உண்டியலும் காதலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.

நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.

நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.

“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.

நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.

கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.

ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.

“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.

அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.

அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.

அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.

உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.

நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.

பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு?

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.

Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.

அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன?

டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.

புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.

இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை.

இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும்.

இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை.

“அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும்.

“அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ.

மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு.

பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான்.

நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான்.

அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை.

“ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான்.

திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார்.

அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான்.

“உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான்.

ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான்.

– உதய தாரகை —

*இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. 😉 ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான்.

கடிதத்திற்கான காத்திருப்பு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்?

காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்?

சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட.

பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபருக்கு எழுதிய கடிதம், கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு எழுதிய கடிதம், ஆசிரியரிடம் சுகம் விசாரித்து எழுதிய கடிதம், ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டி பத்திரிகைக்கு எழுதிய கடிதம் என கடிதங்களின் பாத்திரங்கள் ஏராளம்.

கல்லூரி விடுதியிலிருந்து பழைய பாடசாலை நண்பனுக்கு, பாடசாலை முகவரிக்கே கடிதம் எழுதிய நினைவுகளும் எனக்கிருக்கிறது. கடிதத்தை, பரிசு ஒன்று வந்ததாய் அவன் பார்ப்பதாய் சொல்வான். அழகான நினைவுகள் அவை.

கடிதம் — இப்போதெல்லாம் இதற்கு வேறு பெயர்கள், வேறு ஊடகங்கள். பேனாவைக் கொண்டு கடிதம் எழுதுபவர்கள் — ஏன் குறிப்பெழுதுபவர்கள் கூட குறைவுதான். இது பிழையல்ல.

பென்சிலிருந்து பேனாவிற்கு வந்த காலத்தில், பென்சிலை விட்டுவிட்டு பேனாவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பையும் இப்படித்தான் உலகம் கண்டிருக்கும்.

நாம் வாழ்கின்ற காலத்திற்கு முன்பு வாழ்ந்தோர், தம் வாழ்நாளில் கண்டு வியந்தவைகள் பற்றிய விடயங்களை பகிர்கையில், எமக்கு அதன் பாலான வியப்பு புரிவதில்லை. அது எமக்கு பழையது. ஆனால், அவர்களுக்கோ அன்று அது ஆச்சரியம் தரும் புதிய விடயம்.

அதுபோலத்தான், ஒரு காலத்தின் வியப்புக்குரிய நிகழ்வு – இன்னொரு காலத்தின் இயல்புக்குரிய நிகழ்வு. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை யதார்த்தமாக கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்கள் பிறக்கும் போதிருந்த உலகத்தின் நிலை இன்றில்லை. என்றும் அது போலவும் இனி வராது.

இன்றளவில் கடிதங்களின் பிறப்புக்கான மூலங்களாக, இலத்திரனியல் கருவிகளின் விசைப்பலகைகள் மாறியிருக்கிறது. வேகமாக எல்லோராலும் எழுத முயற்சிக்க முடிகிறது. மொழிகள் கடந்தும் பலர் எழுதத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனாலும், பேனாவினால் கடதாசியில் எழுதும் கடிதங்கள் மீதான காதல் அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதவியலாது. அப்படிக் கடிதங்களை காண்கின்ற வேளையில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சியின் அளவை அவர்களின் கண்களில் பலதடவை கண்டிருக்கிறேன்.

கடிதம் பெற்றுக்கொள்கின்ற நிலையில் தோன்றும் மகிழ்ச்சி மிகவும் அழகானதொன்று. கையால் எழுதாத கடிதங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பொதிந்த நிலைகள் உண்டென்பதை பல கடிதங்கள் சொல்லியிருக்கின்றன.

கடதாசியில் எழுதும் கடிதங்களாய், அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் சிலவும் அழகிய தமிழில் ஆனந்தம் சொறிந்தது. கடிதங்களை பொக்கிஷமாகக் காண்கின்ற உலகப் போக்கு எப்போதுமே இருந்தது. இருக்கும்.

உறவுமுறைக் கடிதங்கள் தொடங்கி உத்தியோகபூர்வ கடிதங்கள் வரை கடிதங்கள் சொல்கின்ற செய்திகளின் பரப்பு விசாலமானது. உலகப்புகழ் பெற்ற உத்வேகம் தரக்கூடிய கடிதங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆபிரிகாம் லிங்கன் தனது மகனின் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் உத்வேகத்தின் ஊற்று.

நான் பல நாட்கள் காத்திருப்பதும் ஒரு கடிதத்திற்குத் தான். அது இன்று வந்து ஆனந்தம் தந்தது.

கடிதங்கள் தரும் ஆனந்தத்தின் அளவு கூட, அதற்கான காத்திருப்பின் அளவிற்கு நேர்விகித சமனாகவே இருக்கிறது என்று நியூட்டன் எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஆனால், அதுதான் உண்மையென உணர்ந்து கொள்கிறேன்.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:

iTunes இல் நிறம் Podcast Niram Podcast