(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இந்த வாரத்தின் புதன் பந்தல், சௌகரிய வலயம் பற்றிய விடயத்தை குட்டி யானையொன்றின் இயல்போடு அலசுகிறது.

குட்டி யானையை, அதன் பாகன் மிகச் சிறியதொரு அளவான இடத்திலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறான். பூமிக்குள் ஆழமாக பதிக்கப்பட்ட மரத்தாலான மெல்லிய கம்பமொன்றில் யானையின் கால், கயிற்றினால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நீளமோ, குறித்த யானையை வளர்க்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பொருந்தும் வகையிலேயே காணப்படும். அவ்வளவு தூரம் மட்டுந்தான் யானையால் நகர முடியும் — அது தான் யானையின் சௌகரிய வலயம்.
இருந்தபோதிலும், குட்டி யானை கயிற்றை அத்துவிட முயற்சி செய்யும். ஆனாலும், குட்டி யானைக்கு அந்தக் கயிறு மிகவும் வலிமையானது. இதன் காரணமாக தன்னால் அந்தக் கயிற்றை அத்துவிட முடியாது என்ற முடிவுக்கு அது வந்துவிடும். ஆக, குறிப்பிட்ட கயிற்றின் நீளத்தை ஒத்த அந்த சிறிய பிரதேசத்திற்குள் அப்படியோ இருக்கக் கற்றுக் கொள்ளும்.
ஆனாலும், பின்னர் யானை 5 தொன் எடையுள்ள மிகப்பெரிய உருவமாக வளர்ந்த போதிலும், அந்தக் கயிற்றை அத்துவிட முயற்சி கூட செய்வதில்லை. ஏனெனில், சின்ன வயதில் தன்னால் முடியாதென்று கண்டு கொண்ட விடயம் அதனை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது. இப்படியாக மிகப் பெரிய யானையொன்று, மெல்லிய கயிற்றினால் கட்டிவைத்து ஆளப்படுகிறது.
மனிதனின் இயல்பும் இது போலத்தான் அமைந்தும் விடுகிறது. இளமைக் காலத்தில் மனிதன் உள்வாங்கிக் கொண்ட மட்டுப்படுத்தும் நம்பிக்கைகள், எதிர்மறையான எண்ணங்கள் என்பனவெல்லாம், ஒரு வலயத்தைத் தாண்டி தன்னால் பயணிக்க முடியாதென்ற விம்பத்தை அவனிடம் தோற்றுவித்து விடுகின்றது. இதுவே, அவனின் சௌகரிய வலயமாக ஆகிவிடுகிறது.
சௌகரிய வலயம் என்பது தனிமனிதனால் தனக்கு விதித்துக் கொள்ளப்படும் வரையறைகள் தாம். அதனாலேயே இது நிரந்தரமானதல்ல. இது தற்காலிகமானது. மாற்றிவிடலாம்.
வாழ்க்கையின் மொத்த அழகிய அமைவை பின்வரும் வென்வரிப்படம் (தொடை) அழகாகச் சொல்லும். சற்று கூர்ந்து அவதானியுங்கள்.

மூலம்: Keri Smith – Flickr Link | வரிப்படத்தை மெருகேற்றி தமிழ்ப்படுத்தியுள்ளேன்.
நீங்கள் உங்களை எந்த வலயத்திற்குள் தங்க வைத்துக் கொண்டுள்ளீர்கள்? சௌகரிய வலயங்களில் தம்மைத் தக்க வைத்துக் கொண்டு தன்பக்க நியாயங்களை பட்டியற்படுத்திவிட எல்லோராலும் தான் முடியும். ஆனாலும், “நாம் எதுவாக ஆகவேண்டுமென்கின்ற விடயத்தை, நாம் இருப்பது போலவே இருந்து கொண்டு பெற்றுக் கொள்ள ஒருபோதும் முடியாது,” என்று அமெரிக்க எழுத்தாளர் மெக்ஸ் டி ப்ரீ சொல்லியிருப்பார்.
வரிப்படத்திலுள்ள ‘இ’ வலயம் தான், வாழ்வை வெல்ல வேண்டுமென்ற ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய வலயம். ‘ஆ’ வலயத்திற்குள் உங்களை இருத்திக் கொண்டிருந்தால், ‘இ’ வலயம் சென்று இமயம் தொட இதுதான் சந்தர்ப்பம்.
“புதிதாக விடயங்களை செய்யத் தொடங்கும் போதுதான், உன்னால் ஆச்சரியங்களையும், அசௌகரியங்களையும், இசைவற்ற நிலைகளையும் கண்டு கொள்ள முடியும். அங்கு தான் நீ மனிதனாக புடம் போடப்படுகின்றாய்!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
Like this:
Like ஏற்றப்படுகின்றது...