(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 56 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இந்த பதிவை ஒலி வடிவில் கேட்க: இசை: A Rose in Haiti by mykleanthony |
வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும்.
வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். அது ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நாள். இசையில் நாயகன் ஏ. ஆர். ரகுமான், இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற நாள்.
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே! என்று ஏ. ஆர். ரகுமான் பாடுகின்ற பாடலும், வாழ்க்கை பற்றிய அழகைச் சொல்லிச் செல்லும்.
ஏ. ஆர். ரகுமான் அவர்கள் பற்றிய குறிப்புகளில் உத்வேகம் குடிகொண்டிருக்கும். நேற்று இசைப் புயல், ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கை சரிதத்தைக் கொண்ட உத்தியோகபூர்வ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. A. R. Rahman: The Spirit of Music என்பதுதான் அதன் பெயர். நஸ்ரின் முன்னி கபீர் என்ற எழுத்தாளரோடு, கலந்துரையாடிய சம்பாஷணை வடிவில் நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டு விழாவில், ஏ. ஆர். ரகுமானுடன் எழுத்தாளர் நஸ்ரின் முன்னி. [நிழற்பட மூலம்: AR Rahman FB Page.]
என்னதான் சாதனைகள் செய்துவிட்ட போதிலும், தன்நிலையில் என்றுமே அடக்கமாயிருந்து, தன் காரியங்களில் அமைதியாகவே, கருமங்கள் செய்வதில் ஏ. ஆர். ரகுமானுக்கு நிகர் அவர் மட்டுந்தான். அதிகமே பேசாதவொரு ஆளுமையின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை அறிந்து கொண்டு, அதனை நூல் வடிவிற்கு கொண்டுவருவதென்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல.
அதிகமாகப் பேசாத ஒருவரின் வாழ்க்கை பற்றிய விடயங்களை தொகுப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? நஸ்ரின் முன்னி, எட்டு வருடங்களாக ரகுமானைத் தொடர்ந்து, இந்த சுயசரிதை நூலைத் தொகுத்துள்ளார். இந்த எட்டு வருட காலங்களுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கையில் ஏற்பட்டன. தமிழ், ஹிந்தி திரையுலகின் பிரபல இசையமைப்பாளரிலிருந்து, ஒஸ்கார் விருதுகளை வென்ற மேற்கத்திய சினிமாக்களுக்கும் இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறியதும் இதற்கிடையில் தான் நடந்தது.
தனது இளமைக் காலத்தில், வாழ்க்கை மீதான வெறுப்பு மிகவும் அதிகமாக இருந்ததாக, ஏ. ஆர். ரகுமான் சொல்ல, அதனைக் கேட்ட நஸ்ரின் முன்னிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.
“என்னிடமிருந்த அந்தப் பணத்தின் மூலம், எனது முதலாவது Fostex 16-track mixer/recorder ஐ நான் வாங்கினேன். அந்தக் காலத்தில் சென்னையின் சினிமாக்களில், இசை ஒரு தனித்த பாடல் நிலையிலேயே பண்ணப்பட்டது, ஆனால் என்னிடம் 16 பாடல்கள் கொண்ட நிலையிருந்தது. அந்த காலப்பகுதியில் நான் பெற்ற இடர், அவமானம், மற்றவர்களால் நான் கட்டுப்படுத்தப்பட்டமை, எனது குடும்பத்தின் முகத்தில் கவலையைக் கண்டு கொண்டமை, தாழ்வுச் சிக்கலை எப்படி உணர்வேன் என யோசித்தமை, போதிய தன்னம்பிக்கை இல்லாமை, ஏன் சில நேரங்களில் – உயிரையே மாய்த்துக் கொள்வோமா என்று யோசித்தமை போன்ற எல்லா உணர்ச்சிகளும் மெல்லவே மறையத் தொடங்கின.
அந்த இரவில், இசையரங்கில் நான் அமர்ந்திருந்து கொண்டு, எனது புதிய recorder ஐ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது, நான் என்னை அரசனாக உணர்ந்து கொண்டேன். நான் புதியவனாய் உதயமானேன். ஒளிமயமான எதிர்காலம் பற்றிய சமிஞ்சை எனக்குத் தோன்றியது!” என்கிறார் ரகுமான்.
இதனைக் கேட்ட, நஸ்ரின் முன்னியோ அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா? என்று அவர் கேட்க, ரகுமான் அதற்கு “நம்பிக்கையே இல்லாமலிருந்தது. எப்படித்தான் இந்த விடயங்களிலிருந்து மீளப் போகிறேனோ? என்று பலவேளைகளில் நான் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.!” என்று பதிலளித்துள்ளார்.
அடக்கமாகவே, வாழ்க்கை பற்றிய அழகு நிலைகளைச் சொல்கின்ற இசையமைப்பாளரின் சிந்தனையோட்டம் தெளிவானது. அவரின் தேவைக்கதிமாக கதைக்காத நிலை மாறவேயில்லை. ரகுமானாகவே இருந்தார். இருக்கிறார். இந்த நூல் வெளியீட்டையொட்டி ராயிட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய ஒரு நிமிட சுருக்கமான பேட்டி, வாழ்க்கை பற்றிய பல விடயங்களை சொல்லி நிற்கிறது.
அந்தக் குறுகிய பேட்டியிலிருந்து, சில பகுதிகளை நான் இப்பதிவின் தேவை கருதி, தமிழாக்கம் செய்கிறேன்.
கேள்வி: நீங்கள் வெறுப்பு, அன்பு ஆகியவற்றிக்கிடையில் தேர்ந்தெடுத்தல் பற்றிக் கதைத்துள்ளீர்கள். நீங்கள் வெறுப்பை அல்லது ஒருவேளை பகையை, உங்கள் ஒஸ்கார் சாதனைகளின் பின்னர் அனுபவித்ததுண்டா?
ரகுமான்: ஒவ்வொரு விடயமும் அதற்கான எதிரான விடயத்தைக் கொண்டுள்ளதென நான் நினைக்கிறேன். உங்களிடம் புகழ், அந்தஸ்து என எல்லாமுமே இருக்கின்ற நிலையில், அதற்கெதிரான விடயங்கள் உங்களைத் தேடிவரும் என ஆன்மீகமும் சொல்கிறது. ஆகையால், நான் அதற்காக காத்திருந்தேன். அது வந்தது, ஆனாலும் என்னால் அதனை கையாள முடிந்தது. அது அவ்வளவு நாசகாரமானதாக இருக்கவில்லை: நான் நினைத்தது போலவேயிருந்தது, ஆன்மீகமும் எனக்கு துணையாகியது. அது நடக்குமென்பதை அப்படியே எதிர்வுகூற முடியும். நான் 13 வயதிலிருந்தே பிரபல்யமாகயிருந்தேன் – இப்படியாக பழகிவிட்ட நிலையில், ஒரு விடயம் சார்பாக நல்ல வகையில், பார்ப்பதற்கான ஆர்வம் உங்களுக்கு வரும். அந்த நிலையில், நீங்கள் ஆக்கபூர்வமாக விடயங்களை காண்பதற்கும், அதன் மூலம் என்ன செய்யலாம் என்கின்ற எண்ணங்களாலும் போஷிக்கப்படுவது நிராசையாகவே நடந்தேறும்.
கேள்வி: பொதுநலவாய நாடுகளுக்கிடையான விளையாட்டுப் போட்டிக்கான பாடல் பற்றி நீங்கள் விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள். அது உங்களை பாதித்ததா?
ரகுமான்: தோற்றுப் போவதற்கும் எனக்கு சந்தர்ப்பங்கள் வேண்டுமென, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ( சிரிக்கிறார்.)
கேள்வி: அதை நீங்கள் தோல்வியாகப் பார்க்கிறீர்களா?
ரகுமான்: ஆம் மற்றும் இல்லை. விளையாட்டு போட்டியின் பின்னர், ஆக்கபூர்வமான பல நிலைகள் தோன்றின. ஆனாலும், சிலருக்கோ, எதிர்மறையான விடயங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும், அது பரவாயில்லை.
எதுவுமே அலட்டிக் கொள்ளாமல், அமைதியாகவே சாதனை மேல், சாதனை செய்கின்ற ஆளுமைகள் சொல்லிச் செல்கின்ற ஒரேயொரு விடயம் – தன்னம்பிக்கை தான். “தன்னை நம்புகின்ற நிலையில், மனிதன் தன்னைச் சூழவுள்ள மனிதர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறான், இதனால், அன்பினால் வலுப்பெற்ற உறவுகள் பிறக்கிறது. அடக்கம், ஆதரவு என்ற பண்புகள் நிராசையாகவே அவர்களிடையே தோன்றியும் விடுகிறது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
பயனுள்ள ஒரு பகிர்வு. இப்படி ஒரு புத்தகம் வந்ததே இப்போது தான் தெரியும். தமிழப்படுத்திய பகுதிகளும் பயனுள்ளவையே.
நன்றி.
ஒரு சாதனையாளர் பற்றிய செய்தி; பல சாதனையாளர்களை உருவாக்கும், என்பதற்கு எடுத்துக் காட்டு கூறும் பதிவு. எதேச்சையாய் சிலரின் பதிவுகளை பார்த்து மறுமொழிக்கலாமே இரு வந்த பயணத்தில் ‘ஒரு வாழ்வின் பயணத்தின்’ நுணுக்கம் புத்துனற்சியினை தருகிறது…
நன்றிகளுடன்…
வித்யாசாகர்
@நிமல்,
நன்றி நிமல், உங்கள் கருத்துக்கும் மறுமொழிக்கும்.
@வித்யாசாகர்,
நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
ஒலிவடிவ பதிவை கேட்டபடி வாசிப்பது இன்னமும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. அப்படியே இனி நீங்கள் பாடவும் செய்யலாம்… 🙂