கல்லூரி செல்லாத கோழிகள்!

ஒவ்வொரு காலையிலும் உலகமும் அங்கு வாழும் மனிதர்களும் புதிதாக பிறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளின் இரவுகளின் போதும், உலகம் பல அனுபவங்களுக்குச் சொந்தமான மனிதர்களை கண்டு கொள்கிறது. கடந்த காலத்தின் கனவுகளுக்குக் கூட, இரவுகள் தான் வயது கொடுப்பதுண்டு. அது தான் வாழ்க்கையின் கனவுகளிற்கு காலம் செய்யும் கைமாறு.

கடந்த காலத்தைப் பற்றி எழுதுவிடுவதென்பது அவ்வளவு லேசுபட்ட விடயமல்ல. இயல்பாக இருந்த நிலையில் கடந்த காலத்தை எடை போடும் கட்டாயம் வாய்த்துக் கொண்டால், ரசிக்கத் தெரியாத ஜடமாக மாறிவிடலாம். கிரகம்பெல்லினால், தான் கண்டுபிடித்த தொலைபேசி கொண்டு தனது மனைவியை அழைக்க முடியாமல் போனது, யாருடைய பிழையுமில்லை. அவளுக்கு காது கேட்காது என்பது தான். கடந்த காலத்தை ரசிப்பதற்கு பலவேளைகளில், இயல்பு நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு கட்டாயமாகவேனும் செல்ல வேண்டியுள்ளது.

எழுதுவது என்பது எனக்கு பிடித்தமானதொன்றுதான். கடந்த காலத்தை பதிவதும் எனக்குப் பிடிக்கும். கடந்ததை காதலாயும் காலத்தை என் கனவாகவும் காண எனக்குத் தெரியும். நான் கண்ட உலகத்தை சொல்வதை அவள் விரும்பமாட்டாள், என்பதால் அவள் விரும்புவது போல் உலகைக் காண எனக்கு இஷ்டமில்லை. சிலவேளைகளில், நானே அவளின் உலகமாகவும் இருந்திருக்கலாம்.

குறிப்பிட்ட விடயங்கள் வருவதும் போவதும் மறைவதும் அழிவதும் இயல்பான ஒன்றுதான். 2009 ஆம் ஆண்டும் இனித் திரும்பி வராது. எனது இந்தப் பதிவும் திரும்ப முடியாத ஒன்று பற்றியதான திரைக் கதைதான்.

திரும்பாத காலத்தின் சுயம்

சென்று விட்ட பன்னிரண்டு மாதங்களை எண்ணிப் பார்க்கையில், என்னால் கனவுகளை நேசிக்க முடிகிறது. திடீரென விசர்தனமான இயல்பை எனக்குள்ளே கண்டு கொள்ளவும் முடிகிறது. இன்னும் எத்தனையோ எண்ணங்கள் என்னுள் தோன்றினாலும் எல்லாவற்றையும் அப்படியே என்னால் தெளிவாகவும் சொல்லிவிடவும் முடியாதுள்ளது.

கடந்த வருடம் கொடுமைகளைக் கொண்டு சேர்த்தது என்ற புலம்பல் தான் என்னால் எங்கும் கேட்க முடிகிறது. இது தான் உண்மையா? அல்லது மனிதர்களால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இருக்கத்தான் முடியாதா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் என்னையே சிலவேளைகளில் நான் கோபித்துக் கொள்கிறேன்.

ஜனவரி மாதங்கள் பனித்தூறள்களைத் தருவது போல், குளிர்ச்சியான மலர்ச்சியான எண்ணங்களையும் என் மீது விதைக்க மறப்பதில்லை. மறந்ததுமில்லை. கனவுகள் என்பதுவும் நிகழ்காலம் என்பதுவும் சிலநேரங்களில் சமனாக இருப்பதை என்னால் ரசிக்க முடிகிறது.

“அந்த விடயம் எனக்குத் தேவையில்லை! எனக்கு அது வேண்டாம்!!” என்று மட்டுமே எண்ணிக் கொள்ளும் அவனுக்கு, “தேவையில்லாத விடயத்தை எதற்காக நீ எண்ண வேண்டும். கேட்க வேண்டும்.” என்று அவனுக்கு வித்தியாதானம் சொல்லிக் கொடுக்க மனதிற்கு முடிகிறது. “எதுவும் தேவை என்றால் கேளு” என்று தான் என் சின்ன வயதில் சொல்லித் தந்தார்கள்.

மனிதர்கள் புறநிலைச் சூழலுக்குள் வந்து கொள்ளும் போது, தொட்டில் பழக்கங்களைக் கூட மாற்றி விடுவதற்கான சாத்தியங்கள் பிறந்து விடுகின்றன. தேவையில்லாதவைகளை கேட்டவர்கள் எல்லோரும் பெற்றுக் கொள்ளும் விடயமும் அந்தத் தேவையில்லாதது தான்.

கனவுகளை நேசிக்கும் எனக்கு கனவுகளின் கதாபாத்திரங்களை நேசிக்க முடிவதில்லை. கடந்த காலம் சொல்லிய கனவுகளின் அர்த்தங்களில் என்னை தொலைத்துக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், கனவுகளும் தீர்க்கதரிசனம் போன்றதுதான் என்ற பழங்காலத்து நம்பிக்கையை மறுக்க முடியாதென்ற சிக்மன்ட் ஃப்ராய்டின் கூற்றும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு.

விடை தெரியாத மாற்றங்கள்

எண்ணங்களின் தெளிவுக்கும் கனவுகளின் வடிவத்திற்கும் தொடர்பு இருக்கவே வேண்டும். தேவையில்லாத கனவுகளுக்கு கொடுக்கும் முதலிடம், வேறொன்றுக்கும் யாரும் தருவதில்லை. விரும்பப்படாத விடயங்கள் கூட இன்று “கெட்ட கனவு” என்ற உவமை கொண்டு தான் அறியப்படுகிறது.

எதிர்மறையான எண்ணங்களை ஏற்றுக் கொள்ளும், பிரச்சாரம் செய்யும், மெருகேற்றும் வடிவம் எங்கிருந்து தோற்றம் பெற்றிருக்கும் என்ற இயல்பான கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. பென்குயின்கள் பறக்குமா? கோழி எவ்வளவு நேரம் பறக்கும்? என்ற கேள்விகளுக்கான விடை எனக்கு தெரிந்திருக்கிறது.

சில கேள்விகளுக்கான விடைகள் பற்றி எனக்கு இப்போது கனவு காணத்தான் முடிகிறது. பென்குயின்களுக்கு யாரும் உபதேசம் செய்வதில்லையாம்!! கோழிகள் கூட கொக்கரிப்பதைப் பழக கல்லூரியும் செல்வதில்லையாம்.

கனவுகளைத் தின்று பருத்த எண்ணங்களாகவே கடந்த வருடத்தைக் காண்கிறேன். நாளை என்ற மட்டுந்தான் உண்மையானது என்பதாய் இன்றைத் தொலைத்துவிட்ட கதையாகவே புதிய ஆண்டுகளின் வருகை எனக்குத் தெரிகிறது. வயதொன்றும் எனக்குக் கூடும்.

வாழ்தலின் அடிப்படையாக, எல்லாக் கட்டங்களுக்கும் நேரம் வாய்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வயது வந்துவிட்டதென்பது வாழ எஞ்சியுள்ள காலம் குறைவானதென்பதான அறிவிப்புதான். எம்மை நாமே தேடித் தெளியும் நல்ல முகாமையாளராக மாறவேண்டியது தனிமனித தேவை.

நான் அதிகமாகவே மாறியிருக்கிறேன். குழப்பங்கள் தான் மாறுதல்களுக்கு காரணமென்று சொல்ல மாட்டேன். நான் மதிக்கும் தெளிவான வாழ்க்கையின் தீர்மானங்கள் தான் மாறுதல்களின் தாய் என்பேன். என் தீர்மானங்களை மதிக்குமெனக்கு என் இளமைக்கால லட்சியங்களை இன்னும் காதல் செய்ய முடிகிறது. “மகனே!! நீ வெல்வாய்” என்று தந்தை சொல்வதாய் அடிக்கடி என்னால் உணர முடிகிறது.

புதிய ஆண்டு பிறந்தது என்பது, எனக்கு கிடைத்த நேரங்களை எப்படி பயன்கள் கொண்டு புரவிக் கொள்வது என்பதில் தான் வெளிச்சம் காணும். ஆனாலும், அவளுக்கு இதே போன்றதொரு பதிவை இன்னொரு முறை இங்கு காண இஷ்டமில்லை. எனக்கும் தான்.

மாற்றங்கள் அவளுக்கும் பிடிக்கிறது. எதிர்பார்ப்புகள் தான் மாற்றங்களை ரசிக்க வைக்கிறது!!

– உதய தாரகை

1 thought on “கல்லூரி செல்லாத கோழிகள்!

  1. இலட்சியங்கள் மிகவும் பருத்து விட்டதால், எனக்கும் என் இளமைக்கால இலட்சியங்களை இன்னும் காதல் செய்துகொண்டேதான் இருக்க முடிகிறது. ஆயுள் முடிந்துவிடுவதற்குள் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s