வானவில்லின் எதிரொலிகள்: பால்ய பருவக் கனவுகளின் தொடுவானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 4 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.)

மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு செல்லும் நாழிகைகள் பற்றிய எண்ணம் எப்போதும், எல்லோருக்கும் விளங்குவதில்லை. ஒவ்வொரு தனிமனிதன் சார்பான தேவைகளுக்குள் காலம் கூட, தன்பக்க நியாயங்களைக் காட்டி வெவ்வேறு நேரங்களை வழங்க மறுப்பதில்லை. இது காலம், மனிதனுக்குச் செய்யும் கைமாறு என்று புரிந்துகொள்ளப்படக் கூடியதல்ல.

இளமைக்கால நினைவுகளில் திளைத்திருக்க, அந்த அழகிய நினைவுகளை உசுப்புவிடக்கூடிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டும். நிழற்படங்கள், திரைப்படங்கள் என்று விரியும் நினைவுகளின் பதிவுகள், பலவேளைகளில் பார்வையாளனை தன் நினைவுகளோடு பயணிக்கச் செய்வதுண்டு. நிழற்படங்களில் இருக்கும் மனிதர்கள் நிஜத்தில் மாறினாலும், நிழற்படத்தில் மாறாமலேயே இருப்பதால் என்னவோ என்னால் நிழற்படங்களை அதிகம் காதலிக்க முடிகிறது.

விண்வெளி வீரனாக வேண்டுமென்கின்ற கனவுகளோடு, மீன் தொட்டியொன்றை தன் தலையில் போட்டுக் கொண்டு தன்னை விண்வெளி வீரனாக உருவகித்துக் கொள்கிறான் ஒரு சிறுவன். சிறுவர்களின் அன்பின் எல்லையில், எல்லோருமே தங்கள் எல்லைகளை விட்டகன்று பறந்து விடலாம். வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை தன் இயல்பான கண்களால் நோட்டமிட்டு தன் ஒவ்வொரு நிமிட இருப்பையும் ரசிக்கின்றான் அந்தச் சிறுவன்.

இந்தச் சிறுவன் சொல்லுகின்ற அவனது வாழ்க்கைக் கதையின் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, ஆரவாரம், குறும்பு, காதல், அன்பு, பாசம் என விரியும் இயல்பான மனித நேயத்தின் தொடர்ச்சிதான் Echoes Of The Rainbow என்கின்ற திரைப்படம்.

1960 களில் கொங்ஹொங்கில் வாழ்ந்த நடுத்தர வர்க்க குடும்பமொன்றின் இயல்பான வாழ்க்கை நிலையைச் சொல்லுகின்ற இந்தத் திரைப்படம் பார்வையாளனில் ஏற்படுத்தும், தாக்கம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்தின் இயலாமைகள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் என்பன யாவற்றையும் அப்படியே இத்திரை என் கண்முன்னே கொண்டு வந்து விடுகிறது.

மென்மையான காதலில் திளைத்திருக்கும் அந்தச் சிறுவனின் அண்ணனும் அவன் பள்ளித் தோழியும் தங்கள் காதல் பற்றிய உணர்வுகளை தங்களின் விருப்பங்களினதும், ஆர்வங்களினதும் வெளிப்பாடாய் பழகிக் கொள்கின்றனர். ஓட்டப் போட்டிகளில் எப்போதுமே முதலிடத்தைப் பெறும் தன் காதலனின் தங்கப் பதக்கங்களை விரும்பாத அவள், வெண்கலப் பதக்கங்களே தனக்கு அண்ணனிடமிருந்து வேண்டுமென அந்தச் சிறுவனிடம் பரிகாசமாக எப்போதும் சொல்கிறாள்.

இந்தக் கணத்தில் “பெண் எப்போதும் வலி, நான் ஆண்களையே நேசிக்கிறேன்” என்று தன் மழலைக் குரலில் அந்தச் சிறுவன் சொல்வது கவிதை.

பாதணிகளைச் செய்வதை தன் தொழிலாகக் கொண்ட தன் அப்பாவைப் பற்றியும், எதனையும் தன் வாய்ச் சொல்லாடலால் தக்கவைத்துக் கொள்ள தயங்காத தன் அன்பேயுருவான அம்மாவைப் பற்றியும் அந்தச் சிறுவன் தரும் அறிமுகங்கள் அடர்த்தியானது.

தன் அப்பாவின் சகோதரர் தெருக்கோடியில் சிகையலங்கார கடையொன்றை நடத்திவருவதைச் சொல்கின்ற தருணத்தில், சிறுவயதில் அப்பாவுடன் முடிவெட்டும் கடைக்கு முடி வெட்டச் சென்று, “நிமிர்ந்து நில்லுங்கடா, செல்லம்” என்று ஆயிரம் தடைவை முடிவெட்டுபவர் சொல்லிய போதும், தலையை வேறொரு கோணத்தில் மாற்றி வைத்துக் கொண்டே இருக்கும் சிறுபராயத்து நினைவுகளை என் கண்முன்னே கொண்டு வர கமராக் கோணங்களுக்கு முடிந்திருக்கிறது.

சிறுவர்களின் கனவுகளை காதலிக்கத் தெரியாதவர்களாய், வயது வந்தவர்கள் மாறிவிடுவதும், வயது வந்தவர்களின் ஆற்றலைப் போல், சிறுவர்கள் ஆற்றல் கொண்டிருக்க வேண்டுமென நடைமுறைச் சாத்தியமற்ற எண்ணங்களை வயது வந்தவர்கள் பெற்றிருப்பதையும் இந்தத்திரை பல இடங்களில் தொட்டுச் செல்கிறது.

“ஆங்கில அகரவரிசையை முடிவிலிருந்து தொடங்கி உன்னால் சொல்லி முடிக்க இயலுமா? அப்படியனால் தான் நீ ஆங்கிலம் தெரிந்தவனாவாய்” என்று ஒரு பொலிஸ் காரன் அந்தச் சிறுவனிடம் கேட்க, அவன் Z, Y, X என்று தொடங்கி, முடிக்கத் தடுமாடுகிறான். ஆனால், அவன் பின்னர் தொடரும் காட்சிகளில் தான் அந்தச் சவாலில் வெற்றிபெற தன்னை யாருமே சொல்லாத நிலையிலும் தயார்படுத்திக் கொள்கிறான். இது பால்ய பருவத்தில் அப்படியே நடந்துவிடுவதுண்டு.

இவ்வாறு சின்ன வயதில் நாம் கரிசணையோடு செய்த சின்னச் சின்ன விடயங்கள், மனமாக்கிய பாக்கள், பாடல்கள் ஏன் வாய்ப்பாடுகள் கூட வயது வந்த போதிலும் எம் நினைவுகளிலிருந்து அகலாமல் பசுமையான இளமைக்கால நினைவுகளை ஈட்டித்தந்துவிடுவதுண்டு.

“மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் எம்மைக் காத்துக்கொள்ள கூரை இருப்பதே வாழ்க்கையில் முக்கியமான விடயம்” என்று தனது வீட்டின் கூரையை திருத்திக் கொள்கின்ற நிலையில் சிறுவனின் அப்பா கூறும் காட்சி, பல ஞாபக அலைகளை எனக்குள் பாய்த்துவிடுகிறது. மனமும் கனத்துவிடுகிறது.

சிறுபராயத்தில் குழந்தைகள் தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத பொழுதுகளில், அழுகையை தங்கள் ஆயுதமாக்கி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்கின்ற நிலை  எரிச்சலை சிலவேளைகளில் ஏற்படுத்திய போதும், மொத்தமாக அனுபவிக்க வேண்டிய அற்புதச் சுவையான கட்டங்களவை.

தனக்கு ஒரு பெட்டிக் கேக்கை முழுமையாகத் தின்று கொள்ள வேண்டுமென்ற சின்ன சின்ன கனவில் அந்தச் சிறுவன் அதற்காக செய்கின்ற முயற்சிகளை அப்பா கண்டிக்கின்ற போது அது நினைவுகளை கிளர்ச்சி கொள்ளச் செய்து விடுகிறது. தன் தம்பி அப்பாவின் கண்டிப்புகளால் அழுகின்ற போது, அவனை அண்ணன் அரவரணைத்துக் கொள்ளும் காட்சி நிஜமாகவே என் கண்களில் ஈரத்தைக் கொண்டுவந்துவிட்டது.

வாழ்க்கையில் வருபவர்கள் போவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. என் பாட்டியிடம் ஒரு தடைவை, “நீங்கள் எங்கே போவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “உன் பாட்டனைச் சந்திக்க நான் கசப்பான கடலொன்றைத் தாண்டிச் செல்வேன்” என்று பாட்டி சொன்னார். “எங்கே அந்தக் கடலிருக்கிறது?” என்று கேட்டேன், அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு விளங்கிவில்லை என்று மரணம் பற்றிய சிறுபராயத்து விளக்கங்களை அந்தச் சிறுவன் கூறுகின்ற போது, மரணிப்போர் எல்லோரும் வானத்திற்கு பறந்து செல்கின்றனர் என்று நான் எண்ணியிருந்த செல்லமான நினைவுகளை எனக்குள் கொண்டு சேர்த்தது.

“பாட்டி போகாதீங்க..” என்று கவலை தோய்ந்த முகத்தோடு பாசமாய் உருகும் சிறுவனிடம், வாழ்வின் ஈற்றில் எல்லோரும் மரணத்தை ஏற்றே ஆகவேண்டுமென்ற உண்மையை பாட்டி சிறுவனுக்கு புரிய வைக்க முயற்சிக்கும் காட்சி, புல்லரிக்கச் செய்கிறது. “நான் போக வேண்டும். போயே ஆக வேண்டும். வாழ்க்கையில் கசப்பான கடலென்பது (மரணம்) கட்டற்றது.” என்று சொல்லி பெருமூச்சு விடுகிறாள். “பாட்டி போகாதீங்க..” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கும் சிறுவன், நான் எனது தந்தை கொழும்புக்கு தனது அலுவல்களுக்காகப் போகப் புறப்பட்டதும், “போகாதீங்க அப்பா..” என்று என் சின்ன வயதில் தொடர்ச்சியாகச் சொன்ன ஞாபகங்களை உசுப்பிவிடுகிறான்.

“அப்படிப் போனால், நான் எப்படி பாட்டியை திரும்பக் காணலாம்?” என்று ஆர்வம் மேலிட்டு, அழுகை வரும் தோரணையில் அச்சிறுவன் பாட்டியைக் கேட்டுவிட, உன் பாட்டன் சொல்லிய கதையொன்றைச் சொல்கிறேன் என்று “உன்னால், நீ நேசிக்கும் மனிதர்களை காணவேண்டுமாயின், நீ விரும்புகின்ற உனது பிரியமான பொருள்களை அவர்களுக்காக கடலில் எறிந்து அழித்துவிட வேண்டும். அப்போது அவர்களை நீ காண்பாய்.” என்பதாய் உருக்கமான கதையொன்றை சொல்கிறாள் பாட்டி.

உண்மையாகவா? என்று வியப்பில் கேட்டு, மறுகணமே, இழந்தது கிடைக்கப்பெறும் என்ற மகிழ்ச்சியில் சிறுவன் தன் உலகில் திளைக்கும் கட்டம் பொக்கிஷம்.

தன் மூத்த அன்பு மகன் லியூக்கேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், அவனை அதிலிருந்து மீட்டெடுக்க தன்னாலான முயற்சிகளில் தாயானவள் தன்னை ஈடுபடுத்தும் நிலைகள் அடர்த்தி நிறைந்தவை. பின்னணியில் மௌனமாய் விரியும் சில இசையில்லாத கட்டங்கள் காட்சிகளுக்கு கர்வம் சேர்க்கிறது. தாய்ப்பாசம், தந்தையின் குடும்பம் பற்றிய அக்கறை என அத்தணை விடயங்களையும் அப்படியே சொல்லிவிட Echoes Of The Rainbow ஆல் முடிந்திருக்கிறது.

என் கண்முன் தோன்றிய அத்தணை காட்சிகளும் எனக்குள் ஆயிரமாயிரம் நினைவுகளை உசுப்பிவிட்டதென்றே சொல்வேன். திரையில் விரியும் மென்மையான காதல் கதை, தாய்மை, தந்தை பாசம், சகோதரப் பற்று என்கின்ற உணர்வுகளுக்குள் என்னை நான் வாழ்ந்ததாக கண்டு கொண்டேன்.

வாழ்க்கையின் பல கட்டங்களில் வலிகள் வந்துவிடுவது இயற்கையானது தான். “நல்ல நேரம். கெட்ட நேரம்” என்று காலங்கள் மாறி மாறி வருமென்று சொல்கின்ற வசனங்கள் இடம்பெறும் கட்டங்கள் அன்பு, காதல், நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வின் மீதான நெகிழ்ந்து போதலை வலியுறுத்தி நிற்கின்றன.

என்னதான் கஷ்டங்கள் வந்துவிட்டபோதிலும், “நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்” என தன் மகனின் நோய் குணமாக வேண்டும் என்கின்ற நிலையிலும், சுழல் காற்று என்ற இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீள வேண்டும் என்கின்ற நிலையிலும் வெளிப்படுத்துகின்ற விதம் கண்ணீரை கண்களில் ஆறாக்கும்.

திரைப்படத்தின் ஒவ்வொரு கணமும் ரசித்து ரசித்து செதுக்கப்பட்டுள்ளது என்பதாய் மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. திரைப்படத்தின் இயக்குனரின் வாழ்க்கைச் சரிதமாகவே திரையில் தோன்றியது காணப்படுகிறது. ஆம், தான் வாழ்வில் அனுபவித்த விடயங்களை அப்படியே திரையாக கொண்டு வந்திருக்கிறார். வெற்றியும் கண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லலாம், ஆனால், நீங்கள் கட்டாயம் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென சிபார்சு செய்கிறேன்.

“மகன்.. உனக்காக மீன் பொரியல் சமைத்து வைத்திருக்கிறேன். சாப்பிட வா!” அம்மா அழைக்கிறாள். “எனக்கு மீன் சாப்பிடப் பிடிக்காது” மகன் பதில் சொல்கிறான். “அப்படியானால், உனக்கு மீன்கள் நீந்துவது எப்படியென்று கற்றுத் தராது.” என்கிறாள் பதிலாக. “உண்மையாகவா?” வியப்பாய் தந்தையிடம் வினவுகிறான் மகன். “அம்மா எப்போதாவது உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறாரா?” என்று தந்தை மகனிடம் வினவுகிறான். மகன் மீன் பொரியல் சாப்பிட சம்மதிக்கிறான். மனதை உருக்கிவிடும் கட்டங்கள் இவை.

உங்கள் வாழ்க்கையின் ரசிக்கப்பட வேண்டிய கட்டங்களை திரும்பிப் பார்க்கவும், வாழ்தலின் இளமைக்கால நினைவுகளில் திளைத்திருக்கவும் இந்தத்திரைப்படம் அழைத்துச் செல்லும். விடுபட்ட ரசிக்க வேண்டிய வாழ்தலின் கட்டங்களை வார்த்தைகளால் இல்லாமல், திரையில் விரியச் செய்திருக்கும் முறை வியப்பு.

இத்துணை விடயங்களையும், மழலை கலந்த மொழியில் திரையில் சிறுவன் சொல்கின்ற விதம் ஹைக்கூ.

– உதய தாரகை

Alex Law என்ற இயக்குனர், தனது நினைவுகளை திரையில் அர்த்தமுள்ளதாய் கொண்டு சேர்த்திருக்கிறார். சீன மொழியிலான இந்தத் திரைப்படத்தின் அசல் பெயர், Sui yuet san tau என்பதாகும். இதன் பொருள் “Time, the thief” என்பதாகும். இத்திரைப்படம் பற்றிய தகவல்களைக் கொண்ட இணையத் திரைப்பட தரவுத்தளத்தின் பக்கத்திற்கான இணைப்பு இதோ: http://www.imdb.com/title/tt1602572/

2 thoughts on “வானவில்லின் எதிரொலிகள்: பால்ய பருவக் கனவுகளின் தொடுவானம்

 1. அழகிய திரைக்கதையை கண்முன் நிறுத்தி, திரைப்படத்தை கண்கூடாக கண்டுகளித்த திருப்தியை தந்துள்ளீர்கள்.
  வாக்கியங்களின் மெருகேற்றம், வார்த்தை பிரயோகம் பதிவை மீண்டும் மீண்டும் வாசிக்கத்
  தூண்டுகின்றது. ”இந்தக் கணத்தில் “பெண் எப்போதும் வலி, நான் ஆண்களையே நேசிக்கிறேன்” என்று தன் மழலைக் குரலில் அந்தச் சிறுவன் சொல்வது கவிதை”.

  இடைக்கிடையே செருகியுள்ள தங்களின் அனுபவ பகிர்வுகள் அருமையாக இருப்பதுடன், வாசிப்போர் அனைவரினதும் சிறுபராயத்தை நினைவ+ட்டுவதாய் அமைந்துள்ளது பிரமிப்பு!
  இதே போன்றதொரு இன்னொரு திரைப்படம்தான் ‘Together’

  உதயதாரகையின் ரசனைக்கு மீண்டும் ஒரு சபாஷ்!!
  வாழ்த்துக்கள்

  • நன்றி நிறப்பிரியை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

   நீங்கள் குறிப்பிட்டுள்ள Together என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s