அந்த விதியும் அர்த்தம் தொலைத்த வார்த்தைகளும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 57 செக்கன்களும் தேவைப்படும்.)

வலிகளை விலக்கி விட்டு ஓடவும் மகிழ்ச்சியை தன்னகம் கொண்டு ஆளவும் தான் யாவரும் விரும்புகின்றனர். இந்த உணர்ச்சி நிலைகள் தான் ஒவ்வொருவரினதும் உளவியல் சார்ந்த நினைவுகளுக்கு நிறம் கொடுக்கின்றன. அதிலிருந்துதான் அனுபவங்களின் அர்த்தத்தை பிரித்தெடுத்துக் கொள்ள முடிகிறது.

தங்களை எது மகிழ்விக்கின்றதோ அதையே செய்வதில் காட்டும் அதீத ஆர்வம், எவரும் வேறெதிலும் கொள்வதில்லை. இதுதான் மரபு. மற்றவர்களுக்கு உதவுவதனால் தான் அடைந்து கொள்ளக்கூடிய அதீத மகிழ்ச்சி பற்றி வேதங்கள், புராணங்கள் என எல்லாவற்றிலும் கூறப்பட்டாலும், அதிகமானோர் அது பற்றி கருத்திலேயே கொள்வதில்லை.

மற்றவர்களுக்கு உதவுதல் என்ற வார்த்தையைக் கூட, பயன்படுத்தத் தேவையில்லாத காலமாக இந்தத் தருணங்கள் மாறியுள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது. தன் நிலையை நியாயப்படுத்துவதற்காக, “ஒவ்வொருவனும் ஒரு கட்டத்தில் சுயநலமாகத்தான் இருக்கனும்” என்று அவன் எனக்கு விளக்கம் சொல்கிறான். “விளக்கங்கள் கேட்டே, காதுகள் வீங்கத் தொடங்கிட்டு” என்று இன்னொருவன் வேறொரு சர்ந்தப்பத்தில் என்னிடம் விளக்கம் பற்றி விளக்கம் சொல்கிறான்.

மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் எமது மகிழ்ச்சி தங்கியுள்ளது எனச் சொல்வதை விடவும், எமது உணர்வுகளுக்கு உயிர்ப்புக் கொடுப்பதில், மற்றவர்களோடு கலந்து கொள்ளும் உதவிகள் தான் அதிக பங்கு கொள்ளும் என இயல்பாகவே சொல்லிவிடலாம்.

ஆனாலும், தன்னிலை சார்ந்த குற்றங்கள் வெளித்தெரியலாம் என்ற பயத்தினை மறைப்பதற்காகவே சொற்பமானவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதை தங்கள் “வழக்கமாகக்” கொண்டுள்ளனர் என்ற பாரம்பரியமாக வருகின்ற தர்க்கமொன்றும் உள்ளது. இந்தத் தர்க்கம் பலவேளைகளில் தன்னைச் சரியென்று காட்டிக் கொள்ள அதிக சிரத்தை எடுப்பதில்லை. அது சரியாகவே அமைந்துவிடுகிறது.

“பொருத்தமான”, “செய்யத் தகுந்த” போன்ற சொற்றொடர்களைக் காணும் போதே, எனக்குள் இந்தச் சொற்கள் குறித்து நிற்கக்கூடிய உண்மையான அர்த்தங்கள் என்ன என்பதில் தடுமாற்றமே ஏற்படுகிறது. வெவ்வேறு சமூகங்கள் இந்தச் சொற்களுக்குத் தரும் அர்த்தங்கள் பலவேளைகளில், அதிர்ச்சி தருவதாய் இருப்பது அதிர்ச்சியே.

வார்த்தைகளுக்கு தரும் அர்த்தங்களை யாரும் அவர்களின் வாழ்க்கைக்குத் தருவதில்லை. முற்றுப் புள்ளி.

ஆபிரிக்காவில் இருக்கும் “கலாசார” விழுமிய நிலையின் உச்சத்திற்கு அளவில்லை என்று விடலாம். கோத்திரங்களாக வாழ்க்கைக் கோலத்தை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தேசத்து மக்கள், தங்கள் தனித்துவத்தை காட்டுவிப்பதற்காய் அதிகமான “ஆர்வம்” எடுத்துக் கொள்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கோத்திரங்களும் பல “திரைக்கதைகளை” தங்கள் சொந்தத் தனித்துவமாகக் கொண்டு வாழ்தலை ஓட்டிக் கொண்டிருக்கிறது. ”இரவு ஓடுநர்களில்“ (Night Runners) ஒரு கோத்திரம் தங்கள் “அறிவியலை” தக்க வைத்துக் கொண்டுள்ளது.

யாரந்த “நைட் ரன்னர்”?

இரவு முழுக்க விழித்திருந்து, ஊரைச் சுற்றி விடியும் வரைக்கு ஓடிவருபவர்கள் தான் அவர்கள். பலரும் வயோதிகர்களாக இருப்பது கொடுமை. அகோரமான சத்தங்களை எழுப்பிய வண்ணம் ஊரைச் சுற்றிவருவதை அந்தக் கோத்திர மக்கள் ரசிக்கிறார்கள். ரட்சிக்கப்படுவதாய் உணர்கிறார்கள். ஓடும் வழியில் யாரும் குறுக்காக வந்தால், மரத்தின் பக்கமாகச் சென்று, மறைந்து கொள்ளவும் வேண்டும். கண்களின் கீழ்நிலையில் கரிய நிறக் கோடு தென்படுவதாய் கோரமான வகையில் முடி வளர்ந்த நிலையில் இவர்கள் காணப்படுவார்கள்.

ஆனால், இது அங்கு அவர்களுக்கு “செய்யத் தகுந்த” “பொருத்தமான” செயலாகும். இப்போது இந்தச் சொற்களை நான் கேட்கும் போதெல்லாம் அடைந்து கொள்ளும் தடுமாற்றத்தின் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கலாம்.

உள்ளம் சொல்கின்ற விடயங்களை எல்லாமே செய்வதனால், தன் உள்ளத்தை ஆள முடியாத பலவீனம் தன்னிடம் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால், ஊரே அவன் நிலை சார்பாக இலவசமாக கருத்துரைக்க தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்.

“செய்யத் தகுந்த” விடயங்கள் இதுவென வரையறுக்கப்படுவது வெறும் சடங்குகளாகப் போய்விட்டது. “இங்கு துப்புவது தடை”, “கையை சவர்க்காரமிட்டுக் கழுவவும்” என்றெல்லாம் பதாகைகளை நாளாந்தம் கண்டு கண்களுக்குக் கூட “எரிச்சல்” வரத் தொடங்கிவிட்டது.

செய்யத் தகுந்த விடயம் எது, செய்யத் தகாத விடயம் எது என வரிக்கு வரி அறிவித்தல் செய்யும் நிலைக்கு உலகத்தின் நிலை மாறியுள்ளதற்கு காரணமெதுவென புரிந்து கொள்கிறேன்.

Golden Rule எனச் சொல்லப்படுகின்ற அந்த ஒரு விதியை மறந்ததன் விளைவு தான் இந்த நிலைக்கு ஆதாரம் என்கின்ற கருதுகோளுக்கு வருகிறேன். இப்போதெல்லாம் கருதுகோள்கள், காரணங்களாவது கல்லில் நாருரிப்பது போன்றதல்ல என்கின்ற உண்மையையும் உணர்ந்து கொள்கிறேன்.

அந்தப் பொன்னான விதி என்ன?

“நீ மற்றவர்களால் எப்படி நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறாயோ, அதுபோலவே நீ மற்றவர்களிடமும் நடந்து கொள்”

இதுவரை காலமும் உலகில் தோன்றிய அத்துணை ஆகமங்கள், வேதங்கள், அறிஞர்கள், ஞானிகள் என விரியும் அத்தனை அறிவு நிலைகளாலும், சொல்லப்பட்ட ஒரே மந்திரம் இதுதான். மொழிகள் வேறுபட்டாலும் அர்த்தம் ஒன்றாகவே இருந்தது.

அண்மையில் குறும்படமொன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. “பற்கள்” என்பது தான் அந்தப் படத்தின் பெயர். வெறும் இரண்டு நிமிடங்களில் அது சொல்கின்ற பாடங்கள் ஆயிரம். Golden Rule இன் அர்த்தத்தை அழகியலாய் அக்குறும்படம் சொல்லி நிற்பதாய் கண்டு கொண்டேன்.

காணொளியைக் காணுங்கள்.

இந்த இடத்தில் இப்படி செய்வது தான் சரியானது, இந்த இடத்தில் இப்படிச் செய்வது பிழையானது என்ற விதிகளைப் போதிக்க நினைக்கும் எந்தப் பாடப்புத்தகமும், மனிதன் சார்பான உணர்வுகளுக்கு மதிப்பு தரவில்லை என்றே நான் எண்ணுகிறேன். அடிப்படையான விடயங்களை மறந்து விட்டு, ஆகாயத்தில் கோட்டை கட்டவே அவை முனைகின்றன.

அத்திவாரமில்லாமல், ஆகாயத்தில் என்ன, பூமியில் கூட கோட்டை கட்ட முடியாதென்பது யாரும் கண்டு கொள்ளாத உண்மை தான்.

“உயர் கல்வியால் சிதைக்கப்பட்ட இன்னொரு திறமையான ஆளுமை” என்று தன்னை ஒரு நண்பன் தனது டிவிட்டர் தளத்தில் அறிமுகம் செய்து கொள்கிறான். “விமர்சனம் தேவையில்லை என்றால் எதுவுமே செய்யாதிரு” என்று இன்னொருவன் டிவிட்டியிருந்தான். அவனிடம் “காலம் மாறிப்போச்சு” என்று சொல்லுமாறு கோபாலு என்னிடம் கேட்டுக் கொண்டான்.

தொற்று நோய்கள் பரவுவதாய், மனிதனின் கலங்களிற்குள் ஒருவர் இன்னொருவருக்கு காட்ட வேண்டிய அன்பின் அழகு தீவிரமாகப் பரவாதா? என்ற ஏக்கம் நிராசையாகவே தோன்றுகிறது.

“இவள் கன்னியல்ல கணினியென்று பில் கேட்ஸைப் போல நேசி” என்ற பாடல் காதில் ஒலிக்கிறது. இப்போதெல்லாம் அவளும் அப்படித்தான்.

– உதய தாரகை

2 thoughts on “அந்த விதியும் அர்த்தம் தொலைத்த வார்த்தைகளும்

  1. வாங்க சித்தீக் சார்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s