சாத்தியமற்ற சாத்தியங்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இயல்பான வாழ்க்கையின் பாதையாக இருப்பது, சாத்தியமான விடயங்கள் — சாத்தியமான விடயங்களை மட்டும் செய்தல் சாதாரண வாழ்வு பற்றிய அடிப்படையையே தரும் என அதை இன்னொரு வகையில் சொல்லலாம்.

இது உண்மையாகும். சாதாரண வாழ்க்கை என்பது எல்லோராலும் எய்திக் கொள்ள முடியும். தனித்துவமானவர்கள் என்ற பிறவியின் அழகிய தன்மையை இது ஒழித்துவிடுகிறது.

கொஞ்சம் நாம் சேர்ந்து சிந்திப்போம். ஆளியொன்றை அழுத்துவதால் மின்குமிழ் ஒளிரும் என்பது சாத்தியமற்றது. நிலவில் நடந்து செல்லுவது சாத்தியமற்றது. வானத்தில் இரும்பைப் பறக்கவிடுவது சாத்தியமற்றது. தூரதேசத்தில் இருக்கும் உறவை, கணினித் திரையில் காண்பது சாத்தியமற்றது. இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினியிலோ அல்லது திறன்பேசியிலோ வாசிப்பது சாத்தியமற்றது.

ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் மேலாக நடந்து இன்னொரு கோபுரத்தின் உச்சிக்கு செல்வது சாத்தியமற்றது. விமானம் போல், ஒருமனிதன் பறந்துவிடுவது சாத்தியமற்றது. இப்படி சாத்தியமில்லாத பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவை யாவும் இவை சாத்தியமாகிவிட முன்னர் மட்டுந்தான் சாத்தியமற்றதாய் இருந்தன.

உங்கள் வாழ்க்கையின் அழகியலை உங்களால் ஒவ்வொரு நிமிடத்தின் இருப்பிலும் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், அதில் என்ன அர்த்தமிருக்கிறது?

உலகம் தானாக உருவாக்கிக் கொண்ட “சாத்தியமற்றவைகளின் பட்டியல்” பற்றி இங்கு அதிகமானோருக்கு ஆர்வமிருக்கிறது. அடுத்த கணத்தின் ஆச்சரியத்தை அனுபவிக்க மறந்து போகிறார்கள்.

இடர்களின் நிகழ்வின் மிச்சத்தில் தான் அசாத்தியங்கள், சாத்தியங்களாய் உருவெடுக்கின்றன. இடர்கள் சந்திக்கக்கூடாது என்ற வரையறைக்குள் தங்களை ஆக்குபவர்களின் அடிப்படையில் — “யாரோ சொன்ன சாத்தியமற்ற விடயங்களின் பட்டியல்” ஆதிக்கம் செலுத்துவது கவலை.

“உன்னால் முடியாது என்று யாரும் உன்னிடம் சொல்லிவிட வைக்காதே! — நானாகவிருந்தாலும் பரவாயில்லை. உன்னிடம் கனவிருக்கிறது. நீ அதைக் காக்க வேண்டும். முடியாதவர்கள் அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள். உனக்கு எது வேண்டுமோ, அதை நீயே போய் எடுத்துக் கொள். அவ்வளவுதான்” — Pursuit of HappYness என்ற திரைக்காவியத்தில் வரும் ஒரு காட்சியில் வில் சிமித் தன் மகனுக்கு சொல்லும் வரிகள்.

அசாத்தியங்களின் சாத்தியமான தன்மை ஒரு தனிமனிதனின் மனப்பாங்கின் ஆழத்தின் நிலையில் அர்த்தம் கொள்கிறது.

அடுத்த நிமிடம் இதுதான் நடக்குமென தெரிந்திருக்கும் நிலையாக வாழ்க்கையிருக்கிறதென கற்பனை செய்து கொள்ளுங்கள். எல்லாமே கைவிரல் நுனியில் — வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை சொல்லிவிடலாம். ஒரு சவாலில்லை. ஒரு இடர் இல்லை. நேற்றும் ஒன்றுதான். நாளையும் ஒன்றுதான். இன்றும் நேற்றையதன் பிரதிதான். எண்ணும் போதே சுவாரஸியம் தொலைந்துவிட்ட நிலை தெரிகிறதே!

நிறையப் பேரின் இன்று, நேற்றையதின் பிரதியாக இருப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சவால்களை சந்திப்பது, அதனை உத்வேகமாய் ஏற்பது, ஊக்கங் கொள்வது என எல்லாமே மனிதனின் அடிப்படை இயல்புகள் தாம்.

அல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன விடயத்தை கோபாலு ஞாபகமூட்டுகிறான். “என்னைப் பொருத்தவரையில், வாழ்க்கையில் வாழ்வதற்கு உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அற்புதங்கள் எதுவுமேயில்லை என எண்ணி வாழ்வது. மற்றையது, இருப்பதெல்லாம் அற்புதங்கள் என எண்ணி வாழ்வது.”

அற்புதங்களுக்கு இடந்தருவதென்பது, அசாத்தியங்களோடு ஐக்கியமாவது என்பதாகும் — அவ்வகையில் அவை யாவும் சாத்தியங்களாக மாறிவிடும்.

மனிதனுக்கு முன்னேற வேண்டுமென்ற விருப்பம், அசாத்தியங்களை சாத்தியங்களாக்குகின்ற தேட்டம் இல்லாது போயிருந்தால் நாம் எல்லோரும் இன்னும் குகைகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.