எதிர்பார்ப்புகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.)

“எந்த வகையான எதிர்பார்ப்புகளும் கூடாதென்று, பல நாட்களுக்கு முன்னமே எனக்கு சொல்லப்பட்டிருந்தது. இன்னொருவரின் எதிர்பார்ப்புகளை அப்படியே நிறைவேற்றுவது மிகக் கடினமானது. குறிப்பாக அன்பினால் உணரப்படும் காதலில். ஒருவரை அவராகவே எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்கின்ற பண்புதான் காதல் என்ற பதம் கொண்டு வழங்கப்படுகின்றது.”

“நான் கற்பனைகளின் உற்ற தோழியாகவிருந்தேன். என் கற்பனைகளில் தோன்றிய எதிர்பார்ப்புகள் என்பதை எந்த ஆண் மகனாலும் நிறைவேற்ற முடியும் என்பது குதிரைக் கொம்புதான். நான் கனவு காண்பேன். கண்டு கொண்டிருக்கிறேன்.”


அவளை எனக்கு பல காலமாக தெரியும், சில காலங்களுக்கு முன் அவள் இப்படிக் கதைக்கக் கேட்டுக் கொண்டேன். இங்கு யார் பற்றிய கதைகளையும் நாம் சொல்லத் தேவையில்லை, அவளும் அவளைப் பற்றித்தான் என்னோடு கதைத்துக் கொண்டாள்.

நம்மைப் பற்றிய நமக்கான புரிதல் அதிகமாகவே தேவைப்படுகிறது. காதல் மற்றும் அன்பு பற்றிய விடயங்களை பல நாட்களுக்கு முன் நான் அறிந்து கொண்ட போது, எதிர்ப்பார்ப்புகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளையே நான் தொலைத்தேன். ஆனால், ஒரு பொருள் எப்படியிருக்க வேண்டும் என்ற நோக்கு இப்படி எதிர்பார்ப்புகளை தொலைத்துவிடுவதனால் சிதைந்துவிடுமென நீங்கள் பொருள் கொள்ளக்கூடாது.

எதிர்பார்ப்பு இல்லாதிருப்பது, உங்களை புதிய வாய்ப்புகளின் பக்கம் அழைத்துச் செல்லும். மற்றவர்களின் மீது தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கும்.

நாம் விரும்பிய விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்தும் நிலையில், எமக்கான எதிர்பார்ப்புகள் எதுவுமே காணப்படாது. அங்கு எதிர்பார்ப்புகள் தோன்றும் போது, விரும்பிய விடயங்களின் பாலான கவனம் எதிர்பார்ப்புகளின் பக்கம் சென்றுவிடுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும்.

நாம் வாழுகின்ற உலகம், எதிர்பார்ப்புகள் பற்றிய ஆவலை எப்போதும் தோற்றுவிப்பவனவாகவே இருக்கின்றது. இங்குதான் மனதோடு போராடிக் கொண்டிருத்தலின் தேவை உண்டாகிறது. இதில் தோற்பவன், சோம்பேறியாகின்றான். வெல்பவன் சோம்பேறிகளின் கதைப்பொருளாய் மாறிவிடுகிறான் அல்லது நூலொன்றின் கதாநாயகனாக மாறிவிடுகின்றான்.

விரும்புகின்ற விடயத்தை எதிர்ப்பார்ப்புகளில்லாமல் செய்கின்ற போது, எமக்குள் ஆனந்தம் குடிகொள்வதைக் கண்டு கொள்ளலாம். உவகை என்பது சொந்தப்பொருளாய் ஒட்டிக்கொள்வது நடந்தேறிவிடும். எமக்குள் இருக்கும் யாருமே அறியாத ஆளுமைகளுக்கான வெளிப்பாடும் கூட எதிர்பார்ப்பு ஏதுமில்லாத அதீத ஆர்வத்தினால்தான் வெளிக்காட்டப்படுகிறது.

ஆனால், உலகின் பால் நடக்கும் விடயங்கள் தனிமனிதன் தாண்டி எதிர்பார்ப்புகளின் எதிர்மறை விளைவுகளை சமூக மட்டத்தில் தோற்றிவிட வழிசெய்து விடுகிறது.

தனது வகுப்பிலுள்ள மாணவிகளை விட, மாணவர்களே கணித பாடத்தில் மிகச் சிறந்து விளங்குவார்கள் என கணிதப் பாட ஆசிரியர் எதிர்பார்க்கின்ற நிலையில், அது அப்படியாகவே நடந்துவிடுகிறது என ஒரு ஆராய்ச்சி சொல்லிச் செல்கிறது. மக்கள் மற்றவர்கள் தங்கள் சார்பில் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே சிரத்தை கொள்கின்றனர் – அதுதான் உண்மை.

எதிர்பார்ப்புகளின் எச்சம் தான் கவலை, கக்கிஷம் என விரியும் உணர்வுகள் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

வாழ்க்கையில் கிடைக்கப்பெறும் உன்னதமாக விடயங்கள் பலதுமே எதிர்பாராத நிலையில் தான் எம்மை அடைந்து கொள்கின்றன. அங்கு எதிர்பார்ப்புகள் இல்லாமை தான் எதிர்பாராத உவகையை தந்துவிடுகிறது.

“நான் இப்போது எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனக்கு விரும்பிய விடயங்களை கவனத்துடன் செய்கிறேன். கிடைக்கும் பலன் எல்லாமே ஏற்றுக் கொள்ளக்கூடியதாயிருக்கிறது.” என்று என்னை அவள் அண்மையில் சந்தித்த போது சொன்னாள்.

“…….” – நான்: மௌனமாகத்தான் இருந்தேன்.

கிடைக்கும் பலன்களை மறைமுகமான எதிர்பார்ப்புகள் என நீங்கள் சொல்லலாம். ஆனால், செய்யும் விடயம் சார்பான கவனம் முந்தி நிற்கும் போது, எதிர்பார்ப்புகள் என்பது செல்லாக்காசாகிவிடுவது உண்மையே.

“என்மீது நம்பிக்கை கொண்டு, ஒருவர் வரும்வரை நான் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தேன். என் நிலையில் அக்கறை கொண்ட மற்றவர்களின், மறைமுகமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை நான் மகிழ்ச்சியாகக் கண்டு கொண்டேன். அவர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டார்கள். நானும் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.”

“ஆனாலும், என்னைத் தாக்கியதொரு புயல். வாழ்க்கை பற்றிய பாடங்களை நான் படிக்கவில்லை என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். என்னை நம்பிய, எனக்கு உதவிய பலரும் என்னை விட்டும் தூரமாகிச் செல்வதை கண்ணெதிரே கண்டு கொண்டேன். ஆனாலும், என்பக்கம் நின்று எப்போதும் உறுதுணையாக நிற்கும் மனிதன் எனக்குக் கிடைப்பான் என்ற எண்ணத்தோடு, அவர்களோடு, நானும் என்னை அவர்களிடமிருந்து பின்னோக்கி நகர்த்திக் கொண்டேன்.”

அவளின் கண்கள் நனைவதையோ, வார்த்தைகள் வாயடைத்துப் போவதையோ யாராலும் தடுக்க முடியவில்லை. அழக்கூடாது என்றுதான் அவள் நினைத்திருக்க வேண்டும்.

“எனக்கு அந்த அவன் கிடைத்துவிட்டான். எல்லோரிடமுமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புப் போல் இல்லாவிட்டாலும், எனது தெரிவுகளின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை வலமாக்கிக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு எனது பழைய அழகிய பசுமையான நாட்கள் மீண்டும் தேவை.” – அழுதுவிட்டாள்.

பல நிமிட அமைதியின் பின்னர், அவள் சொல்லிய வார்த்தைகள் கனதியானவை.

“இன்னும் என்னில் உன்னதமான நிலைகளை எதிர்ப்பார்க்கும் எவனோ ஒருவன் இருக்கிறான் என்று உலகிலேயே சவாலிட்டுக் கொள்ளத் அதிகளவில் தகுதியான என்னுடனேயே நான் சவாலிட்டுக் கொள்கிறேன். அது அழகிய உன்னதமான உணர்வு, இப்போது அது நினைவு மட்டுந்தான்.”

எதிர்ப்பார்ப்புகள் என்ற விடயத்தை வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு லேசானதல்ல என்பதை அவள் சொல்லாமல் சொல்லிப் போனாள். எதிர்பார்ப்புகள் மட்டுந்தான் வாழ்க்கை என்று யாரும் அவளிடம் சொன்னாள், கோபப்படுவாள். நியாயமிருக்கிறது.

(யாவும் கற்பனையல்ல.)

– உதய தாரகை

3 thoughts on “எதிர்பார்ப்புகள்

  • வாங்க mathistha மற்றும் asfersfm – தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

   @mathistha
   வாசிக்கத் தேவையான நேரத்தைக் கணித்திருப்பது தங்களுக்கு பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   @asfersfm
   இந்த நேரத்தை எவ்வாறு கணித்தேன்? நீங்கள் எப்படி கணித்துக் கொள்ள முடியும்? அதற்கான இலகுவழி என்ன? என்பது பற்றி, “வாசிக்கத் தேவையான நேரம் என்ன?” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். வாசியுங்கள். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s