எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 42 செக்கன்களும் தேவைப்படும்.)

அண்மையில் தொலைதூரப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வழமை போலவே, பேருந்துப் பயணம் தான். முன்கூட்டியே ஆசனத்தை பதிவு செய்து கொண்டேன். இதேவேளை பேருந்தில் என் நண்பர்கள் பலரும் வந்தார்கள். அவர்கள் ஆசனத்தை முன்பதிவு செய்யாததால் ஆசனம் கிடைக்கவில்லை. நின்று கொண்டு வந்தவர்களில் அவர்களும் அடக்கம். அடிக்கடி ஆசனத்தை பகிர்ந்து கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

குறிப்பிட்ட காலம் – விடுமுறைக் காலம், நிறையப் பேர் பயணம் செய்ய பேருந்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். உண்மையில் ஆசனமில்லாமல் நின்றவர்களின் தொகையும் ஆசனத்தில் இருந்தவர்களின் தொகையும் சமனென்றே சொல்ல வேண்டும். அவ்வாறுதான் எனக்குத் தோன்றியது. நெடுந்தூரப் பயணம் என்பதால் பயணிகளின் பயணப் பொதிகளே பேருந்தை நிரப்பிவிடும் அளவிற்கு மலையாய்க் குவிக்கப்பட்டிருந்தன.

அதிகமானவர்களை கட்டுக்கடங்காமல் கண்டால் எரிச்சல் சில பேருக்கு வரும். எனது ஆசனத்திற்கு பின்னால் இருந்தவர் ஒருவர் அப்படியானவர் என்றுதான் நான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் அது பிழையான எண்ணம்…

ஏனென்று கேட்கிறீர்களா? பேருந்து புறப்பட்டு தனது பயணத்தை ஆரம்பித்து நெடுஞ்சாலையில் கொஞ்ச தூரம் சென்றிருக்கும் வேளையில் அந்த நபர், “இந்த பஸ் வண்டி அப்படியே தடம் புரண்டு விபத்துக்கு உட்பட்டால் இதனை மீண்டும் நிமிர்த்தி வைப்பது கஸ்டமாயிருக்கும். அவ்வளவு ஆட்களும் அவ்வளவு பொதிகளும்” என்றார். இதனைக் கேட்ட நான் பேருந்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதைச் சொல்லத்தான் இப்படிச் சொல்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

பயணம் தொடர்கிறது. போகும் வழியில் பேருந்து பாலத்தைக் கடக்க வேண்டிய தருணம். அதே நபர், “இந்தப் பாலத்திற்குள் இந்த பஸ் விழுந்தால், இதில் போபவர்கள் விடுமுறையை எப்படிக் கொண்டாடுவார்கள் என்று பார்க்கலாம்” என்றார். எனக்கு அப்போது தான் புரிந்தது – எதையும் எதிர்மறையாகப் பார்க்கும் கோணம் தான் இந்த மனிதரை இப்படியெல்லாம் பேச வைக்கின்றது என்பது.

எதிர்மறையாக வாழ்க்கையைப் பார்ப்பவர்களையும் வாழ்தலில் ஒவ்வொரு கட்டங்களிலும் எதிரான விளைவுகளையும் பற்றி சிந்திப்பவர்களையும் கதைப்பவர்களையும் நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். இவர்கள் வாழ்தலை ஒரு கேலியாகப் பார்க்கிறார்களா? அல்லது மற்றவர்கள் இவர்களை எப்படியெல்லாம் இனங்கண்டு கொள்வார்கள் என்பதை மறந்து போனவர்களா?

கதைப்பதற்கு பிரச்சனைகள் இல்லாத நிலையில் கவலைப்பட யாரால் முடியும்? வாழ்வை எதிர்மறையாக காண்பவர்களுக்கு பிரச்சினைதான் வாழ்க்கை! கதைக்கப் பிரச்சனை இல்லாவிட்டால் கவலைப்படுவார்கள். குழம்பிப் போயிடாதீங்க நமக்கு “நம்பிக்கை தான் வாழ்க்கை” ஆனால், வாழ்வை எதிர்மறையாக சிந்திப்பவர்களுக்கும் நோக்குபவர்களுக்கும் நம்பிக்கை பற்றி பாடம் எடுத்தாலும் அது பற்றிப் புரியவே புரியாது. கடைசியில் நம்பிக்கை ஒரு கிலோ என்ன விலை என்றுதான் எம்மிடம் கேட்பார்கள். வாழ்வை ஆக்கபூர்வமாக பார்க்கத் தொடங்கும் கணத்திலேயே மனிதன் நம்பிக்கையின் பலம் பற்றி அறியத் தொடங்குகிறான் என்பது எனது கருத்து. நீங்கள் எப்படியோ?

எதிர்மறையான சிந்தனை ஒருவனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நன்றாக இருக்கும் போது, தமக்கு தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் சந்தோசத்தை தொலைத்தவர்கள் இவர்கள். அடுத்த நிமிடம் தற்போதிருக்கும் மகிழ்ச்சி நீடிக்காது என்பதை நினைத்து கவலைப்படுவார்கள். தம்மோடு குடிகொண்ட மகிழ்ச்சியை அனுபவிக்க மறந்தவர்கள் அவர்கள். எமது வாழ்க்கையில் நடைபெறும் விடயங்களை எதிர்மறையாக சிந்தித்தால் இப்படியெல்லாம் நமக்கும் நடக்கும்!! ஜாக்கிரதை!! 👿

இது மட்டுமா!!? இல்லையே!!! முறைப்பாடு செய்வதிலேயே முழுநேரமும் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு “ஆட்டோகிராஃப்” திரைப்படத்தில் வரும் “முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்” என்ற பாடல் வரி புரியவே புரியாது. முறைப்பாடு செய்வதையே மூச்சாக சுவாசிப்பார்கள் இவர்கள். வெளிச்சம் ஓரிடத்தில் பரவத் தொடங்கும் போது, அல்லது நிலைத்து நிற்கும் போது, அந்த வெளிச்சத்தை அணைத்து இருளின் அளவை அளப்பதி;ல் ஆனந்தம் கொள்வோர் அவர்கள்.

கண்ணாடி உடையும் என்பது உண்மைதான் அதற்காக கண்ணாடிகளைக் கண்டவுடன் உடைவுகளைத் தேடித் திரிவதா? உடையாத பொருளிலும் உடைவைக் காண்பதில் உவகை கொள்வார்கள் இவர்கள். ஏன், கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அதிகமானவர்கள் இறப்பை எய்துகின்றார்கள் என கேள்விப்பட்டார்களானால், கட்டிலில் படுத்துறங்குவதற்கே கட்டுப்பாடு விதித்துக் கொள்வார்கள் அவர்கள்.

எங்கள் கல்லூரியில் “தயிர்வடை” என்றொரு தீன்பண்டம் சிற்றுண்டிச் சாலையில் விற்பார்கள். இடைவேளை நேரங்களில் தயிர்வடையை வாங்கிக் கொள்ள நிறையப் பேர் முட்டி மோதிக் கொள்வோம். அவ்வளவு பிரபல்யமான தீன்பண்டம் அது. தயிர்வடையின் நடுவில் ஒரு துளை இருக்கும். தயிர்வடையை சாப்பிடுமாறு தருவிக்கப்பட்டால் அதன் ருசியைப் பற்றி கதைக்காமல் அதன் துளை பற்றி கதைக்கக்கூடிய துப்பறிபவர்கள் இவர்கள். சிலவேளைகளில் தீங்குகளும் எமக்கு ஏற்படலாம் என்பது இயல்பான கருத்துத்தான். அதற்காக நடப்பதெல்லாம் தீங்கையே தந்துவிடும் என நினைப்பது என்ன வகை? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை அறியாதவர்கள் அவர்கள்.

ஆமா!! இவர்கள், அவர்கள் என்று பட்டியல் போட்டுக்கிட்டு போறீங்களே! யாருப்பா இந்த இவர்களும் அவர்களும்? என்று நீங்கள் கேட்பது போல் தோனுகிறது. அதுதாங்க வாழ்வை எதிர்மறையாகக் காண்பவர்கள் யாவரும் இவ்விடத்தில் இவர்கள் அவர்கள் என்ற பெயருக்குள் வருகிறார்கள். (இது எங்களுக்குத் தெரியாதாக்கும். இத இப்பிடி பெரிசா பில்ட் அப் பண்ணிச் சொல்லனுமாக்கும். 😉 )

சூரியன் உதிப்பது எதற்காக என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? நிச்சயமாக உங்கள் பதில் மலர்களைத் தொட்ட, விஞ்ஞானத்தில் பட்ட, விவசாயத்தில் நட்ட, விபரங்களைக் கொண்ட பதிலாக அமையும். அல்லது அப்படித்தான் யோசிப்பீர்கள். ஆனால், நிழலை பொருளொன்று தருவதற்காக மட்டுமே சூரியன் உதிக்கின்றது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை. ஆனால், அப்படித்தான் சொல்வார்கள் அவர்கள்.

இந்த நேரத்தில் நான் புத்தகமொன்றில் படித்த நீதிக்கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. வேடர் ஒருவர் அதிசயமான வேட்டை நாயொன்றை பெரிய விலை கொடுத்து வாங்கினார். உலகிலேயே அப்படியான நாய் ஒன்றேதான் உள்ளதாம். அதுவும் இவரிடம் தான் உள்ளதாம். நீரில் நடக்கக்கூடிய நாய் அது தான் அதன் சிறப்பியல்பு. அந்த நாயின் வினோதமான செயலைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர், தனது சொந்தக் காரர்கள், நண்பர்கள் என விரியும் வட்டாரத்திற்கு இந்த அதிசயத்தை காட்ட வேண்டுமென ஆர்வம் கொண்டார்.

dog.gifவாத்து வேட்டைக்குச் செல்ல தனது நண்பர்களை அழைத்த அவர் தனது அதிசய நாயையும் தன்னோடு அழைத்துச் சென்றார். நண்பர்களால் ஒரு சில வாத்துக்களை மட்டுமே வேட்டையாட முடிந்தது. தனது நாயை வேட்டையாடப் பணித்தார். வேகமாக நீரின் மேல் நடந்த நாய் வாத்துக்களை ஒன்றுவிடாமல் வேட்டையாடியது. இதனைக் கண்ட நண்பர்கள் இந்த அதிசயம் பற்றி ஏதும் சொல்வார்கள் என்று பார்த்த வேடனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். வீட்டுக்குச் சென்றவுடன் வேறு வழியில்லாமல், தனது நண்பர்களிடம் “நீங்கள் இந்த நாயில் ஏதாவது புதுமைகளை அவதானித்தீர்களா?” எனக் கேட்டார்.

அதற்கு அவரின் நண்பர் என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறீர்கள்? அது அதேதான்!!

“ஆமாம். நாயில் நானொரு புதுமையான விடயத்தை அவதானித்தேன். அதுதான் உங்கள் நாய்க்கு நீந்தத் தெரியாது” என்றார் நண்பர். அதிசய நாயின் சிறப்பைப் பற்றி ஏதும் விசேடமாகச் நண்பர் சொல்வார் என எண்ணியிருந்த வேடனுக்கு இது தேவைதானா? என்பது போலாகியது!! எப்படியெல்லாம் எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?

வாழ்வை ருசிக்கப் பழக வேண்டுமானால், எதிர்மறையாகச் சிந்திப்பதைத் தவிர்க்கப் பழக வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் எம்மையிட்டுச் செல்லும் திசைகளோ இலக்குகளோ நன்மை என்ற சொல்லையோ செயலையோ மறந்து விட்ட சூன்ய பிரதேசங்கள். அவற்றை விட்டு அகல வேண்டியது கட்டாயமானதே!

– உதய தாரகை

இது ஏற்கனவே நிறத்தில் நான் பதித்த ஒரு பதிவாகும். ஏறத்தாள மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த பதிவை இன்று உங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

One thought on “எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!

  1. நல்ல தொரு இடுகை, எதிர்மறை எண்ணங்கள் நம் வாழ்வில் தீய விளைவுகளையே தரும் என்பதை பலரும் இன்னும் உணராமலே இருக்கின்றனர்.

    அவசியமான இடுகை

    வாழ்த்துகள் நண்பரே

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s