அந்தவொரு சொல் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கருத்துக்களின் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு முக்கியமானது. எண்ணங்களின் அழகிய நிலைகளைச் சொல்வதற்கு சொற்கள் தன்னகம் கொண்டுள்ள சக்தியை எண்ணி வியக்கத்தான் முடியும்.

எதிர்பாராத நிலைகளில் நாம் எதிர்நோக்கும் கேள்விகள், வேண்டி நிற்கும் பதில்கள் பற்றிய ஆச்சரியம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. அந்தக் கணத்தில் நாம் கேள்விக்கான விடையைத் தேடி, விடை சொல்ல முடியாமல் இருந்த நிலைகளும் தோன்றியிருக்கலாம். கேள்விக்கான விடை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென நாம் கேட்கப்படும் போது, இந்த இக்கட்டான நிலை தோன்றிவிடுவது இயல்பானதே.

“உங்களை நீங்கள் ஒரு சொல்லில் விபரித்தால், அந்தவொரு சொல் என்ன?” என்ற கேள்விதான் அது.

என்னிடம் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சிப் பட்டறையொன்றின் போது, இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, உடனடியாகவே நான் பதில் சொன்னேன். அதுபோலவே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் தன்னைப் பற்றிய விபரிப்பைக் கேட்டுக் கொள்ள, இதுவரை இந்தக் கேள்வியை நான் பல நேரங்களில் பலரிடமும் கேட்டிருக்கிறேன். பலரும் தங்களை விபரிக்கும் வகையில் ஒரு சொல்லை தருவதற்கு தடுமாறினார்கள்!

அப்படியான சந்தர்ப்பங்களில், “உங்களால், உங்களை விபரிக்க முடியாமலிருக்கிறதா?” என்ற கேள்வியை அவர்களிடம் மீண்டும் கேட்பதை விட, ஒருவேளை, தங்களை விபரிப்பதற்கு அவர்களுக்கு ஒரு சொல்லைவிட அதிகமான சொற்கள் தேவைப்படுகின்றதோ என்னவோ என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

ஆனால், நாம் வாழும் சூழல் பற்றிய அவதானிப்புகளில் இருக்கும் சந்தர்ப்பங்களில், ஒரு விடயம் சார்பான விடயங்களை விபரமாகச் சொல்லும் நிலையில் மாத்திரம்தான் அங்கு வணிகம் தொடங்கி உறவுகள் வரை தொடர்புகள் அரும்பு விடுகின்றன. விபரமாகச் சொல்தல் என்பது எமது கட்டமைப்புக்குள் வந்துவிட்ட இயல்பான விடயமாகிவிட்டது.

“உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்ற எமது விசாரிப்புகளுக்கோ அல்லது நாம் எதிர்நோக்கும் அவ்வாறான விசாரிப்புகளுக்கோ வழங்கப்படுகின்ற விடை, குறித்த நபர் பற்றிய தேவையான விடயங்களை அப்படியே சொல்லிவிடுவதுமில்லை என்பது கசப்பான உண்மை. நாம் எம்மைப் பற்றிய விடயங்களை தெரியாமல் தான் இருக்கின்றோமா? என்ற சந்தேகம் இந்நிலையில் இயல்பாகவே தோன்றும்.

உங்களைப் பற்றி ஒரு சொல்லில் உங்களால் சொல்ல முடிந்தால், உங்களால் அந்தவொரு சொல் பெற்றுக் கொள்ளும் பலம் வியக்கத்தக்கது. மொழியில் சொற்களுக்கான பலமோ அலாதியானது.

இது இப்படியிருக்க, நாம் வாழ்கின்ற சூழலில் எம்மையறியாமலேயே எம்மைச் சூழவுள்ளவர்களை நாம் ஒரு சொல் கொண்டு அடையாளப்படுத்துவதையும் நான் அவதானித்திருக்கிறேன். “அவர் ரொம்ப நல்லவர்,” “அந்தாள் கோபக்காரர்,” “அவரோ ஜாலியானவர்,” “அவளுக்கு பொறாமை,” “அவங்க ரொம்ப அமைதியானவங்க” என்றெல்லாம் தனிமனிதர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு ஒரே மாதிரியான நிலைக்குள் மற்றவர்களால், தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு தனிமனிதன், வெளியுலகத்திற்கு தோன்றுவதைக் காட்டிலும் அவன் சார்பான உலகில் அவன் பற்றிய அவதானிப்புகளில் அவனுக்கு பல பரிமாணங்கள் இருக்கும். அத்தனை அழகிய பரிமாணங்களுக்கு தன்னால் வழங்கக்கூடிய அந்தப் பலமிக்க ஒரு சொல்லை அவன் கண்டறிகையில் அவன் சார்பான உலகம் தெளிவடைகிறது என்றே நான் கருதுகிறேன்.

காலங்கள் செல்லச் செல்ல நாம் சேர்த்துக் கொள்ளும் அனுபவங்கள் எம்மை வாழ்வின் அழகிய நிலைக்குள் புடம் போட வைக்கலாம். ஆனால், இந்த நிமிடம் தான் வாழ்க்கை. இந்தக் கணத்தில், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள எந்தவொரு சொல்லை பயன்படுத்துவீர்கள். சொல்லியனுப்புங்கள்.

“‘ஒரு சொல்லாவது சொல்லமாட்டாயா?’ என்று பலரும் ஏங்கிக் காலம் கழிப்பதென்னவோ, இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது” என்று கோபாலு சொல்லச் சொன்னான். “இந்தப் பதிவிற்குள் நீ சொல்வதை சொல்ல முடியுமா?” என்று அவனுக்கு பதில் சொன்னேன்.

– உதய தாரகை

One thought on “அந்தவொரு சொல் என்ன?

  1. வித்தியாசமான பதிவு…

    என்னைப்பற்றி விபரிப்பது மற்றவர்களை விபரிப்தைக் காட்டிலும் கடினமானதாகவே இருந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல நாம் வெளிக்காட்டும் எமது தோற்றத்தை விடவும் நாம் பரந்துபட்டவர்களாக எம்முள் உணர்வது இதற்கு காரணமாகலாம்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s