(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இந்த வாரத்தின் புதன் பந்தல், எண்ணங்களின் தெரிவு பற்றி சொல்கிறது.
“ஒருவன் தனது மனப்பாங்கினை மாற்றிக் கொள்வதன் மூலம், அவனின் வாழ்க்கையையும் மாற்றிவிடக்கூடிய ஆற்றல்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்று 1900களில் எழுதிய நவீன உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் ஒரு தடவை குறிப்பிட்டார்.
மனப்பாங்கென்பது, எமது எண்ணங்களின் வடிவம். மனதில் கொண்ட எண்ணங்கள்தான் வாழ்வின் செயல்களாய் வடிவம் பெறுகிறது.
மகிழ்ச்சியை எண்ணியவன் மகிழ்ச்சியை அனுபவிக்க, துக்கத்தை எண்ணியவன், அது பற்றிய துயரத்தில் தொலைந்து போய்விடுவதும் இந்த எண்ணங்களின் இயல்பிலேயே தோன்றுகிறது.
மனதின் நிலையில், எண்ணங்களின் காட்டுகின்ற செல்வாக்கு பற்றி நாம் நாளாந்தம் எம்மையறியாமலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கு மனதில் கொண்ட எண்ணங்களின் நிமித்தம் தான் ஒருவனின் அத்தனை இயல்புகளும் அடையாளம் கொள்கிறது. கோபமாய் எண்ணுபவனால் மட்டும் தான் கோபமாகத் தன்னை வெளிப்படுத்த முடியும். சந்தோசமாக எண்ணியவன், கவலையாய் தன்னை வெளிப்படுத்திய சரித்திரம் இல்லை. எண்ணம் — வலிமை.
ஆனாலும், இந்த எண்ணங்களின் இயல்பான வலிமை பற்றிய தெளிவு எம்மிடம் இருந்தாலும், அது பற்றிய ஐயங்களும் முற்று முழுதான மறதியும் தொற்றிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம் தோன்றுகின்றதென நான் எண்ணுகிறேன்.
இயல்பான உண்மைகளை அறிந்து கொள்வது அவ்வளவு லேசுபட்ட விடயமல்ல. இயல்பான விடயந்தானே என்று பல உன்னதமான விடயங்கள் ஒவ்வொரு பொழுதும் ஒதுக்கப்படுவது — கவலை.
“இது எங்களுக்கும் தெரியும். இதில என்னயிருக்கு?” என்ற எதிர்க்கேள்விகளுக்குள், பல கண்கூடான இயல்பு நிலைகள் பற்றிய புரிதல்கள் எத்தி வைக்கப்படாமலேயே போய்விடுவது நடப்பது இயல்பாகிவிட்டது.
இங்கு எல்லோருக்கும் சர்வமும் தெரிந்தவராய் தம்மைக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது எனக்குப் புரிகிறது. கட்டாயங்கள் மூலம் தனிமனிதன் ஒருவன் தன் சூழல் சார்பான புரிதல்களை தொலைத்துவிடுவது பற்றியும் அவர்கள் புரிதல் வேண்டுமென்ற அவசியமும் இருக்கிறது.
எண்ணங்களை போஷிக்கின்ற நிலையில், வாழ்கின்ற சூழலும் பழகின்ற மக்களும் கொண்டுள்ள ஆதிக்கம் அலாதியானது. மனதின் தீர்மானங்களின் அடிப்படையில் எண்ணங்களின் தெளிவுதான் ஆதாரமாகின்றது.
ஒவ்வொரு நாளும் ஒருவன் கொண்டுள்ள சுமார் ஐம்பதாயிரம் எண்ணங்களை எவ்வாறு ஆக்கிக் கொள்ள வேண்டுமென்கின்ற தெரிவு, அவன் கையிலேயே இருக்கிறது.
மகிழ்ச்சியா? வெறுப்பா? கோபமா? கவலையா? எல்லாமே உங்கள் தெரிவிலேயே தங்கியிருக்கிறது.
தெரிவு.. தெரிவு.. தெரிவு.. தேர்ந்தெடுப்பது ஒரு கலை.
– உதய தாரகை