மரமேறும் மீன்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள் காட்டப்படும். கிராமிய சூழலின் பிரிக்கமுடியாத அற்புதமான பண்புகளை திரைக்குள் பார்க்க முடியும்.

பாடசாலையில் கரைச்சல் தந்து கொண்டிருந்த அந்தக் கட்டிளம் வயது பையனுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆதரவும் அரவணைப்பும் அறிவுரைகளும் தான். பாடசாலையில் அழகாய் அறிவுரை சொல்வதில் அனுபவமுள்ள ஆசான் மயில்வாகனத்திடம் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்தப் பையன், பாடசாலையில் பல தடவைகள் நடந்து கொண்டுள்ள விதம் அவனை புனர்வாழ்வு மையத்திற்கேனும் அனுப்பித் திருத்தி எடுக்க வேண்டுமென்பதாய் பலரையும் எத்தி நின்றது.

நிறையப் பேர் அவனோடு, அவன் குணம் சார்பாகக் கதைத்து அறிவுரை பலவும் சொல்லியிருந்தனர். ஆனால், அவனை மயில்வாகனம் சார் இதுவரையில் சந்திக்கவில்லை.

“நீ, குழப்படி செய்யாத, தொந்தரவுக்குள் மாட்டிக் கொள்ளாத ஏதாவது வகுப்புகள் உண்டா?,” அந்தப் பையனிடம் மயில்வாகனம் கேட்டார்.

“நான் மைதிலி டீச்சரின் வகுப்பில் குழப்படி அதிகம் செய்வதில்லை” என்றான் அந்தப் பையன்.

“அப்படி மைதிலி டீச்சரின் வகுப்பில் என்ன வித்தியாசமிருக்கிறது?” என்று கேட்ட மயில்வாகனத்திற்குக் கிடைத்த பதில்கள் பல விடயங்களைச் சொல்லின.

“மைதிலி டீச்சர், என்னை அன்போடு வகுப்பிற்குள் வரவேற்பார். அவர் தருகின்ற பாடம் எனக்கு நன்றாக புரிகின்றதா என்பதை கவனிப்பார். எனக்குச் செய்யக் கூடியதான பாட அப்பியாசங்களையே மட்டுமே அவர் எனக்குத் தருவார்” என்று அந்தப் பையன் வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

மேற்சொன்னவற்றில் ஒன்றைத் தானும் வேறு எந்த ஆசிரியரும் செய்வதில்லை என்பதையும் அவன் சொல்லிய பதில் சுட்டி நின்றது.

மற்ற ஆசிரியர்களை அணுகி, இந்த விடயங்களை தங்களின் பாடவேளைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மயில்வாகனம் சார் பரிந்துரைக்கின்றார். அவர்களும் அப்படியே செய்ய, என்ன ஆச்சரியம், அந்தப் பையன் குழப்படி ஏதும் செய்யாமல் பாடத்தில் கவனிக்க ஆரம்பிக்கின்றான்.

எதுவெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை அவதானிப்பதாகவே நாம் வளர்க்கப்படுகிறோம். முறைப்பாடு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துகிறோம். ஆனால், “இன்று எது செயற்படுகின்றது? அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம்?” என்பது பற்றிய புரிதல்கள் கொண்டவர்களாய் உருவாதலின் அழகியலை பலவேளை மறந்து விடுகிறோம்.

உங்கள் வாழ்க்கையில், வேலைத்தளத்தில் ஏன் வீட்டில் பல விடயங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் நினைத்து முயன்றிருப்பீர்கள். எது வேலை செய்யவில்லை என்பதைப் பற்றி எண்ணி, வேதனையை விலை கொடுத்து வாங்காமல், எது வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவதானித்து காரியம் செய்தலே, அழகிய மாற்றத்திற்கான ஒரேயொரு வழி.

Made to Stick என்ற நூலின் ஆசிரியர்களான ஸிப் மற்றும் டான் ஆகியோர் மாற்றம் பற்றிச் சொன்ன ஒரு விடயத்தை நிறத்தின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமே, இந்தப் பதிவாக உருவாயிற்று.

“எல்லோரும் மேதைகள் தாம். மீனொன்றின் ஆற்றலை அது மரத்தில் ஏறும் திறமையை வைத்து கணிப்பீடுவீர்களாயின், அந்த மீன் வாழ்நாள் முழுவதும் தன்னை முட்டாளென்றே எண்ணிக் கொள்ளும்” என்ற ஐன்ஸ்டைனின், அமுதவாக்கும் மேற்சொன்ன விடயத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும்.

– உதய தாரகை —

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s