(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 51 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
ஒவ்வொரு வருடத்தின் நகர்வும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகைப்பட்ட தருணங்களில் புரியத் தொடங்குவதுண்டு. அந்தத் தருணங்களில் முதன்மையானது பிறந்த நாட்கள் எனலாம். ஆனால், எல்லோருக்குமே வருடம் நகர்ந்துவிட்டது, புதிய வருடம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவது டிசம்பர் மாதமாகத்தான் இருக்க வேண்டும்.
“ஐயகோ, டிசம்பர் இப்போதே வந்துவிட்டதா? இனித்தான், இந்த வருடத்தில் நான் செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த 95 சதவீதமான விடயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும்!” என அண்மையில், நண்பனொருவன் டிவிட்டியிருந்தான். அதனைப் பலரும் நகைச்சுவை கலந்த இன்னொரு வாக்கியத் தொடராகவே கருதியதாய் அவர்களின் பதில்கள் எனக்குச் சொல்லியது.
நண்பன் சொன்ன அந்த விடயம், கவலைகள் பலவற்றைத் தன்னகம் பொதிந்ததாய் கொண்டிருக்கும் நிலை உணரப்பட வேண்டிய உண்மை.
ஓராண்டு கடந்து செல்கின்ற நிலையில், அது தந்த வலிமைகள், வலிகள் என எல்லாவற்றையும் கட்டாயம் ஆராய்ந்து பார்த்தல், அடுத்த ஆண்டினை ஆர்வத்துடன் எதிர்கொள்ள ஆதாரமாகவிருக்கும்.
கடந்த ஆண்டு, எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு தந்திருக்கும். அத்தோடு, கவலைகளையும் கொண்டு தந்திருக்கும். அப்படி இருக்கும் போதே, வருடம் என்கின்ற நிலை முழுமை பெறுகின்றது.
ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், அனைவரும் பல விடயங்களை குறித்த புதிய வருடத்தில் சாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு ஆட்டத்தை தொடங்குவார்கள். ஆனால், காலம் செல்ல செல்ல சாதிக்க நினைத்த எல்லாமுமே மறந்து போகத் தொடங்கும். மார்கழி மாதம் வந்ததும் சாதிக்க நினைத்த அத்தனை விடயங்களை சாமர்த்தியமாய் எண்ணங்களுக்குள் வந்து மீண்டும் குடி கொண்டுவிடும். இவை எல்லாவற்றையும் சாதிக்க நேரம் போதாதே! என்று மனம் சொல்லும். சாதனைகள் பின்தள்ளிப் போடப்படும். இதுதான் பொதுமைப்பாடான ஒரு வருடத்தின் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் உணர்வுகள்.
“நாம், நாளைக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளப் போய், இன்றைய பொழுதின் இனிமைகளைத் தொலைத்துவிடுகிறோம்” என்ற பிரபல்யமான மேற்கோள் – வாழ்க்கை பற்றிச் சொல்லும், ஒரு வரியிலான உண்மைக் கதை.
கடந்த ஆண்டு தந்த நினைவுகள் எல்லாமுமே சுந்தரமானதென்றே எனக்குத் தோன்றுகிறது. கடந்து விட்ட ஆண்டு எனக்களித்த அனுபவங்கள், ஆச்சரியங்கள், அனுகூலங்கள் என்பனவற்றில் பலதும் நீண்ட நாள் கனவுகளாகவிருந்தவை. அழகான ஆண்டு அது – எல்லா ஆண்டுகள் போலவுமே.
தோல்விகள் என்ற எதுவுமே கிடையாது. நாம் வெற்றிகளை கொஞ்சம் ஒத்திப்போடுகிறோம். ஒவ்வொரு ஆண்டுகளிலும் நாம் பெறும் எதிர்பாராத அதிர்ச்சிகள் கூட, அடுத்த கட்டத்திற்காக எம்மை
ஆயத்தப்படுத்தும்.
அமெரிக்காவினைச் சேர்ந்த தலைசிறந்த எழுத்தாளரும் உளவியலாளருமான Virginia Satir பற்றிய கட்டுரையொன்றை வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. அவர் கண்ட உலகம், உளவியல் சார்ந்ததாக இருந்தாலும், எளிமையான இயல்பான வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அவர் புரிந்து வாழ்ந்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.
அவர் சொன்னதாய் அக்கட்டுரையில் இடம்பெற்றிருந்த நீளமான அழகிய கூற்றொன்று என்னை ரொம்பவும் கவர்ந்தது. ஒரு வருடம் மறைந்து மறுவருடம் மலரும் தருவாயில் மட்டுமே அந்தக் கூற்று பொருந்தும் என நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு கணத்தின் மலர்ச்சியிலும் நாம் சுவாசிக்க வேண்டிய கூற்றுகள் அவை.
“இந்த உலகத்தில் முற்றும் என்னைப் போன்று யாராலும் இருக்க முடியாது. யாருமே இல்லை. என்னிடமிருந்து வெளிக்கொணரப்படும் எல்லாமுமே என்னால் தோன்றியவை, ஏனெனில், அதையே நான் தேர்ந்தெடுத்தேன். என்னைப் பற்றிய எல்லா விடயங்களுக்கும் நானே சொந்தக்காரி: எனது உடல், எனது உணர்வுகள், எனது வாய், எனது குரல், எனக்கோ அல்லது மற்றவருக்கோ நான் செய்யும் எல்லாச் செயல்கள் – எனது எல்லா வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் நானே பொறுப்பு, அதேபோல், எனது தோல்விகளுக்கும் தவறுகளுக்கும் நானே பொறுப்பு, ஏனெனில், எனக்கு நானே பொறுப்பாயிருக்கிறேன்.”
“என்னால், என்னோடு ஆழமாக நட்புக் கொள்ள முடிகிறது. அப்படிச் செய்வதனால், என்னை நானே காதலிக்க முடிகிறது, எல்லா நிலைகளிலும் நட்புப் பாராட்ட முடிகிறது. என்னைப் பற்றிய சில விடயங்கள் என்னையே புதிர் கொண்டு பார்க்கச் செய்வதையும் நான் அறியாத என்னைப் பற்றிய விடயங்கள் உள்ளது என்பதையும் நான் அறிவேன். ஆனாலும், என்னோடு நானே அன்பு செலுத்தி நட்பாய் இருக்கும் நிலையில், என்னால், நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் அந்தப் புதிர்களுக்கு தீர்வு தேட முடிகிறது. அதனால், என்னையே நான் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் புதிதாக உருவாகின்றன. இருந்தபோதும், ஒரு கணத்தில் நான் சொல்வதோ, செய்வதோ, நினைப்பதோ, உணர்வதோ நான் என்ற என்னையே குறித்து நிற்கிறது. நான் சொன்ன, செய்த, நினைத்த அல்லது உணர்ந்த விடயங்களில் எனக்கு பொருத்தமில்லாததாய் இருந்தால், அவற்றை புறந்தள்ளிவிட்டு, பொருந்தமானவற்றை எனக்காக வைத்திருக்க முடியும். புறந்தள்ளப்பட்ட விடயங்களுக்காய் புதிய விடயங்களைக் கண்டறிய முடியும்.”
“என்னால் காண, கேட்க, உணர, யோசிக்க, சொல்ல, செய்ய முடியும் – என்னிடம் பிழைத்து வாழ்தல், மற்றவர்களோடு அன்போடு பழகுதல், செயற்றிறனாய் வேலை செய்தல், என்னைத் தவிர்ந்த உலகத்தின் மக்களுக்கு அர்த்தமுள்ளவளாய் வாழ்தல் என்பவற்றிற்கான கருவிகள் உள்ளன. எனக்கு நானே சொந்தம் ஆதலால் என்னை நான் தேவையான வகையில், பொருத்தமான வகையில் கருவிகளைக் கொண்டு மாற்றம் செய்து கொள்ள முடியும் – நான் நான்தான், நான் நலமாகவிருக்கிறேன்.”
வார்த்தைகளின் வலிமை கண்டு வியக்கத்தான் முடியும். இந்த நேரத்தில் Oscar Wilde சொன்னவொரு விடயம் என் ஞாபகத்திற்கு வருகிறது. “நீ, நீயாகவே இரு. மற்றவர்கள் மற்றவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்.” என்ற கருத்துப் பொதிந்ததாய் அந்த மேற்கோள் அமைந்திருக்கும்.
எந்தக் கணத்திலும் ஒவ்வொருவரும் அவரவராகவே இருந்துவிடும் நிலையில், ஒவ்வொரு கணத்தின் மதிப்பும் அர்த்தமுள்ளதாய் மாறிவிடும்.
இதேவேளை, பிற குறிப்புகளில், WordPress.com ஆனது கடந்த ஆண்டில் நிறம் வலைப்பதிவு எந்தளவில் இயங்கியது என்பதைக் கணித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதில் பல விடயங்கள், புள்ளிவிபரங்கள் காணப்பட்டன. அந்த மின்னஞ்சலின் முன்பகுதியில் நிறம் வலைப்பதிவின் நிலை Wow என்பதாய் அமைந்திருந்ததாக சொல்லப்பட்டிருந்தது சுவை. சின்னச் சின்ன சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதும் கவிதை.
அந்த மின்னஞ்சலின் முதல் பகுதி உங்கள் பார்வைக்காக..
உங்கள் ஆதரவு புதிய வருடத்திலும் தொடரும் என்ற எதிர்பார்ப்புகளோடு, புதிய ஆண்டுக்கான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
– உதய தாரகை