ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.)

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம்.

திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரிந்து ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில் பார்வையாளனை ஒரே உணர்வுகளுக்குள் கட்டிப் போடும் திரைக்காவியங்களும் தோன்றாமலில்லை.

நண்பனொருவன் ஒரு திரைப்படக் காட்சிகளைப் பற்றியும் அதன் நகர்வுகளைப் பற்றியும் அதிகமாகவே சொல்லிக் கொண்டிருந்தான். ”விண்ணைத் தாண்டி வருவாயா?” நிறையப் பேரை தாக்கியுள்ளதை அதிகமாகவே உணர முடிகிறது.

திரைப்படத்தை பார்த்த எவரும் சொல்லத் துடிக்கும், முயற்சிக்கும், மனனமாக்கும் வசனங்களாக பின்வரும் வசனங்கள் மாறியுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது. உணர்வுகளை வசன நடைக்கு கொண்டுவர எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெற்றிருக்கிறது.

”காதலை தேடிக்கிட்டு போக முடியாது.
அது நிலைக்கணும்.
அதுவா நடக்கணும்.
நம்மள போட்டு தாக்கணும்.
தலைகீழ போட்டு திருப்பணும்.
எப்பவுமே கூடவே இருக்கணும்.
அதான் True Love.
அது எனக்கு நடந்தது.”

திரைப்படங்கள் பற்றி விமர்சனங்கள் எழுவதில் எனக்கு ஆர்வமில்லை. விமர்சனங்கள் சிலவேளைகளில் தனிமனித ரசனைகளை மட்டுப்படுத்தும் ஆதாரங்களாகக் கூட இருக்க வாய்ப்புள்ளதென நான் நம்புகிறேன். ஆனாலும், ”விண்ணைத் தாண்டி வருவாயா?” தந்த பாதிப்புகள் பற்றிக் கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும்.

”உலகத்தில் எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் ஏன் நான் ஜெஸ்ஸியை காதலித்தேன்?” என்ற கேள்விக்குள் காதல், அன்பு, நகைச்சுவை, வெறுப்பு, வலி, சோகம் என பல உணர்வுகளை மிக இயல்பாகவே திரைப்படத்தின் வெவ்வேறு கட்டங்களில் காட்டியுள்ள விதம் கவிதை.

மொழி, கவிதை என்ற அழகிய நிலைக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் போது, அதன் வெளிப்பாடான உணர்வுகளுக்கு உயிர்ப்புக் கொடுப்பதென்னவோ இசைதான். பின்னணியில் ஒலிக்கும் இசை மொழியின் இயற்கையான நளினங்களோடு இசைந்து விடுவதால், திரையிலே அழகிய வாழ்க்கையைத் தான் காண முடிகிறது.

திரைக்கு வந்த படங்களின் காட்சிகளுக்குப் பின்னணியில் உள்ள அழகிய நினைவுகள், படம் வெளிவந்த பிறகு வந்து பார்வையாளனுக்கு சுவை சேர்ப்பது இயல்பான விடயம் தான். ஆனால், படத்திலேயே பார்வையாளனாகி, நிஜத்திலும் பார்வையாளனாகி ஒருவன் சொல்லும் கருத்து திரைப்படத்தின் வேர் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும்.

”ஜெஸ்ஸி… ஜெஸ்ஸி… ஜெஸ்ஸி…” என்று சொல்லிய பலரையும் என்னால், காண முடிந்தது. திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் பலவேளைகளில் நிஜ வாழ்க்கையில் வாழும் மனிதர்களை அப்படியே சொல்லி நிற்கும். ”வாழ்க்கையில நடக்கிற விசயத்தை எல்லாம் சினிமாவில கொண்டு வர முடியாது” என்று சின்மய்யின் குரலில் த்ரிஷா சொல்வார்.

ஆர்ப்பாட்டமே இல்லாமல், உணர்வு நரம்புகளை உசுப்ப ”விண்ணைத் தாண்டி வருவாயா?” ஆல் முடிந்திருக்கிறது. காதலுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது என்று திட்டவட்டமாகவே அவள் சொல்கிறாள். எனக்குப் புரியவில்லை.

“நீளும் இரவில் ஒரு பகலும், நீண்ட பகலில் சிறு இரவும், கண்டு கொள்ளும் கலை பயின்றோம்.” என்று தாமரை எழுதியுள்ள கவிதை, கவிதைக்குள் கவிதையாகி கலை சேர்க்கிறது.

காதலின் அழகு, வலி, சுகம், பொறுமை, ஏக்கம், கவலை, எதிர்பார்ப்பு, வெறுப்பு என்பனவெல்லாம் ரசிக்கப்பட வேண்டுமென்ற நிலையை பின்னணி இசை உருவாக்கி நிற்கிறது. பின்னணியில் பல நேரங்களில் காணப்படும் மயான அமைதி கூட, இசையாக அழகு சேர்ப்பது அழகு.

கமராவின் கோணங்கள் சொல்லும் கவிதைகளை ரசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருள், வெளிச்சம் என்பனவெல்லாம் காட்சிகளுக்கு கொடுக்கும் கர்வத்தை அதிகமாகவே பல இடங்களில் காண முடிகிறது. குறுஞ்செய்திகளுக்குக் கூட ”குலோஸ்-அப் (Close-up)” வைத்துள்ள விதம் அற்புதம்.

மொத்தத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரும் நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை உரக்கச் சொல்ல முனைந்துள்ள விதம் அர்த்தம் பெற்றுள்ளதென்றே என்னால் நம்ப முடிகிறது.

படத்தில் லாஜிக் இல்லை என்று ஒரு நண்பன் என்னிடம் சொன்னான். இயக்குனரே இந்தக் கேள்விக்கு திரையில் விடை கொடுத்திருப்பார். ”காதல் – அது மெஜிக்கலானது..” – விசர்தனமான நிலைகளை உண்டு பண்ணும் சக்தி காதலுக்குத்தான் உண்டு. கிறுக்குத் தனங்கள் தான் ரசிக்கப்பட வேண்டியது என்றேன்.

காதலில் கெமிஸ்ட்ரி. கெமிஸ்ட்ரியில் மக்னீசியம்.

காதலில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கனும் என்று சொல்வார்கள். படத்தில் கூட, ஜெஸ்ஸியைப் பார்த்து கார்த்திக் ”கெமிஸ்ட்ரி” பற்றிச் சொல்வதாய் வசனங்கள் வரும். வேதியல் என்ற சொல்லின் ஆங்கில வடிவம் தான் கெமிஸ்ட்ரி என்று நான் சொல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும்.

காதலில் வேதியல் இருக்கிறதோ இல்லையோ, வேதியலில் மக்னீசியம் இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. Mg என்ற இரசாயனக் குறியீட்டால் இனங்காணப்படும் மக்னீசியத்திற்கு மக்கள் அதிகளவில் முக்கியத்துவம் தருவதில்லை என அண்மையில் பத்திரிகையின் பத்தியொன்றில் வாசித்தேன்.

மக்னீசியத்தின் குறைபாட்டின் காரணமாக, வயது சென்ற காலங்களில் உயர் குருதியமுக்கம், இதய நோய் அல்லது நீரிழிவு நோய் போன்றவை வரக்கூடியதற்கான வாய்ப்புகள் உள்ளதென சொல்லப்படுகிறது.

உணவில் உட்கொள்ளும் கல்சியத்தின் குறைபாட்டினால்தான் என்புகளின் வலிமை குன்றும் என்று தான் எல்லோரும் பொதுவாக நம்பியுள்ளார்கள். ஆனால், மக்னீசியம் குறைவானாலும் என்புகள் வலிமை இழக்குமென்பது அதிர்ச்சித் தகவல்.

தானிய வகைகள், பச்சை மரக்கறி வகைகள் போன்ற மக்னீசியத்தை அதிகளவில் கொண்ட உணவு மூலங்கள். ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அதிகார சபையின் அண்மைய ஆராய்ச்சி முடிவுகள், மக்னீசியத்திற்கும் எமது என்புகளின் வன்மைக்கும் நேரடித் தொடர்பிருப்பதை சொல்லி நிற்கிறது.

ஒவ்வொரு நாளும் பெண்கள் 270mg மற்றும் ஆண்கள் 300mg மக்னீசியத்தையும் உட்கொள்ள வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக, சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு வெறும் 220mg மக்னீசியத்தையே உட்கொள்கின்றார் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மரக்கறி, தானியங்கள், கடலை, பருப்பு மற்றும் மீன் போன்றவற்றை ஆகாரத்தில் அதிகம் உட்கொள்ளுதல் மக்னீசியத்தை தேவையானளவு உடலில் பெற்றுக் கொள்ள வாய்ப்பை உண்டுபண்ணும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி வேதியலின் கூறான மக்னீசியத்தின் அவசியம் உடலிற்குத் தேவைப்பட, கோபாலு அண்மைக்காலமாக முனுமுனுக்கும் வரிகளாக இது மாறியுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது.

தள்ளிப் போனால் தேய் பிறை,
ஆகாய வெண்ணிலாவே ..
அங்கேயே நின்றிடாதே..
நீ வேண்டும்.. அருகே..
ஒரு பார்வை.. சிறு பார்வை ..
உதிர்த்தால் உதிர்த்தால்..,
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியேன் …..

திரையில் தோன்றிய அழகிய நிலைகள் பற்றிய ஆனந்தமான பரவசம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. நண்பனொருவனுக்கு அழைப்பெடுத்தேன். தன்னால் ”விண்ணைத் தாண்டி வருவாயா?” பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை என்று கொசுறு தகவல் சொன்னான்.

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவளுக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடிக்கிறது என்ற உண்மையைக் கண்டு கொள்கிறேன்.

– உதய தாரகை

4 thoughts on “ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்

  • வாங்க நிமல்… தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.. இன்னும் நிறைய அனுபவங்களை விரைவில் பகிர்ந்து கொள்ளலாமென இருக்கிறேன்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • வாங்க லதா அக்கா.. கலைகள் ரசிக்கப்படுதல் என்பதானது, நாம் அதனை மனதினால் உணர்கிறோம் என்ற பொருளையே பெற்றுவிடுகிறது. ஆதலால் நான் ரசித்த கலை வடிவம் பற்றிய பார்வையை சொல்லியிருந்தேன்.

   நன்றி அக்கா தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s