(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது.
மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.
எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், கடந்து போகின்ற ஆண்டில் அரங்கேறிய அழகைக் கண்டு மகிழ்கிறேன்.
கடந்து செல்கின்ற ஆண்டில், சந்திக்க வேண்டுமென கனவு கண்ட பலரையும் இன்னும் பல்வேறு துறைகளில் தங்களை நிலை நிறுத்திய பலரையும் சந்தித்து அவர்களது அனுபவங்களோடு பயணிக்கின்ற வாய்ப்புக் கிட்டியது.
புரிந்துகொள்கின்ற ஆத்மாக்களின் இணைப்புக் கிடைத்தலின் அனுபவம் புரிந்து கொள்ளப் படலாம் — புரியவைக்க முடியாது.
மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், கவலை, வெறுப்பு, காத்திருப்பு, பரிவு, பச்சாதாபம் என ஒவ்வொரு நிமிடமும் வழங்கிய ஆயிரம் உணர்வுகளை எனது அனுபவங்களின் அத்தியாயங்களுக்குள் அடக்கிக் கொள்கிறேன்.
அடுத்த நிமிடம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களின் வெளிப்பாடுதான், அனுபவங்களின் அத்தியாயங்களை பலவேளைகளில் நிரப்பி விடுகின்ற உண்மையும் எனக்குப் புரிகிறது.
பிரபல நடிகையும் பாடகியுமான Doris Day இன் பாடலொன்று, எதிர்காலம் எவ்வாறிருக்குமென காண்பதற்கு அது எமதுடையதல்ல என்ற பொருள்படும் வகையில் அமைந்திருக்கும்.
Que Sera Sera — கெய் செரா செரா. எது எப்படி உருவாகுமோ, அது அப்படியே உருவாகும். அந்தப் பாடலைக் காண்க.
.
அடுத்த ஆண்டு கொண்டுதரப் போகும், ஆச்சரியங்கள் பற்றிய பட்டியல் யாரிடமும் இல்லை. அடுத்த நிமிடத்தின் அழகிய நிலை, இந்த நிமிடத்தின் அறுவடையில் தான் இருக்கிறது.
இந்த நிமிடமே எல்லாமும் ஆகிறது.
பிரபல பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான Woody Guthrie, 1942 இல், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எண்ணினாரோ அவற்றையெல்லாம் புத்தாண்டு தீர்மானங்களாக பட்டியற்படுத்தியிருந்தார்.
அந்த பொக்கிஷமான புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் பிரதி இணையத்தில் வெளியாகியது. பட்டியலில் காணப்படும் தீர்மானங்கள் இன்றும் பொருந்தும் வகையில் நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய விடயங்களைக் கொண்டிருப்பது — ஆச்சரியம்.
காலங்கள் கடந்தும், காலத்தால் அழியாத விடயங்களைத் தர முடிகின்ற கலைஞர்கள் பற்றிய நினைவு எப்போதும் எனக்கு வியப்பையும் பூரிப்பையும் தருவதுண்டு. பாரதியும் காலத்தால் அழியாத காவியம் செய்தவன் என்பேன்.
Woody Guthrie இன் பட்டியல் உங்கள் பார்வைக்காக:
நிறைய நல்ல நூல்கள் படிக்கலாம், நம்பிக்கையோடு இருக்கலாம், கனவுகளோடு கதை செய்யலாம், மனதை திடப்படுத்திக் கொள்ளலாம், எல்லோரிடமும் அன்பு காட்டலாம், மக்களைப் புரிந்து கொள்ளலாம் ஏன் பற்தீட்டி குளிக்கலாம். இந்த நிமிடத்திற்கு அழகு சேர்ப்பதென்பது நாம் தேர்ந்தெடுக்கும் அர்த்தமுள்ள செயல்களிலேயே தங்கியுள்ளது. தேர்ந்தெடுத்தல் உங்கள் கைகளில்.
“நிமிடங்கள் பல சேர்ந்தே வருடமொன்றாகிறது என்பதை நான்தான் சொல்ல வேண்டுமா?” என்று கோபாலு கேட்கிறான்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
– உதய தாரகை — Follow @enathu
- Que Sera Sera என்பது ஸ்பானிய மொழியிலமைந்த வாக்கியமாகும். Whatever will be, will be என்பதே அதன் ஆங்கில அர்த்தமாகும்.
- 1956 இல் வெளியான அல்பிரட் கிட்ஸ்கொக்கின் The Man Who Knew Too Much என்ற திரைப்படத்தில் Que Sera Sera என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- Woody Guthrie இன் புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் நிழற்பட மூலம்: List Of Note