(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
நேற்றைய தினம், நான் வழமையாக வாசிக்கின்ற Letter of Note வலைப்பதிவை வழமை போலவே வாசித்தேன். நிற்க, முதலில், Letters of Note என்ற தளத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.
இரண்டு நபர்களிடையே நடக்கின்ற கடித உரையாடல்கள் சில வேளைகளில், ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வைக்கான அல்லது சிந்தனைக்கான களத்தை வழங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு சொல்லித்தந்திருக்கிறது.
கடிதத்திற்கான காத்திருப்பில் இது பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கடிதங்களின் உள்ளடக்கங்கள் காரணமாக, அவை உலகளவும் அறியப்பட வேண்டும் அத்தோடு அதன் உள்ளடக்கங்கள் அனைவரிடமும் உணர்வுகளை உசுப்பிவிட வேண்டும் என்பதைக் கருவாகக் கொண்டு, முக்கியமான சாரங்கள் நிறைந்த கடிதங்களையும் அதன் பின்னணிகளையும் வழங்குகின்ற தளமாக Letters of Note ஐ இனங்கண்டு கொள்ளலாம்.

இந்தத் தளத்தின் பல பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை. நேற்று அங்கு நான் வாசித்துணர்ந்த கடிதம் பற்றிச் சொல்லிவிட வேண்டுமென நினைத்தேன். இப்பதிவு உருவாயிற்று.
அய்ன் ரேண்ட் — புதின எழுத்தாளர், தத்துவவியலாளர் என இயல்பாக அறிமுகப்படுத்தலாம். உலகப் பிரசித்தம் வாய்ந்த இரண்டு புதினங்களின் ஆசிரியர். அதுமட்டுமல்ல, Objectivism என்கின்ற புறவய மெய்யியல் கோட்பாட்டின் உருவாக்குனர்.
இவரின் புதினமான, The Fountainhead என்பதை வாசித்து முடித்த வாசகி Joanne Rondeau, 1948 ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கடிதம் ஒன்று வரைந்தார். கடிதத்தின் சாரம் இதுதான்.
“நீங்கள் உங்கள் புதினத்தில், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் ‘நான்’ என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என குறிப்பிடுகிறீர்கள். இதை எனக்கு விளக்கியருளுங்கள்.”
இந்தக் கடிதத்திற்கான அய்ன் ரேண்டின் பதில்தான் ஒரு தனிநபர் பற்றிய அவர் மெய்யியலின் அடிப்படையையும் அதனோடிணைந்த சிந்தனையையும் தெளிவாக வெளிப்படுத்தியது. சிந்தனைக்கான கூறாகவும் அமைந்து கொண்டது.
அவரின் பதில், சொல்கின்ற நியாயங்களும் அதனைத் தாண்டிய சிந்தனைகளும் அர்த்தமுள்ளவை. அந்தப் பதில் கடிதத்தை யாவரும் படிக்க வேண்டுமென்ற இந்தப் பதிவின் தேவைகருதி தமிழாக்கம் செய்கின்றேன்.
22, மே 1948
அன்புள்ள ரொன்டியிவ்,
எனது The Fountainhead என்ற புதினத்தில் வருகின்ற ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் “நான்” என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என்ற வாக்கியத்தை விளங்கப்படுத்தும் படி கேட்டிருந்தீர்கள்.
இந்த வாக்கியத்தின் கருத்து, எனது The Fountainhead என்ற புதினம் பூராகப் பரந்திருக்கிறது. நீங்கள் இந்த வசனத்தை கண்ட 400 பக்கத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. “நான்” என்பதன் அர்த்தம், யாருக்காக வேண்டியும் இருக்காத சுயாதீனமான, தன்நிறைவான கூறு ஆகும்.
ஒருவன், தன் அன்புக்குரியவர்களுக்காக மாத்திரம் இருப்பது அவனை சுதந்திரமான கூறாக உருவாக்காது மாறாக, அகநிலை சார்ந்த ஒட்டுண்ணியாகவே உருவாக்கும். ஒட்டுண்ணியின் காதலில் எந்த உயிர்ப்போ பெறுமதியோ கிடையாது.
காதல் பற்றிய வழமையான, (மிகத் தீய நிலை) பொருளற்ற அறவுரையாக கூறப்படுவது காதல் என்பது சுயநிலைத் தியாகம் என்பதாகும். ஒருவனின் சுயம்தான் அவனின் ஆன்மா. ஒருவன் அவனின் ஆன்மாவைத் தியாகம் செய்கின்ற நிலையில், அவனுக்கு அன்பை உணர யார் அல்லது என்ன எஞ்சியிருக்கப் போகிறது? உண்மைக் காதல் என்பது ஆழ்ந்த சுயநலமிக்கது. இந்தச் சொல்லின் மேன்மை பொருந்திய பொருளாக — ஒரு தனிநபரின் உயர்நிலை விழுமியங்களின் வெளிப்பாடாகவே காதலைக் கண்டு கொள்ள முடியும். ஒருவன் காதல் வயப்படுகின்ற நிலையில், அவன் தனக்கான மகிழ்ச்சியைத் தேடுகிறான் — அன்புக்குரியவர்களுக்கான தியாகத்தை அவன் நாடுவதில்லை. அப்படி தியாகம் தேவைப்படுகின்ற அல்லது எதிர்பார்க்கின்றவளாக அவன் அன்புக்குரியவளிருந்தால், அவள் அரக்கியாகத்தான் இருக்க முடியும்.
பிறருக்காகவே வாழ்கின்ற — தன் அன்புக்குரியவளுக்காக வாழ்கின்ற — ஒட்டுமொத்த மனித இனத்திற்காக வாழ்கின்ற — நிலையை, சுயமிழந்த, கூறுகள் இல்லாத அலகு எனலாம். சுயாதீனமான “நான்” என்பது, தனக்காகவே வாழ்கின்றவன். அப்போதே, அவனால், எந்த தீய சுயநிலை தியாகங்கள் பற்றிய பாசாங்கும் செய்ய முடியாமலிருக்கும். அவன் அன்பு செலுத்துபவர்களிடம் சுயநிலை தியாகத்தை எதிர்பார்க்கவும் மாட்டான். அதுதான் காதலில் திளைத்திருப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் ஒரே வழி அத்தோடு இரண்டு பேருக்கிடையான சுயமரியாதை கொண்ட உறவும் வலுப்பெறவும் அதுவே ஒரேயொரு முறை.
அய்ன் ரேண்ட்.
“சுயம் என்பது மட்டுந்தான் ஒருவனின் நிலைப்பின் ஆதாரம். இருப்பதை இருப்பதாகச் சொல்லாமல், ஏதோ இருக்கிறோம் — ஆனால் இருக்கவில்லை என்ற வகையான விளக்கங்கள் பொருந்தாது. நீங்கள் நீங்களாகவே மட்டுந்தான் இருக்கலாம். நீங்களாகவிருக்காமல் இன்னொன்றாக இருக்க முயற்சிப்பதும் ஒரு வகை சுயவறுமை – சுயமிழத்தல்” என கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை —
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...