(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது.
சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன்.
அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென கீழே விழுந்து விடுகிறான், “ஆ…..ஆ….” என்ற கத்துகின்றான்.
அவனுக்கு ஆச்சரியம் தருவதாய்ப் போல், மலையின் ஒரு புறத்திலிருந்து, “ஆ…. ஆ… ” என்று அவனுக்கு மறுமொழி கேட்கிறது.
இதைக் கேட்ட பையனோ, “நீங்க யாரு?” என்று கத்திக் கேட்கிறான்.
“நீங்க யாரு?,” என்ற பதிலைப் பெறுகின்றான்.
“நான் உங்களை நேசிக்கிறேன்!” என்று மலையை நோக்கி கத்துகிறான் அந்தப் பையன்.
அந்தக் குரல், “நான் உங்களை நேசிக்கிறேன்!” என்று பதில் சொல்கிறது.
இப்படியாக பதில்களைக் கேட்டுக் கொண்டிருந்த பையனுக்கு கோபம் மேலிட்டது. “நீயொரு கோழை” என்று பதிலளிக்கிறான்.
“நீயொரு கோழை” என்று அவனுக்கு அந்தக் குரலிடமிருந்து பதில் கிடைக்கிறது.
அந்தப் பையன், அப்பாவை நோக்கி, “இங்க என்னதான் நடக்கிறது அப்பா?” என்ற ஆர்வத்துடன் கேட்கிறான்.
“மகனே, கூர்ந்த அவதானி” என்று பையனை நோக்கி சொல்லியவாறு, “நீயொரு வீரன்” என்று கூக்குரலில் உரக்கச் சொல்கிறார்.
“நீயொரு வீரன்” என்று அந்தக் குரல் பதில் சொல்கிறது.
பையனுக்கோ, ஆச்சரியம் கலந்த தெளிவின்மை தோன்றியது. அவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமலிருந்தது.
அப்பா அவனை நோக்கி, “மகனே, இதனை மக்கள் எதிரொலி என்பார்கள். ஆனால், இதுபோன்றதுதான் வாழ்க்கையும்.
நீ சொல்வது, செய்வது என எல்லாவற்றையும் அது உனக்கு திருப்பித் தரக்கூடியது. எமது செயல்களின் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் எமது வாழ்க்கை. உன்னைச் சூழ்ந்த வட்டாரத்தில் உனக்கு அன்பு தேவைப்பட்டால், உன் மனதை அன்பினால் நிறைத்துக் கொள். உன் குழுவில் அதிக தேர்ச்சி தேவைப்பட்டால், உன் திறன்களை வளர்த்துக் கொள். வாழ்க்கைக்கு நீ எதை வழங்குகிறாயோ, அதையே அது உனக்கு திரும்பத் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்,” என்று சொன்னார்.
வாழ்க்கை என்பது தற்செயலாக நடக்கின்ற ஒரு சம்பவமல்ல. ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையும், அந்தத் தனிநபரின் பிரதிபலிப்பு என்பது மட்டுமே உண்மையானது.
“உலகத்தில் என்ன மாற்றம் வரவேண்டுமென நீ எண்ணுகின்றாயோ, அதை உன்னிடம் முதலில் கொண்டு வந்து, அந்த மாற்றமாகவே உருவாகு” என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார் என்பதை கோபாலு ஞாபகப்படுத்தினான்.
– உதய தாரகை