக் கொண்டிருக்கிறேன்” என்கிறேன்.

“பழகினால், எல்லாம் ஜு ஜு பி” என்று கோடை காலம், அதை விடக் கடுமையான கோடை காலம், அதை விடக் கடுமையான கோடை காலம் என்ற மூன்று பருவ காலங்களைக் கொண்ட சூழலில் வாழும் நண்பனொருவன் விளக்கம் சொல்கிறான்.

இந்த நேரத்தில், எனது குறிப்புப் புத்தகத்தை திறந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நாம் விரும்புவற்றை குறித்து வைத்தல் கூட, பின்னொரு நாளில் ஆனந்தம் தரும் என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறேன்.

குறிப்புப் புத்தகமெங்கும் நான் அங்குமிங்குமாய் படித்துச் சுவைத்த மேற்கோள்களை குறித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வரியைய வாசிக்கும் போதும், அதை எழுதிய பொழுதும் அதை வாசித்த பொழுதும் மணக்கண் முன் விரிந்து மனதை மையல் கொள்கிறது.

“மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது எல்லா விடயங்களும் அம்சமாக காணப்படுகிறது என்ற பொருள் படாது, மாறாக நிறைவில்லாத விடயங்களைத் தாண்டியதாய் நாம் பார்க்க எண்ணியிருக்கிறோம்” என்ற வரிகள், என் கண்களை கொஞ்சமாவது ஈரமாக்கியிருக்க வேண்டும்.

“இல்லாதவொன்று கிடைக்கும் தருவாயில் ஏற்படுவது மகிழ்ச்சியல்ல. இருக்கின்ற விடயங்களை அறிவதும் ஆதரிப்பதும் தான் மகிழ்ச்சி என்ற விடயத்தை நாம் மறந்துவிடுகிறோம்” என்றும் பெடரிக் கோனிக் சொன்னதாய் எழுதி வைத்திருக்கிறேன்.

துன்பம் எப்போதும் அதன் உச்சளவில் அனுபவிக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு இரு மாறுபட்ட கருத்துகளே இருந்ததில்லை. அல்பிரட் டி முஸட், துன்பமான ஓர் நாளில், சந்தோசமான விடயமொன்றை நினைப்பதைப் போல், துன்பமானதொரு விடயம் எதுவுமே இருக்க முடியாதென்கிறார்.

உளவியல் வைத்தியரிடம் ஒருவன் போய், “டாக்டர், என் அண்ணன் தன்னை ஒரு கோழியாக நினைத்துக் கொள்கிறார்” என தன் அண்ணனின் நிலை பற்றி முறைப்படுகிறான். “ஏன் நீங்க அவரை அப்படி யோசிக்க விடுறீங்க..? தடுக்க முயற்சிக்கலாமே?” என்று வைத்தியர் கேள்வி கேட்கத் தொடங்குகிறார். “என்னால செய்ய முடியும் தான்.. ஆனா, எனக்கு முட்டை தேவையே!” என்கிறான் அவன்.

நாம் ஒருவரை அன்பு செலுத்த ஆரம்பிக்கும் நாள் முதலிலேயே அவரை அவராக ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. குறித்த நபரின் அன்பும் தேவை. ஆனால், தாம் நினைப்பது போலவே அவரும் நடக்க வேண்டும், இருக்க வேண்டும் என்ற கொடுமையான எண்ணம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. அது அப்படி இருக்கவே கூடாது. ஒரு தனிநபரை அப்படியே அவராகவே ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் உறவுகளுக்கு அர்த்தம் கிடைக்கிறது. அன்புக்கும் ஆயுள் நெடுக்கிறது.

வால்ட் விட்மேன் சொன்ன விடயம் எனது குறிப்புப் புத்தகத்தின் ஒரு பக்கத்தின் மூலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. “பாடசாலை அல்லது கோயில் அல்லது எந்த புத்தகமோ உங்களுக்குப் போதித்துள்ள விடயங்களை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் உங்கள் ஆத்மாவை அவமரியாதைக்கு உட்படுத்தும் விடயங்களை தூக்கியெறிந்து விடுங்கள்”.

நெல், களை என எல்லாமே தாவரங்கள் என்பதற்காக களைகளை நெல்லுடன் சேர்த்து வளர்த்துவிட முடியாது. குறிப்பிட்ட காலத்தில் களை பிடுங்குவது என்பது கட்டாயமாகுமென கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

3 thoughts on “மழைபெய்யும் நள்ளிரவில் நான்

 1. என்னைச் சூழ எல்லாப் பக்கங்களிலும் எல்லைகளின்றி பரந்து கிடக்கும் எதுவுமே இல்லாத பரப்பொன்றின் மீது நான் மட்ட்ட்ட்ட்……..டும் பாடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.

  கட்டுரையின் ஆரம்ப வரிகளை வாசிக்கையில் இப்படியொரு காட்சி வந்து போனது.

  “ஜு ஜு பி” இன் பின்னரான வரிகளை வேகமாகவே வாசித்து முடித்தேன். ஏனோ தெரியவில்லை அண்மை நாட்களாக இவ்வாறான விடயங்களையெல்லாம் மனம் உள்வாங்க மறுக்கிறது.

 2. உன் வரிகளை வாசித்த போது நானும் அங்கு வந்து போனதாய் உணர்கிறேன்.
  எனக்கு என்னமோ சிறு வயதில் நான் எனது ஊரில் அனுபவித்த ஆலங்கட்டி மழை என் மனக்கண்ணில் தோன்றுகிறது.
  கீழே விழுந்த பனிக்கட்டிகளை சேர்த்து சாப்பிட்டதாகவும் ஞாபகம்.
  எழுத்து மெருகேரிக் கொண்டே போகிறது.
  வாழ்த்துக்கள்……

 3. பிரிவு உட்பட எல்லாத் துயரங்களின் போதும் விழிகளில் முட்டி மோதி போராடி மெதுமெதுவாய் இமைகளுக்கு கீழிறங்கும் கண்ணீரத்துளிகளுக்கு முகமூடி அணிவிப்பது ஆசியாவில் மழை என்றால் ஐரோப்பாவில் பனியாகத்தான் இருக்கும்.

  //நள்ளிரவில் விழும் பனிக்கு, முகவரி கொடுப்பதென்னவோ, காலை நேரத்து யன்னல் கண்ணாடிகள் தான். //
  அழகும் அவஸ்தைகளும் நேர்கோட்டில் சேர்த்த பெருமை இந்த பதிவிற்கே சிறப்பு.வாழ்த்தக்கள் உதய தாரகை..வானுயர உனைப்பார்க்க ஆசையாக இருக்கிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s