ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்

மொழிகளின் அழகென்பது, வெறும் வார்த்தைகளின் ஒப்புதல்களால் சாத்தியமாக்கப்படுவதில்லை. அவை தகுந்த வடிவத்தில் மொழியில் வெளிப்படுத்தப்படும் போது, அழகு பெறுகின்றது. அர்த்தம் பெறுகின்றது. தனிநபரின் எண்ணங்களை ஒரு கூட்டத்திற்கு சொல்கின்ற போது, தனிநபரின் ஆளுமையின் தேவையோடு, மொழியின் பிரயோகமும் முக்கியத்துவம் பெறுகிறது.

பார்வையாளர்களின் கரகோசத்தைப் பெற்றுவிடுவதென்பது, யாராலும் இலகுவில் அடைந்து கொள்ள முடிவதில்லை. மாணவர் குழாமொன்றை தனது பேச்சினால், கட்டிப் போட்ட ஆளுமை ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றியும் அவர் பேச்சு பற்றியும் நிறத்தில், பசித்திரு. முட்டாளாயிரு என்ற பதிவின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

அப்பிள் கம்பியூட்டர் என்பது மிகவும் பிரசித்தமான கணினி என்பது நீங்கள் அறிந்த விடயந்தான். அது இன்றளவில் கணினி என்ற நிலையையும் தாண்டி இசை, தொலைபேசி என்ற பல பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. அதற்கு அதன் தலையாய் இருக்கும் ஸ்டீவ் ஜொப்ஸே காரணமென வெறும் ஒரு வரியில் சொல்லிவிட முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் அப்பிள் கணினி நிறுவனம் பங்கேற்கும் MacWorld Conference and Expo ஆனது, அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்தில் 1985 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அப்பிள் கணினி நிறுவனத்தின் புதிய பொருள்கள் வெளியிட்டு வைக்கப்படும். இதில் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆற்றும் உரையை உலகமே வியந்து கவனிக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இடம்பெற்று வந்த இந்த மாநாடு இந்த வருடம் மட்டும் பெப்ரவரியில் நடைபெற தீர்மானமாகியுள்ளது. மாற்றங்கள் என்பது இரண்டு வருடத்தில் மட்டுமல்ல 25 வருடத்திலும் வரலாமென்று எனக்கு இந்த மாற்றம் சொல்லியது.

மொழியாடல், சொல்லாடல், வழங்கல் நிலை என எல்லாவற்றிலும் மிகவும் தெளிவாகவிருந்து தான் சொல்ல வந்த விடயத்தை இயல்பாகச் சொல்லும் சாமர்த்தியம் ஜொப்ஸின் கைவந்த கலை.

தான் சொல்ல வந்த விடயத்தை எவ்வாறு மற்றவர்களுக்கு சொல்லிவிட முடியுமென்ற சாத்தியங்களைத் தெரியாமல், பலரும் முட்டி மோதிவிழுவது நாளாந்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தான் தெளிவில்லாத விடயமொன்றை இன்னொரு நபருக்கு தெளிவாக விளங்கப்படுத்த முடியும் என்ற மூட எண்ணம் பலரையும் கௌவிப் பிடித்திருப்பது வறுமையே!

தெளிவான விடயமொன்றை தெளிவாகச் சொல்லும் கலையை தன்னகம் கொண்டுவர ஸ்டீவ் ஜொப்ஸ் எவ்வாறு தன்னை தயார் படுத்திக் கொள்கிறார், என்ன உத்திகளைப் பயன்படுத்துகிறார் என்பது யாவரும் அறிய நினைக்கும் விடயம் தான். Business Week சஞ்சிகையின் பத்தி எழுத்தாளரான காமைன் காலோ என்பவர் The Presentation Secrets of Steve Jobs என்ற நூலை எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகம் பற்றிச் சொல்லாமல், அந்தப் புத்தகம் அடக்கியுள்ள விடயங்கள் சிலவற்றை வெறும் ஏழு நிமிடங்களில் புத்தக ஆசிரியர் அழகாக விளங்கப்படுத்துகிறார். வாசிக்கப்பட வேண்டியது.

பூதக்கண்ணாடியும் அக்காவும்

அப்போது எனக்கு பத்து வயதாகவிருக்க வேண்டும். தரம் ஐந்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த நேரம், பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பாடருந்திய பின்னர், பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்று “பூதக்கண்ணாடியை” எடுத்துக் கொண்டு விளையாடுவது வழக்கம்.

கடதாசி ஒன்றையும் பூதக்கண்ணாடியையும் வெயிலெரிக்கும் வெளியிலே கொண்டு வந்து சூரியனுக்கு நேராக பூதக்கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு, அதன் கீழாக கடதாசியைப் பிடித்துக் கொண்டிருப்பேன். ”அப்படி பிடித்துக் கொண்டிருந்தால், பேப்பரில் நெருப்புப் பிடிக்கும்” என்று அக்கா விளக்கமும் சொல்வாள்.

ஆனாலும், எவ்வளவு நேரம் பிடித்துக் கொண்டிருந்தாலும் நான் பிடித்திருந்த கடதாசி எரியத் தொடங்கியே இருக்காது. ”பொய்யா.. சொன்னீங்க..?” என்று அவளை நான் அப்பாவித்தனமாக கேள்வி கேட்பேன். ”நான் எதற்குப் பொய் சொல்லனும்” என்று அவளும் தொடர் சம்பாஷணைக்கு என்னை அழைப்பாள்.

இப்படி மூன்று நாட்களாக மும்முரமாக நின்று முயற்சி செய்தேன். ஏமாற்றம் தான் மிச்சம்.

நான் ஏமாற்றப்பட்டேனா? என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்தேன். என் தந்தையிடம் போய் விடயத்தை சொன்னேன். ”பேப்பர் தீப்பற்றிக் கொள்ள வேண்டுமென்றால், பூதக்கண்ணாடியை அசையாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்ற உண்மையைச் சொன்னார்.

என்னை வெளியில் அழைத்துச் சென்று பூதக்கண்ணாடியை அசைக்காமல் பிடித்துக் கொண்டு, கடதாசி தீப்பற்றிக் கொள்ளும் நிலையைக் காட்டினார் என் தந்தை. ”ஒரு விஷயத்தில கண்ணும் கருத்துமா இருந்தா எப்பவும் வெற்றி நிச்சயம் தான்” என்று சொல்லிய வார்த்தைகள் என் காதில் இன்றும் ஒலிக்கிறது.

நாம் பிறருக்குச் சொல்லப் போகின்ற விடயத்தில் தெளிவு காணப்படும் போதே, மற்றவர்களாலும் அது தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஒரு விடயம் சார்பான ஒருமைப்பாடு அதன் விளைவுகளில் ஏற்படுத்தும் மாற்றத்தை எனக்கு தந்தை செய்து காட்டிய ”பூதக்கண்ணாடி வித்தை” சொல்லித் தந்தது.

ஆகாயே வெண்ணிலாவே, அங்கேயே நின்றிடாதே!

அறிவிப்பாளனின் மொழியின் வடிவங்கள் பார்வையாளனை அடைந்து விடும் போது, இன்னொரு வடிவம் பெற்றுக் கொள்ளக்கூடாது. மொழியின் அர்த்தம் அவ்வாறே பெறப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இந்த விதி கலையிலக்கியங்களுக்கு பலவேளைகளில் பொருந்துவதில்லை என்று நான் நினைத்தது உண்டு.

கலைஞன் ஒரு அர்த்ததில் கலை செய்ய, அதை நுகர்பவன் இன்னொரு அர்த்தத்தில் புரிந்து அழகு காண்பது வழக்கமாகிவிட்டது. அது அவ்வாறே இருக்கவும் வேண்டும்.

அண்மையில் வெளியான ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த விண்ணைத் தாண்டி வருவாயா? திரைப்படப் பாடல்கள், இசையால் மட்டுமல்ல மொழியாடலாலும் கனம் சேர்த்தது. கவிதாயினி தாமரை எழுதிய வரிகள் மொழியை ரசிக்கச் செய்தது.

மன்னிப்பு என்பது இப்போதெல்லாம் மலிந்துவிட்டது. மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவிலும் இதுபற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன். ஆண்கள் தான் அதிகமாக ”என்னை மன்னிப்பாயா?” என்று பெண்களிடம் கெஞ்சுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பெண்கள் மன்னிப்பு கேட்டு கெஞ்சினால் எப்படியிருக்கும் என்ற தாமரையின் வரிகள் கலை.

ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே!!
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா?

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பி விட்டேன் என் கடலிடமே!

ஏனைய பாடல்களின் வரிகள் இசையோடு சேர்ந்து உயிர்ப்புப் பெருகையில், விண்ணைத் தாண்டியே பாடல்கள் ஒலிப்பது போன்ற பரவசம் ஏற்படுகிறது.

அண்மையில் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஆர்த்தமார்த்தமான காதலையும் கவிதையும் இசையால் பிணைந்து கொள்ளும் போது, என்ன வடிவம் கிடைக்கப்பெறும் என்று யாருக்கும் தெரியாமல் இருக்கக் கூடாது என்பதுதான் இந்தப் பாடலின் உயிர்ப்பு.

– உதய தாரகை

2 thoughts on “ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்

  • நன்றி அகல்விளக்கு தங்கள் கருத்துக்கு..

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s