எண்ணம். வசந்தம். மாற்றம்.

திருப்தியைத் தொலைத்தவர்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எம்மைச் சூழவுள்ள பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியதாக இருந்தபோதிலும், அந்தப் பெரிய நிலை தாண்டிய அமைவை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை என்றே, நாளுக்கு நாள் நான் கேட்க நேரிடும் முறைப்பாடுகள் எனக்குச் சொல்லிச் செல்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமுமாக வேண்டிய தேவை இருக்கின்றது எனக்குப் புரிகிறது.

திருப்தி என்பதன் வரையறுப்பதென்பது, கலாசார தன்மையை ஒட்டியதொரு செயற்பாடென்றே நான் கருதுகிறேன். இங்கு திருப்தியை, இரண்டு வகையில் இனங்கண்டு கொள்ளலாம். ஒன்று, நாம் திருப்தியைப் பெற்றுக் கொள்ளல், மற்றது மற்றவர்களைத் திருப்திப் படுத்துதல். இந்த இரண்டாம் நிலை விடயத்தை செய்யப்போய் முதல் நிலையில் தம் திருப்தியை முற்றும் தொலைத்தவர்களின் வரலாறுகள் தான் இங்கு அதிகம்.

இன்றைய நவீன காலத்தின் தன்மைக்கேற்ப வணிகவியல் சார்ந்த அர்த்தமுள்ள அவதானிப்புகளைச் சொல்கின்ற செத் கோடின் சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் “எல்லோரையும் திருப்திப்படுத்துவதென்பது முடியாத காரியம். எமது அன்பான வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதோடு மட்டுமல்லாது, எம் நிறுவனத்தில் வேலை செய்வோரையும் எரிச்சலூட்டும் தன்மையையே ‘இந்த எல்லோரையும் திருப்திப்படுத்தும் படலம்’ தோற்றுவிக்கும்” என்கிறார்.

மிகவும் எளிமையாகச் சொல்வதானால், அன்றாடம் ஒவ்வொருவரும் தாம் பாவிக்கும் நல்ல நிலையான பொருள்கள் பற்றிய விடயங்களை பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்வதில் காட்டும் ஆர்வத்தை, அந்தப் பொருளின் உற்பத்தியாளனுக்கு சொல்ல முனைவதில்லை. இதுதான் உண்மை. இதில் பிழையுமில்லை. ஆனால், தாம் பாவிக்கின்ற பொருளில் தமக்கு திருப்தி உண்டாகாவிட்டால், உடனடியாக உற்பத்தியாளனுக்குத்தான் பிழைகள் பற்றி காரசாரமாகச் சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில், உற்பத்தியாளனோ, தன் பொருளை விரும்பாத வெறும் 2 சதவீத மக்களின் மறுமொழிகளைக் கண்டு, தன் பொருளை திருப்தியாகப் பாவிக்கும் 98 சதவீதமான மக்களையும் மறந்துவிட்டு, அந்த இரண்டு சதவீத மக்களைத் திருப்தி செய்யும் முனைப்பில் தன்னை இணைக்கிறான். இதற்கு 98 சதவீதமான மக்கள், அவர்கள் பெற்ற திருப்தியை அவனோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும், இதனால், 2 சதவீதமான வெறுப்பேற்றும் கடிதங்கள் அவனின் அழகிய வணிகத்தை அலங்கோலம் செய்யும் வலிமையைப் பெற்றுக் கொள்கிறது.

இவ்வாறு வெறும் 2 சதவீத வெறுக்கும் பகுதியினரை திருப்தி செய்யப் போவது, எமது திருப்தியை நாம் தொலைப்பதிலேயே முடியும் என்கின்ற விடயம் தெளிவானது. இந்த நிலை வெறும் வணிகத்தில் மட்டுந்தான் இருக்கிறது என்று நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. இதே நிலை வாழ்க்கையிலும், தொடர்ச்சியாக வந்து கொண்டுதான் இருக்கும்.

எல்லோரையும் திருப்திப்படுத்தப் போய், வாழ்வின் அழகிய தருணங்களை தொலைத்தவர்கள் தான் அதிகம். கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.

நமது கதையில் — ஒரு கழுதை, ஒரு சிறுவன் அத்தோடு அவனின் பாட்டன் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள். ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள சந்தையொன்றுக்கு சென்று கழுதையை விற்றுவிட்டு தமது வாழ்வாதாரத்திற்கான பணத்தை பெறும் நோக்கோடு, பேரனும் பாட்டனும் பயணத்தை தொடர்கிறார்கள். அந்தப் பயணம், அவர்கள் எண்ணியது போல், மகிழ்ச்சியைக் கொடுப்பதாய் அமையவில்லை.

செல்கின்ற வழியில் நிறையப் பேரைச் சந்தித்தார்கள். “என்ன கொடுமையிது? சின்னப் பையன் நடக்க, இந்த மனிசன் கழுதைக்கு மேல இருந்து கொண்டு போகிறான். வெட்கக்கேடு, சிறுவர்களை மதிக்கத் தெரியாதவனாய் இருப்பான் போல” என பாட்டனைப் பார்த்து அவ்வழியால் எதிர்ப்பட்டவர்கள் சொல்லிச் சென்றனர்.

இதனைக் கேட்ட பாட்டனோ, அதுவும் சரிதான் என எண்ணி, தனது பேரனை கழுதையில் மேல் ஏற்றிவிட்டு, இனி யாரும் நம்மை விமர்சிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு நடக்கலானார். “இது பெரிய கேலியாயிருக்கே!! அந்தக் கழுதையில் வயதான இந்த ஆள்தான் இருந்து கொண்டு போகவேணும். என்னதான் இந்த உலகத்தில் நடக்குது? இப்போ, முதியோர்களுக்கு யாரும் மரியாதையே கொடுப்பதில்லை” என்று இன்னொரு எதிரே வந்த குழுவினர் சொல்லத் தொடங்கினர்.

இதைக் கேட்ட பாட்டனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே, தனது பேரனோடு, தானும் ஒன்றாக கழுதையில் மேலே ஏறி பயணத்தைத் தொடர்ந்தார். “அடப்பாவிகளா! இந்தச் சின்ன கழுதை, இப்படி ரெண்டு உருப்படியான மனிசனுகள ஏத்திக் கொண்டு செல்லனுமா? என்ன பாவம் செய்தது, இந்தக் கழுதை. விலங்குகளிடம் கருணை காட்டவே தெரியாதா இவங்களுக்கு?” என்று இன்னொரு தரப்பினர் போகின்ற வழியில் சொல்லத் தொடங்கினர்.

இப்படியாக எந்த முறையில் பயணத்தைத் தொடர்ந்த போதும், அதனை விமர்சிப்பதற்காக புதிதாக பலரும் வழியெதிரே தோன்றிக் கொண்டுதான் இருந்தார்கள்.

“எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமாகாதொன்று. அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஈற்றில் தங்கள் திருப்தியையும் தொலைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவமாகவே உலகில் உதிக்கின்றான். அதற்கேற்ப தனித்துவமான பாதையில் பயணத்தைத் தொடர்வதுதான் முறை,” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்