ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.)

நாம் வாழுகின்ற இந்தக் காலம் அதிகம் அழகுடையது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்புகள் விரிந்து கிடப்பது போல், இந்தக் காலத்திற்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை தொழில்நுட்பம் மட்டுந்தான் ஏற்படுத்தித் தந்துள்ளதென்றால், அது பிழையென்று சொல்வேன்.

மாற்றங்களை நேசிப்பதற்கும், அந்த மாற்றங்களின் பால் உண்டாகும் விடயங்களை தன் சார்பான நிலையில் வைத்து கணித்து வாழ்தலின் அழகை ரசிப்பதற்கும் பழகியுள்ள மனிதர்களால் தான் இந்த நூற்றாண்டு பற்றிய தனித்துவங்களுக்கு அடையாளம் கிடைக்கிறது. சின்னச் சின்ன விடயங்களை ஒருவன் ரசிக்கும் விதம், அதனை வாழ்க்கையின் இதர விடயங்களோடு, ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் இயல்பு எல்லாமே ஒவ்வொரு தனிநபர் சார்பிலும் வேறுபடும்.

இந்த வெவ்வேறு வகையான தனித்துவங்களின் கூட்டே, பின்னர், காலத்தின் மொத்த தனித்துவ இயல்பாக உணரப்படுகிறது. நிறம் என்ற இவ்வலைப்பதிவு, நேற்றோடு, அதன் ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

நாம் வாழுகின்ற உலகின் சம்பவங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும், அது தரும் வலி, துக்கம், சந்தோசம், மகிழ்ச்சி, பிரமிப்பு, எரிச்சல், கோபம் என விரிந்து செல்லும் உணர்வுகள் எல்லாமே ஒன்றாகியிருப்பது உண்மைதான். இங்குதான், வாசகன், எழுத்தின் வனப்பை தன் வாழ்தலின் அனுபவங்களோடு, பகிர்ந்து கொண்டு, எழுதப்பட்ட விடயத்தின் கனதியை உணர்ந்து கொள்கின்றான்.

கலைகள் எப்போதும், பார்வையாளனின் உணர்வுகளை அப்படியே சொல்லிவிடும் போது, அற்புதமாக பார்வையாளனால் ரசிக்கப்படுகிறது. அது அப்படித்தான் இருக்கவும் வேண்டும், அப்படியே இருக்கும்.

கடந்த நான்கு வருடத்தில் நிறத்தின் பதிவுகள் பற்றிய பலரினதும் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என்பன எனது பொழுதுகளின் மகிழ்ச்சியின் காரணங்களாக இருந்திருக்கிறது. நான் சேமிக்கக்கூடிய மகிழ்ச்சியின் ஊற்றாகவும் அதனை என்னால் சொல்லிவிட முடியும். அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். தொடர்ந்தும் நீங்கள் இணைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

பின்னூட்டம் சொல்லியனுப்பாவிட்டாலும், பதிவுகளை செய்தியோடைகள் (RSS) மூலம், நேரடியாக தளத்திற்கு வருகை தந்து பார்வையிடும் நண்பர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்கிறேன். தொடர்ந்தும் நீங்கள் நிறத்தோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நிறம் தொடரும்.

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன விடயங்களை பல நேரங்களில் எமது சிந்தனை சிறகை விரித்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்திவிடுவது தவிர்க்க முடியாததே! வாழ்தல் பற்றிய ஓர் அனுபவக் குறிப்பொன்றைத் தருகிறேன்.

சிந்திப்பதே எங்கள் பலம் என்ற விளம்பரங்கள் செய்வதற்கு மட்டுமே சிந்தனை பற்றிய தேவை இக்காலத்தில் இருக்கிறதோ என்ற கேள்வி எனக்குள் சிலவேளை எழுவதுண்டு. கேள்விகள் எழுவதும், அதற்கான விடைகள் சரியாகக் கிடைக்காமல் போவதும் விடைகள் கிடைத்த போது, அவை ஏற்றுக் கொள்ளப்படாமல், கேள்விகள் மாற்றப்படுவதும் ஆண்டாடு காலமாக வரும் வழக்கம். அது நமக்கு வேண்டாம்.

வழக்கங்கள் பற்றிய முக்கியத்துவம் என்பது சிந்திக்கத் தெரியாதவர்களுக்கே அதிகம் தேவைப்படும் என நான் ஏதோவொரு புத்தகமொன்றில் வாசித்திருக்கிறேன். அது உண்மை என்பதை நீங்கள் இயல்பாகவே கண்டு கொள்ள முடியும்.

வாழ்க்கையை ஒரு வட்டவடிவக் கேக் போன்றே நான் பார்க்கிறேன். ஒரு கேக் துண்டங்களாக்கப்பட்டு பகிரப்படுதல் என்பது இயல்பானதுதான். எத்தனை துண்டங்களாக வெட்டுகிறேனோ, அத்தனை பேருக்கும் அதனை வழங்க முடியும். வழங்குதல் என்பதன் அத்திவாரம், இங்கு இருக்கும் தொகையிலேயே தங்கியிருப்பது உண்மையானதே!

எல்லோருக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்று சிறு சிறு துண்டங்ளாக வெட்டப்பட்டு பகிரப்பட்டால், அதனைப் பெறும் எவரும் அதன் முழுச் சுவையையும் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக இருந்து விட்டால், நட்பின் அழகிய சுவை யாராலுமே நுகரப்படாமல் போய்விடும்.

எனக்கு மிக நேசமானவர்களுக்கு பெரிய கேக் துண்டை வழங்க நான் ஆசைப்படுவேன். அதுதான் இயல்பு.

இது நடைமுறைச் சாத்தியமானதா? என்று நீங்கள் கேட்கலாம். நாம் ஆயிரம் பேர்களோடு பழகலாம், ஆனால், ஒரு சிலரோடு மட்டுமே அர்த்தமுள்ள நேசத்தை கட்டியெழுப்ப முடியும். 150 அதிகமான நண்பர்களை யாராலும் வைத்திருக்க முடியாது என்றே Dunbar’s number சொல்கிறது.

நான் செய்யும் விடயத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே நான் சரியான விடயத்தை செய்கிறேன் என்று அர்த்தம் கொள்வேன். எல்லோரும் நீங்கள் செய்வதை விரும்புகிறார்கள் என்றால், ஏதோ பிழை நடக்கிறது என்றே அர்த்தம் கொள்ளப்பட வேண்டுமென எழுத்தாளர் போலோ சோலோ அண்மையில், தனது டிவிட்டர் தளத்தில் ட்விட்டடியிருந்தார்.

எல்லோரும் ஒருவனை ஏற்றுக் கொள்கிறார்கள், விரும்புகிறார்கள் என்றால், அவன் நடிக்கின்றான் என்றே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும். அவன் அவ்விடத்தில் தன் நிலையை விட்டு, வேறொருவனாக தன்னை உவமித்துக் காட்ட எண்ணுகிறான். எல்லோரையும் யாராலும் எப்போதும் திருப்திப்படுத்த முடியாது என்பது உண்மையே.

எல்லோரும் என்னை விரும்புகின்ற போது, உண்மையான நானாக நான் இல்லை என்பதை மனம் அடிக்கடி சொல்லும். அதை நான் ஏற்பவன். இதை நீங்கள், மற்றவர்களை ஒதுக்கி வைக்கப்படுவதே, இங்கு செய்யப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. உண்மையான என்னை விரும்புவர்களுடன் வாழுகின்ற போது, புதிய விடயங்கள் பற்றிய தேடலை என்னுள் தொடங்க முடியும். ‘நான்’ என்பது மட்டுந்தான் தனித்துவமானது, மற்ற எல்லாமுமே நகல்தான். இது எல்லோருக்கும் பொருந்தும்.

வாழ்க்கையில் நடிப்பதென்பது, இருக்க வேண்டாமே. நடப்பவைகள் தான் வாழ்க்கை.

அன்பு, வாழ்க்கை என்பன நிறைந்த எனது வட்டவடிவமான தனித்துவ கேக்கை எல்லோருமே விரும்பமாட்டார்கள். அது தான் வாழ்க்கை. நீங்கள் எப்படி உங்கள் கேக்கை பகிர்வீர்கள்?

– உதய தாரகை

9 thoughts on “ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

 1. வாழ்த்துகள் உதய தாரகை.

  நடிப்பு இல்லாத வாழ்க்கையைத்தான் நாம் விரும்புகிறோம், ஆனாலும் பல சந்தர்ப்ங்களில் நடிப்பும் வாழ்க்கையின் ஒரு பங்காகி விடுகிறது.

  • நடிப்பு என்று வருகின்ற போதே, நாம் எமது சுயத்தை இழந்த நிலைக்கு வந்துவிடுகிறோம். நாமல்லாத இன்னொரு விடயமாக எம்மைக் காட்ட அதிக சக்தி தேவைப்படுகிறது. இயல்பாக இருத்தல் என்பதற்கு மட்டுமே நாம் சக்தி பெற்றுள்ளோம். இந்தச் சக்தி பற்றிய அனுமானங்கள் பல நேரங்களில் யாரும் நம்புகின்ற மிகப் பொய்யான விதிகளையும் தோற்றம் பெறச் செய்வது கவலையே!

   தனி மனிதன் தொடர்பான இயல்பான சக்திகள் கொண்டு, ஆச்சரியங்கள் படைக்கலாம் என்பதை இன்றைய காலத்திலும், பலர் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் இருத்தல் என்பதே வாழ்க்கை. மற்றவர்களின் இருத்தல் என்பது நடிப்பு. வாழ்க்கையில் நடிப்பதற்காக யாரும் ஒஸ்கார் தருவதில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.

   நன்றி நிமல், உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • எந்த விடயமும் நாம் நோக்கும் கோணத்திலேயே அமைந்துவிடுகிறது. வாழ்க்கை மட்டுமல்ல, எல்லா விடயங்களும் எமக்குள் நாம் கட்டியெழுப்பியுள்ள ஆதாரமற்ற அனுமானங்களின் தொடர்ச்சியாக பலவேளைகளில், தோன்றுவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகியுள்ளது. அது பிழையில்லை. ஆனால், அது சரியுமில்லை.

   வாழ்க்கை, அழகு, ஆனந்தம் எல்லாமே நாம் தான். பலவேளைகளில், எம்மை நாமே மறந்துவிடுகிறோம். இன்னொருவனாய் நாம் எம்மை உருவகித்துக் கொள்ள தலைப்பட்டுவிடுகிறோம். இதுவெல்லாம், எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எமது நம்பாசையால் தான் உண்டாகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்கள் சொல்லியது போன்று, “நீ எல்லோரையும் திருப்திப்படுத்த எண்ணினால், ஈற்றில் உன்னால் ஒருவரையுமே திருப்திப்படுத்த முடியாது.” – உண்மை.

   “உனக்கு என்ன வேண்டும்?” என்ற கேள்விக்கு, பலரும், “எனக்கு வறுமை வேண்டாம்!” என்ற பதிலை வழங்குவதை சாமர்த்தியமான செயல் என எண்ணியிருப்பது பெருந் துயரம்.

   எண்ணம் தான் வாழ்க்கை. அழகிய கேக்காக வாழ்க்கையை நினைக்கலாமே! சுவை தரட்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் றம்ஸி. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s